Bharathi Kavithanjan Suthanthiram Enbathu Summa (சுதந்திரமென்பது சும்மா) Poetry in Tamil Language Book Day is Branch of Bharathi Puthakalayam



ஒரு துளிப்பவுணுக்கு
வழியில்லை என்றாலும்
மூக்குத்திக்கு பதிலாக
இன்னும் துடைப்பக்குச்சி

நேற்று பூப்பெய்திய பெண்டுகளுக்கும்
காதறுந்த பாட்டிகளுக்கும்
ஒதுங்க கழிப்பறையின்றி
இன்னும்
கருவேலங்காடும்
கள்ளிச்செடிமறைவும்

சோற்றுக்கு கதியற்று தெருவில் நிற்கும்
அன்றாடங்காய்ச்சியின்
வறுமைக்கோட்டை அழித்துவிட்டதாய் கூவும் கார்ப்பரேட்டுகளின் சந்தைக்கூச்சலில்
இருப்பதையெல்லாம் இழந்துவிட்டு
வாழப்பழகிக் கொண்டிருக்கிறோம்
ஒளிரும் டிஜிட்டல் இந்தியாவின் பெருமிதத்தில்

மாற்றுடையின்றி
உழைக்கும் பெண்ணின்
கிழிந்த ஆடைக்குள் தெரிவது
தேகமல்ல
இந்த தேசம்.

மனிதர்களாக அற்றபோதும்
ஒரு புழு பூச்சியாக கூட
வாழ அனுமதிக்காத இந்த நாடென்பது
சுதந்திர நாடல்ல
திறந்தவெளி சுடுகாடு.

வெறும் வாக்குறுதிகளின் தூரல்கள்
வந்து நிரப்பிவிட முடியாது
கஞ்சிக்கு வழியற்று
ஈரத்துணி கட்டியிருப்பவனின்
பசித்த வயிற்றை

வந்தும் விடியாத
இரவுகளின் நிறமென்பது
துக்கமல்ல
ஒரு பொழுது சிவப்பாய் விடியுமென
காத்திருக்கும் போர்குணத்தின் நிறம்.

இதுவரை
உழைக்கும் மக்களுக்கல்ல
ஆனந்த சுதந்திரமென்பது
அம்பானிகளுக்கும்
அதானிகளுக்கும்

வாய் கட்டப்பட்டிருக்கும் நீதிதேவதையின்
கையில் வைத்திருக்கும் தராசுத்தட்டுகள்
வலுத்தவனின் பக்கமே
சாய்ந்துக்கிடக்கின்றன எப்போதும்
ஊமையாக்கப்பட்ட
அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும்
இராமராஜ்ஜியத்தில்
மக்களை வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன
மனுசட்டத்தின் கொடுங்கைகள்.

நிலத்திற்காகவும்
நீருக்காகவும்
காற்றுக்காகவும்

இன்னும்
வாழுவதற்காகவும் போராடுகிறவர்களை
காணாமல் போனவர்களுக்கான கொலைப்பட்டியலில் அல்லது மனம் பிழன்றவர்களாக்கி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்குமொரு
சனாதன மண்ணில்

சுதந்திரம் வந்துவிட்டதாய்
வாய் கிழியக் கதைத்துக்கொண்டிருப்பதெல்லாம்
சும்மா தான்.

– பாரதி கவிதாஞ்சன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “சுதந்திரமென்பது சும்மா – பாரதி கவிதாஞ்சன்”
  1. நேற்றுப் ப்திந்த ஹ்யூம் பற்றிய பதிவே இங்கு காணப்படவில்லை.இதுவும் மறையுமா என்பது தெரியாமலே இன்னுமொரு பதிவை இடுகிறேன்.

    பாரதி கவிதாஞ்சனின் இந்தக் கவிதை நெருப்பெழுத்துகளால் கோர்க்கப்பட்ட அக்கினி மாலை.விடுதலைத் திருநாளில் பாரதமாதாவுக்கு சாற்றுவதற்காகப்பத்திரப்படுத்திக்கொள்கிறேன்.Bookday குழுவிற்கு செவ்வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *