இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர், கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். 2020 ஜனவரி 30 அன்று, சீனாவின் வூஹானிலிருந்து திரும்பிய மாணவர் ஒருவர் இத்தொற்றுக்கு ஆளாகி இருந்தார். எனினும், இந்த வைரஸ் பரவாது தடுப்பதற்கான வேலை என்பது கேரளாவில் இதற்கு வெகுநாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. உண்மையில், இந்தத் தொற்று உலக அளவில் விரைவாகப் பரவும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்த உடனேயே, கேரள மாநில அரசு இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான அடிப்படை வேலைகளைத் துவங்கி விட்டது. (எனினும் அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை முழுமையாகக் குறைத்திட முடியவில்லை.)  அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக முடுக்கிவிடப்பட்டன. மாநில அளவிலான கட்டுப்பாடு பிரிவு உட்பட பல்வேறு நிர்வாக அமைப்புகள் அமைக்கப்பட்டன. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் வரிசைக்கிரமமாக எடுக்க வேண்டும் என்பதும் முறைப்படுத்தப்பட்டன.

131606 படுக்கைகள்-2378 வெண்டிலேடர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியோ, மருந்தோ இல்லாத நிலையில், தற்போது மாநிலத்தில் இருந்துவரும் பொது சுகாதார உள்கட்டமைப்புக்குள் செயல்பட்டு இத்தொற்று பரவாது தடுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, கோவிட்-19 நோயாளிகளுக்காக, 1,296 அரசு மருத்துவமனைகளிலும், 866 தனியார் மருத்துவமனைகளிலும்  1,31,606 படுக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இத்துடன், 2,378 வெண்டிலேடர்கள் அரசாங்கம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டன. ஒருவேளை, இந்தத் தொற்று விரிவான அளவில் இருந்தால், அவசரமான நோக்கங்களுக்காக, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளின் கீழ் இருந்துவந்த கட்டிடங்களும் அடையாளம் காணப்பட்டன.    மாநிலத்திலிருந்த அனைத்து அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள், பெரிய தனியார் மருத்தவ மனைகளிலும், இந்நோய்க்கு ஆளானவர்களைக் கண்காணித்திடவும், சிகிச்சை அளித்திடவும் தனிமைப்படுத்தும் வார்டுகள் (isolation wards) அமைக்கப்பட்டன.

கொரானா அழைப்பு மையம் துவக்கம்

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுகாதாரம் குறித்தும் வலுவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாநிலம் முழுதும் உலகத்தரம் வாய்ந்த சோதனை ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டன. மாநிலம் தழுவிய அளவில் ‘தீஷா’ (திசை) எனப்படும் கொரோனா அழைப்பு மையம் (Corona Call Centre) துவங்கப்பட்டது. இந்த மையத்திற்கு இதுவரையிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான அளவில் தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. இந்தத் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளைக் கையாள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான தொண்டர்களும் தொலைபேசி ஆலோசனைக் குழுக்களும் (tele-counselling) அமைக்கப்பட்டு அவர்கள் செயலில் இறங்கினர்.

20 ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்பு-54 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கேரளா அரசாங்கம் மேற்கொண்ட மற்றுமொரு முக்கியமான முயற்சி என்பது, சமூக முடக்கம் மற்றும் இதர நடவடிக்கைகளின் விளைவாக மக்களின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்பட்ட சிரமங்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும். கேரள மாநில அரசாங்கம், வேலை மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த அனைவருக்கும் நிவாரணம் அளித்திடவும், உதவிகள் புரிந்திடவும் உதவிடும் விதத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்பு ஒன்றைத் தொடங்கியது. கேரள மாநில அரசாங்கம், 54 லட்சம் பயனாளிகளுக்கு முன்கூட்டியே சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை அளித்திட, நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இந்த ஓய்வூதியம் ஒவ்வொருவருக்கும் 4,709 ரூபாயாகும். நல வாரியங்கள் தங்களின் கீழ் உள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் (மொத்தம் 73 லட்சம் தொழிலாளர்கள்) ஆயிரம் ரூபாய் அளித்தது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக, மாதத்திற்கு 35 கிலோ அரிசி, இலவசமாக அளிக்கப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும்கூட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 15 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்பட்டது. மொத்தத்தில் 87.59 லட்சம் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 87.59 லட்சம் அட்டைப்பெட்டிகள் (kits), வறுமைக் கோட்டுக்குக் கீழ் மற்றும் வறுமைக் கோட்டுக்கு மேல் என்றுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு 879 கோடி ரூபாய் செலவானது.

அனைவருக்கும் உணவு

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் மாநிலத்தில் எவரொருவரும் பட்டினிக் கொடுமைக்கு ஆளாகக் கூடாது என்பதில் கேரள மாநில அரசாங்கம் உறுதியாக இருந்தது மற்றுமொரு முக்கியமான அம்சமாகும். இலவச ரேஷன், அத்தியாவசியப் பொருள்கள், சமூக சமையல்கூடங்கள் மூலமாக இலவச உணவு போன்றவை அளிக்கப்பட்டன. எனவே, 1,034 ஊராட்சிகளிலும், நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் 1,137 சமூக சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டன. சமூக சமையல் கூடங்கள் ஏப்ரல் 30 தேதிவாக்கில் 1,33,882 பேர்களுக்கு உணவு அளித்துள்ளது. இவர்களில் 1,07,128 பேர் இலவசமாக சாப்பிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு 20 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அல்ல, விருந்தினர்கள்

இதேபோன்று, கேரள மாநிலத்திற்கு வந்துள்ள விருந்தினர்-தொழிலாளர்களுக்கும் (guest workers), தங்குவதற்கு இடம் உத்தரவாதம் செய்யப்பட்டு, உணவும் இலவசமாக அளிக்கப்பட்டது. இவ்வாறு கேரளா அரசாங்கத்தால் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட 19,902 முகாம்களில், 3,52,515 விருந்தினர்-தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டது. கேரள மாநில உள்துறையின் மூலமாக இவர்கள் அனைவருக்கும் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மாநில அரசாங்கமே சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து, அவர்களை அனுப்பி வைத்தது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றும் அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சமூக முடக்கம் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் அநேகமாக பொருள்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டன. வெளிநாடுகளில் வாழும் கேரளாவைச் சேர்ந்தவர்களிடமிருந்து பண வரத்து நின்றுவிட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தணிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கோவிட்-19 தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கும் ஒட்டுமொத்த கட்சியும் வெகுஜன அமைப்புகளும் சுறுசுறுப்பாக இயங்கின. மக்கள் மத்தியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் கட்சி தீவிரமாக பங்குகொண்டது. உணவு மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், விநியோகிப்பதிலும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கட்சிக் கிளைகளும் முகக் கவசங்களையும், சானிடைசர்களையும் உருவாக்கி, சாமானிய மக்களுக்கு அளித்துள்ளது. அதேபோன்று சுய பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கி, சுகாதார ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

கேரள மாநில அரசாங்கம் தற்போது, நாட்டின் இதர பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் கேரளத்தினரை மீளவும் கேரளாவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. சுமார் 4 லட்சம் பேர், வெளிநாட்டில் உள்ளவர்கள், கேரளம் திரும்புவதற்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதேபோன்று நாட்டின் இதர மாநிலங்களில் உள்ளவர்கள் சுமார் 1.5 லட்சம் பேர், கேரளம் திரும்ப, பதிவு செய்திருக்கிறார்கள். இவை இரண்டாவது அலையை ஏற்படுத்தும். இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மற்றும் கட்சி இவர்கள் வருகையால் ஏற்பட இருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *