நூல் அறிமுகம்: அ வெண்ணிலாவின் *இந்திர நீலம்* – கருப்பு அன்பரசன்இந்திர நீலம்
சிறுகதைத் தொகுப்பு
அ வெண்ணிலா
அகநி பதிப்பகம்
விலை: ரூ.150
இன்று உலக ஆண்கள் தினமாம்..
பல பெண்கள், தோழிகள், நண்பர்கள்
தங்கள் ஆண் நண்பர்களுக்கும் கணவர்களுக்கும் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்..
பல ஆண்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல மாட்டீர்களா என்று முகநூலில் பதிவுகளையும் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..வருடத்தின் 365 நாட்களுமே ஆண்கள் தினம்தானே இதில் என்ன தனியாக ஆண்களுக்கென்று தினம் என்று பலர் நியாயமாக பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இன்னும் ஒரு சிலர் ஆண் குறிகளின் வழியாக பெண்களைத் தேடும் ஆண்களைத் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்து என்று பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. எது எப்படியோ தாய் வழி சமூகம் மறைந்து தந்தை வழி சமூகமாக உரு கொண்ட நாள் முதல் வருடத்தின் எல்லா நாட்களும் இங்கு ஆண்களுக்கான தாகவே இருந்து வருகிறது.. அதுதான் உண்மையும் மெய்யான எதார்த்தமும் ஆகும்.. எத்தனைதான் வெகு மக்களிடம் முற்போக்கு சிந்தனை கொண்டவனாக எனை நினைத்து நான் நடந்து கொண்டாலும், பேசினாலும் என் மூளைக்குள்ளே இருக்கக்கூடிய ஆண் என்கிற திமிர் ஏதேனும் ஒரு வடிவத்தில்.. வார்த்தையின் வழியாக குடும்பத்தில் மனைவி இடத்திலோ, மகள் இடத்திலோ, தாயிடத்திலோ இல்லை தோழி இடத்திலோ எங்கேயாவது வெளிப்பட்டு தன்னுடைய கோர கொடூர முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது நிதம் நிதம்..
அப்படிப்பட்ட என் கொடூர எண்ணங்களையும் செயல்களையும் உள்வாங்கிக்கொண்டு, தன்னுடைய மனதில் இருக்கக்கூடிய எல்லாவித உணர்வுகளையும்  வெளிப்படுத்துவதற்கு  வழி ஏதும் இல்லாமல்.. ஒருவேளை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினால் கணவனோ, தாயோ, மாமியாரோ, மகளோ, மகனோ என்ன நினைப்பார்கள்
தான்குறித்துவென  இருக்கக்கூடிய என் மனைவியை போன்ற ஆயிரமாயிரம் பெண்களின் மனதில் நின்று வெண்ணிலா அவர்கள் இங்கே இந்திரநீலம் என்கிற மிக அற்புதமான ஒரு 8 கதைகளை படைத்திருக்கிறார் சிறுகதைத் தொகுப்பாக..
ஒவ்வொரு நாளும் கூடவே படுத்துக்கொண்டு.. கூடவே பேசிக்கொண்டு.. சந்தோஷம் கோபம், துக்கம் என அனைத்திலும் கூடவே இணைந்து.. இருந்து.. குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வரக்கூடிய.. என்னோடு காலம் முழுவதும் இணையாக பயணிக்கக்கூடிய என்னுடைய மனைவி. தாய்..மகள்.. தோழி அவர்களின் மன உணர்வுகளை என்றைக்குமே மதிக்க தெரியாத நான் புரிந்து கொள்ள மறுத்தே வந்திருக்கும் என்னால் எனக்காகவே என்னோடு மட்டுமே பயணித்துக் கொண்டிருக்க கூடிய என் மனைவியின் இன்னொரு மிக அற்புதமான அழகான உடலின்  ரசவாத மாற்றத்தினால் நிகழக்கூடிய உணர்வுகளை.. வெளிப்படுத்தக் கூடிய மனதினை எப்படி நான் புரிந்து நடந்திருக்க முடியும்?.
இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் எனக்குள்  மிகவும் சுயநலம் மிகுந்த..கேவலமான எண்ணம் கொண்டு ஒரு ஆண் பிறவியாக நான் நடந்து கொண்டிருக்கிறேன் என்கிற குற்ற உணர்ச்சியினை எனக்குள் ஏற்படுத்தியது.
பெண் மனதின்  உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டிய இடத்தில் ஆண் சமூகம் எந்தக் காலத்திலும் இருந்து வந்ததில்லை.. ஆண், பெண் மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கும் பொழுதிலும்.. ஆண் என்கிற திமிரில் வார்த்தைகளாலும் அல்லது உடல் மொழியாலோ நடந்து கொண்டாலோ என்ன நடக்கும் என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து உங்களோடு வெண்ணிலாவின் கதைகளை பேச  விருப்பப்படுகிறேன்..
என்னுடன் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரக்கூடிய ஆண் பெண் நண்பர்கள் இருவர்.. அலுவலக வேலை நேரம் தவிர்த்து இருவரையும் தனித்துப் பார்ப்பது என்பது மிகக் குறைவே.. பல நேரங்களில் இருவரும் ஒன்றாகவே பயணிப்பார்கள்.. இருவர் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்யோன்யமாக பழகிக்கொண்டே.. அழகாகவும் மகிழ்வாகவும் வாசம் வீசும் வண்ணவண்ண காட்டுப் பூக்களை ஏத்தும் நாட்களாக நகர்ந்து ஒவ்வொரு நாளும்..  நட்பு மிகுதியால் இருவர் குடும்பமும் மகிழ்வோடு பேரன்பு கொண்டு இருந்தது.. அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வெளியிலும் பலரும் அவர்கள் இருவரின் நட்பையும் கேலி பேசியது உண்டு.. சந்தேகப்பட்டு கண்டு எள்ளி நகையாடியதுண்டு.. இப்படி பேசுவது குறித்து அவன் பேசினாலும்.. அச்சப் பட்டாலும் அந்தப் பெண் ஒரு நாளும் கவலை கொண்டது கிடையாது. அவர்களின் நட்பிலும் மெய்யான அன்பிலும் அந்தப் பெண்ணுக்கு அத்தனை உருக்கு போன்ற ஒரு இணைப்பு.. அத்தனை பிரியம் கொண்ட தோழமையாக அந்தப் பெண் நண்பர்.. தன்னுடைய பார்வையில் எண்ணத்தில் தோன்றியதை சரியாகவும் செருக்காகவும்  நேர் கொண்டும் பேசும் வல்லமை படைத்தவர்.
ஒரே ஒரு நாள் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வந்து ஒரு தொலைபேசி அவர்கள் இருவரின் நட்புக்குள் மிகப்பெரிய ஒரு விரிசலை உண்டாக்கியது.. அது ஒரு சாதாரணமான தொலைபேசி அழைப்பு தான் என்றாலும் அந்த பெண்ணின் மேல் அவன் வைத்திருந்த மிகப்பெரிய அதிகாரமும் ஆதிக்கமும் கொண்ட அன்பு என்பது வேறு ஒரு வார்த்தையால் கோபமாக அங்கே வெளியாக..
இப்பொழுது இருவருமே தனித்தனியாக.. இரண்டு குடும்பங்களிலும் இவர்களின் நட்பு என்பது இப்பொழுது கேள்வியாக..? சாதாரண ஒரு தொலைபேசி அழைப்பை கூட ஏற்க முடியாத ஆணாகவும்.. அதற்கு எத்தனையோ முறை நியாயமான சமாதானம் செய்து அவனோடு தன்னுடைய தோழமையை பகிர்ந்துகொள்ள அவள் நினைக்கும் தருணங்களில் எல்லாம் அவளை மிக வன்மமான முறையில் வார்த்தைகளின் வழியாக பேசக்கூடிய ஒரு கொடூரம் படைத்த மனிதனாக தன்னை மாற்றிக்கொண்டான் அந்த நண்பன்.. இத்தனை காலம் தங்களுடைய குடும்பத்தில் பகிர்ந்து கொள்ள முடியாத நிகழ்வுகளை எல்லாம் பகிர்ந்துகொண்ட அவனையும் அவளையும் இப்பொழுது தனித்தனியாக பார்ப்பது என்பது மனது பெரும் வேதனையை கொடுத்துக்கொண்டே இருக்கிறது எனக்கே.. அவளுக்கான ஆண் தோழமை என்பது தான் மட்டுமே என்கிற திமிரில் இருந்த என் நண்பன், அவளுக்கான நட்பு  வேறு யாருமே இருக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருந்தது அவனுடைய ஆண் திமிர்.. சாதாரணமாக வந்த ஒரு அழைப்பை அவளுடைய நட்பு குறித்தும்.. அன்பு குறித்தும்.. தோழமை குறித்தும் சந்தேகத்தில் அவனைத் தள்ளி, இப்பொழுது பிரிந்து கிடக்கிறான்.. அந்த தோழியும் அவனுக்கு புரிய வைக்க எத்தனையோ முற்பட்டாலும் கூட அவருடைய ஆண் என்கிற திமிர் அவளுடைய மனதை புரிந்து கொள்ள மறுத்து இன்று அவஸ்தையில் தினம் தினம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.. ஆனால் அந்தப் பெண் தோழியும் அவரை எல்லா நிலைகளிலும் நிதானமாக எடுத்துரைக்க முனைந்து தோற்றுப்போய் நின்று கொண்டிருக்கிறார்
அவரின் வழக்கமான செயல்களில் எந்தவிதமான தங்கு தடையும் இன்றி நடந்து கொண்டிருக்கிறார்.. நடந்து வருகிறார்..
இந்திர நீலம் | கனலி
இப்படி ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னுடைய ஆண் திமிர் தனத்தால் தனக்கு சொந்தம் இல்லை என்றாலும் கூட ஒரு பெண்ணின் மீது எப்படி ஒரு ஆணுக்கு உரிமை கொண்டாடி அவளை அடக்கி ஒடுக்கும் மனதும் எண்ணமும் எங்கிருந்து வரும்.. வந்திருக்கிறது..? தான் ஆண் என்கிற ஒரு எண்ணத்தில் இருந்துதானே!. அதன் திமிரில் இருந்தும் அல்லவோ அது. அவன் இப்பொழுது உணர்ந்தாலும் அதை உள்வாங்கி விடும் நிலையில் அந்தப் பெண் இல்லை.. ஏனென்றால் இவன் வார்த்தைகளின் வன்மம் அந்த பெண்ணை வேறு ஒரு எல்லைக்குள் தள்ளி நிறுத்தி இருக்கிறது.. அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும்..  நாகரீகமும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் வளர்ந்தோங்கிய இந்த காலத்திலும் ஒரு சிறிய தொலைபேசி அழைப்பு.. இப்படி ஆணுக்குள் ஒரு எண்ணத்தை நினைப்பை.. அவளின் ஒழுக்கம் குறித்து நினைத்துப் பார்த்து இருக்கிறது என்றால்..
இருவரும் கணவன் மனைவியாக இருந்து இவர்களின் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
காலம் என்ன செய்கிறது அவர்கள் இருவரையும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நானும்.. இன்னும் அலுவலகத்தில் பலரும்.. ஆண் திமிர் முழுவதுமாக அடங்கி ஒடுங்கி அந்தப் பெண்ணின் தோழமைக்காக அவளின் அன்பிற்காக ஏங்கிக் கிடக்கிறான்.. அன்பும் தோழமையும், நட்பும், நம்பிக்கையும், உணர்வும் கணவன்-மனைவிக்கு மட்டும் இல்லை என்பது அவர்கள் இருவருமே என் எதிரில் சாட்சியாக..
இப்பொழுது வெண்ணிலாவின்  “இந்திர நீலம்” கதைத் தொகுப்பிற்குள் நுழைவோம்..
அதீதக் கட்டுப்பாடுகளும்.. வரையறைகளும், நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து காமம் அரியவகைப்  போலவே நம் வாழ்வோடு பயணிக்கிறது.. காதலுக்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாக வேண்டும்.. எப்பொழுதுமே காதலின் விளைவாக பெருகும் காமத்திற்கு இன்பமும் அழகும் வனப்பும் கூடுதல் அதிகம்.. காமத்திற்கான ஒரு உயரிய இடத்தை காதல் கொடுக்கிறது அங்கே.. காதல் நகர்வதற்கான உத்தியாக காமம் அங்கே தன்னை நிறுத்தி நம்மை ஆட்கொள்கிறது.கோவில் சிற்பங்களில் காமத்தை முன்னிறுத்தி வடிவமைத்து இருக்கக்கூடிய நம் சமூகம் தான் இன்று பொது இடத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து பார்த்திடும் பொழுதில் அச்சுறுத்தி அவர்களை எதிர்நோக்குகிறது பல நேரங்களில் அதனை ஆணவப்படுகொலைகளில் முடித்திருக்கிறது..
ஆண்களின் நிறைவேறாத காதலை மட்டுமே பேசிய இந்தப் பெரும் சமூகம்
தோற்றுப் போன பெண்களின் காதலையும் அவர்களின் காம உணர்வையும் பேச மறுத்திருக்கிறது..
அவைகள் பேசப்படும் பொழுது பேசியவர்களின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.. காமம் என்பது ஆண் பெண் இருவருக்குமே சரிசமமான உள்ளுணர்வும் உடல் ரசனையும் கொண்டது.. ஆனால் அவைகள் ஒருநாளும் ஆண்களைப்போல் பெண்கள் இங்கே சுவைத்து விட வாய்ப்பு முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறது.  அதைப் பேசப்படும் பெண் மீது வேறு ஒரு எண்ணத்தை.. புரிதலை ஆண் என்கிற திமிரிலிருந்து பார்க்கப்பட்டிருக்கிறது..
இப்படிப்பட்ட காதலையும்.. இயற்கையாக ஏற்படும் காதல் வேட்கையையும் காம உணர்ச்சியையும் தோற்றுப்போன..பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் புகுந்து இந்தக் கதைகளை படைத்திருக்கிறார் கவிஞர் எழுத்தாளர் வெண்ணிலா அவர்கள்.
ஆண் பெண் இருவருக்குள்ளும் ஏற்படும் உடல் ரீதியான ரசவாத நிலையில்,
ஆண், பெண்ணை தன்னுடைய காம இச்சையை போக்கி கொள்ளக்கூடிய ஒரு கருவியாக நினைத்து பயன்படுத்துகிற தன்னுடைய நடவடிக்கையால், தன்னுடைய செயல்பாட்டால் அவளுக்குள் ஒரு திருப்தி ஏற்பட்டது என்கிற ஒரு உணர்ச்சியை கூட அவள் முகத்தில் இருந்து பார்க்கத் தவறி தன்னுடைய வேலை முடிந்தது என்று அடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறான்…
அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல கூடிய அந்த இடத்திலிருந்து அந்த பெண்ணின் மனநிலையை யோசித்திருக்கிறார் வெண்ணிலா அவர்கள் தன்னுடைய இந்திரநீலம் என்கிற முதல் கதையில்.
அதிலே வரக்கூடிய கண்ணா என்கிற பாத்திரம் வெறும் கண்ணா மட்டும் கிடையாது அதில் ஆண்குறி வைத்து இருக்கக்கூடிய நீங்களும் இருக்கிறோம் நானும் இருக்கிறோம்..
இந்திரநீலம் என்கிற முதல் கதையை வாசித்து பாருங்கள்..
இதிகாச காலம்தொட்டு நவீன காலம் வரையிலான பெண்களின் மனப் பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற தேடலே  எழுத்தாளர்அ. வெண்ணிலா அவர்களின் மற்ற கதைகள் அனைத்திலும்..
பல தேசத்து மன்னர்களுக்கு இடையே வில் போட்டி நடைபெற, அதில் வெற்றி பெற்ற அர்ஜுனன் தனது கணவன் என்று காதலில் மெய் மறந்து அவனோடு எண்ணங்களில்  வாழ்ந்த திரவுபதி, அர்ஜுனன் கரம்பிடித்து அவன் வீட்டிற்கு வந்தபொழுது ஐவருக்கும் மனைவியாக வேண்டிய கட்டாயத்திற்கு குந்தி தேவியால் தள்ளப்படுகிறாள். அர்ஜுன் உதாசீனத்தையும்.. திரவுபதியின் காதல் ஏக்கத்தையும் முழுவதுமாய் மறுவாசிப்புக்கு உட்படுத்தி இருப்பார் வெண்ணிலா அவர்கள்.. தான் காதலித்த அர்ஜுனன் உள்ளிட்ட 5 பேருக்கும் பேருக்கும் மனைவியாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படும் போது அவளுடைய மன உணர்வுகளை அர்ஜுனன் மேல் கொண்ட காதல் இம்சைகளை.. அவளின் உடல் உணர்ச்சிகளை அதன் தேவைகளை எப்படி ஒவ்வொரு ஆண்மகனும் அணுகுகிறான்.. அவைகள் எப்படியெல்லாம் ஒவ்வொரு ஆண்மகனும் அவள்பால் கொண்ட மரியாதையின் பெயரால்.. அன்பின் பெயரால்.. அவர்களின் சுய நலத்தின் பெயரால் நிராகரிக்கப்படுகிறது என்பதை வலியோடு பகிர்ந்து இருப்பார் திரௌபதி மனதின் மறு புறத்திலிருந்து  வெண்ணிலா அவர்கள்..
இந்திர நீலம் - அ. வெண்ணிலா - Thamizhbooks.com - Buy Tamil books online
இப்படியாகத்தான் நமக்கு இதிகாசங்களாக..புராணங்களாக மிகப்பெரிய ஆளுமைகளாக தெரியப்படுத்த பட்ட பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே  ஒரு ஆணின் பார்வையிலிருந்து இருந்து எப்படி படைக்கப்பட்டிருக்கிறது, அவர்களின் மன உணர்வுகள் அனைத்தும் எப்படி சிதைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ஆண்களின் எழுத்துக்களால் என்பதை தமிழ் சமூகத்திற்கு அந்தப் பெண்களின் காதல் உணர்வுகளிலிருந்து காம உணர்ச்சியிலிருந்து மறு வாசிப்பினை நடத்தியிருப்பார்கள் இச்சிறுகதைத் தொகுப்பில்..
இன்றைக்கு வரமாட்டானா..!? நாளை எப்படியும் வந்து விடுவான்!  என்று ஒவ்வொரு நாளும்  மல்லிகைப்  பூக்களாலான மலர் மாலைகளை தொடுத்து, அவனுக்காக காத்து கிடந்து வராத பொழுது பல பொய்களை சொல்லி வெளியே அனுப்பி  குப்பைக் கூளமாக குவிந்துகிடக்கும் மல்லிகைகளின் அழுகிய நாற்றத்தில் இருந்து பேசியிருப்பார் கண்ணகியின் மன உணர்வுகளையும் உடல் உணர்ச்சிகளையும் ஆசிரியர் அவர்கள்.
கண்ணன் இசைத்திடும் புல்லாங்குழலின் இசைக்குள் தங்களை இழந்து நின்ற கோபியர்கள்..ஆற்றங்கரையோரம் குளித்து இருக்கும் பொழுதில் தங்களின் கணவன் மட்டுமே காணவேண்டிய உடலினை கண்ணன் பார்த்து கிடக்க அவனுடைய கேலி பேச்சிலும் விளையாட்டிலும் அவன் மேல் காதல் மோகம் கொண்ட கோபியர்கள் வீடுகளுக்குச் சென்று தன் கணவனோடு இணை சேரும் பொழுதும் கண்ணனின் தாபத்தால் ஏங்கிக் கிடக்க.. அந்தப் பொழுதினில்  கண்ணனோ அரண்மனைக்குள் வேறு பெண்களோடு சல்லாபித்துக் கொண்டிருப்பான்..
இப்படி சாதாரண எளிய மக்களின் காதல் உணர்வுகளை அவளின் உடல் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடிய கண்ணன் செய்யக்கூடிய அட்டூழியங்களை அதே நேரத்தில் அவன்பால் காதல் உணர்வால் தவித்திடும் பெண்களின் உணர்ச்சிகளை அங்கே பதிவாக்கி இருப்பார் தன்னுடைய இந்திர நீலம் சிறு கதைக்குள். ஒரு ஆண்மகன், பெண்களுடைய காதல் மன உணர்வுகளை உடல் எழுச்சிகளை தூண்டி பார்க்க மறுத்த உதாசீனப்படுத்திடும் ஆண் சமூகத்தின் அடையாளமாக கண்ணன் இங்கே காட்டப்பட்டு இருப்பான்.
அட்சய பாத்திரத்தின் பசியில் எளிய மக்களுக்கு எல்லாம் வயிற்றுப்பசி போக்கியவள் மணிமேகலை.. அவள் காதலை உதயகுமாரன் மேல் அவள் கொண்டிருந்த  மனக்கிளர்ச்சியை.. உடலின் உணர்ச்சிகளை மணிமேகலையின் வயதிலிருந்தே பதிவாக்கி இருப்பார்.. மறுவாசிப்புக்கு உட்படுத்தி இன்னொரு சன்னலை திறந்து காட்டி இருப்பார் மணிமேகலையின் மனசுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் உணர்வுப் போராட்டங்களின் பொருட்டு ஆசிரியர் அவர்கள்..
தன்னை கைபிடித்து கணவன் பரமதத்தன் வீட்டை விட்டு வெளியேற, அவனைத்தேடி அலைந்து, கடைசியில் அவன் இருக்கும் இடம் சென்று சேரும் பொழுதினில் தன்னை பார்த்து அந்த நிமிடத்திலேயே தன் காலில் விழுந்து தனை தெய்வமாக பாவித்த கணவனின் உணர்ச்சிக்கு எதிராக.. தன்னை தெய்வமாக நினைத்திட்ட அவனின் மனநிலைக்கு எதிராக தன்னையே பேய் உருவாக மாற்றிக்கொண்டே புனிதவதியின் மனக்குமுறலை பதிவாக்கி இருப்பார் “என்புதோல்” என்கிற கதை தனில்..
இப்படியாக தன்னுடைய மற்ற இரு கதைகளிலும் வரலாற்று பெண் பாத்திரங்களை மறு வாசிப்பிற்கு நிறுத்தி மன உணர்வு நிலையிலிருந்து அவர்களின் காதலை உடலின் தேவைகளை பேசியிருப்பார் சிறுகதையாசிரியர் எழுத்தாளர் வெண்ணிலா அவர்கள்..
காதலும் காமமும் ஒன்றுக்கொன்று பிரித்துப் பார்க்க முடியாத உடலின் மனதின் தேவைகளே ஒவ்வொரு வயதிலும்  ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இங்கு. ஆனால் பெண்களுக்கு மட்டும் உள்ளங்கை பண்டமாக இவை இரண்டும் இருப்பினும் அதை விரும்பியபடி எல்லாம் சுவைக்க முடியவில்லை என்பது பெரும் சோகமே..
தமிழ்ச் சமூகத்தில் இதில் பெண்களிடம் மிகப்பெரியதொரு பண்பாட்டு சிக்கல் இருப்பதற்குள் நுழைந்து வந்திருக்கிறார் வெண்ணிலா அவர்கள்.
இங்கு பெண்ணின் உடல் என்பது கணவன் என்கிற ஆணிற்கு மட்டுமே திறவுகோலற்று தேவைப்படும் போதெல்லாம் உருட்டி விளையாடும் விளையாட்டு பொருளாகவே இருந்திருக்கிறது.. உடல் என்பது மனதால் இயக்கப்படும் ஒரு உறுப்புதான் என்பதே பெண்களின் நினைவுகளில் இல்லாத காலங்களும் இருந்து இருந்திருக்கிறது இன்றைக்கும் பல நேரங்களில் அது தொடர்ந்து வருகிறது..
காதலன் தன்னுடைய காதலியிடம் சின்னதான ஒரு முத்தத்திலிருந்து.. அவளின் உதட்டோரமொட்டி இருக்கக்கூடிய ஐஸ்கிரீமின் சின்ன துளியில் இருந்து.. அவள் குடித்து வைத்த எச்சில் தேனீரில் இருந்து..அவள் கடித்து வைத்த சின்னதொரு இனிப்பில் இருந்து.. அவளின் இதழ் பட்ட அனைத்திற்கும் காத்துக் கிடப்பான்.. அதை அவளிடமும் தெரிவித்து நிற்பான் ஆசை பொங்க அன்பொழுக.. ஆனால் அப்படியானதொரு பேரன்பு அவளுக்கு இருந்தாலும்.. அவளுடைய காதல் உணர்ச்சிகளும் உடலின் உணர்ச்சிகளும் அவளை உந்தித் தள்ளினாலும் அவளால் வெளிப்படையாக தன்னுடைய காதலன் இடத்தில் பேச முடியாத ஒரு மன சிக்கலுக்குள் அவள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறாள் இன்றளவிலும்.. ஒருவேளை அவள் தைரியமாக அவனிடம் கேட்கப்படும் பொழுது அவன் அவள் குறித்து வேறு மாதிரி யோசிக்கத் தொடங்கி விடுகிறான்.. இதுதான் இன்றைக்கு ஆண் சமூகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆணாதிக்கம் கலந்த காதல் உணர்வு.
வெண்ணிலாவினுடைய இந்த சிறுகதை தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் தன்னையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தி எல்லாவற்றையும் சீர்படுத்த தேவை இருக்கிறது.. தன்னுடைய மன உணர்வில் உடல் உணர்ச்சியில் இருக்கக்கூடிய எல்லாவிதமான தேவைகளும் தன்னோடு பயணிக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்..
இதை உணர மறுத்து விடும்பொழுது என்னுடைய நண்பனும் அவருடைய தோல்வியும் தேவையில்லாத சில வார்த்தைகளால் பிரிந்துபோன பேரன்பின் வலியை மட்டுமே நான் இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
பெண்ணினுடைய மனதிலிருந்து அவளின் காதலை, காமத்தை இதிகாச புராணங்களில் உச்சத்தில் பேசப்பட்ட ஆண்களால் படைக்கப்பட்டபெண் கதாபாத்திரங்கள் வழியாக அவர்களின் வலியை வேதனையோடு நமக்கு உணர்த்தி இருப்பார் வெண்ணிலா அவர்கள்..
தமிழ் இலக்கிய உலகில் பேசக்கூடிய ஒரு படைப்பாக இந்த “இந்திர நீலம்” சிறுகதைத் இருக்கும்..
விடுபட்டு நிறைவேறாது தோற்றுப்போன காதலையும் காமத்தையும் பேசுகின்றன இத் தொகுப்பில் உள்ள கதைகள்..


காதலும் காமமும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு ஆணுக்குள் ரசவாத மாற்றத்தை நிகழ்த்தும் போது அவன் தன்னோடு பயணிக்கும் பெண்ணின் உடலை எப்படி பார்க்கிறான்.. வெறி கொண்டு அவளின் உடம்பை தனதாக்கி தீர்த்துக் கொள்கிறான்..
அதேவேளையில் அப்படியான ரசவாதம் ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் பொழுது இந்த சமூகம் அவளை எப்படிப் பார்க்கிறது.. ஆண்கள் அவளை எப்படி உற்று நோக்குகிறார்கள்… அதை தன்னோடு பயணிக்கும் கணவனிடம் கூட வெளிப்படுத்த நினைத்திட முயலும் பொழுது
அவளின் மனதும் உடலும் படக்கூடிய அவஸ்தையை.. உடலின் ஏக்கத்தை.. மனதுக்குள் திகழ்ந்து கொண்டிருக்கும் வாசம் வீசும் காட்டுப் பூக்களின் வாசத்தை..
உணரச் செய்திருக்கிறார் வெண்ணிலா அவர்கள்..
இந்திரநீலம் சிறுகதைத் தொகுப்பின் அட்டைப்படம் பெண்களின் மன உணர்வுகளை அவர்களின் மனதில் பூத்திருக்கும் வண்ண வண்ண பூக்களின் வாசத்தை வாசித்திடும் நம்மை நுகர வைத்திருக்கிறது.
சிறுகதைத் தொகுப்பை சிறப்பான முறையில் அச்சிட்டு நல்லதொரு வடிவமைப்பில் கொண்டுவந்து இருக்கக்கூடிய அகநி வெளியீடு நிறுவனத்திற்கும் சிறுகதை ஆசிரியர் எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.
இந்திர நீலம்
சிறுகதைத் தொகுப்பு
அ வெண்ணிலா
அகநி பதிப்பகம்
விலை: ரூ.150
புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: இந்திர நீலம்
கருப்பு அன்பரசன்.