1.அழுகை
இந்த இருட்டில்
நான் உறங்கவேண்டும்
என நினைக்கும்போது
ஒரு வெளிச்சம்
வந்து விடுகிறது.
ஆந்தை விரும்பாத
அந்தப் பகல் என்னைப்
பலி வாங்கிறது.
ஏன் இப்படி
என்று தெரியாமலேயே
கண்கள் கலங்கின.
காதலில் தோல்வி
கண்டவன் போல
கை பிசைந்து நிற்கிறேன்.
மேகங்கள் ஓடிவந்து
மையிருட்டைக்
கொணர்ந்ததும்
மண்ணில் விழும்
உறக்கக் கனவுகள்
தாமாக அழுகின்றன
2.கிளறுதல்
குப்பையைக்
கிளறினால்தான்
கோழிக்கு இரை
கிடைக்கிறது.
அடிமன ஆழத்தை
அவ்வப்போது
கிளறினால்
மேலே வருவன
சிலநேரம் துன்பங்கள்
மட்டுமன்றி இன்பங்களும்.
அதிகமாகக் கிளறுவது
அனைவரது சினத்தையும்
அடியோடு எழுப்பிவிட்டு
அருமை உறவும் நட்பும்
அழிந்தொழியும் அன்றோ?
இருந்தாலும்
மேலே மிதக்கின்ற
பூக்களின்
மினுமினுப்பை நம்பலாமா?
அடியில்தானே
கசடுகளும் அமிழ்ந்துள்ளன.
நல்ல கவிதை
இல்லையென
ஒதுக்கித் தள்ளியதை
நாள்கழித்து இன்னும்
நன்றாகக்
கிளறிப் பார்த்தால்
நற்கவிதையாகத் தோன்றுமாம்.
3. மாறுபாடு
மாலை என்பது சிறுவர்களுக்குப்
புதுப்புது விளையாட்டுகளைக்
கற்றுத் தருகிறது.
மகிழ்வுடன் குதூகலத்தையும்
சுறுசுறுப்பும் தந்து
சோம்பலின் மீது சாட்டை வீசுகிறது.
ஒவ்வொரு பறவையும்
கூட்டில் விட்டுவந்த குஞ்சுக்கிரங்கி
விரைவாகச் செல்கின்றன.
புதிதாக மணமானவர்
வருபவர்க்கு வாசல் திறந்துவைத்து
வழிமீது விழி கிடத்துகிறார்.
வருகிறேன் வருகிறேன் என்று
இரவு பயமுறுத்த
நமக்குத் தெரியாமலேயே
அது மெதுவாக
நகர்ந்துகொண்டிருக்கிறது.
வீடுகளில் விளக்கேற்றுகிறார்கள்.
கோயில்களில் தீபங்கள்;
சொல்லில்தான் மாறுபாடு
வளவ. துரையன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.