Covai M.Uma Maheswari Two Poems in Tamil language. Book Day And Bharathi TV Are Branch of Bharathi Puthakalayam



1. தலைகீழ் அரியணைகள்
****************************

அயல் தேசத்து அரசரின்
கழுகுக் கண்களைக் குளிர்விக்க
தடுப்புச்சுவர்களை
திரைச்சீலையாக்கி
மறைக்கப்பட்ட குடிசைகள் போல்
பகலவனின்
இறுமாப்பு வெளிச்சக்கதிர்கள்
நிலவின் நட்சத்திரங்களின்
இருப்பை மறைத்து விடுகிறது…
அந்திச் சிவப்பின்
எழுச்சிக்குப் பின்னால்
நிலவும் நட்சத்திரங்களும்
வெண்தாடிப் பகலவனை
இருட்டடிப்பு செய்து
அகங்கார அரியணையிலிருந்து
தலைகீழாய்த் தள்ளிவிடுகிறது…



2. குற்றப்பதிவேடுகள்
************************

குட்டைப்பாவாடை
அணிந்திருக்கிறாள்
துப்பட்டாவால்
சரியாக மறைக்கவில்லை
மேல் சட்டையில்
முதல் பொத்தான் இல்லை
காதலிக்கிறாள்
சாதி மீறி திருமணம்
எதிர்க்கேள்விகள் எழுப்புகிறாள்
தனித்து வாழ்கிறாள்
அடங்க மறுக்கிறாள்

உங்கள் சித்திரகுப்த
கலாச்சாரக் குற்றப்பதிவேட்டில்
எங்கள் மீது
எத்தனைப் புகார்கள்…

அசமத்துவ கரங்கள்
கைப்பற்றியிருக்கிற
நியாயத் தராசின்
இரு தட்டுகளிலும்
கலாச்சாரக் கற்கள்..
எடை தாங்காமல்
உடைந்து கிடக்கிறது
நடுமுள்..
இந்தத் துலாக்கோலில் அளக்கப்படுகிறது
கற்பும் புனிதமும்…

வாழ்வு முழுமையும்
அறிவுரைகளெனும்
அம்புகளின் படுக்கையில்
எப்படிக்கிடப்பது?
இதோ குருதி கசியும்
விலா எலும்புகளில்
காற்றின் சிறகுகளைப் பொருத்தி
விரும்பிய திசையில்
பறத்தல் தொடங்கி விட்டது..

உங்கள் தலைக்கு மேலே
உயர்ந்து பறப்பதை
காணவிரும்பாவிடில்
எங்களுக்காக உருவாக்கிய
கலாச்சாரக் கயிற்றால்
தூக்கிட்டுக் கொள்ளுங்கள்…

கோவை மீ உமாமகேஸ்வரி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “கோவை மீ உமாமகேஸ்வரியின் இரண்டு கவிதைகள்”
  1. அசமத்துவ கரங்கள் கைப்பற்றியிருக்கிற நியாயத்தராசின் இரு தட்டுகளிலும் கலாச்சார கற்கள் 👍
    சிற்பான வரிகள்
    “கைப்பற்றி” இருக்கிற என்ற வார்த்தையை சற்று கூர்ந்து வாசிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *