கதைச்சுருக்கம் 60: போகன் சங்கரின் *பாஸிங் ஷோ* சிறுகதை

Bogan Sankar's) Short Story Passing Show Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day is Branch of Bharathi Puthakalayamகதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

வெளிச்சம் சிலரை மீட்டெடுக்கிறது.  சிலரைக் கூசச் செய்து சிதறடிக்கிறது.  இவரது கதைகள் இந்த இரு தரப்பினரைப் பற்றியவை.

பாஸிங் ஷோ
போகன் சங்கர்

மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்.  அட, ஹரி. 

“ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?”

அவன் நிமிர்ந்து பார்த்து “மஞ்சு மேடம்” என்றான் பலவீனமாக.

யாரோ ஹரியின் சூட்கேஸ் மற்றும் சாமான்களை எடுத்துத் தந்தார்கள்.  நீளமாகச் சுருட்டி வைத்திருந்த கான்வாஸ்களை ஏற்ற ஆட்டோக்காரர் சிரமப்பட்டார்.  

தெரிந்த டாக்டரிடம் போனாள்.

“வைரல் ஃபீவர், உங்க பக்கத்து வீட்டுல வாடகைக்கு இருக்கிற பையன்தானே?  சாப்பாட்டில கவனமா இருக்கணும்.  இது மூணு நாளைக்கு!” என்றார்.  மாத்திரைகள் தந்து, 100 ரூபாய் வாங்கிக் கொண்டு ஊசியும் போட்டார்.  வீடு வரும்போது இரவு  9 மணி.  அதற்குள் ஹரி லோசாகத் தெளிந்திருக்க “நானே இறங்கிக்கிறேன்” என்றவனை “சும்மா இரு சார்…” என்ற ஆட்டோக்காரர் ஏறக்குறைய தூக்கிச் சென்று வீட்டுக்குள் போட்டார்.  

அதற்கள் ராஜகோபால் வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, “என்னடி…  என்ன ஆச்சு?” என்றார்.

“ஒண்ணும் இல்லை…  ஹரிக்கு உடம்பு சரியில்லாம ரோட்டில மயங்கிக்கிடந்தார்.  டாக்டர்கிட்ட காமிச்சுட்டு வர்றேன்.”

சுரேஷ் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன்  அவளைக் கண்டதும் அதைச் சரேல் என்று மறைத்து “ஹாய் மம்மி” என்றான்.  அதைக்கூட கவனிக்காமல் நேராக அடுக்களைக்குப் போனாள்.

ராஜகோபால் பின்னாலேயே வந்தார்.  “சரி இப்ப என்ன சமையல் பண்ணப் போறே… ரொம்பப் பசிக்குது இது என்ன?”

“கஞ்சி அவருக்கு.”

“குடு.. நான் எடுத்துட்டுப் போறேன்.”

“வேணாம்.  மாத்திரை குடுக்கணும்.   எனக்குத்தான் தெரியும்” என்று அவரைக் கடந்து போனாள்.

மறுநாள் காலை, ராஜகோபால் அவன் வீட்டுக்குப் போய் பேருக்கு ஒரு தடவை பார்த்தார்.  அறை முழுவதும் புத்தகங்களும் கான்வாஸ்களும் நிரம்பி இருக்க, கட்டிலுக்கு அடியில் இரண்டு ஷீவாஸ் ரீகல் புட்டிகள் இருந்தன.  கான்வாஸ்களில் மிக அழகான பெண்கள் மிருக நிர்வாணமாக நின்றிருந்தார்கள்.  அறையில் லேசான சிகரெட் மணம்.  இந்தக் காய்ச்சல்லக்கூட சிகரெட் குடிக்கிறானே முட்டாள் என நினைத்தார்.  அவர் போகையில் வாய் பிளந்து, விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

மறுநாளும் அவனுக்கு வீட்டிலிருந்து கஞ்சி, பால் எல்லாம் போயின.

இரண்டாம் நாள் ஹரி கொஞ்சம் எழுந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க “இப்பவும் புத்தகம் படிக்கணுமா?” என்றாள் மஞ்சுளா.

அவன் மூடிவைத்துவிட்டு “வாங்க மேடம்” என்றான்.  கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்துவிட்டு “ஐயோ ரொம்ப சிரமம் உங்களுக்கு.” 

“என்ன சிரமம்… வெறும் ரசம் சாதம்” என்றவள் “எங்க போயிருந்தீங்க பத்து நாளா? அப்ப உங்களுக்கு ரெண்டு லெட்டர் வந்தது”.

“தேங்க்ஸ், நெல்லை பக்கம்  பிரம்மதேசம்னு ஒரு ஊர்லே சோழர்கள் கட்டின பழைய கோயில் இருக்கு.  ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிற்பங்கள்.   வரையப் போயிருந்தேன்”.

“ஓவியர் மதி எனக்குப் பெரியப்பா” என்று மஞ்சுளா புன்னகைத்தாள். 

அவன் மறுபடியும் “மை காட்” என்றான்.  “எனக்குத் தெரியவே தெரியாது மேடம்.  என்ன ஒரு மேதை அவர்” என்றான்.  இப்போது அவன் பார்வையே மாறிவிட்டது.

“நான் சந்திக்க விரும்பிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்” என்றவன் தயங்கி “நீங்க வரைவீங்களா?” என்றான்.

“இல்லை அதுக்கெல்லாம் விட மாட்டாங்க.  பெரியப்பாவையே கொஞ்சம் தள்ளித்தான் வெச்சிருந்தாங்க.”

“அதுக்கே ஞானம் வேணுங்க.  உங்க பெரியப்பா உங்களை வரைஞ்சிருக்காரா?” என்று கேட்டான்.

பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து  என்கிறார்கள்.” -போகன் சங்கர் | கனலி
Image Courtesy: Kanali

“இல்லை ஏன்?”

“உங்க முகத்தை அவர் படங்களில் பார்த்த நினைவு” என்றான்

“நீங்க எப்பவும் நிலக்காட்சிகள் உடல்கள்தான் வரைவீங்களா?  நவீன வடிவங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா?”

அவன் சற்று கோபமுற்று “அவையெல்லாம் நீர்க்குமிழிகள், காலாவஸ்தை அல்லது பாஸிங் ஷோ” என்றான்,

பாஸிங் ஷோ என்றொரு சிகரெட் இருந்தது.  பெரியப்பா அதைத்தான் பிடிப்பார்.  அவரது இடது கையில் இன்னொரு தூரிகைபோல அது எப்போதும் புகையும்.  அந்தப் புகை வாசம் எப்போதும் அவரது அறையில் உடைகளில் ஓவியங்களில் இருந்தது,

கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டேயிருந்த மஞ்சுளாவின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு “நான் ஒரு நாள் உங்களை வரையலாமா?  உங்களுடையது அபூர்வமான முகம்” என்று அவள் கண்களைப் பார்த்தான் ஹரி,

மஞ்சுளா அந்தக் கேள்வியால் தாக்கப்பட்டு மிகவும் நாணி “நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.  

அன்றைக்கு ராத்திரி மஞ்சுளாவிற்கு அபத்தமாக ஒரு கனவு வந்தது.  ரெம்ப்ராண்டின் போர்வீரன் மாதிரி சிவப்பு ஆடையில் யாரோ குதிரையில் அவளைத் தூக்கிப் போவதுபோல்.  பிறகு அவன் குதிரை அவள் .. என யாருமே ஆடை அணிந்திருக்கவில்லை.  என்ன ஒரு கனவு!  பக்கத்தில் ராஜகோபால், அவர் கன்னத்தில் கோழை எச்சில் வடிய குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

“மஞ்சுளா மேடம் சினிமாவுக்கு வர்றீங்களா, துல்கர் சல்மான் படம்” என்றாள் சுசீலா.  மஞ்சுளாவோடு அலுவலகத்தில் வேலை பார்ப்பவள்.

யார் என்று தெரியவில்லை இருந்தாலும் “எனக்கு அவனைப் பிடிக்காது” என்றாள் பொதுவாக.  

“சல்மான் பிடிக்காதா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்த லலிதா “மாமிக்கு வயசு ஆச்சு இல்லியோ….” என்றாள் கிண்டலாக.

மஞ்சுளாவுக்கு திக்கென்றது.  அவமானமாக உணர்ந்தாள்.  அவளிடம் மஞ்சுளா ஏதோ சொல்ல முயன்றபோது “சுசீலா மேடம், உங்களை ஏ.ஓ கூப்பிடுகிறார்” என்றார் அலுவலக உதவியாளர்.  சுசீலா உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து முகம் எல்லாம் மந்தகாசமாக வெளியே வந்தாள்.

ஆபீஸ் விட்டுக் கிளம்பி வெளியே வந்ததும வழிநெடுக சுசீலா அவளது பாய்ஃப்ரெண்டு பற்றி அளந்து கொண்டே வந்தாள்.  “He is totally mad  மேடம், சரியான அசடு” என்றாள்.  அசடைக் காதலிக்கிறவன் முட்டாள் எனச் சொல்ல விரும்பினாள் மஞ்சுளா.  ஆனால் “நான் கிளாசிக்குகளை மட்டும்தான் பார்ப்பது சுசீலா, எல்லாவற்றையும் பார்ப்பது இல்லை சாப்பிவது இல்லை படிப்பது இல்லை” என்றாள்.

“அதான் சொன்னேனே… உங்களுக்கு வயதாகிவிட்டது” சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தாள் சுசீலா.

மஞ்சுளா மிகக் கோபமுற்று “கிளாசிக்குகளைப் பார்ப்பது ரசனையோட ஆழத்தின் அடையாளம்.  வயதாகிவிட்டதின் அடையால் இல்லை.”

ஆனால் சுசீலா சொன்னதுபோல மஞ்சுளா நிர்மலிடம் சொல்லியிருக்கிறாள்.  பெரியப்பாவைத் தேடிவந்த எத்தனையோ மனிதர்களில் ஒருவன் நிர்மல்.  மஞ்சுளாவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு “இதைப் படித்துப் பார்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அந்தக்தை  மஞ்சுளாவுக்கு அபாரமான மனக் கிளர்ச்சியைத் தந்தது.  

“இதை ஏன் என்னிடம் கொடுத்தீர்கள்?  இதில் பெண்ணின் தந்தையார் காதலுக்கு ஒப்புக் கொள்வது இல்லையே..” என்று அவனிடம் கேட்டாள். 

அவன் தளர்ந்து போய் “ஆமாம்” என்றான்,

“உன் தந்தையும் இதற்கு ஒப்புக் கொள்ளப்போவது இல்லை.  எந்தப் பெண்ணின் தந்தைதான் என்னைப் போன்ற பரதேசிகளை ஏற்றுக் கொள்வார்?”

மஞ்சளா அவனை ஆழமாகப் பார்த்து “நீங்கள் காதலைச் சொல்லும் முறை இதுதானா?” என்றாள்

“வேறு எப்படிச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.

“ஆங்கிலப் படங்களில் சொல்வதுபோல் நேரிடையாக அல்லது இந்திப்படங்களைப் போல் சற்றே நாடகத்தனமாக..”

“நான் வங்காளி.  வங்காளப் படங்களில் சொல்வதுபோலத்தான் சொல்வேன்”.

“அதுவும் பழைய வங்காளப் படங்கள்”.

“ஆம்  ஆனால் அவை கிளாசிக்குகள்.”

“அவற்றை வயதானவர்கள்தான் பார்ப்பார்கள்”.

அவன் மறுத்து “இல்லை ஆழமானவர்கள், ரசனை உடையவர்கள் கிளாசிக்குகளைத்தான் பார்ப்பார்கள்.  அவைதாம் படங்கள்.  மற்றவை எல்லாம் காலாவஸ்தை அல்லது பாஸிங் ஷோ”. 

மஞ்சுளா சட்டென உறைந்து நின்றாள்.  நிர்மலை ஹரிக்குத் தெரியுமா?  எப்படி அதே வார்த்தைகளைப் பயன்படுத்தினான்?  அல்லது இவர்களைப் போன்றவர்கள் ஒரே மாதிரிதான் பேசுவார்களா?

“மாமி ஏன் நின்னுட்டீங்க?   நடக்க முடியலியா?” என்றாள் சுசீலா.

“டோன்ட் கால் மீ மாமி.”

“மாமி நீங்க கொஞ்சம் தொப்பையைக் குறைக்கணும்.  மூச்சு வாங்குது உங்களுக்கு.  ஜிம்முக்கு போங்க.”

“எவ்வளவு காசு ஆகும் சுசீலா?”

“அதிகம் ஆகாது மாமி.  மாசம் சுமார் 2000 ரூபாய் வரும்.”

2000 ரூபாயா? ராஜகோபாலுக்கு மார்பு அடைத்துவிடும்.  மஞ்ளா பக்கவாட்டுக் கடைக்கண்ணாடிகளில் ஒருமுறை தன் வயிற்றைக் கடைக்கண்ணால் பார்த்தாள்.  ஐயோ இறங்கிய இந்த வயிறையா ஹரி வரைகிறேன் எனச் சொன்னான்? ச்சே முகத்தைத்தானே வரைகிறேன் எனச் சொன்னான்.  அதற்கு எதற்கு ஜிம்முக்குப் போகவேண்டும்?

நிர்மல் சொன்னதுபோலவேதான் அப்பா நடந்து கொண்டார்.  தன்னைப் போல ஒரு நபரைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார்.  ராஜகோபாலைப் பார்த்ததுமே அம்மா சொல்லிவிட்டாள் “இந்தாள் உங்கப்பாவின் நகல்”.

இடையில் பெரியப்பாவின் அசாதாரண மரணம் மஞ்சுளாவிடம் மிகப் பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது.  நிர்மல் திரும்பி வந்து அவனுடன் அழைத்தபோது, அவள் போகவில்லை. “சட்டென ஏன் உன்னை சக்தியற்றவளாக மாற்றிக் கொண்டாய்?  நான் உன்னை உன் அம்மாவின் மகள் என நினைத்திருந்தேன், ஆனால் இப்போது நிச்சயமாக நீ உன் அப்பாவின் மகள்தான்” என்றான்.

ஒரு கார் சர்ரென்று அவர்கள் அருகில் வந்து நின்றது.  அந்த அதிகாரிதான்.  அவர் உள்ளிருந்து தலையை நீட்டி “மிஸ் சுசீலா, உங்க ஏரியா பக்கம்தான் போறேன் வர்றீங்களா?” என்றார்.

அவள் காத்திருந்தவன்போல் ஏறிக்கொண்டு “மேடம் நீங்க..” 

அவர் அப்போதுதான் அவளைக் கவனிப்பதுபோல “ஓ மஞ்சுளாவா? நீங்களும் வாங்களேன்” என்றார்.

“நோ சார், எனக்கு கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு” என்றாள் கடுப்புடன்.

நடைபாதைக் கடைகளில் தேவை இல்லாத பொருட்களாக தேடிப்பிடித்து வாங்கினாள்.  காய்கறிகள் பழங்கள், ஹரிக்கு ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்.  யோசித்து முழு கோதுமை ரஸ்க் பாக்கெட் வாங்கினாள்.  இன்னொரு முறை கடைக் கண்ணாடியில் வயிற்றை இழுத்துப் பார்த்துக் கொண்டாள்.  ராஜகோபால் சத்தம் போட்டாலும் பரவாயில்லை என ஒரு மாதம் ஜிம் போய்ப் பார்த்துவிட வேண்டும் ,  அவள் வீட்டுக்கு போவதற்குள் ராஜகோபால் வந்திருந்தார்.

“மஞ்சு சப்பாத்திக்கு மாவு போட்டு வெச்சிருக்கேன்.  கல்லுலே இட்டு எடுத்துடு”.

“இருங்க.  முதல்லே ஹரிக்கு ஏதாவது குடுத்திட்டு வர்றேன்” என்றவளை ராஜகோபால் விநோதமாகப் பார்த்து “அவனை பார்த்துக்க ஆள் வந்தாச்சு” என்றார்.

“யார் அவர் அப்பாவா?”

“இல்லே அவன் ஃப்ரெண்டாம்,  மத்தியானமே வந்துட்டா.  ரெண்டு பேரும் அரைகுறையா டிரெஸ் பண்ணிட்டு ஏதோ களிமண் சிலை பண்றேன்னு கொட்டம் அடிச்சிட்டு இருக்குதுங்க.  இனி மாமியைச் சிரமப்பட வேண்டாம்னு சொல்லுங்கனு ஹரி சொன்னான்” என்றார் ராஜகோபால்.

மஞ்சுளா உறைந்து போய் அறை நடுவிலேயே சிலைபோல நின்றிருந்தாள்.  பிறகு கைப்பையை வீசிவிட்டு சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.

பிறகு “எனக்கு ஒரே தலைவலி, சப்பாத்தி எல்லாம் போடமுடியாது” என்று அலறினாள்.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.