1)சிறகுகளில் நதியின் வாசம்

************************************

கோடையின் முடிவற்ற பருவத்தில்

கழிமுகத்தினருகில்

உன்னிடமிருந்து

இரையெடுத்துச் சென்ற நாள்தான்

நாம் கடைசியாய்

சந்தித்துக்கொண்டதென நினைவு…

பொய்த்த பருவங்களால்

வாய்க்காமல் போன வசந்தத்தை

சாக்காக வைத்து

தரைதட்டத்தொடங்கியது

நுரைத்த உன் மார்புகள்…

அகழ்ந்த பள்ளங்களின் இருட்டில்

சுழல்களின் பெருமூச்சுகள்…

மீன்கள் உறங்கும் கல்லறையாய்

நீள்கிறது நதியின் நாவுகள்…

கொன்று நெருப்பில் வீசிய

சாரைப் பாம்பென சதை பிளந்து

நடுமுள் துருத்தி சுருண்டுகிடக்கும்

களவாடிய நீர்த்தடம்…

கடல் கூடுமிடத்திலன்று

கால்களை இழுக்கும் சேற்றை உதறி

இரை பற்றிப் பறந்த பின்பும்

சிறகுகளில் ஒட்டியிருந்த

நதியின் வாசத்தையும்

மற்றுமோர் பிரவாகத்தையும்

பின்னெப்போதும் காணவே

முடியாதென அறிந்திருக்கவில்லை..

கோடைகள் புதைந்தின்று

கரை தாண்டிப் பெய்யும் இம்மழை

நதியின் தடங்கள் புலப்படாததால்

தன் போக்கில்

நிலத்தின் கழுத்தை

மலைப்பாம்பென சுற்றுகிறது…

நதியின் கல்லறையில் உறங்கும்

மீன் குஞ்சுகள்

ஆற்றாமையில் பாடுகின்றது

மனிதர்கள் மனிதர்கள் என்று….

 

2)அடிமைகளின் வரம்

*****************************

நிர்பந்தங்களின் அழுத்தத்தில்

லாயங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு

பிடித்திழுக்கும் கடிவாளமகற்றி

புற்கள் மண்டிய வனத்தில்

விடுவிக்கப்பட்ட தருணத்திலிருந்து

புதிதாய் கிடைத்த சுதந்திரத்தில் ஒன்றாமல்

ஒவ்வாமைகளால் குழம்புகின்றன

வண்டி குதிரைகள்…

சுயமற்ற வெளிகளில் மட்டுமே

நடக்க பழக்கிய அவை

விசுவாசத்தின் மூளைச்சலவைகளால்

மூழ்கடிக்கப்பட்டு…

அமர்ந்துகொண்டு

அதிகாரம் செலுத்துபவனின்

எதிர்த்திசை மட்டுமே

உலகமென்று முடிவெடுத்துக்கிடந்ததால்

சுதந்திரத்தின்

பக்கவாட்டு தோற்றங்களின்

பிரம்மாண்டம் கண்டு

அச்சத்தில் மிரள்கின்றன…

சுமையற்ற முதுகுகளின் வெறுமையை

சாட்டைகள் சுழற்றாத

காற்றின் தழுவலை

சுதந்திரமென்று உணர்வதற்குள்

அடிமை நிலமொன்றில்

அகப்பட்டுக்கொண்ட மிரட்சியில்

அவைகள் தடுமாறுகின்றன…

விடுதலையின் வாசமுணர்ந்து

மேய்ச்சல் வனங்களுக்குள்

குதிரைகள் தம்மை

விரைந்து பழகிக்கொள்வதற்கு முன்பே

பசித்திருக்கும் பொழுதாய் பார்த்து

முன்பு கழுத்திலாடிய

புல் நிறைத்த பழைய பைகளை

முகத்திற்கெதிரே ஆட்டியபடி

சுதந்திரமென்பது

வலிகள் நிறைந்ததென்றும்

ஆணைகளுக்கு கட்டுப்படுவதே

அடிமைகளின் வரமென்றும்

போதனைகள் செய்து

கையில் கடிவாளத்துடன்

மீண்டும் கொட்டடியிலடைக்க

சமயம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்

குதிரைகளின் எஜமானர்கள்…

3)

வெட்டிச்சாய்த்து உதிர்ந்து கிடக்கும்
மரச்செறாக்களில்
செதில் செதிலாய்
வாழ்ந்த காலத்தின்
வலிகள் மிதக்கின்றன…
மகிழ்ந்திருந்த நாட்களை விழுங்கி
எதிர்த்திசையில்
அறுத்துப்போட்டு
பிணமாய் கிடத்தப்பட்டிருக்கும்
பெருமரத்தில்
கிளிகள் கைவிட்டுச் சென்ற
இருண்ட மரப்பொந்துகளில்
சிறகுகளின் செருமலும்
அலகுகளின் உரசல் சத்தங்களும்
வெளியேறத்தெரியாமல்
இன்னமும் அங்கேயே
உறைந்து கிடக்கின்றன…
வீழ்த்தப்பட்ட
பருத்த இப்பூவரச மரத்தின்
கிளிப்பொந்துகளை
உற்று நோக்குகையில்
வழியும் குருதியுடனும்
பொறுக்க முடியா வலியுடனும்
அச்சத்தில் வெளிறி
லாக்கப்
ஒன்றில் மரணித்தவனின்
பிளந்த நிலையிலிருக்கும்
இருண்ட வாயும்…
அதற்குள்
வெளிவராமல் சுழன்றுகொண்டிருக்கும்
கடைசி நேரத்தின்
வார்த்தைகளும்
சட்டென
நினைவுக்கு வந்துவிடுகிறது…!

 

சந்துரு…

One thought on “சந்துரு கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *