*சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா 

Ceylon Special Egg Parotta (சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா) Short Story By Dr.Balasubramanian K, Book Day is Branch of Bharathi Puthakalayam.சென்னைக்கு 90களில் பஞ்சம் பிழைக்க, சொந்த ஊராம் ‘நைனார் பாளையத்தை’ விட்டு வந்து.. மூன்று நாளாகியும், வேலை வெட்டி கிடைக்காத துயரத்தில், பசியோடு..தேவி தியேட்டர் வாசலில் பராக்கு பார்த்தபடி நின்றிருந்தான்… நம் கதாநாயகன் சேகர்…..

அம்மாவுக்கு தெரியாமல் ஒரு டஜன் கன்னிக்கோழி முட்டையையும், ஒரு படி விதை நெல்லையும், வந்த விலைக்கு விற்று, சொல்லாமல் கொள்ளாமல், சென்னைக்கு லாரி ஏறி வந்த, அவனுக்கு சென்னை இன்னும், கைகொடுக்காததால், ஊர் திரும்பும் யோசனையில் இருந்த போது, காலில் ஏதோ பேப்பர் போல் தட்டுப்பட, குனிந்து பார்த்த போது, அது ஒரு 500 ரூபாய் தாள் என்று உணர்ந்து, டக்கென்று, கால் பாதத்தில் மறைத்து கொண்டான். நல்ல வேளை, இன்னும் முதல் காட்சி முடியாததால், கூட்டம் அதிகம் இல்லை.. சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் கவனித்ததாக தெரியவில்லை…

மெள்ள அதை குனிந்து எடுக்க முயன்றபோது, ஒரு, அழகிய, நவீன உடை அணிந்த நவநாகரீக யுவதி, இவனை பரபரப்புடன் நெருங்கி, ,” சார் சார்! 500 ரூபாய் நோட்டை பார்த்தீங்களா?”, என வினவ, சேகர் உஷாராகி, “500 ரூபாய் நோட்டை நான் இதுவரை பார்த்ததே இல்லை.!.எந்த கலரில் அது இருக்கும்? ” என நகைச்சுவையுடன், நிலைமையை சகஜமாக்க முயன்றான்.

அவளோ கவலை தோய்ந்த முகத்துடன், “இல்ல சார், பர்ஸ்ல இருந்து எடுக்கும் போது, கைதவறி, காத்துல, உங்க பக்கமா பறந்து போச்சி சார், அதான் கேட்டேன் சார்” என விசனப்பட, சேகர் “ஐயோ பாவமே! நான் பாக்கலியேம்மா”, என்று கூறி, நின்ற இடத்தில் இருந்து கொண்டே பார்வையால்.. அங்கும் இங்கும் தேடுவது போல் பாசாங்கு செய்தான்..

சிறிது தேடலுக்கு பின் “சேரி சார்!எங்க போச்சுன்னே தெரியல சார் ” என்று அவள் ஏமாற்றத்துடன் நகர, இவன் மனமோ “ரொம்ப சாதுவான ஏமாளி பொண்ணு போல! , நம்பள அதட்டி கிதட்டி கேள்வி ஏதும் கேக்கல!” என குதூகலித்தான்..

வெகு இரகசியமாய், அதை மீட்டு, அந்த புத்தம்புது சலவை நோட்டை, சட்டைப்பையில் பத்திரப்படுத்தினான்..

அவன் மனமோ “சென்னையில் இப்படி எல்லாம் கூட நடக்குமா.? இவ்வளவு எளிதில், இவ்வளவு பணமா..?? இனி சென்னையை விட்டு போகவே கூடாது” என சங்கல்பம் செய்து கொண்டான்.

இந்தப் பெரும் தொகையில் என்னென்னவெல்லாம் வாங்கலாம்? என மனக்கணக்கு போட்டான்.. 10 ரூபாய் நோட்டை கூட, பார்த்து பல மாதம் ஆன அவனுக்கு அந்த 500 ரூபாய் பிரமிப்பைக் கொடுத்தது.

‘முதலில் நல்ல சட்டை பாண்ட், ஜட்டி, கைக்குட்டை, செருப்பு இத்யாதிகள் வாங்கணும்,…

பாவம் அம்மா, அவளுக்கு ஒரு 50 ரூபா மணி ஆடர் அனுப்பணும்,’ என்று யோசிக்க, அவன் காலியான வயிறோ பசியை உணர்த்த , ‘முதலில் நல்ல மிலிட்டரி ஓட்டலா பார்த்து ஒரு புடி புடிக்கணும்’ என முடிவுசெய்து, புகாரி ஓட்டல் பிரம்மாண்டமாய் தெரிய, உள்ளே நுழைந்து..

சர்வரிடம்.. பணம் இருக்கும் தோரணையில் “என்ன சூடா இருக்கு? ” என கேட்க, அவன் பதிலுக்கு மெனுவை அடுக்கிக்கொண்டே போக.. அவன் உச்சரித்த “சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா” என்ற அந்த வினோத பெயரில் லயித்து, அதை கொண்டு வர ஆர்டர் செய்கிறான் ..

அதை, பார்த்து, ரசித்து ருசித்து, அதன் சுவையில் சொக்கிப்போய்.. மேலும் அதே ஐட்டத்தை ஆர்டர் செய்து சாப்பிட்டு, ஐஸ் க்ரீம், பீடா, வாழைப்பழத்துடன், தன் மெனுவை நிறைவு செய்கிறான்.. ‘ஆஹா சென்னை, சென்னை தான்’, என்று மனதுள் பாராட்டிக்கொண்டான் !,

சர்வர் பவ்யத்துடன் கொண்டு வந்த பில்லில் ரூ 57.60.. என போட்டிருக்க, அவன் அலட்சியமாய், அந்த ஐநூறு ரூபாய் நோட்டை தட்டில் வைக்கிறான்..மீதிக்காக காத்திருக்கிறான்…

கல்லாவில் இருந்த ஆஜானுபாகுவான முஸ்லீம் பாய், நோட்டை மேலும் கீழுமாய் நோட்டமிட்டு, சர்வரிடம் ஏதோ, காதில் சொல்ல அவர் உஷாராகிறார்..
இவன் சில்லறை பணத்தை, எதிர்பார்த்தபடி, ‘அடுத்து எந்த கடைக்கு செல்லலாம்’ என யோசனை செய்ய., இவன் சட்டை காலரை… இரண்டு போலீஸ்காரர்களின் முரட்டு கரங்கள் பற்றி தூக்கி , “யாருடா நீ . உன்கூட எத்தினி பேர்டா, இப்டி கள்ள நோட்டு மாற்ற கிளம்பி இருக்கீங்க?? , நடடா ஸ்டேஷன்க்கு!” என மிரட்டியபடி இழுத்து சென்றனர்..

தூரத்தில் ஒளிந்திருந்த, அந்த நவ நாகரீக யுவதியும், அவள் கூட்டாளியான ஒரு முரட்டு ஆசாமியும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ச்சே! இந்த வாட்டியும் ஃபெயிலியர் ஆயிட்ச்சே!.. கள்ள நோட்டுன்னு கண்டுபுடிச்சிட்டாங்களே..! பாஸ், நாம கள்ள நோட்டு, இன்னும் நல்லா அச்சடிக்க முயற்சி செய்யணும் “என்று அவள் அவனிடம் ஏமாற்றத்துடன் புலம்ப, அடுத்த முயற்சிக்கு ஆயத்தம் செய்ய.. இருவரும் எஸ்கேப் ஆயினர்..

நம் சேகரோ “சார் சார்! எனக்கு ஒண்ணுமே தெரியாது சார்!, என்ன உட்ருங்க சார்!, நான் ஊர்நாட்டுக்காரன் சார், என் ஆத்தா என்ன தேடும் சார்!” என்று அழுது அரற்றிய அந்த கூச்சல், காவலர்களின் காதுகளில் விழுந்ததாகவே, தெரியவில்லை…

சென்னை அவன் கண்களுக்கு, இப்போது கொடிய நரகமாக தெரிந்தது.!

******************

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.