முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

muthukulathur padukolai
muthukulathur padukolai

சாதியும், தேர்தல் அரசியலும்…

தமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் பல கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தமிழ்வேல் எழுதிய “சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்சேகரன்”, பத்திரிகையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்”, முத்து தேவர் எழுதிய “மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு” ஆகியபுத்தகங்களைக் குறிப்பிடலாம்.ஆனால், கா.அ.மணிக்குமார் எழுதியுள்ள “முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதி மற்றும் தேர்தல் அரசியல்” என்கிறபுத்தகம் ஒரு முழுமையான ஆய்வு நூலாகஅமைந்துள்ளது. நூலாசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அரசு ஆவணங்கள், அரசிதழ்கள், நீதிமன்ற உத்தரவுகள், சட்டமன்றக் குறிப்புகள், பல்வேறு புத்தகங்கள் மற்றும் முனைவர் மற்றும் இளமுனைவர் ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருப்பெற்றுள்ளது. இவ்வளவு தரவுகளைக் கொண்டு இந்நூல் உருவாகியுள்ளதே அதன் ஆழத்தை உணர்த்தும். தரவுகளை மட்டும் அள்ளித்தெளித்துவிட்டு நூல் முடிந்துவிடவில்லை. தரவுகள் மீது குறுக்கும், நெடுக்குமாகப் பகுப்பாய்வு செய்து சிலமுக்கியமான அம்சங்களை நூல் விளக்குகிறது.நூலில் குறிப்பிடப்படும் பல அம்சங்கள் இக்காலத்தில் உருவாக்கப்படும் சாதியத் தாக்குதல்களோடும் உரசிப்பார்க்க உதவும்.

குறிப்பாக, எவ்வாறு அரசியல் காரணங்களுக்காக தென்மாவட்டங்களில் சாதிய மோதலும் அரசின் தாக்குதலும் அதைத்தொடர்ந்த அரசியல் நகர்வுகளும் அக்காலத்தில் இருந்தன என்பதை இப்புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது.சட்டமன்றத்தில் இந்நிகழ்வுகள் குறித்துநடந்த விவாதங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அரசியல்காய் நகர்தல், அரசின் மீதான நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில்,வாக்கெடுப்பில் தி.மு.க-வின் இரட்டைத்தன்மை வெளிப்படும். வாக்குகளை மட்டும் மனதில் கொள்ளாமல், பிரச்சனையின் அடிப்படையில் அணுகும்கம்யூனிஸ்டுகளின் உறுதியான நிலைப்பாடும் தெரியும்.முதுகுளத்தூர் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற சாதிய மோதல்கள் மற்றும் அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றிற்குப் பிறகுசட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின் மீது பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் “மோதல்கள் சாதிவிரோதங்களால் ஏற்படவில்லை. மாறாக, அவை அரசியல் காரணங்களால் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார். சாதியப் பாகுபாடுகளும், சாதியக் கொடுமைகளும் பலகாலமாக இருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால்சாதி ஆதிக்கம் எப்படி அரசியலுக்காக சாதியமோதல்களாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தர்மபுரியில் நடத்தப்பட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்.முதுகுளத்தூரில் நடந்த சாதிய மோதல் மற்றும் அரசு ஒடுக்குமுறைகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆலோசனைகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.“முடிந்த அளவு அதிகமான சாலைகள் போடுவது, கிராமத்தின் போக்குவரத்திற்கு உதவுவதோடு நாகரீகமான நகர வாழ்வோடுதொடர்பு ஏற்படுத்தும் போது, குற்றமிழைக்கும் மனநிலையிலிருந்து கவனம் திசை திரும்பும் “அதிகப் பள்ளிக்கூடங்களைத் திறந்து இளைய தலைமுறைக்கு கல்வி வழங்கினால் குற்றமிழைக்கும் இயல்பை மாற்றலாம் “இதுபோன்ற பகுதிகளில் ரயில் பாதைகளை விஸ்தரிப்பதை வெறும் வர்த்தகசாதகங்களை மட்டும் வைத்து முடிவுசெய்துவிடக்கூடாது” போன்றவை அந்த ஆலோசனைகளில் அடங்கும்.நிலப்பிரபுத்துவத்தில் நிலவும் பின்தங்கிய வாழ்நிலையை மாற்றாமல்,நிலப்பிரபுத்துவத்துடனான முதலாளித்துவத்தின் சமரசத்தை சுட்டுவதாகவே ஆட்சியரின் ஆலோசனைகள் இருப்பதை உணரலாம்.நிலப்பிரபுத்துவத்தின் கசடுகளை நீக்கி புதியவைகளை புகுத்தாமல் பழமையில் தேங்கிக் கிடப்பதே வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடுகிறது.திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதிக்கு 2007 ஆம் ஆண்டுஒரு ஆய்வு பணிக்காக நான் சென்றிருந்த போது சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், “இதோ இந்தப் பள்ளிக்கூடம்இருக்கிறதே இது வந்த பிறகுதான் எல்லாமே கெட்டு போச்சு, ஆம்பள, பொம்பள வித்தியாசம் இல்லாம, சாதி மருவதா இல்லாம எல்லாம்சேந்து படிக்குதுங்க” என்றார். அதிகப் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்ற ஆட்சியரின் ஆலோசனையை வாசிக்கும் போது அந்தப் பெரியவர்தான் நினைவுக்கு வந்தார். ஆனால் இன்றும் தென்மாவட்டப் பள்ளிகளில், மாணவர்கள் கையில் கட்டும் வண்ணவண்ண கயிறுகள் சாதி அடையாளத்தை பிரதிபலிப்பதாகவும், சாதிமோதல்கள், கொலைகள் அந்த மட்டத்திலேயே நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய மோதல்களை வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்து கொண்டு செயலாற்ற நிச்சயம் இப்புத்தகம் உதவும். அதேநேரம் சாதிய அணிதிரட்டல்கள், தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், எதிர்வினையாற்றுவதற்குமான தரவுகளும் இதில் நிறைந்துள்ளன.இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் வெளி யிடப்பட்டது. இது மொழிபெயர்ப்பு என்றுசொல்ல முடியாத அளவிற்கு சிறப்பான முறையில் சுப்பாராவ் மொழிபெயர்த்திருப்பது அயற்சி யில்லாமல் வேகமாக நூலை வாசிக்கவைக்கிறது.

முதுகுளத்தூர் படுகொலை:

தமிழ்நாட்டில் சாதி மற்றும்

தேர்தல் அரசியல்

ஆசிரியர் : கா.அ.மணிக்குமார்

பாரதி புத்தகாலயம்

7, இளங்கோசாலை, தேனாம்பேட்டை

சென்னை – 600 018

பக்கம் : 176, விலை : ரூ 150/-