இந்த புத்தகம் அண்ணல் அம்பேத்கர் 1935 லிருந்து 1956 வரை ஆற்றிய பல்வேறு உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதை தமிழில் தாயப்பன் அழகிரிசாமி மொழிபெயர்த்துள்ளார். இந்து மதத்திலிருந்து தான் ஏன் வெளியேறினேன் என்கிற காரணத்தை அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய உரைகளின் மூலம் தர்க்க ரீதியாக மிக தெளிவாக முன் வைத்துள்ளார்.

புத்தகம் நெடுக அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்த விமர்சனங்கள் அனைத்தும் இந்து மதம் குறித்த ஒரு ஆழ்ந்த வாசிப்பு அவருக்கு இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இந்து மதத்தின் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் படித்து ஆராய்ந்த ஒரு கை தேர்ந்த ஆராய்ச்சியாளரின் விமர்சனமாகவே அவரின் உரைகளின் மூலம் ஒரு வாசிப்பாளனால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்த அம்பேத்கர், சிறு வயது முதல் இந்து மதத்தின் நால்வர்ண சனாதன கோட்பாடுகளால் பல முறை இழிவுக்கும், இன்னலுக்கு ஆளாக்கபட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று பல பட்டங்களை பெற்ற பின்னரும் இந்தியாவின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக உயர்ந்த பின்னரும் அவர் பிறந்த சாதியின் அடையாளத்தினால் ஏற்படும் அவமரியாதைகள் அவரை துறத்திகொண்டே இருக்கிறது.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக நடத்தபட காரணம் இந்து மதத்தில் இருக்கும் சாதிய அடுக்குமுறை தான், இந்த சாதியின் வேர் இந்து மதத்தில் நால்வர்ணத்தை கற்பிக்கும் வேதத்தில் இருக்கிறது என்பதை அம்பேத்கர் உணர்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இந்த நால்வர்ண பாகுப்பாட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துன்பம் இனியும் தொடர கூடாது, இந்து மதத்தில் இருப்பது என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கு இழுக்காகவே அமையும். ஆக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சுமத்தப்பட்ட அவமானம் துடைத்தெறியப்பட்டு, அறிதான இந்தப் பிறப்பை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது இந்து மதத்தையும் இந்து சமூகத்தயும் தூக்கியெறிவதுதான் என்கிற முடிவுக்கு வருகிறார் அம்பேத்கர்.

புத்தக விமர்சனம் : நான் ஓர் இந்துவாக ...

 ”உங்களை மனிதனாகவே ஏற்றுக்கொள்ளாத இந்து மதத்தில் இன்னும் ஏன் இருக்கிறீர்கள் உங்களை கல்வி கற்கவே அனுமதிக்காத மதத்தில்; உங்களை கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்காத மதத்தில்; தண்ணீருக்கான உரிமையை கூட தர மறுக்கும் மதத்தில் ; விலங்கை கூட தொடலாம் ஆனால் மனிதனை தொட்டால் தீட்டு என்று  விரட்டும் மதத்தில் ஏன் இருக்கவேண்டும்? அது மதம் அல்ல. அது ஒரு கேலிகூத்து. அது ஒரு தண்டனை.”, என்று தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து அம்பேத்கர் கேள்வி எழுப்புகிறார். ”மதத்திற்காக மனிதன் இல்லை மனிதனுக்காக தான் மதம். ஆக நீங்கள் மனிதராக மதிக்கப்பட மதம் மாறுங்கள். சமத்துவம் அடைய மதம் மாறுங்கள், அன்றாட வாழ்வை மகிழ்ச்சியை மாற்ற மதம் மாறுங்கள்”, என்று மக்களை அழைக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்டம் எத்தனையோ உரிமைகள் வழங்கியிருந்தாலும் சட்டம் வழங்கும் உரிமைகளைக் காட்டிலும் சமூக விடுதலையே தேவை. சமூக விடுதலை கிடைக்காத வரை சட்டம் வழங்கும் எந்த உரிமைகளும் பயன்படாது ஆக தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கு மதம் மாற்றம் ஒன்றே தீர்வு என்று மக்களிடம் உரைக்கிறார்.

     சாதி என்பது இந்து மதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவும் அம்பேத்கர் பார்க்கிறார். மற்ற சாதியினரோடு சேர்ந்து உண்பதாலும், இருவேறு சாதிகளுக்கிடையே நடக்கும் திருமணங்களாலும் சாதியை ஒழித்துவிட முடியாது அது ஒரு நோயுற்ற மனநிலை. இந்து மதத்திலிருந்து கொண்டே சாதியை ஒழித்துக் கட்டலாம் என்று கதைப்பது நஞ்சை அமிழ்தமாக்கி விட முடியும் என்று சொல்வதை போன்றது தான் என்று சொல்கிறார். இந்து மதத்திலிருந்து கொண்டே சாதியை ஒழிக்கலாம் என்பது இயலாத காரியம் மட்டுமல்ல அது தேவையற்ற நேரவிரையம் அது நமது பணியும் அல்ல என்று சொல்கிறார். ஆகவே மதமாற்றம் ஒன்றே தாழ்த்தப்பட்ட மக்கள் தப்பிக்க ஒரே வழி என்கிறார்.

”உலகத்தின் கொடூரமான மனிதர்களை வரிசை கட்டி நிறுத்தினால் அதில் இந்துக்களை இரண்டடி முன்னால் நிறுத்தலாம். அவர்கள் நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவளையும் வைத்து இருப்பார்கள். அவர்கள் துறவியைப் போலப் பேசுவார்கள், ஆனால் கசாப்புக்கார்களைப் போல நடந்து கொள்வார்கள். எல்லோரிடத்திலும் கடவுளைக் காணலாம் என்று சொல்லிக்கொண்டே சக மனிதரை மிருகங்களை விட கேவலமாக நடத்தும் அவர்களோடு எந்த உறவும் வைத்துக்கொள்ளாதீர்கள்.”  என்கிற மேற்படி அம்பேத்கரின் வரிகளிலிருந்து அவருக்கு இந்து மதத்தின் மீது இருந்த கோபத்தின் வெளிபாட்டை நம்மால் உணர முடிகிறது.

அம்பேத்கர் கூறுவது போல் மதம் மாறுவதை தாழ்த்தப்பட்ட மக்கள் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் அம்பேத்கர் 20 ஆண்டுகள் தொடர்ந்து மதம்மாற்றத்திற்கான தேவையை உணர்த்த தொடர்ந்து உரையாடுகிறார். அதை ஒரு இயக்கமாகவே செய்துள்ளார் என்பதை இந்த புத்தகம் படிக்கும் போது உணர முடிகிறது.

அம்பேத்கரைத் தமிழில் வாசிக்க ...

 அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து கேட்கிறார். “இந்து மதத்தை விட்டுப் பிரிந்து விலகி விடுங்கள் என்று நான் சொல்வதில் புதிதாக என்ன இருக்கிறது? இப்போது சாதி இந்துக்களோடு நீங்கள் எப்படிப்பட்ட சமூக உறவோடு இருக்கிறீர்கள்? முஸ்லீம்கள் போலவும், கிறித்துவர்கள் போலவும் சாதி இந்துக்களிடமிருந்து ஏற்கனவே நீங்கள் பிரிந்து தானே இருக்கிறீர்கள். அவர்கள் முஸ்லீம்களோடும், கிறித்துவர்களோடும் சேர்ந்து உண்ணாமலும் திருமண உறவு கொள்ளாமலும் இருப்பதைப் போலத்தானே உங்களோடும் இருக்கிறார்கள். ஆக உங்களுடைய சமூகமும் இந்துக்களுடைய சமூகமும் வேறு வேறு தான். முன்பு எப்படி இருந்தீர்களோ அதே போலத்தான் இப்போதும் இந்துக்களை விட்டு தனித்து இருக்கப் போகிறீர்கள் அதனால் மதமாற்றத்தை நினைத்து பதற்றப்பட  தேவையில்லை” என்று தாழ்ப்பட்ட மக்களை நோக்கி பேசுகிறார்.

     அம்பேத்கர் மதமாற்றத்திற்கு தாழ்த்தபட்ட மக்களிடம் அழைப்பு விடுக்கும் போது அதற்கு சாதி இந்துகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர் கொள்கிறார். உங்கள் முன்னோர்கள் இருந்த இந்து மதத்தை விட்டு விலகி செல்வது நியாயமா? உங்கள் முன்னோர்கள் என்ன முட்டாள்களா என்றெல்லாம் தாழ்த்தபட்ட மக்களை பார்த்து சாதி இந்துக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களின் அத்தனை வாதங்களையும் அம்பேத்கர் தவிடுபொடியாக்குகிறார்.

”சிலர் நீங்கள் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் அல்லது கிருத்துவ மதத்திற்கு மாறினாலும் அங்கும் சாதி இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை தான் இந்தியாவில் அந்த மதங்களில் உள்ள சாதிய பாகுபாடு என்கிற நோய் இந்துகளிடமிருந்தே தோன்றியது என்கிறார் அம்பேத்கர். மேலும் இந்து மதத்திலிருக்கும் சாதி அமைப்புகளுக்கான அடித்தளமே அவர்களுடைய இந்து மதம் தான் என்கிறார். ஆனால் இஸ்லாமிய, கிருத்துவ மதங்களில் இருக்கும் சாதிகளுக்கு அவர்களின் மதங்களில் எந்த அங்கிகாரமும் கிடையாது. ஒருவேளை இந்துக்கள் சாதிய அடுக்குகளை எல்லாம் கலைத்து விடுகிறோம் என்று புறப்பட்டால் அவர்களுடைய மதம் அவர்களை வழிமறிக்கும். ஆனால் இஸ்லாமியரோ, கிருத்துவரோ  தங்கள் மதத்திற்குள் உள்ள சாதியை ஒழிக்க ஒரு இயக்கம் துவங்கினால் அவர்களுடைய மதம் அவர்களுக்கு எந்த தடையும் சொல்ல போவதில்லை ஏன் என்றால் இந்து மதத்தின் மதநூலான வேதங்களே பிறப்பின் அடிப்படையில் சாதிய பாகுபாட்டை உருவாக்குகிறது. ஆனால் இஸ்லாமிய மதத்தின் குரானோ அல்லது கிருத்துவ மதத்தின் பைபிளோ பிறப்பின் அடிப்படையில் உயர் தாழ்வு கற்பிப்பது இல்லை என்று புரிய வைக்கிறார் அம்பேத்கர்.

சமுதாய அரங்கம்: நான் இந்துவாக ...

      சுயமரியாதையை வழங்காத இந்து மதத்தில் தொடர்ந்து வாழ்வது இயலாதது என்ற முடிவுக்கு வரும் அம்பேத்கர் தான் இறப்பதற்கு முன் இந்து மதம் துறந்து வேறு மதம் மாறுவது என்று முடிவெடுக்கிறார். 1935 களிலேயே அவர் அந்த முடிவுக்கு வருகிறார். தான் மட்டும் மதம் மாறினால் போதாது தன்னோடு இந்து மதத்தால் இன்னலுக்கு உள்ளாகியுள்ள தாழ்த்தபட்ட மக்களையும் மதம்மாற்றி அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார் அதை நோக்கி 20 ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மதமாற்றத்திற்கான அவசியம் குறித்து விளக்கி பயணம் செய்கிறார். அந்த பயணத்திற்காக தொடர்ந்து தாழ்த்தபட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார். முடிவாக 1956 ல் இந்து மதத்தை துறந்து 5 லட்சம் மக்களோடு புத்த மதத்தை தழுவுகிறார்.

     அம்பேத்கர் தாழ்த்தபட்ட மக்களின் விடுதலைக்கு மதமாற்றம் தான் தீர்வு என்கிற முடிவுக்கு வரும் போது அதற்கு இஸ்லாமிய, கிருத்துவ மதத்திற்கு மாறாமல் புத்த மதத்தை ஏன் தேர்வு செய்கிறார் என்பதை தன்னுடைய உரையில் மிக அழுத்தமாக விவரிக்கிறார். உலகில் இதுவரை மக்களிடம் நான்கு பேரின் மதங்கள் தான் தாக்கதை செலுத்தி வருகின்றன அவர்கள் புத்தர், ஏசு, முகம்மது மற்றும் கிருஷ்ணன். இந்த நால்வரில் புத்தர் வேறுபடும் இடம் அவர் தன்னைத் தானே மறுதலித்துக் கொண்டதாகும். பைபிளின் பக்கங்கள் முழுக்க ஏசு வலியுறுத்துவது, தானே கடவுளின் மகன் என்பதையும் அதை ஏற்க மறுப்பவர்களூக்கு கடவுளின் பேரரசில் நுழைய அனுமதி மறுக்கபடும் என்கிறார்; முகம்மது ஒரு படி மேலே போகிறார். ஏசுவை போலவே அவரும் தன்னை இறைவனின் தூதர் என்றே அறிவித்துக் கொள்கிறார். ஆனால் இறைவனால் அனுப்பப்பட்ட கடைசித் தூதர் தான் மட்டுமே என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறார். ஏசுவையும், முகம்மதுவையும் கடந்து இரண்டு படி மேலே போய்விடுகிறார் கிருஷ்ணன். கடவுளின் மகனாகவோ அல்லது தூதராகவோ இருப்பதெல்லாம் அவருக்குப் போதாது. அவர் தன்னையே கடவுள் என்று மற்றும் கூறி கொள்ளவில்லை அவர் தன்னை கடவுளுக்கு எல்லாம் கடவுள் அதாவது அவர் தன்னை தேவாதி தேவனாக… பரமேஸ்வரனாக பிரகடன படுத்தி கொள்கிறார்.  புத்தர் தன்னை கடவுளாகவோ அல்லது கடவுளின் தூதராகவோ எப்போது அறிவித்துகொள்ளவில்லை அவர் தன்னை ஒரு எளிய மனிதராக பிரகடன படுத்துகிறார்.

மேலும் ஏசுவும், முகமதுவும் தங்களால் சொல்லப்பட்டவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்ட வாக்குகள் எனவும் அதனால் அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று அறிவித்து கொண்டார்கள். கிருஷ்ணன் தன்னையே கடவுள் என்று அறிவித்து கொண்ட பிறகு அவரின் பேச்சுக்கு மறுபேச்சுக்கே இடமில்லை. ஆனால் புத்தர் தன்னால் சொல்லபட்டவை குறைகளற்றவை என்று ஒரு போதும் சொல்லிக்கொள்ளவில்லை. அவர் தன் மதமானது காரண காரியங்களையும், பகுத்தறிவையும் அடிப்படையாக கொண்டது தான் சொல்லிவிட்டதாலேயே அதை அப்படியே நம்பவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். உளுத்து போன பழமையை தூக்கி சுமக்கும் ஒன்றாகத் தன் மதம் இருக்காது அது காலத்திற்கேற்றார் போல் மாற்றி அமைத்து கொள்ளும் சுதந்திரத்தை கொண்டதாக புத்தர் அறிவிக்கிறார்.

Bhimrao Ramji Ambedkar and the Great Conversion - Tricycle

அடுத்து இந்து என்கிற மதமானது அறம் என்பதை அடித்தளமாக கொண்டுகட்டபட்டது அல்ல ஆனால் புத்தரின் மதம் என்பதே அறம் தான். புத்த மதத்தில் கடவுள் இல்லை அறம் தான் அங்கு கடவுள் என்கிறார் அம்பேத்கர். இந்து மதத்தின் தர்மம் அறத்தை குறிக்கும் சொல் அல்ல என்று விவரிக்கிறார் அம்பேத்கர். இந்து மதத்தின தர்மம் என்பது பார்ப்பனர்கள் செய்ய வேண்டிய யாகம், யக்னங்கள், சடங்குகள், பலிகள் பற்றியே பேசுகிறது. ஆனால் புத்த மதம் யாகம், யக்னத்தை எதிர்கிறது. புத்தம் சொல்லும் தம்மம் அறத்தை மற்றுமே பேசுகிறது. மேலும் இந்து மதத்தின் தேவவாக்கு என்பதே சமத்துவமின்மை தான். இந்து மதத்தின் சதுர்வர்ணம் தான் சமத்துவமின்மையை கற்பிக்கிறது. ஆனால் இதற்கு நேர் எதிராக புத்தரால் உயர்த்திபிடிக்கபடுவது சமத்துவம் என்று சொல்கிறார் அம்பேத்கர். பார்ப்பனர்களே புத்தரின் எதிரிகள். புத்தர் தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அசமத்துவம் பேசும் இந்து மதத்தின் சதுர்வர்ண கோட்பாட்டை கடுமையாக எதிர்த்தார்.  ஆக சமத்துவம் பேசும், பகுத்தறிவு சிந்தனை கொண்ட, அறம் போதிக்கும் இந்து மதத்தை இந்த மண்ணிலேயே எதிர்த்து கேள்வியெழுப்பிய புத்த மதத்திற்கு மாறுவதே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியானதாக இருக்கும் என்று வலியுறுத்திகிறார் அம்பேத்கர்.

     புத்தகம் நெடுக இந்து மதத்தை அசமத்துவ கோட்பாடுகளை கடுமையாக சாடும் அம்பேத்கர் அதற்கு மாற்றாக இந்த மண்ணிலேயே தோன்றிய புத்த மதம் தான் மாற்று என்பதற்கு ஆழமாக புத்தரின் சமத்துவ அற கருத்துகளை முன் வைக்கிறார்.

     இந்து மதம் புனிதமானது, அன்பு செலுத்தும் மதம் என்றெல்லாம் நம்பும் இந்துக்கள் அனைவரும் அம்பேத்கரின் இந்த நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்…

டாக்டர் அண்ணல் அம்பேத்கர். 

”தலித் முரசு” வெளியீடு.

ச.சிவக்குமார்

வழக்கறிஞர், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *