இருவித மழைத்துளிகள்
பாவண்ணன்

ஒரு மழைக்காலம். சிறிது நேரத்திலேயே திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் மழை இல்லை. ஆனால் வீட்டுக்குத் திரும்பும் வழியில் மழை தொடங்கிவிட்டது. அதுவரை சாலையில் நடந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் கண்ணுக்குத் தெரிந்த தெருவோர மரங்களை ஒட்டியும் கடைச்சுவர் விளிம்புகளை ஒட்டியும் ஓட்டமாக ஓடிச் சென்று நிற்கத் தொடங்கினர். ஒன்றிரண்டு நிமிட இடைவெளியிலேயே மழையின் வீச்சு பெருகிவிட்டது. நானும் ஓட்டமாக ஓடிச் சென்று ஒரு பெட்டிக்கடையை ஒட்டி நின்றுகொண்டேன்.

வேகமாக ஓடி ஒதுங்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணொருத்தி மழையில் நனைந்தபடி மெதுவாக நடந்துவந்தாள். பாதையின் விளிம்பை அடைவதற்குள் அவள் நனைந்துவிட்டாள். அவள் ஒதுங்க சுவரோரங்களில் இடமில்லை. ஏற்கனவே மக்கள் வரிசையாக ஒட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். அவளுக்காக இடமளிக்க ஒருவரும் இல்லை.

அவள் தவித்துக்கொண்டிருந்த சுவர்மதிலை ஒட்டி ஒரு சின்ன பெட்டிக்கடை இருந்தது. அதற்குள் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். சற்றே தாமதமாகத்தான் அவர் அப்பெண்ணைப் பார்த்தார். சட்டென அவர் கடையிலிருந்து எழுந்து வெளியேவந்து, அந்தக் கர்ப்பிணிப்பெண்ணை தன் கடைக்குள்ளேயே ஓரமாக ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு அமர்ந்துகொள்ளுமாறு சொன்னார். பார்வையாலேயே நன்றியைத் தெரிவித்தபடி அந்தப் பெண் கடைக்குள் சென்று ஒடுங்கினாள்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக பார்க்க நேர்ந்த அத்தருணம் ஓர் ஓவியத்தைப்போல நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்று படிக்க நேர்ந்த மூத்த கவிஞர் மீனாட்சியின் கவிதையொன்றில் அப்படிப்பட்ட ஒரு சித்திரத்தைப் பார்த்தபோது பழைய நினைவுகள் பொங்கிவந்தன.

இன்றும் மழை
வேலிக்கம்பியில்
கழைக்கூத்தாடியாய்
மழைத்துளிகள்
ஒவ்வொரு துளியிலும்
உயிர்ப்புடன் ஒரு கலைஞன்
கீழிறங்கும் மழைத்துளி
கர்ப்பிணித்தாயாய்
உயிரேந்தி வரும்போது
தொட்டிலிடுகிறது தரைமண்
உருமாறும் ஒரு கருமாரி

எங்கும் நேரிடையாக மீனாட்சி ஒரு கர்ப்பிணிப்பெண்ணையோ, கர்ப்பிணிப்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுப்பவரையோ காட்டவில்லை. ஆனால் வேலிக்கம்பியில் சில கணங்கள் தங்கி, பிறகு மெதுவாக இறங்கும் மழைத்துளியையும் அதை வாங்கி தன் மடியில் ஏந்தி வைத்துக்கொள்ளும் தரைமண்ணையும்தான் சொற்சித்திரமாக வடித்திருக்கிறார். அந்தச் சொற்சித்திரத்தில் புகையென மறைந்திருக்கிறது அக்காட்சிச்சித்திரம்.

இரு பொருள் கொண்ட ஒரு சொல் போல, எண்ணற்ற காட்சிச்சித்திரங்களை உருவகித்துக்கொள்ளத் தூண்டும் ஆற்றலைக் கொண்டது சொற்சித்திரம். அப்படிப்பட்ட சொற்சித்திரங்கள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.

இக்கவிதையிலும் மீனாட்சி இருவித மழைத்துளிகளை நமக்குக் காட்டுகிறார். ஒரு மழைத்துளி கம்பியிலேயே நின்றிருக்கிறது. அது கழைக்கூத்தாடிபோல உடல்வளைத்து ஆடிக் காட்டுகிறது. இன்னொரு மழைத்துளி கம்பியிலிருந்து உடல்பெருத்து உதிர்கிறது. அது கர்ப்பிணிப்பெண்ணாக தரைமண் அளிக்கும் அடைக்கலத்தை ஏற்றுக்கொள்கிறது. காட்சிக்குள் ஊடுருவிப் பார்க்கும் கண்களும் ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் காட்சிச்சித்திரங்களோடு அவற்றை இணைத்துப் பார்க்கும் ஆர்வமும் ஒரு கவிஞரிடம் குடிகொண்டிருக்கும்போது, கவிதையின் அழகு பெருகிவிடுகிறது.

முற்றத்தில்
அணில்கள் ஆடித் திரிகின்றன
ஆர்வம் எனக்குப் பார்த்திருப்பதில்
அந்த விடுப்பில்
அணில்கள் ஆடித்திரிகின்றன
அவற்றின் சதைருசியில் கண்வைத்து
பூனையும் வாலசைக்காது
உட்கார்ந்திருக்கிறது ஒருமுகப்பட்டு
மரத்தடியில் ஆவலில்
அடுத்த தாவலுக்கு

இருவேறு உலகத்தியற்கை என்கிறது திருக்குறள். செல்வத்தோடு இருப்பது ஒருவகையான இயல்பு. ஞானத்தோடு இருப்பது இன்னொரு இயல்பு. இருவித இயல்புகளும் இணைந்து ஏதோ ஒரு சமநிலையில் உருவானதுதான் இவ்வுலகம். மீனாட்சியின் கவிதையிலும் இருவித இயல்புகள் இடம்பெற்றிருக்கின்றன. தன் வீட்டு முற்றத்தில் ஆடித் திரிகின்ற அணில்களை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். அதே முற்றத்தில் ஒரு பூனை எங்கோ ஓரமாக நின்றுகொண்டு அந்த அணில்களைப் பிடித்து உண்ண தக்க தருணத்துடன் ஆர்வத்துடன் காத்திருக்கின்றது. வேடிக்கை பார்ப்பவரிடம் குடியிருப்பதும் ஆர்வமே. பூனையில் நெஞ்சில் குடியிருப்பதும் ஆர்வமே. ஆனால் இரண்டு ஆர்வங்களும் இரு விதமானவை. ஒன்றைக் காட்டி இன்னொன்றை விலக்கிவைக்கவும் முடியாது. இணைத்துக்கொள்ளவும் முடியாது. பூனையின் உலகம் வேறு. அணிலின் உலகம் வேறு. ஒரு பேருலகத்தில் இப்படி ஏராளமான சின்னஞ்சிறு உலகங்கள்

ஒரு குடும்பத்தில் ஏற்கனவே உள்ள ஒருவரின் முகச்சாயல் புதிதாகப் பிறக்கும் குழந்தையை வந்தடையும் விதம் ஒரு பெரிய விசித்திரமான ஆச்சரியம். ஒருவராலும் தீர்மானிக்க முடியாத ஒன்று. ஒருவராலும் மாற்றிக்கொள்ளவும் முடியாத ஒன்று. ஒரு பெண்குழந்தையிடம் அவளுடைய தந்தையின் முகச்சாயல் தென்படுகிறது. அதை முதன்முதலாகக் கண்டு சொல்கிறார் குடும்ப உறவினர் ஒருவர். அப்பா பெண் என்று சொல்லப்பட்ட அச்சொல்லை ஒரு தங்கப்பதக்கத்தை வாங்கிக்கொள்வதுபோல வாங்கிக்கொண்ட தருணத்தையும் அனுபவத்தையும் அவள் புதையலைப்போலப் பாதுகாக்கிறாள்.

திருத்தமான மூக்கு
சுருளலைத் தலைமுடி
அச்சு அசல்
இராமாவின்
அகலித்த கண்கள்
குதூகலக்குரல்
சிரிப்புக்கன்னம்
என்ற
இராமேசுவர அத்தையின்
வருணனைச் சாரலில்
வெட்கப்பூ மழையுடன்
அப்பாவின் பின்னால்
ஒளிந்துகொண்ட மீனாள்
அப்பா பெண் என
ஐந்தாறு வயதில்
பெற்ற பட்டம்தான்
எனது முதல் தங்கப்பதக்கம்

வாசித்துமுடித்ததும் இயல்பாகவே ஒரு சிறுமியின் தோற்றத்தை உணரமுடிந்தது. மீனாட்சி மிக இயல்பாக குறைந்த சொற்களில் அச்சிறுமியின் ஓவியத்தை கவிதைக்குள் தீட்டிவைத்திருக்கிறார். அச்சிறுமியின் நெஞ்சில் பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மட்டற்ற மகிழ்ச்சி அது. தன் சாயலையே மிக உயர்ந்த தங்கப்பதக்கமென மகளுக்கு அளித்துவிட்டுச் சென்றிருக்கும் ஒரு தந்தை இக்கவிதைக்கு வெளியே நின்றிருக்கிறார். அவருடைய புன்னகையையும் இக்கவிதை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

சின்னச்சின்ன அரிதான காட்சிகள் மீனாட்சியின் கவிதையுலகில் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன. மலர்களை, பனிச்சிகரங்களை, ஆற்றை, அருவியை, வனப்பகுதிகளை, அருகிலிருக்கும் மனிதர்களை என அனைத்தையும் ஆர்வத்தோடு நோக்கும் விழிகள் மீனாட்சியிடம் இயல்பாகவே இருக்கின்றன. கடலோரத்தில் நடக்கும் சிறுமி கிளிஞ்சல்களை சேகரித்துக்கொண்டு திரும்புவதுபோல மீனாட்சியின் மனமும் ஒவ்வொரு அனுபவத்துக்குப் பிறகு சில காட்சிகளைத் திரட்டி கவிதைகளென வெளிப்படுத்துகிறது. புத்தம்புதிதான சொற்சேர்க்கைகளும் கூர்மையும் கச்சிதமும் கொண்ட வெளிப்பாடும் கொண்ட சில கவிதைகள் வழியாக, இத்தொகுபில் தன் படைப்பியக்கத்தின் எல்லைகளை விரிவாக்கி நிறுவியிருக்கிறார் மீனாட்சி.

நூல் : காலச்சாயல்கள் – கவிதைகள்
ஆசிரியர் : இரா.மீனாட்சி
விலை : ரூ.₹200/-
வெளியீடு : தாழி புத்தகக்கடை
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *