குத்துக்கல்லும் சாய்வு நாற்காலியும்
பாவண்ணன்

கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேண்டீனில் இட்லி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து நிற்கும் பத்ரி நாராயணன் என்கிற பெரியவர் புத்தகக்கடையை வேடிக்கை பார்க்கிறார். கல்கியின் மரணத்தையொட்டி ஆனந்தவிகடன் அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. அதைத் தெரிவிக்கும் விளம்பரத்தாட்கள் கடைகளில் தொங்குகின்றன. செய்தித்தாள் விற்கும் கடைவாசலில் விற்பனைக்குரிய இதழ்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 1955ஆம் ஆண்டுக்குரிய புதிய காலண்டர்கள் வேறொரு வரிசையில் விற்பனைக்குத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. தன் சொந்த ஊரான ஸ்ரீராஜபுரத்துக்குச் செல்லும் ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறார்.

அப்போது, கடையில் பார்சல் வாங்குகிற ஒருவருடைய முகம் தனக்குத் தெரிந்த முகம் போலத் தோன்றியதால் ஒருகணம் உற்றுப் பார்க்கிறார் அவர். பார்வைக்கோளாறு காரணமாக அவரால் சரியாகக் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் அதற்குள் அவரே பெரியவரை அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்து நிற்கிறார். பெரியவரின் தம்பிதான் அவர். நெருங்கி வந்து நின்ற பிறகுதான் பெரியவருக்குப் புரிகிறது. தம்பிக்கு அருகில் நிற்கிற சிறுவனையும் தெலுங்குச்சாயல் கொண்ட பெண்ணையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். எவ்விதமான தயக்கமுமில்லாமல் அவனே “அம்பி, இவர்தான் உன்னோட பெரியப்பா. சேவிச்சிக்கோ” என்று சிறுவனைப் பார்த்துச் சொன்னதும் எல்லாமே தெளிவாகப் புரிந்துவிடுகிறது. அதற்குப்பின் அவர் அலட்சியம் ததும்பிய முகத்தோடு அங்கிருந்து நடந்துபோய் விடுகிறார்.

காலம் சார்ந்த துல்லியமான சித்திரத்தோடு கே.பாரதி எழுதிய ரங்கநாயகி நாவல் இப்படித்தான் தொடங்குகிறது. வெகுகாலமாக வீட்டுப்பக்கம் வராமலேயே இருந்த தம்பி இப்படி ஒரு ரகசிய உறவு வாழ்க்கை வாழ்வதை அறிந்துகொண்ட அதிர்ச்சி அவரைக் குழப்பத்துக்குள் ஆழ்த்திவிடுகிறது. கணவனின் துணையையே சதமென நம்பி இரு பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கிற தம்பியின் மனைவியிடம் இத்தகவலைச் சொல்வது எப்படி என்று தெரியாமல் மனம் குழம்பித் தவிக்கிறார். குடும்பத்தை ஒரு தூணென தாங்குகிற ஒரு பெண்ணுக்கு குடும்பம் இப்படிப்பட்ட ஒரு திகைப்பைத்தான் பரிசாகக் கொடுக்கவேண்டுமா என எழும் கேள்விக்கு அவரிடம் விடை இல்லை. ஆயினும் அவளிடம் அச்செய்தியைச் சொல்லாமல் இருக்க அவரால் முடியவில்லை. எதிர்பார்த்ததுபோல செய்தியைக் கேட்டு உறைந்து விடுகிறாள் அவள்.

தன் வாழ்க்கையைப்பற்றியும் அக்குடும்பத்தில் தன் இடம் என்ன என்பதைப்பற்றியும் ஒரு சுயமதிபீடு அவள் நெஞ்சுக்குள் நிகழ்கிறது. ஸ்ரீராஜபுரம் குடும்பத்தில் இளைய பிள்ளையான ரங்காச்சாரியைத் திருமணம் செய்துகொண்டு வந்த நாளிலிருந்து சொந்த விருப்பமென எந்த விஷயத்துக்கும் விருப்பப்படாமல் இளைய மருமகள் என்னும் நிலையில் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று செயலாற்றி, இரு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி நிற்கும் அக்கணம் வரையிலான வாழ்வை தனக்குத்தானே தொகுத்துப் பார்த்துக்கொள்கிறாள். மீட்சியற்ற அவ்வாழ்வை எண்ணி அவளால் பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது. அவளையறியாமலேயே அவள் மனத்தில் ஒரு விரிசல் விழுந்துவிடுகிறது.

அதுவரையிலான வாழ்வை ஒரு பகுதியாகவும் மரணம் வரையிலான வாழ்வை மறு பகுதியாகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது ரங்கநாயகி நாவல். வாழ்நாள் முழுதும் அவளுக்குள் கொந்தளித்தபடி இருக்கும் நிராசைகளின் சுமையை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அது ரங்கநாயகி என்னும் ஒரு பெண்ணின் மனச்சுமை மட்டுமல்ல. ஒரு யுகம் முழுதும் பெண்ணினத்தை அழுத்திக்கொண்டிருந்த மனச்சுமை.

ரங்கநாயகி நாவல் இயல்புவாதப் படைப்பு. ஸ்ரீராஜபுரத்தில் நான்கு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் கொண்ட ஒரு பெரிய கூட்டுக்குடும்பமே நாவலின் களம். விவசாயமே அவர்கள் வாழ்க்கைக்கான ஆதாரம். ஏராளமாக நிலம் இருந்தது. முதல் சகோதரர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு அதன் வழியாக கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துபவர். இரண்டாவது சகோதரர் ஆங்கில அதிகாரியிடம் வேலை செய்பவர். கிராமத்தைவிட்டு வெளியேறி நகரத்தில் வசிப்பவர். மூன்றாவது சகோதரனான பத்ரிநாராயணன் திருமணமான சில நாட்களிலேயே மனைவியை இழந்துவிட்டவர். எதிர்வீட்டில் வசித்துவந்த குடும்பத்தைச் சேர்ந்த வைதேகி என்னும் பெண் மீது அவருக்கு ஓர் ஈடுபாடு இருந்தது. ஆனால் அது கைகூடி வரவில்லை. அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் அவசரக்கோலத்தில் அவளுக்கு நடத்திவைக்கப்பட்ட திருமணம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. சேர்ந்து வாழாமலேயே கணவனை இழந்து பால்ய விதவையாக தாய்வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டாள். நாடெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் செல்லவேண்டும் என்ற கனவுகள் மனம்நிறைய இருந்தாலும் பத்ரிநாராயாணன் அதைச் செயல்படுத்தமுடியாதவராக இருந்தார். குடும்பப் பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நான்காவது சகோதரர் அலட்டல் ஆசாமி. தாலி கட்டிய மனைவியும் பிள்ளைகளும் உயிருடன் இருக்கும்போதே, வேறொரு ஊரில் வேறொரு பெண்ணோடு கூடி வாழ்வதில் கிஞ்சித்தும் குற்ற உணர்வற்றவராக இருந்தார்.

ரங்கநாயகிக்கு இசையில் ஆர்வம் இருந்தது. புகுந்த வீட்டுக்கு வரும்போது வீணையோடு வந்தவள் அவள். ஆனால் ஒருநாள் கூட அதை அவள் தொடவில்லை. குடும்பப்பெண்ணுக்கு அது அழகல்ல என்ற மாமியாரின் கடுஞ்சொல்லைக் கேட்டு வீணையை பரண்மீது வைத்துவிட்டாள். மரணம் வரைக்கும் அந்த வீணையைத் தொட்டுப் பார்க்கக்கூட அவளுக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. மதிப்புள்ள ஒரு பொருள் மதிக்கத் தெரியாதவர்களின் இடையில் சிக்கி மதிப்பிழந்து, பயன்படுத்த தோதில்லாது பரணில் பயனற்றுக் கிடக்கும் பொருட்குவியலில் பத்தோடு பதினொன்றாக அழுக்கும் ஒட்டடையும் படிந்த நிலையில் அந்த வீணை கிடக்கிறது. ஒருவகையில் ரங்கநாயகியின் நிலையும் அதுதான். அவளைப்பற்றி சொல்லாமல் சொல்லும் படிமமாக அது நிலைத்துவிடுகிறது.

அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியும். அதுவும் அவளுடைய மாமியாருக்குப் பிடிக்கவில்லை. அவள் உயரமாகவும் இருந்தாள். அதுவும் அவள் மாமியாருக்குப் பிடிக்கவில்லை. மணம் செய்துகொண்டு வந்த கணவனும் அவளுக்கு ஆதரவாக இல்லை. அவளை வெறுக்கவும் அலட்சியப்படுத்தவும் தன் தாயிடமிருந்தே அவன் கற்றுக்கொண்டான். அந்தப் பெரிய குடும்பத்தில் அவளுக்கு ஆதரவாக இருந்தவர் பத்ரிநாராயணன் மட்டுமே. அவருடைய ஆதரவால் வீட்டிலிருந்த பிற ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தாள். பிள்ளைகளோடு நெருங்கிச் செல்ல அது அவளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. அத்தை என்றும் சித்தி என்றும் பிள்ளைகளும் அவளை எப்போதும் சூழ்ந்து நின்றார்கள். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அந்த நட்பார்ந்த சூழல் அருமருந்தாக இருந்தது. ஓய்வு நேரம் முழுதும் படிப்பும் பேச்சுமாகவே அமைந்தது. கூடத்திலும் பின்கட்டிலும் அவர்கள் கூட்டம் எப்போதும் சேர்ந்தே இருந்தது. அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் முடித்து அருகிலிருக்கும் நகரங்களை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் பெற்றெடுத்து வளர்த்த குழந்தைகளுக்கும் நெருக்கமானவளாக இருந்தாள் ரங்கநாயகி. கணவன் வழியாக துயரத்தைக் கொடுத்த அக்குடும்பம், அக்குழந்தைகள் வழியாக அவள் துயர்தீர்க்கும் மருந்தையும் கொடுத்தது. இறுதிக்கணம் வரை அன்பு செலுத்திய பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்துவிடுகிறாள். அனைவருக்கும் நிறைவளிக்கும் வகையில் வாழ்ந்த அவள் வாழ்க்கை நிறைவற்ற ஒன்றாகவே நின்றுவிட்டது. அதை உலகியல் என்று சொல்லி ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. அல்லது நகைமுரண் என்று சொல்லியும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அக்குடும்பம் கடந்துவந்த முக்கியமான தருணங்கள் அனைத்தையும் கோட்டோவியங்களின் தொகுப்பாகக் காட்டி வளர்ந்துகொண்டே செல்கிறது நாவல். இதில் கதை என்ற வடிவம் இல்லை. அடுக்கடுக்காக, ஒன்றைத் தொட்டு ஒன்றென பெருகிக்கொண்டே செல்லும் நிகழ்ச்சிகளே நிறைந்துள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் உறவுகளின் மேன்மையையும் கீழ்மையையும் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் அது சுட்டிக்காட்டியபடியே சென்று ஒரு முடிவைத் தொடுகிறது. ஒரு நதியின் ஓட்டத்தைப்போல நிகழ்ச்சிகள் பெருகியோடிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களின் வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி நிகழ்கின்றன. பிறப்பும் இறப்பும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. ஒவ்வொருவருடைய கனவும் கண்ணீரும் ஒவ்வொரு வகையாக அமைந்திருக்கிறது. எந்தப் பாத்திரத்தின் மீதும் மிகையான பற்றோ அல்லது விலக்கமோ இல்லாத ஒரு நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் கே.பாரதி. ஒருவகையில் அவர் தன்னுடைய இருப்பையே மறைத்துக்கொண்டு இந்த நாவலை முன்வைத்திருக்கிறார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வயதான மூதாட்டி தன் காலத்தில் தான் கண்ட வாழ்வையும் மனிதர்களையும் பற்றிய சித்திரங்களை தன் நினைவிலிருந்து பற்றற்ற குரலில் எடுத்துரைப்பதுபோன்ற ஒரு தொனியில் அமைந்திருக்கிறது கே.பாரதியின் மொழி. அறுபது எழுபது ஆண்டுகளைக் கொண்ட ஒரு பெரிய காலகட்டத்தைக் கட்டியெழுப்ப இந்த மொழி அவருக்கு உதவியிருக்கிறது. ஒருவகையில் அது நாவலுக்கு வெற்றியே.

“கோவில்ல புறப்பாடு நடக்கும்போது வாசலுக்கு வந்து சேவிச்சிக்கக்கூட நம்மால முடியலை. உள்ள போ உள்ள போன்னு பெரியப்பா சொல்லிட்டே இருக்கறார். பிறகெப்படி ஆண்டாள் மட்டும் அந்தக் காலத்துல பாடின்டே நடந்து போனாள்?” என்றொரு சிறுமி கேட்பதுபோல ஒரு தருணம் நாவலுக்குள் வருகிறது. அறியாச் சிறுமியின் ஆற்றாமைக்குரல் என அத்தருணம் அப்படியே கடந்துபோனாலும், அந்தக் குரல் அந்தக் காலம் சார்ந்த ஒரு சூழலை நுட்பமாக உணர்த்துவதைப் பார்க்கலாம். உள்ளே உள்ளே என வீட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட பெண்கள் நிறைந்த காலம் அது. அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ரங்கநாயகி மட்டுமல்ல, நாவலில் இடம்பெற்றிருக்கும் எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு வகையில் கசப்பிலும் வெறுமையிலும் அமிழ்ந்து உள்கட்டில் இருப்பவர்களே. அவர்களின் வெவ்வேறு கதைகளையே இந்த நாவலில் முன்னும் பின்னுமாக அடுக்கிச் செல்கிறார் கே.பாரதி.

ஸ்ரீராஜபுரம் குடும்பத்தில் கனகவல்லியும் ஒருத்தி. இளம்விதவை. பிறந்தவீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டவள். ஆசாரப்படி ஒவ்வொரு மாதமும் தலையை மழித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறாள். ஒருமுறை தோட்டத்தில் கிணற்றங்கரையில் அவளுக்கு தலையை மழித்துவிடுகிறார் நாவிதர். குனிந்தவாக்கில் தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறாள் அவள். மழிப்பதால் உதிர்ந்தும் உதிராமல் ஒதுங்கி காதோரமாக ஒட்டிக்கொண்டிருந்த முடிக்கற்றையால் உருவான குறுகுறுப்பைத் தாங்கமுடியாமல் கையை உயர்த்தி தட்டிவிட முயற்சி செய்கிறாள். அக்கணத்தில் எதிர்பாராத விதமாக அவள் கை நாவிதரின் கையைத் தீண்டி விடுகிறது. மாடியில் உலவியபடி அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய சகோதரன் வேகமாக இறங்கி வந்து அவளைக் கேவலப்படுத்தும் விதமாக வசைமழை பொழிகிறான். அவளை அந்த வீட்டில் தனியே விட்டுவிட்டு தன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான். தனிமையின் துயரத்தையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள இயலாத அவள் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.

வைதேகி என இன்னொரு பெண். ரங்கநாயகியின் எதிர்வீட்டில் இருப்பவள். அவள் தந்தைக்கு ஆண்பிள்ளை இல்லையே என்ற மனக்குறை இருக்கிறது. பெண்ணுக்கு மணம் செய்து அனுப்பிவிட்டால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால் ஆண்குழந்தை பிறக்கும் என்று ஜோசியக்காரன் சொன்னதை நம்பி, பெண்ணுக்கு மணம் செய்து அனுப்பிவிக்கிறாள். குறுகிய காலத்திலேயே அவள் விதவையாகி வீட்டுக்குத் திரும்பி வருகிறாள். கருவுற்று பிள்ளைத்தாய்ச்சியாக இருக்கும் தன் அம்மாவுக்கு அவளே ஒரு தாதியாக முன்னின்று பிள்ளைப்பேறு பார்க்கிறாள். மகள் உதவியோடு அம்மா மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பெற்றெடுக்கிறாள். அவள் பார்த்துப் பிறந்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அவளுடைய நடத்தையைக் கண்காணிக்கும் காவலர்களாக மாறி அவள் மீது நஞ்சைக் கக்கத் தொடங்குகிறார்கள். “சீதைக்கு ஒரு தடவைதான் அக்கினிப் பரீட்சை, என்னை மாதிரி ஆயிட்டா தினம்தினமும் அக்கினிபரீட்சைதான்” என்று கசந்த புன்னகையோடு சொல்கிறாள்.

மீனாம்பாள் என இன்னொரு பெண். இறைவனுக்குத் தொண்டு செய்யும் பிரிவைச் சேர்ந்தவள். அவளை மனத்துணிச்சலோடு கைப்பிடித்து மணம் செய்துகொள்கிறான் ஸ்ரீராஜபுரம் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன். ஆனால் அவன் குடும்பம் அவனை ஒதுக்கிவைக்கிறது.. இடமாற்றல் பெற்றுக்கொண்டு அவன் ஊரைவிட்டே சென்றுவிடுகிறான். அவனுடைய இல்லறவாழ்க்கை இன்பமாக இருந்தாலும் தன் சமூகவாழ்க்கை குலைந்துபோனதை நினைத்து துயர் நிறைந்தவனாக இருக்கிறான்.

அம்புஜம் என மற்றொரு பெண். கனகவல்லியின் வளர்ப்புமகளாக வளர்ந்தவள். விதவையாகி வீட்டுக்குத் திரும்பியபோது, மறைந்துவிட்ட நாத்தனாரின் குழந்தையை தன் குழந்தையாகவே நினைத்து தன்னோடு எடுத்துவந்ததால் ஸ்ரீராஜபுரம் குடும்பத்துப் பெண்களில் ஒருத்தியாக வளர்கிறாள். கனகவல்லியின் தற்கொலைக்குப் பிறகு அவளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ரங்கநாயகியிடம் வந்து சேர்கிறது. அம்புஜம் வளர்ந்து பெரியவளானதும் கோவிலில் பூசை செய்யும் பாஷ்யம் என்னும் இளைஞனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அந்தக் கோவிலுக்கு தொண்டு செய்பவளாக வாழ்ந்து வயதுமுதிர்ந்து கண்பார்வை இழந்துவிட்ட பெண்மணி ஒருத்தி தன் மகளான மரகதவல்லியும் தன்னைப்போல ஆகிவிடக் கூடாது என்னும் எண்ணத்தில் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பை பாஷ்யத்திடம் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிடுகிறாள். அவளை வீட்டுக்கே அழைத்துவந்து மாடிப்பகுதியில் தங்கவைத்து பாதுகாக்கிறான் பாஷ்யம். ஆரம்பத்தில் அம்புஜம் அதற்கு உடன்பட மறுத்தபோதும் நாளடைவில் கணவனின் இலட்சியப்போக்கைப் புரிந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாக நிற்கிறாள்.

தங்கம்மை மற்றொரு பெண். பத்ரிநாராயணனின் பிரியத்துக்குரிய பெண். சேதுமாதவன் என்னும் வழக்கறிஞரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்குச் செல்கிறாள். சேதுமாதவன் தொடக்கத்தில் இலட்சியவாதம் நிறைந்த இளைஞனாக இருந்தாலும் படிப்படியாக செல்வத்தின் மீது பற்று கொள்கிறான். தன்னை நாடி வந்து வழக்கைக் கொடுப்பவர்களிடம் கட்டணமாக, நிலங்களை எழுதி வாங்கிக்கொள்கிறான். ஒருமுறை அலமாரி நிறைய நிலப்பத்திரங்களின் கட்டுகளைப் பார்த்துவிட்டு உண்மையைப் புரிந்துகொள்கிறாள் தங்கம்மை. பாவபுண்ணியக் கொள்கைகள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அவள் தனக்கு உடற்குறையுடனும் மனக்குறையுடனும் குழந்தைகள் பிறக்க, சேதுமாதவன் செய்துகொண்டிருக்கும் பாவச்செயல்களே காரணம் என நம்புகிறாள். அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த அவள் முயற்சி செய்கிறாள். அவனோ அவளை அலட்சியப்படுத்துகிறான். ஒருநாள் அவள் வீட்டுக்குள்ளேயே சத்தியாகிரகத்தைத் தொடங்குகிறாள். ஒரு கொத்தனாரை வரவழைத்து சமையல்கட்டையே சிறைக்கூடமாக மாற்றிக்கொள்கிறாள். ஒருவரும் தன்னைப் பார்க்க இயலாதபடி மறைத்துக்கொள்கிறாள். கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள இடைவெளி வழியாக குடும்பத்தினர் அனைவருக்கும் சமைத்துக் கொடுக்கிறாள். சேதுமாதவனும் அவன் தாயாரும் பிள்ளைகளும் முதலில் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் அவளுடைய இலட்சியத்தைப் புரிந்துகொண்டதும் அமைதியடைகிறார்கள். சேதுமாதவன் மட்டுமே எரிச்சலும் கோபமும் அடைகிறான். முணுமுணுக்கிறான். அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மெல்ல மெல்ல அவளுடைய சொற்களில் பொதிந்திருக்கும் உண்மையைப் புரிந்துகொள்கிறான். தன்னிடம் இருந்த பத்திரக்கட்டுகளை, அதற்குரிய மனிதர்களைப் பார்த்து ஒப்படைக்கிறான். அவர்களும் தாம் கொடுக்கவேண்டிய கட்டணத்தை பணமாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாப் பத்திரங்களும் கொடுக்கப்பட்டுவிடுகின்றன. அவனும் இனிமேல் அப்படி நடப்பதில்லை என உறுதியளிக்கிறான். அதற்குப் பிறகே சமையல்கட்டின் தடைச்சுவரை இடித்து வெளியே வர அவள் சம்மதிக்கிறாள்.

இப்படி பலவிதமான பெண்கள். பலவிதமான் ஆண்கள். ஏராளமான குணச்சித்தரிப்புகள். ஒருவரைப்போல இன்னொருவர் இல்லை. விதவிதமான பாத்திரவார்ப்புகள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் தனித்துவம் கொண்டவர்களாக உள்ளனர். ஒவ்வொருவரையும் தனித்தனி நிறத்துடன் வேறுபடுத்தி நிறுத்தியிருப்பதில் கே.பாரதியின் தனித்துவமான கலையாற்றல் வெளிப்படுகின்றது.

தொடர்ச்சியாக கதைகளை அடுக்கிக்கொண்டே சென்றாலும் நுட்பமான புள்ளிகளை ஆங்காங்கே தொட்டுச் செல்கிறார் கே.பாரதி. கூட்டுக்குடும்பத்தின் வீட்டின் பின்கட்டைப்பற்றிய சித்திரம் குறிப்பிடத்தக்கது. அதுதான் பெண்களின் இடம். குறிப்பாக ரங்கநாயகியின் இடம். அவள் அங்கிருப்பதாலேயே அவளைச் சுற்றி எல்லாச் சிறுமிகளும் சிறுவர்களும் அங்கேயே இருக்கிறார்கள். அங்கே ஒரு குத்துக்கல் இருக்கிறது. பெரிய உரல் செய்யத் திட்டமிட்டு, அரைகுறையான வேலைக்குப் பிறகு, அந்தக் கல் சரியில்லை என ஒதுக்கிவைக்கப்பட்ட கல். உருண்டையாகவும் இன்றி, சதுரமாகவும் இன்றி இருப்பதால் அந்தக் கல்லில் உட்கார வசதியாக இருக்கிறது. அந்தக் குத்துக்கல்தான் ரங்கநாயகி அமரும் இடம். அதில் அமரும்போதெல்லாம் அந்தக் கல் தன் கஷ்டங்களையெல்லாம் வாங்கிக்கொள்வதாகவும் அந்தக் கல்லின் உறுதி தன்னிடம் வந்து சேர்வதாகவும் ரங்கநாயகிக்குத் தோன்றுகிறது. ரங்கநாயகியின் மரணம் வரைக்குமான நாவல் பகுதியைப் படித்து முடித்ததும் ரங்கநாயகிக்கும் அந்தக் குத்துக்கல்லுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அவளும் வாழ நினைத்த வாழ்க்கை ஒன்று. வாழ்ந்த வாழ்க்கை வேறு.

நான்கு சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் பத்ரிநாராயணன் மட்டுமே தனித்தன்மை கொண்டவராக உள்ளார். சுதேசமித்திரன் வழியாக அவர் படித்துத் தெரிந்துகொண்ட சுதந்திரப்போராட்டச் செய்திகளும் காந்திய வழிமுறைகளும் அவருடைய தனித்தன்மைக்குக் காரணங்கள். அவரிடம் மற்றவர்களிடம் இருப்பதுபோன்ற பேராசை இல்லை. பெண்கள் மீது அலட்சியமோ வெறுப்போ இல்லை. எதன் காரணமாகவும் பிறரை விலக்கிவைக்கும் எண்ணமும் இல்லை. கடுமையான தீண்டாமை நிலவிய அக்காலகட்டத்தில் ஓர் அவசர வேலைக்காக, தன் மிதிவண்டியை இன்னொருவரிடம் கொடுத்து ஓட்டிச் செல்லும்படி சொல்லும் தாராள மனப்போக்கு அவரிடம் நிறைந்திருந்தது. அவருடைய ஆதரவில்தான் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ரங்கநாயகியும் பிற பெண்களும் ஓரளவு மனச்சுமையின்றி வாழ்ந்தார்கள். காதலில் தோற்றவர் என்றபோதும் கடுகளவும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வாழும் மனப்பக்குவமும் அவரிடம் இருந்தது. அந்த வீட்டில் ஒரு சாய்வுநாற்காலி இருந்தது. அதுதான் அவர் இடம். படிப்பது, ஓய்வெடுப்பது எல்லாமே அந்தச் சாய்வு நாற்காலியில்தான். கடைசியில் அவர் மரணமடைவதும் அதே சாய்வு நாற்காலியில்தான். குத்துக்கல்லை பின்கட்டுக்கான அடையாளமாக வைத்துக்கொண்டால் சாய்வுநாற்காலியை முன்கட்டுக்கான அடையாளமாக வைத்துக்கொள்ளலாம்.

ரங்கநாயகியின் வாழ்வு நெடுக சிறுமைப்படுத்தப்படும் தருணங்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. எல்லாத் தருணங்களிலும் கசப்புகளே மேலெழுந்து வருகின்றன. ஆனால் எந்தக் கசப்பையும் அவள் தன்னிடம் சேர்த்துவைத்துக்கொள்வதில்லை. பாசியை விலக்கிவிடுவதுபோல அந்தந்தக் கணங்களிலேயே விலக்கிவிட்டுவிடுகிறாள். பேச்சோடு பேச்சாக ஒருமுறை ”என்ன தாம்பத்யமோ போ. என்னமோ மழைக்கு ஒதுங்கனமாதிரி ஒதுங்கி ரெண்டு குழந்தைகள் பெத்துகிட்டேன். மத்தபடி சுமுகமான பேச்சு கெடையவே கெடையாது” என்று சொல்லும் தருணமொன்று நாவலில் இடம்பெற்றிருக்கிறது. அதையும் புன்னகையோடு சொல்கிறாள். அந்தப் புன்னகை வழியாகவே தன் சலிப்பையும் கசப்பையும் உதறிவிட்டுச் சென்றுவிடுகிறாள். வீட்டுச்சொத்து பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சகோதரருக்கும் கொடுக்கப்படும் ஒரு தருணம் நாவலின் பிற்பகுதியில் வருகிறது. குடும்பப்பெரியவர்கள் ரங்கநாயகியின் கணவனுக்கும் நான்காவது சகோதரன் என்கிற அளவில் அவனுக்கு உரிய சொத்தைப் பிரித்துக் கொடுக்கிறார்கள். அப்போது ரங்கநாயகியும் அவளுடைய பிள்ளைகளும் கதவுக்குப் பின்னால் நின்றிருக்கிறார்கள். ஊரும் பேரும் தெரியாத இடத்தில் இன்னொரு பெண்ணோடு குடும்பம் நடத்தும் ராகவாச்சாரி, மிகச்சரியான கணத்தில் வீட்டுக்கு வந்து தனக்குரிய பாகத்துக்கான பத்திரத்தாள்களை வாங்கிக்கொண்டு வெளியேறிவிடுகிறான். ரங்கநாயகி என்னும் முதல் மனைவிக்கும் அவள் வழியாக தனக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் அச்சொத்தில் உரிமை உண்டு என்கிற தன்னுணர்ச்சிகூட அவனிடம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அக்காட்சியை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். ரங்கநாயகிக்கு அது மிகப்பெரிய அடி. மெளனமாக விழுந்த அடி. “உன்னை நான் மதிக்கவில்லை. உனக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை” என்று சொல்லாமல் சொல்லும் அடி. அந்த அடியையும் வேதனையையும் பிறரின் ஏளனப்பார்வைகளையும் ஏமாற்றத்தையும் அவள் மொத்தமாகக் கடந்துபோகிறாள். அவளிடம் இயல்பாகவே நிறைந்திருக்கிற தாய்மையுணர்வு எல்லாக் கட்டங்களிலும் அவளுக்குத் துணையாக நிற்கிறது. அதன் வழியாக அவள் அனைத்தையும் கடந்துபோகிறாள்.

ரங்கநாயகி நாவல் பொதுவாக பெண்களின் கதை என்றால் மிகையில்லை. வாழ்நாள் முழுதும் வீட்டுக்கு உள்ளே வாழ்ந்து மறைந்த பெண்களின் கதை. “சீதைக்கு ஒரு தடவைதான் அக்கினிப்பரீட்சை. என் மாதிரி ஆயிட்டா தினம்தினமும் அக்கினி பரீட்சைதான்” என்பது இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் வைதேகி என்னும் பாத்திரத்தின் சொல். தினம்தினமும் இப்படி பரீட்சையில் தன்னை நிரூபித்துக்கொண்டே இருந்த பெண்களின் உலகத்தை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது ரங்கநாயகி நாவல்

( ரங்கநாயகி – நாவல். கே.பாரதி. கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 17. விலை. ரூ.200 )

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *