முதல் பக்கத்திலேயே துளிர்விடத் துவங்கிவிடுகிறது கண்ணிர்த் துளிகள். தோட்டத் தொழிலாளர்களின் வலிகளையும் ரணங்களையும் ரத்தமும் சதையுமாக கண்முன்னே நிறுத்தும் நூலின் இறுதிப்பகுதிக்கு செல்வதற்குள் வரண்டு போய்விடுகிறது கண்ணீர்.

“ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாக இடப்பட்டவை எமது உயிர்கள்…
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொருத் துளித் தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்.” என்னும் வரிகளோடு தொடங்குகிறது நூல்.

“கருப்பன் ஒடுக்கப்பட்டவன்!!
ஒடுக்கப்பட்டவனின் பசியின் துயரத்தைக் கண்டு அவனின் ஓலைக்குடிசை கூட கண்ணீர் வடிக்கவில்லை…! காரணம்… ஓலைகளின் ஆயுளே முடியும் காலத்தில் தான் உள்ளது..” என்பது போன்ற நூலில் வரும் வரிகள் தொழிலாளியின் வலியை கண்முன்னே நிறுத்துகிறது.

உண்மையை தழுவி எழுதப்பட்ட இப்புதினம் நூறாண்டுகளுக்கு முந்தய காலப்பகுதியை பேசுவதாக இருந்தாலும் அது நம் காலத்தோடே பயணிக்கிறது. இந்நூலை எழுதிய பி.எச்.டேனியல் ஒரு மருத்துவர். தேயிலைத் தோட்டத்திற்கு மருத்துவம் பார்க்கச்சென்ற அவரே தனது இந்த ‘எரியும் பனிக்காடு” எனும் இப்புதினத்தின் மூலம் அங்கு நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

எரியும் பனிக்காடு: தமிழக டீ ...

வலிகளின் வரையறை

வறுமையின் படியிலிருந்து தப்பிக்க இறுதியில் கங்காணியின் சூழ்ச்சியில் சிக்கி கருப்பனும், அவனது மனைவி வள்ளியும் ஆனைமலை தேயிலைத் தோட்டத்திற்கு கூலிகளாக செல்கின்றனர்.
இயற்கையின் அழகிற்கு வரையறை கொடுக்கும் இடம் தான் ஆனைமலை தேயிலைத் தோட்டம்.
ஆனால், அங்கு வரும் தொழிலாளர்களுக்கோ அது வலிக்கு வரையறை அறிந்துக் கொள்ளம் இடமாகவே அமைந்திறுந்தது.

ஆங்கிலேயர்களின் வசம் இருந்த அந்த  தேயிலை தோட்டத் தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல அட்டைப் பூச்சிகளும் தொழிலாளர்களின் ரத்தத்தை உரிஞ்சின. மேலும் மழைக்காலங்களில் அவர்கள் கொள்ளை நோய்களால் கொத்துக்கொத்தாக இறந்துப் போனார்கள். பிணங்களை குவியல் குவியலாக சேர்த்து எரிக்கும் அளவிற்கான மரணங்கள் நிகழ்ந்தன.
பனிக்காடே கொழுந்துவிட்டு எரியும் காட்சி அது. ஆனாலும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருந்தது. இறந்தது கணவனோ மனைவியோ குழந்தையோதானே நீ உயிரோடு தானே இருக்கிறாய்? நீ உன் வேலையை தொடர்ந்து செய் என்கின்றனர்.

அங்கு பெயறுக்கு ஒரு மருத்துவமனை இருந்தது. அந்த மருத்துவமனைக்கும் மாட்டு கொட்டகைக்கும் வித்தியாசம் தெரியாது. அந்தக்காட்சிகள் அவ்வப்போது நம் அரசு மருத்துவமனைகளின் அவள நிலையை நினைவுப்படுத்திச் செல்லும்.

இன்றும் பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் தொல்லைகள் தொடர் நிகழ்வாகவேயுள்ளது. இதிலும் கணவனை இழந்த பெண்களின் நிலை சொல்லவும் வேண்டுமா..! கேட்பதற்கே நாதியற்று வாழ்ந்த அம்மக்கள் கூட்டத்தில் இருந்த பெண்கள் உழைத்து களைத்ததோடு பாலியல் தொல்லைகளையும் எதிர்கொண்டனர்.

எரியும் பனிக்காடு - உண்மைச் ...

எச்சில் விழுங்க மறுக்கும் தொண்டைக்குழி

வாசிப்பின் வேகம் நூலின் இறுதி வரிகளை படித்து விடலாமா எனத் கருவிழிகள் துடிக்கும். “ஒடுக்கப்பட்டவர்களின் கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன்.. அவர்கள் தேற்றுவார் யாரும் இல்லை. வல்லமை ஒடுக்குபவனின் பக்கம் இருந்தது”. என பதற்றத்துடன் நகர்கிறது இறுதி அத்தியாயம். கருப்பன் வள்ளியை இழக்கிறான் அங்குள்ள அனைவரும் ஒவ்வொரு உறவுகளை இழந்தவர்கள் தான். இவைகளை வாசிக்கும் போது தொண்டைக்குழி எச்சில் கூட விழுங்க மறுக்கிறது.

நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் உழைக்கும் தொழிலாளர்களின் நிலை மோசமாகவேவுள்ளது என்பதை இப்புத்தகம் எடுத்துரைக்கின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பை முழுமையாக சுரண்டிக் கொண்டு அவர்களை சாகடிக்கும் முதலாளித்துவம் எவ்வளவு கொடுமையானது என்பதை நாவல் அழகாக கண்முன் காட்டும் நூல்தான் எரியும் பனிக்காடு. மொழிபெயற்ப்பு நூல் போலவே தெரியாத வகையில் அழகிய மொழி நடையில் வழங்கியுள்ளார் இரா.முருகவேள்

புத்தகம் : எரியும் பனிக்காடு (red tea)
ஆசிரியர் : பி. எச். டேனியல்
தமிழில் : இரா. முருகவேள்
பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம்
பக்கங்கள்: 488
விலை: 250/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *