ரணத்தின் மீச்சிறு அலகு
__________________________________

துயரங்களின் பெருவலி
எக்கணமும்
என்னுள் குமிழியிட்டுக் கொண்டே இருக்கிறது.

சக மனிதர்களோடு உரையாடுகிறேன்
வெறுமை என்னை
தன் கைப்பிடிக்குள்ளே வைத்திருக்கிறது.

கனவுகளில் பயணிக்கிறேன்
துயரார்ந்த விபத்துகளே நேர்கிறது.

மனதுள் பூஞ்செடிகளை பதியமிடுகிறேன்
கடுங்கோடையின்
முட்களே விளைகின்றன.

நதியில் நீந்துகிறேன்
தீராத இரையென
தோல்வியின் மீன்கள்
ஆங்காரமாய் தின்று தீர்க்க
மொய்க்கின்றன.

மலையின் மெளனத்துள்..
கானகங்களின் தனிமைக்குள்..
சமவெளிகளின் கனவுகளுக்குள்..
கடற்கரையின் புனைவுகளுக்குள்..
வயலின் இசைக்க முற்படுகிறேன்
சலிப்பின் கூர் அரம்
ஒவ்வொரு நரம்புகளாக அறுத்தபடி.

நித்ய எல்லையை தாண்ட
காற்றுக்காக
ஈரவிழிகளோடு நான்.

சாலையின் பாடல்
______________________

மணியோசை ஒலிக்கிறது
லாந்தர் ஒளி ஒளிர்கிறது
வண்ண வண்ணக் கண்ணாடிக் கூண்டுக்குள்
சுவையான இனிப்பு வகைகள்
வண்டிக்காரன் மணி ஒலிக்கிறான்
குழந்தைகளின் கண்களும் நாவுகளும் பலகாரங்களில் மொய்க்கின்றன
கையிலுள்ள துணியால் அவைகளைக் துரத்த வீசிவீசிப் பார்க்கிறான்
ம்ம்..கூம்…முடியவில்லை..
வண்டியை நகர்த்துகிறான்
லாந்தர் ஒலி மங்குகிறது
மணியோசை தேய்கிறது.

தேவதைகளின் திவ்விய தேசம் காத்திருக்கிறது
______________________________________

கட்டுமரக்காரனே துரிதமாகச் செல்
அந்தி அணைகிறது
இரவு எழப் போகிறது
இருளின் பறவைகள் விழிக்கின்றன
துயரங்களை அவைகள் இசைக்கப் போகின்றன
வலி மிகுந்த கடந்த காலத்தைக் தாண்டனும்
வேதனைகள் நிரம்பிய நிலங்களின் பெருமூச்சுகள் நினைவுகளைத் துரத்துகின்றன
பாழ்வெளி அச்சத்தின் பிடியிலிருந்து
விடுவித்த மகிழ்ச்சி
கரைவதற்குள் போயாகணும்
ஒளி சூழ்ந்த நாட்களுக்குள் வசிக்க வேண்டும்
சூரியன் அங்கே பூத்திருக்கும்
இதயத்தின் சாளரங்களில் நிலவு பூச் சூட்டும்
மடக்கும் பயத்தின் அலைகளை மீறி கடுகிச் செல்
கட்டுமரக்காரனே..
சந்தேகிக்காமல்..தயங்கி மருகாமல்..
கடுகிச் செல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *