பூனை : சில ஆவணங்கள்
______________________________
பூனையை
படம் வரைந்தேன்
தாவிக் குதித்தோடி
மதிலின் மீதேறியது…
பின் தொடர்ந்த நான்
கவலையற்றுத் திரும்பினேன்
மதிற் மேல் பூனை.
🌼
சமையலறையில்
பாத்திரங்கள் உருளும் சப்தம்
கையில் தடியுடன் ஓடிப் பார்த்தால்…
சின்னஞ்சிறு குழந்தையாய்
உடலெல்லாம் உணவு பூசி
விழித்துப் பயந்த பூனை.
🌼
எங்கிருந்தோ
கொண்டு வந்த எலியுடன்
நடு ஹாலில்
ஓடிப் பிடித்து விளையாடியது..
பிறகு
எலியைக் காணாம்..
பூனையையும் கூட.
🌼
எதையாவது பிடித்து வரும்
முயல்.. குயில்.. செம் போத்து..
காடை.. கோழி.. சிட்டுக்குருவி..
என பூனை.
யாவற்றையும் பறித்துக் கொண்டு   விரட்டுவோம் அதை.
பாம்பைப் பிடித்து வந்தது ஒருநாள்
பயந்தோடினோம் நாங்கள்.
🌼
பூனை வாய் திறந்து மூடுவது..
எங்கள் தாத்தா கொட்டாவி விடுவது போல…
மறு பிறவியில்
தாத்தா தான் பூனையோ…?
🌼
குட்டிகளை தூக்கிக் கொண்டு
வெளியே  போகும்
உள்ளே வரும்
அங்கே..இங்கே..எங்கேயும்…
இறக்கிவிட
அதற்குச் சம்மதமில்லை..
சமாதானமும் இல்லை…
🌼
நடு இரவில்
பிள்ளையைப் போல அழுதது..
துரத்தி துரத்தி ஓய்ந்தேன்…
விடியற்காலையில்
அந்தத் தெருவில் சாவுமேளச் சத்தம்.
🌼
வாயில் வழியும் ரத்தத்துடன்
வாசற்படியில் நின்றிருந்தது பூனை
தண்ணீர் எடுக்கச் சென்றவள்
தொட்டித் துணிமேல் ரத்தம் கண்டு
பதறிக் கொன்றாள்
உலக்கையால் பூனையை.
குழந்தையின் தொட்டிலுக்கருகே
இரண்டு துண்டாகிக் கிடந்தது பாம்பொன்று.
🌼
கண்ணாடித் தொட்டியில் மீன்கள்
பூனை பார்த்தது..
மீன்களும் பார்த்தன..
நின்றது ஒரு கணம்
அரவமில்லமல் போய் விட்டது பூனை
நீந்தத் தொடங்கின மீன்கள்
கண் விழித்தது அந்த நிமிடம்.
🌼
நண்பர் வீட்டுள் அழைத்தார்..
சோபாவில் கருவுற்ற பூனையாம்..
நாற்காலியைக் காட்டினார்
நான் அமரப் போனேன்
விழித்துக் கீழிறங்கிய பூனை
மெல்லிய ஓசை எழுப்பி
வலது முன்னங்காலால்
தன் நெற்றியைத் தொட்டு விட்டு
மேஜைக்கடியில் சென்று படுத்தது
அதன் செய்கை___
“விருந்தினரே..
வணக்கம்..அமருங்கள்…”
என்றது போலிருந்தது.
🌼
உடம்பை ஒட்டி உரசி
வாலை ஆட்டிக் கொண்டு
குழந்தையில்லாத அவளின் மார்பிலேறி
இரு முன்னங் கால்களால் அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு
தூங்கத் தொடங்கியது பூனை.
🌼
ராஜாவும் பூனை
ராணியும் பூனை
மந்திரியும் பூனை
படைத்தளபதி.. வீரர்கள் யாவரும் பூனைகள்…
ஜனங்களோ.. கருவாடுகள்.
ஜெய் ஹோ.. ஜெய் ஹோ…
பாரத் மாதா கீ ஜெய்….
🌼
நெல் அவித்தாள்
பூனையும் அறியாமல் வெந்து போனது
அன்றிலிருந்து அந்த வம்சத்தில்
வாரிசுகளெல்லாம் பூனைகளாய்
பகலில் தூங்குவார்கள்
இரவில் விழித்துத் திருடுவார்கள்.
🌼
அந்தப் பூனையைப் பார்த்து
ஹலோ.. நீ..
தென்னாலி ராமனின் பூனையா..?
எனக் கேட்டேன்..
நான்தான் தெனாலி ராமன்
என்றது அது.
🌼
அந்த ஹாஸ்டலில்
தொந்தரவு தந்த பூனையை
அடித்த அவர்கள்
கடைசியில் பாடினார்கள்…
பூனையை அடிப்பானே.. ஏன்?
அதன் கழிசலை சுமப்பானே.. ஏன்?
🌼
கையில் கமண்டலம்..
காலில் பாத ரக்சை..
உடலெல்லாம் திருநீறு..
கழுத்தில் ருத்திராட்ச மாலைகள்..
இனி நான்
மாமிசம் உண்ணமாட்டேன்
என்று கண்மூடி
த்யானித்தது பூனை…
எலிகள் சத்தமிடும் வரை.
🌼
அவனைப் பார்த்தேன்
“ம்யாவ் ” என்றான்
நானும் “ம்யாவ் ” என்றேன்
விழித்துப் பார்க்கையில்
பூனையாய்  நான்.
🌼
சாந்தமாய் நின்றிருந்தது..
வேகாளமாய் அவனிருந்தான்..
அறைக் கதவுகள் , ஜன்னல்களை
சாத்தினான்…
பின்வாங்கியது…
முன்னோக்கி நகர்ந்தான்
கொல வெறியுடன்…
பாய்ந்து கடித்தது பூனை
அவன் கொரவளையை.
வசந்ததீபன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *