ஒரு மருத்துவரது இடது சாரி அரசியல் சமூகப் பார்வையில் விரியும்
வித்தியாசமான புனைவு
எஸ் வி வேணுகோபாலன்

இலட்சிய மாந்தர்களை முன்னிறுத்தும் கதைகளை எண்பதுகளிலேயே மெல்லக் கடந்து விட்டோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படியான மனிதர்கள் காலத்தால் காணாமல் போய்விடவில்லை. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்ற மகாகவியின் குரல் தங்கள் காதில் ஒலிக்கக் கேட்டு இயங்குவது போலவே வாழ்கின்ற அரிய மனிதர்களை நாம் பார்க்கத் தான் செய்கிறோம். படிக்கத் தான் செய்கிறோம். கேள்விப்படத் தான் செய்கிறோம். ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளின் தமிழக அரசியல் சமூகக் களத்தின் பிரதிபலிப்பாகத் தெறித்த மாணவர்கள் சிலர் சம காலத்தில் அதே உணர்வுகளின் நீட்சியான வாழ்க்கையை உன்னதமாகத் தொடர்வதான ஒரு புனைவை மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் படைத்திருப்பது தற்போதைய வாசிப்புக்கு மிகவும் உகந்த ஒரு வரவு.

மதுரையில் மருத்துவம் படித்த இம்மானுவேல் ராஜன் புதினத்தின் தொடக்க அத்தியாயத்தில் சென்னையிலிருந்து சியாட்டில் புறப்படுகிறார். நாவல் ஆசிரியரோ வாசகர்களைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார். ராஜன் யார், அவர் ஏன் எதற்காக யாரைப் பார்க்க சியாட்டில் செல்கிறார் என்பது தான் புதினத்தின் மொத்தக் கதைக் களம். அதனூடே இந்தியாவையே உலுக்கிய தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து அமெரிக்க மண்ணில் பெருகி வரும் அதிர்ச்சியான துப்பாக்கி கலாச்சாரம் வரை அரசியல் சமூக விஷயங்கள் பலவும் உறுத்தாது மிக இயல்பாகக் கலந்து பேசிச் செல்கிறது புதினம்.

காதல் ஏக்கம், காதல் தோல்வி, உள்ளார்ந்த நேயம், இணை பிரியாத நட்பு இவற்றையும் காத்திரமாகப் படைக்கும் ரெக்ஸ், சாதீய உணர்வுகள், சுயநல போக்குகள், வஞ்சக எண்ணங்கள் இவற்றையும் அடையாளப்படுத்தி நாவலை சுவாரசியமாக நகர்த்திச் செல்வது குறிப்பிட வேண்டியதாகும். பெரும்பாலும் மருத்துவர்களைச் சுற்றிச் சுழலும் கதைக் களம் என்பதால் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை சமூக நோக்கில் இருந்து அருமையாக விவாதிக்கும் பகுதிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

மருத்துவர் ராஜன் தனது கல்லூரி வகுப்புத் தோழியின் மகள் திருமண நிகழ்வு ஒட்டித்தான் சியாட்டில் செல்கிறார். அவரை வரவேற்க அங்கே அமெரிக்காவில் தயாராகிக் கொண்டிருக்கும் மருத்துவர் வேல்விழி சிவகாமி, வேறொரு முக்கிய நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அது அவர் பொறுப்பில் வெளியாகி வரும் சென்னை மதுரை சியாட்டில் இதழின் வெள்ளிவிழா கொண்டாட்டம்! ராஜனின் பங்களிப்பும் அந்த பத்திரிகையில் முக்கியமானதாக இருந்து வந்திருப்பது கதைப்போக்கில் வெளிப்படுகிறது. அந்த பத்திரிகை இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சிந்தனையோட்டத்தில் வந்து கொண்டிருப்பது நாவலின் உயிர்நாடியான விஷயமாகும்.

இம்மானுவேல் ராஜன் என்ற பெயரே சொல்லிவிடுவது போல் முதன்மை இலட்சிய பாத்திரம் ராஜன் தான், இவர் வழி தான் மொத்தக் கதையும் முன் பின்னாகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. மருத்துவக் கல்லூரிக் காலம் மிக விரிவான இடத்தை எடுத்துக் கொள்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற மாணவர்கள் எதிர் கொண்ட சவாலான சூழல், காவல் துறை கெடுபிடிகளுக்குத் தப்பி எங்கெங்கே புகலிடம் தேட வேண்டி வந்தது, மேற்கு வங்கம் வரை கூட ரயிலேறிப் பறந்தது போன்ற நுணுக்கமான குறிப்புகள் இளம் தலைமுறையினருக்கு வரலாற்று வாசிப்பை மேலும் தூண்டக் கூடியதாக இருக்கும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் திசை வழி பின்னர் எப்படி அரசியல் மாற்றத்திற்குள்ளானது என்பதன் மீதான விமர்சனப் பார்வையையும் நாவல் அதன் போக்கில் பேசிச் செல்கிறது.

ராஜனின் முதல் காதல், அந்தப் பெண்ணின் சுயநலத்தால் பொய்யாகிப் போன சோகம் வேல்விழியின் உள்ளார்ந்த தோழமை அன்பில் ஆற்றுப் பட்டு வரும் நேரத்தில், சமூக பேதங்கள் இந்த இருவரையும் ஒன்று சேர விடாது பார்த்துக் கொள்ளுமிடத்தில் மேலும் துயரம் கவிகிறது. ஆனாலும், வேல்விழிக்கு நல்ல வாழ்க்கை அமைவதில் ராஜனின் பங்கேற்பும், அதன் பின்னும் இருவருக்குமிடையே கபடமற்ற நட்பும் தோழமையும் தொடர்வதும் வெளிநாட்டில் சென்று குடியேறும் வேல்விழி ஒரு பத்திரிகையை நிறுவுவதில் நிலைபெறுகிறது.

சோசலிச தத்துவத்தின் மேன்மையை நாவல் பிரச்சார நெடியற்றுப் பேசுகிறது. கதை பேசும் காலத்திற்கு இடையேயான உலக நடப்புகளை கூடவே பேசிச் செல்கிறது. வேல்விழி நடத்தும் இதழை முன்னிறுத்தி நடக்கும் விவாதங்கள், அதில் இடம் பெற்ற கட்டுரைகள் பற்றிய உரையாடல்கள் அமெரிக்க கம்யூனிஸ்ட் இயக்கம் வரை பல விஷயங்களை அலசுகின்றன. தமிழ் ஒளியின் நூற்றாண்டு ஒட்டி எழுதப்பட்ட நாவலில் அவரது கவிதையைப் பொருத்தமாக அவர் மேற்கோள் காட்டி இருப்பதும், வேல்விழியின் மகள் அதை ரசித்து வாசிக்க வைப்பதன் மூலம் இளம் தலைமுறையினர் குறித்த நம்பிக்கையை விதைப்பதும் அருமையானது.

நாவலின் கடைசி பகுதி எதிர்பாராத திடீர் திருப்பங்கள் கொண்டிருப்பது புனைவாகவே இருந்தாலும் சம கால நடப்புகள் அதில் மிக இயல்பாக பிரதிபலிப்பதைக் காண முடியும். முன்னோட்டமாக அறிவியல் சிந்தனையாளர் நரேந்திர தபோல்கரை பழமை வாத வெறியர்கள் கொன்றொழிப்பதை நாவல் உரையாடலில் கொண்டுவருகிறது. ஆனால், நாவல் சொல்லாமல் சொல்லும் மற்றொரு பெயர் கௌரி லங்கேஷ். அதே பெயரில் முற்போக்கான இதழ் நடத்தியதற்காகவே மத வெறியர்களால் அடுத்து இலக்கு வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்டவர். நாவல் இலட்சிய மனிதராக உயர்த்திப் பிடிக்கும் மருத்துவர் வேல்விழி சிவகாமியை அவ்வண்ணமே உருவகப்படுத்தி வழங்குகிறார் ரெக்ஸ் என்று எடுத்துக் கொள்ள முடியும். மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உறுதி செய்ய வேண்டும் என்ற இலட்சியக் குரலைத் தொடக்கத்திலிருந்தே எழுப்புபவர் வேல்விழி. அவரது மகள், மருமகன் பொறுப்பில் தாயகத்தில் அவரது நினைவாகவே அவரது சொந்தவூரில் மருத்துவமனை எழுப்பப்படும் இடத்தில் நிறைவு பெறுகிறது நாவல்.

கொரோனா முடக்க காலம் சாத்தியமாக்கிய நேரத்தில் தனது சொந்த அனுபவங்கள், கற்றுணர்ந்த விஷயங்கள் மீதான இந்த எழுத்து சாத்தியமானது என்று தன்னுரையில் சொல்லி இருக்கும் ரெக்ஸ் சற்குணம் அவர்களது புதினத்தை பேரா பத்மாவதி விவேகானந்தன், கவிஞர் சைதை ஜெ இருவரும் தங்களது அணிந்துரையில் பாராட்டி இருப்பது மிகவும் பொருத்தமானது.

நன்றி: தீக்கதிர்: 03 04 2023

நூல் : சென்னை மதுரை சியாட்டில்
ஆசிரியர் : டாக்டர். சி.எஸ். ரெக்ஸ் சற்குணம் 
விலை : ரூ.₹220
பக்கங்கள்: 208
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “நூல் அறிமுகம்: டாக்டர். சி.எஸ். ரெக்ஸ் சற்குணம் ‘சென்னை மதுரை சியாட்டில்’ – எஸ் வி வேணுகோபாலன்”
  1. எஸ் வி வேணுகோபாலனின் சென்னை மதுரை சியாட்டில் நூல் அறிமுகம் சிறப்பு செறிவாக நாவலை முழுமையாக உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது

  2. கடினமான பணியை சிறப்பாக கையாண்டுள்ளார் எஸ் வி வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *