Era Kalaiarasi in Konjam Porungal Poetry in Tamil Language. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.



அடுப்பில் பால் கொதிக்க
இன்னுமா போடறனு
கேட்டு அவசரப்படுத்தாமல்
கொஞ்சம் பொறுங்கள்

காலை உணவு முடியுமுன்னே
அப்புறம் மதியானம்
என்ன சமையல்?
என கேட்காமல்
கொஞ்சம் பொறுங்கள்.

கிரிக்கெட் போட்டி மட்டுமே
உலகின் தலைசிறந்த
விளையாட்டாய் நினைத்து
சட்டென ரிமோட்டை
பிடுங்காமல்
கொஞ்சம் பொறுங்கள்

இந்த மழையில சூடா
பஜ்ஜி சாப்டா நல்லா
இருக்கும்ல
மழையை அவளும்
ரசித்துக் கொள்ளட்டும்
கொஞ்சம் பொறுங்கள்.

சமையல் எரிவாயு
மின் சாதனப் பொருட்களை
அணைத்து விட்டு
வெளியேற நேரம் எடுக்கும்
கொஞ்சம் பொறுங்கள்.

தலைவலி அவளுக்கும் வரும்
தைலம் தேய்த்து விட்டு
வந்து விடுவாள்
கொஞ்சம் பொறுங்கள்

அவசரத்தில் மூலையில்
குப்பை சேர்த்திருப்பாள்
சற்று நேரத்தில்
அள்ளி விடுவாள்
கொஞ்சம் பொறுங்கள்!

என்ன தான் இருந்தாலும்
படிச்ச திமிர் இருக்கும்ல
அதான் இப்படினு கேட்டதும்
முறுக்கிக் கொள்ளும்
கோபத்தை தள்ளி
கொஞ்சம் பொறுங்கள்!

சேவல் கூவும்
நேரந் தவறி எழுந்தால்
சேர்ந்து வசை பாடாமல்
கொஞ்சம் பொறுங்கள்!

கரண்டியும் கையுமாக
அடுப்பைக் கட்டி அணைத்து
காதல் பேசி வருபளின்
கை கால்களிடம்
பேசிப் பார்க்க
கொஞ்சம் பொறுங்கள்!

பாத்திரம் துலக்க
பாதி நேரம் கரைய
காய்த்த கைகள்
கடிந்துக் கொள்ள
கதைக்க வேண்டியக்
கதைகளைக் கேட்க
கொஞ்சம் பொறுங்கள்.!

தோளில் பையும்
காலில் கடமையையும்
மனதில் குடும்பத்தையும்
சுமந்துக் கொண்டு
நாளெல்லாம் உழைக்கும்
நங்கையருக்கு செவி மடுக்க
கொஞ்சம் பொறுங்கள்.!

இரா.கலையரசி.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *