வழக்கத்தை விடவும் இன்று சற்று முன்னரே விழிப்பு வந்தவளாய் எழுந்தாள். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, தோட்டத்திற்கு சென்றாள். அவளுக்காகவே காத்திருந்ததுபோல், குயில் கூவத் துவங்கியது.  அவள் ஒவ்வொரு முறை தோட்டத்திற்கு வரும்போதும் குயில் கூவும். பல முயற்சிக்குப் பின்னும் இதுவரை அந்த குயில் எங்கிருக்கிறது  என்று அவளால் பார்க்க முடிந்ததில்லை. ஆனால் அதன் குரலைக் கேட்டதும் அவளை அறியாமல் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அவள் மனதில் பரவும். இன்றும் அதே மகிழ்ச்சியுடன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினாள். 

அவள் தோட்டத்தில் ஒருபுறம் மா, கொய்யா, வாழை மரங்களும் நடுவில் ரோஜா, மல்லி, சாமந்தி என்று மலர்ச் செடிகளும் மறுபுறம் காய்கறிச் செடிகளும் வைத்திருந்தாள். ஒவ்வொரு செடியாக பார்த்து ரசித்தபடியே தோட்டத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். இன்று மஞ்சள் ரோஜா பூத்திருந்தது. அதை பறித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளுக்கு சிறு வயது முதலே மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். அந்த நிறம் ஏன் பிடிக்கும் என்று அவளுக்கு புரியாவிட்டாலும் அதன் மீது ஒரு அலாதி பிரியம். பெரும்பாலும் மஞ்சள் நிற உடையே எடுப்பாள். அவள் அம்மா “என்னடி இது அடிக்கிற கலர் ?” என்று கிண்டல் செய்தாலும் பொருட்படுத்தியதில்லை. இன்று பூத்த மஞ்சள் ரோஜா மிகவும் அழகாக இருப்பதாக உணர்ந்தாள். அதை ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது வைத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள். 

அன்றாடம் செய்யும் சமையல்களை செய்யத் தொடங்கினாள். “நேரமாச்சு சீக்கிரம்” என்று குரல் கேட்டவள், “அதுக்குள்ள என்ன அவசரம், இன்னும் நிறைய நேரம் இருக்கு..” என்று பதில் அளித்தவாரே சமையல் வேலையை முடித்து, குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு தயார்படுத்தி ஸ்கூல் வேன் வந்தவுடன் அனுப்பி வைத்தாள். மீண்டும் சமையல் அறைக்கு வந்து கணவருக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செய்து டைனிங் டேபிளில் வைத்து உண்ணும் படி கூறிவிட்டு துணிகளை வாஷிங் மேஷினில் போட்டாள். 



சிறிது நேரத்தில் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனே கடிகாரத்தை அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டு ஒவ்வொரு வேலையாக முடித்தாள். மீண்டும் எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று தெரியாததால் தோட்டத்திற்கு சென்று செடிகளுக்கு உரம் போட்டு காய்ந்த இலைகளை பெருக்கி சுத்தம் செய்தாள். மீண்டும் குயிலின் கீதம் அவளை மெய் சிலிர்க்கச் செய்தது. எப்பொழுதும் மொட்டை மாடியில் துணிகளை உலர்த்துபவள், தான் இல்லாதபோது குழந்தைகள் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று போர்டிகோவில் உலர்த்தினாள்.  

“இன்னும் கெலம்பலயா ?” என்ற கேள்வி காதில் விழுந்ததும் “இதோ வந்துட்டேன்” என்று கூறியவாறு, வேறு ஏதேனும் வேலை இருக்கிறதா என்று யோசித்தாள். சட்டென்று நினைவு வந்தவளாய் தன் பாங்க் அக்கவுண்டில் இருந்த பணத்தை ஆன்லைன் மூலம் தன் கணவரின் அக்கவுண்டிற்கு மாற்றினாள். 

“அம்மாக்கிட்டப் பேசி ஒரு வாரம் ஆகுது”” என்று அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அடுத்த முனையில் அம்மா “எப்பிடி இருக்கடி மாப்பள கொழந்தைங்க எல்லாம் எப்பிடி இருக்காங்க ?” என்று கேட்டார். “எல்லாரும் நல்லா இருக்காங்க.” என்று பேசத் தொடங்கியவள் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை தூண்டித்தாள். 

தனக்குப் பிடித்த மஞ்சள் நிற சேலை அணிந்து ரோஜாப் பூவை தலையில் சூடினாள். புறப்படத் தயாரான நேரத்தில் அவள் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலையாக நினைவில் வரிசையாகத் தோன்றிக்கொண்டே இருந்தது. 

இன்னும் கொஞ்சம் அவகாசம் கெடச்சா முக்கியமான எல்லா வேலையையும் முடிச்சுருவேன். “ என்று வருத்தத்துடன் தனக்காக காத்திருந்த காலனுடன் புறப்படத் தயாரானாள். 

பிரியா ஜெயகாந்த்

மின்னஞ்சல்: priyajayakanth78@gmail. Com 



2 thoughts on “சிறுகதை: அவகாசம் – பிரியா ஜெயகாந்த்”
  1. பெண்களின் ‌‌‌ கடமைகளுக்கு எல்லை இல்லை என்பதை பிரதிபலிக்கும் சிறுகதை. Twist ஆன முடிவு. வாழ்த்துகள் பிரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *