நூல் அறிமுகம்: பொறியாளர் விஜயராவணனின் *நிழற்காடு சிறுகதை தொகுப்பு* – விஜயராணி மீனாட்சிநூல்: நிழற்காடு – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : விஜயராவணன்
வெளியீடு : சால்ட்
விலை : ரூ.200/-

இயந்திரவியல் பொறியாளராயிருக்கும் தம்பி விஜயராவணன் (விஜயராகவன்) இலக்கிய வட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் விருது பெற்ற தெற்கத்திக்காரர். தேர்ந்த வாசகர். உலகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து விமர்சனங்களும் எழுதுகிறார்.

இவரது நிழற்காடு சிறுகதைத் தொகுப்பில் பத்து கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகைமையில் அடர்த்தியைக் கைகொண்டதாய்ப் பரிமளிக்கிறது.

‘சிட்டுக்குருவி’ கதையில் கதைநாயகர் செல்வம் ஓய்வுபெற்ற பின் கட்டிய புதுவீட்டில் பார்த்துப் பார்த்து வாங்கிய ஜெர்மன் சர விளக்கில் கூடுகட்டிய சிட்டுக்குருவியின் மீதான கரிசனம், வீட்டுக்கு டெலிஃபோன் இணைப்புத் தரவந்த தம்பி அந்தச் சர விளக்கை ஆச்சரியமாகப் பார்த்து லைட்டைப் போட்டுக்காட்டச் சொல்லும்போது, “வேணாம் தம்பி, விளக்கு மேலகுருவி கூடுகட்டி முட்டை போட்டுருக்கு. விளக்கு போட்டா சூடு தாங்காது” என்று சொல்லும் மென்மனதை அந்தத் தம்பி “ஒரு சின்னக் குருவிக்காக லைட் போடவேணாம்கிற பாரு, அவனவன் அப்பன், பாட்டஞ் சொத்தையே வித்துடுறாங்க, இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும் சார்”, என்று பாராட்டிச் செல்கிற அளவுக்கு அந்தக் குருவியோடு சதாசர்வகாலமும் ஒன்றிப்போவதோடு நம்மையும் ஒன்றச் செய்யும் எழுத்தாய் இந்தக்கதை சொல்லும் தத்துவம், குருவிகள் வசித்தபோது குருவிவீடாய் இருந்த அது பின்னர் கூடாகிப்போனதை, வசிப்பவர்கள் இல்லாத வீடும் உயிர்பிரிந்த உடல் போல வெறும் கூடென்று சொல்கிறது.

“சவப்பெட்டி”யில் அப்பா மகனுக்கு போர்களற்ற குண்டுவெடிப்பில்லாத ஊர் பற்றிச் சொல்லும் கதை முடிவுறாமலே நீண்ட நெடிய துயரத்தை சொல்லும் நிஜங்களா பிணங்களா என்றறிய முடியாத மாயமாய் மூடப்படாத சவப்பெட்டியாய் சிதைவுற்ற உடல்களோடு சிரமமாய்.

“மொட்டை மாடி” மூணாப்பு படிக்கிற ரகுவுக்கு வீட்டில் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் மொட்டை போட்டு மொட்டை போட்டு முடி வளர்த்தலின் தீரா ஆசையை அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்.“முகங்கள்”கதையின் கனபரிமாணம் வாசித்து உள்வாங்க வேண்டிய புத்திரசோக புதிர்.

தலைப்புக் கதையான “நிழற்காடு”கதையில் குணாளனும் ராணியும் பயணப்படும் ஆலமரக்காடு. பெண் உடலரசியல் காரணமாய் சீரழிந்த வாழ்க்கையைத் துறக்கும் அல்லது விட்டு விடுதலையாகும் ஒரு பயணம். ராணியின் ரணமிகு வார்த்தைகள்…. ‘எல்லாத்தையும் அத்தெறிஞ்சிட்டு ஒட்டுமொத்த பொம்பளைகளோட பேச்சிமேல பாரத்தப் போட்டு ஆலமரக்காட்டுக்குள்ள ஓடிப் போயிரணும்!!! அப்புறம் எல்லாவனும் எங்க போவானுங்க பொம்பள உடம்புக்கு?” என்பதில் தெரிகிறது. ஆமாம் யாரிந்தப் பேச்சி? ஊராரால் அவள் மீது அவளது உடல் மீது சந்தேகப்பட்ட கணவன் இறந்துபோன பின், இனி ஊர்ல எல்லாரும் உடம்பே இல்லாமத்தான் அலைவீங்க என்று ரௌத்திரம் கொண்டவள் ஆலமரக்காட்டில் விழுதில் தொங்கி இறக்கின்ற பேச்சியால் ஊரில் ஆடுகளும் நாயும் மற்றும் சிலரும் உடல் துறக்கும் பின் நிழலாகும் அமானுஷ்யம் குணாவையும் ராணியையும் என்ன செய்ததென்பது கதை.

“உதைக்கப்படாத கால்பந்து”

ஆப்பிரிக்க தேசத்திற்கு இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாகச் செல்லும் கதையின் நாயகனே சொல்லும் நடை…. நெடிய துயரம். பொதுவாக ஆப்பிரிக்கா என்றாலே கால்பந்தும், தீவிரவாதமும் தான் எனும்போது இங்கே இவர் அலுவலகம் செல்லும் வழியில் தினந்தோறும் காணும் ஒரு சிறுவனுக்கு உரையாடல் ஏதுமின்றியே புதிது புதிதாய் பந்துகள் பரிசளிக்கிறார். நாட்டில் நிகழும் ஆயுதமேந்திய தீவிரவாதம் ஏனென்று புரியாமலே தன் நெற்றிப்பொட்டில் அழுந்திய துப்பாக்கி முனை அந்தச் சிறுவனுடையதென்கிறது கதை…..

“போதிசத்வா” என்னதான் போதனைகள் புத்தனே வந்து சொன்னாலும் நம் புத்தி சொல்வதற்குத்தான் நாம் ஆட்படுவோமோ!? இருந்தாலும் அம்மாவும் பிள்ளையும் ஒரு மனிதனைப் பழிவாங்க முழு ஆயுளையுமா காவு வாங்கவேண்டும் என்று மனம் பதைக்கிறது.