“உயரப்பறத்தல்”
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
பக்கங்கள் : 144
₹. 90

“இந்த வாழ்வின், இந்த மனிதர்களின் மத்தியில் ஒரு அந்தரத் தராசு சதா தொங்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஆணும் பெண்ணும் துல்லியப்பட்டுச் சம எடையில் நில்லாமல், தாழ்ந்தும் உயர்ந்தும் ஸீஸா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமன் புரிந்துவிட்டால் வாழ்க்கை ரம்மியமானது. இந்த ரம்மியமான இடத்தைச் சிறிதாவது எழுதிப் பார்க்க வேண்டும்”
– வண்ணதாசன்.

1998 இல் முதன்முதலாக வெளியிடப்பட்டு சந்தியா பதிப்பகத்தால் 2011 இல் முதற்பதிப்பாக வெளிவந்த நூலே இது. இந்நூலில் 17 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் ஏதோவொரு வகையில் இனம்புரியாத புதியதொரு உணர்வை கிளர்த்தெழச் செய்வதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுகதையைப் படித்த பின்னரும் சில மணி நேரங்கள் அதுகுறித்து அசைபோட வைப்பதாகவே அமைந்துள்ளது.

மனிதர்களின் யதார்த்தமான மனநிலையை காட்சிபடுத்தி நம்மை பரவசப்படுத்துவதில் தன்னிகரற்றவராகவே மிளிர்கிறார் வண்ணதாசன் அவர்கள். வாசனை மேல் அவர் கொண்ட நேசம் நம்மை கிறங்கடிக்க வைப்பதாகவே உள்ளது. சின்னஞ்சிறு அனுசரணையான தொடுதலின் மூலம் அன்பு பரிமாற்றத்தைக் கடத்த முனையும் அவரது படைப்புகள் நம்மிலும் பாசத்தை பகிரச் செய்வதாகவே அமைந்துள்ளன.

“ஈரம்” என்ற சிறுகதையை படித்து பின்னர் எனது மனது ஈரத்திலேயே பல மணிநேரம் இருந்ததென்பதே உண்மை. இந்த ஈரம் கசகசப்பை ஊட்டும் ஈரமல்ல. அதிலும் குறிப்பாக முகம் கழுவிய பின் துடைக்காமலே நிற்கும் ஈரம் கண்கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கிறது. “கலங்கல்னு குடிக்காம இருப்பாங்களா. சீம்பாலைவிட அம்ருதம் உண்டா உலகத்திலே?” இந்த வரிகளும் அமிர்தம் தானே…

“அச்சிட்டு வெளியிடுபவர்கள்” சிறுகதையில் கோமு அக்காவுக்கும் ராமையாவுக்குமான உறவு கவிதையாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “சூரிய நமஸ்காரம்” சிறுகதை கணவன் – மனைவிக்கிடையேயான சந்தேகம் குறித்ததாக இருந்த போதிலும் மகள் அப்பாவிடம் காட்டும் கரிசனையை அளவிட முடியாதுதானே. “மாறுதல்” சிறுகதை சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை படம் பிடித்துக் கண்ணாடியாக மிளிர்கிறது.

“உயரப்பறத்தல்” சிறுகதை ஆண் -பெண் நட்பை மிக ரம்மியமாக ஒரு கடிதம் வாயிலாகவும் இருவரின் சந்திப்பு வாயிலாகவும் இணைந்த விதம் ரசிக்கத்தக்கதே. “அரசமரம்” சிறுகதை குழந்தைகள் இருந்தும் நிராதாரவாக நிற்கும் மனிதரின் வாழ்வை எளியவனின் வாழ்வோடு பிணைக்கும் விதம் இனிமையானதே.. துயரத்தையும் இனிமையோடு இணைப்பது எழுத்தாளரின் கைவந்த கலையோ என்னமோ…

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10 | எழுத்தாளர் ஜெயமோகன்
வண்ணதாசன்

“அழுக்குப்படுகிற இடம்” சிறுகதை கணவன் மீது மனைவி படும் சந்தேகம் நோக்கி பயணித்து இறுதியில் கணவன் அவனது தம்பி மீது திரும்புவதாக அமைந்து தலைப்பை தூய்மையாக்கிவிடும் இடம் கவனிக்கத்தக்கதே. “சந்தோசம்” சிறுகதை ஏற்படுத்திய பிரமிப்பை சொல்லில் அடைக்க இயலுமா என தெரியவில்லை. ஆற்றுக் குளியலில் துவங்கி வாசத்துடனே பயணித்து புல்லாங்குழல் கீதத்தையும் வாசனையாக பாவித்து எழுதிய தருணங்கள் சந்தோஷத்தை ஊட்டக்கூடியவைகளே. “சந்தோஷமாஇ இருக்கிறவங்களைப் பார்த்தால், பார்க்கிறவங்களுக்கும் சந்தோஷமாகத்தானே இருக்கும்”

“சில வாழைமரங்கள்” சிறுகதை, பிறந்த ஊரைவிட்டு வந்தவர்கள் பிறந்த ஊரைப் பற்றி பேசி சிலாகிக்கும் கதையாக இருந்தாலும் வாழைமரத்தைத் தொடுவதாக உணரும் காட்சி கவித்துவமிக்கதே. “யாளிகள்” சிறுகதையில் புதியதாக அறிமுகமான நபர் மூலம் அறியும் நபரை சந்திக்கும் காட்சியை ஓவியமாகத் தீட்டியுள்ளார் எழுத்தாளர் அவர்கள். “எல்லாப் புத்தகங்களுமே சுவாரசியம்தான்” உண்மைதானே.

“அப்பாவைக் கொன்றவன்” சிறுகதையோ மிக மிக யதார்த்தமான சிறுகதை. பள்ளி செல்லும் மாணவி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் தருணத்தில் சந்திக்கும் நிகழ்வுகளே கதைக்களம்; அதகளமாக்கிவிட்டார் எழுத்தாளர் எனலாம். “கிணற்றுத்தண்ணீரும் ஆற்றுமீனும்” சிறுகதையில் விடுமுறைக்கு வந்து சென்ற பேரனின் நினைவில் தாத்தா பாட்டிக்குமிடையே நடைபெறும் உரையாடலின் வழியே வாழ்வின் யதார்த்தத்தை ஆற்றுமீனின் வடிவில் கட்டமைத்த விதம் பிரமிக்கவைப்மதே.

“ரத வீதி” சிறுகதை காதலனும் காதலியும் சந்திக்காமலேயே நம்மில் கடத்தும் காதல் காவியம். ரத வீதியில் கைக்குழந்தையுடன் வரும் தேவதை வழியாக கதையை நகர்த்திய விதம் சிந்திக்க வைப்பதே. “அழைக்கிறவர்கள்” சிறுகதையில் வரும் “பிடிச்சிருக்கு என்கிறதே ஒரு வசதிதானே” என்ற ஒற்றைவரி போதும், சிறுகதையில் சிறகடிக்க என எண்ணுகிறேன். “கருப்புப்பசு (என்கிற)பாத்துமா” சிறுகதை நகைச்சுவையோடு பயணித்து மனித மனத்தில் இரக்க உணர்வைத் தூண்டவல்லதாக மிளிர்கிறது.

“சைகைகள் மூலம் செய்திகள்” – ஒரு காலத்தில் புகழ்பெற்ற இயக்குநரின் இன்றைய நிலையை தோலுரித்துக் காட்டும் கண்ணீர் சிறுகதை. “இங்கே இருக்கும் புறாக்கள்” சிறுகதை வாழ்ந்து கெட்ட குடும்பம் சார்ந்த கண்ணீர் கதை. ஒற்றை வரிகளில் ஒவ்வொரு சிறுகதை குறித்தும் யான் கூறியதை வைத்து கதைகளை எடை போட இயலாதுதானே… இந்த சிறுகதைகளை அவர் எழுதியுள்ள அழகை அதிலுள்ள வார்த்தைகளின் வாசனையை அறிய இந்நூலைப் படித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே உண்மை.

படிக்கும்போது சின்னஞ்சிறு நிகழ்வுகளாகத் தோன்றும் கதைக்களத்தை தனது வார்த்தை பிரயோகங்களால் நேர்த்தியாக பின்னி தகுந்த இடங்களில் கோர்த்து வாசனையை பரப்பி நம்மை அந்த சிறுகதைகளிலேயே சிக்குண்டு நவசர உணர்வில் மிதக்க செய்து புதியதோர் உலகில் மிதக்க வைத்துள்ளார் எழுத்தாளர் அவர்கள். சிறுகதை குறித்தான எனது பார்வையில் புதியதோர் கோணத்தை விதைத்துள்ள நூல் என இதனைக் கருதுகிறேன்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *