நிலம் என்னவெல்லாம் செய்யும் இந்த மனிதர்களை.!
நிலம் என்னவெல்லாமுமாக
மாறும்.. மாற்றிடும் இவ்வுலகினை.!
நிலமும்.. அதனுள் இருக்கும் மண்ணின்
இருப்பையும்.. கலவையையும்.. நிறத்தையும்.. ஈரத்தையும் பொறுத்தே.
நிலம் வானுயர்ந்து படர்ந்திருக்கும்
பச்சை மரங்களை தாங்கி இருக்கும்..
தேனீக்களும், வண்டுகளும், பட்டாம்பூச்சிகளுமாக அலைந்து திரியும்,
சின்னதும் பெரியதுமான வண்ணமயமான
கொத்தாக பூத்திருக்கும் பேரழகினை
ஏந்தி நிற்கும்
காட்டு மரங்களும்,செடிகளும்,
கொடிகளுமாக
யவ்வனத்தின் அத்தனை
ரகசியங்களையும் கொடையாக்கிக் கொண்டேயிருக்கும்..
வண்டல் நிறைந்த ஈர நிலமோ
மனித சமூகம் விருத்திக்கான..
வாழ்விற்கான அத்தனையும் உயிராக்கி உயிராக மனிதர்களுக்குள் சக்தியாக
மாறி நிற்கும்.
ஈரம் ஊறும் களிமண் நிலமோ
வானம் அள்ளி வீசிடும் மழைநீரை மொத்தமாக வைத்துக் கொண்டு
சின்னச் சின்ன உயிர்களின்
புதிய பரிணாமங்களை சொல்லிக் கொண்டே இருக்கும் சமூகம் அத்தனைக்கும்..
நிலம் உழவாக.. தொழிற்சாலையாக.. தொழிற்கூடமாக.. விஞ்ஞான ஆராய்ச்சிக்
கட்டிடங்களாக..  கையெரி குண்டுகள், கொன்றழிக்கும் விமானங்கள், துளைத்தெடுக்கும் தோட்டாக்களைக் கொண்ட உயிர் கொல்லிக் கூடாரமாக.. சூள்கொண்ட உயிர்களை தகிக்கும் நெருப்பிற்குள் வாரிச் சுருட்டிடும் அணுகுண்டுகளின் சோதனைச்சாலையாக மாறிக் கொண்டே இருக்கும் நிலம். நிலத்தின் மீது அதிகாரம் கொண்ட மனிதர்களைப் பொறுத்தே எல்லாமும்..
நிலமும்.. மண்ணும்
புரிந்தறியாதவர் கைகளுக்குள் மாறிடும்போதினில்
எல்லைக் கோடுகளுகள் மீது கொண்ட வேட்கையின் காரணமாக மனிதச் சமூகம் செத்தொழியும்..
மனிதர்கள் ஒருவருக்கொருவர் அடிமையாக்கப்படுவர்..
எந்த நிலம் மனித சமூக வளர்ச்சிக்காக
நின்றதோ அதே நிலம் மனித அழிவுகளை
தாங்கியச் சுடுகாடாகவும் மாறிக் கிடக்கும்.
அத்தனை நேசமிக்கது..
மனிதர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து
இருப்பது நிலமும்.. மண்ணும்.
இது எவர் கைகளில் இருக்கிறதோ..
எவர் உரிமை பாராட்டி நிலமதில் கால்பதித்து நிற்கிறாரோ அவரின் வாழ்வியல்படியே
எதுவாகவும் மாறி நிற்கிறது நிலம்.
“தீம்புனல்” நாவல் அப்படித்தான் 1980களின் வாழ்ந்த.. சாதிப் பெருமை பாராட்டி இரண்டு தலைமுறையாக குத்தகைதாரராகவும் மூன்று பிள்ளைகளைக் கொண்டு வாழ்ந்திடும் சோமு தன் குத்தகை நிலம் நில உடமையாளரால் கையகப்படுத்த வரும்போது அன்றைய சமூக புறச் சூழலும்;
அவரோடான பல மனித உறவுகளும் நாவலில் பாத்திரங்களாக படைக்கப் பட்டுருக்கிறது ஆசிரியர் ஜி.கார்ல் மார்க்ஸ் அவர்களால். நாவலை நல்லதொரு வடிவமைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்
எதிர் வெளியீட்டு நிறுவனம். நாவலாசிரியர் ஜி.கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கும், எதிர் வெளியீடு நிறுவனத்திற்கும் அன்பும் வாழ்த்துக்களும்.
அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு ...
“தீம்புனல்” பயணப்படும் காலமும்.. அன்றைய அரசியல் புறச் சூழலையும் உள்வாங்கினாலே நாவலுக்குள் இயல்பாக பயணப்பட முடியும் தடையேதுமின்றி. ஆம் 1980களிலும்..
1990களின் தொடக்கத்திற்குள் நாவல் பயணிக்கிறது.. விவசாயத்திற்குள் மாபெரும் ஒரு மாற்றத்தைச் கொண்டுவந்து குவித்தது பசுமைப் புரட்சி.. அதன் விளைவாக நிலம் தன் இயல்பான உயிர்ப்பை இழந்து செயற்கை போதைக்குத் தள்ளப்படுகிறது விளைச்சலுக்காக..  விளைந்து கொடுத்து விவாயிகளின் வாழ்நிலையை மேம்படுத்திய நிலம் படிப்படியாக மலடாக மாற்றப்பட்டு, இயற்கையும் மழை கொடுக்க மறுக்க, தரிசாக மாறிவரும் சூழல் கிராமமெங்கிலும்.. தரிசாக மாறிய கொஞ்சம் நிலம் வைத்திருந்த விவசாயிகள்,  குத்தகைதாரர்களின் கீழ் விவசாய  கூலிகளாக மாறிடும் நெருக்கடி மிகுந்த சூழல். உயிர்வாழ விவசாய கூலிகள்  பஞ்சம் பொழைக்க நகர்ப்புறம் நோக்கி நகர்கிறார்கள்.. கூடவே கிராமத்தில் ஓரளவு படித்தவர்கள் விவசாயத்தை மறுத்து நகர்ப்புறம் நோக்கி வேலைக்கு படையெடுத்தல்.. வேலை வாய்ப்பென்பது அரிதாக இருந்த சூழலே 1980களிலும்1990களின் துவக்கமும்.
அதே காலத்தில்தான் ஆண்ட சாதிகள் தங்கள் தங்கள் சாதின் பெயரால் அணிதிரட்டப் படுகிறார்கள் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டிற்காக, இயல்பாகவே  அந்தச் சுழலில் தங்களை தற்காத்துக் கொள்ளவும் ஒடுக்கப்பட்ட சாதிகளும் அணி திரள்வதென்பது அவசியாமகிறது எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அறிவியலடிப்படையில். வேலை வாய்ப்பிற்காக அணிதிரண்ட ஆதிக்கச் சாதி இளைஞர்கள் ஒடுக்கப் பட்ட சாதியினருக்கெதிராக கூர்தீட்டி வளர்த்தெடுக்கப் படுகிறார்கள் தமிழகமெங்கிலும். அதேதான் இந்த நாவலிலும் வன்னியர்களுமாக, தாழ்த்தப்பட்டவர்களுமாக கதாப்பாத்திரங்கள் கதைப் பாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும் நாவலுக்குள் சோமுவாக, அவர்களின் குடும்பமாக, அடிதடி அரசியலோடு நிலத்தை விழுங்கும்
மண் தின்னியாக கோபாலும் ஆதிக்க சாதியின் அடையாளமுமாக. சோமுவின் குத்தகை நிலத்தில் தலைமுறை தலைமுறையாக அடிமையாகக் கிடக்கும் மாணிக்கமாக, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரியில் பேராசிரியராக இருந்தாலும் கல்லூரில் தொடங்கி நகர்ப்புறத்தில் குடியிருக்கும் வீடுவரை தான் தாழ்த்தப்பட்ட சாதி எனத் தெரிந்ததும் நுட்பமாக அடக்கியாளும் ஆதிக்க சாதியை எதிர்த்து மேல் நிலைக்கு தான் தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தாலும்  முடியவில்லையே என பல நூறாண்டுகால ஏக்கங்களை சுமந்து வாழும் பேராசிரியர் ரத்தினம் வழியாகவும் ஒடுக்கப் பட்ட சாதிப் படிநிலை குறித்தும் நாவலுக்குள் கொண்டு வந்திருப்பார் நாவலாசிரியர் கார்ல்மார்க்ஸ்.
ஆண்டாண்டு காலமாக  விவசாயம் செய்யும் நிலம் தனதில்லை என உணர்ந்தாலும் அந்த நிலத்தை அதன் உரிமையாளரான, தனக்கு மேல் சாதியாக கட்டமைக்கப் பட்டிருக்கும் செட்டியார் சமூகத்தவர் கையகப் படுத்திட நீதி மன்றத்தை நாடியதும் அவரின் வீட்டிற்கு சென்று சோமு, செட்டியார் சோபாவில் அமர்ந்திருக்க, தரையில் அமர்ந்து அவர் வீட்டு வேலையை தானே முன் வந்து எடுத்துச் செய்யும் தன் தாத்தா, தம் வீட்டில் மாணிக்கத்தை வாடா போடா என்றைழைத்த தாத்தா சோமு, இங்கே செட்டியார் வீட்டில் தரையில் அமர்ந்து மாணிக்கமாக மாறிய வினோதத்தை மூர்த்தி வழியாக யோசிக்க வைத்து மநுவின் நுட்பம் மிகுந்த அருவெறுப்பைக் காத்திரமாக காட்சிப் படுத்தி இருப்பார் நாவலாசிரியர்.
அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு ...
அதே போன்று நிலம் குறித்தான பேச்சு வார்த்தையின் போது சரி பாதி நிலம் செட்டியார்க்கும்.. மீதி பாதி தன் மூன்று மகன்களுக்கும் எழுதிய பிறகு, நிலம் சொந்தமானதும் சோமுவின் மகன்கள் மன நிலையையும்.. நிலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் சோமுவிற்கு ஏற்படுவதற்கு முன்னர் அவர் வாழ்ந்த ஊரில் அவருக்கான மரியாதையும், நிலம் பிரிக்கப்பட்ட பொழுது அவரின் தெருவாசிகள் கொடுத்திடும் மரியாதையையும் நுட்பமாகவும்.. ஆழமாகவும் பதிவாக்கி இருப்பர் சோமு தெருவில் நடந்து வரும் பொழுதுகளில்.
காவேரியில் தண்ணீர் வரத்துக் குறைய காவேரியை நம்பி வாழ்ந்த விவசாயிகள்
நகர்ப்புறம் நோக்கி நகரும் சூழலில் அவர்களின் நிலத்தை கையகப்படுத்திட வேலை வாய்ப்பு என்ற ஏமாற்றை வியபாரமாக்கி  தொழிற்சலையாக மாற்றிய முதலாளிகளையும்.. நில புரோக்கர்களையும், நகர்ப்புறம் நோக்கிச் சென்றவர்களின் குடியிருப்பிற்காக விவசாய நிலங்கள்  மனைகளாக்கி விற்பனை செய்து காசு பார்த்த நவீன முதலாளிகளையும்.. விவாசயத்தை விட பன் மடங்கு லாபம் ஈட்டும் தொழிலாகி உருவெடுத்து காவேரியை தினம் கொலைசெய்து மணற்கொள்ளையடித்த கொலையாளர்களையும்.. தலைமுறை பல கண்ட மரங்களைக் கொண்ட தோப்பு ஒன்றினை ஒரு சில ராத்திரியில் வெட்டித் தரைமட்டமான உயிர் வலியையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரினால் மழைநீர் வெள்ளமாக உருவெடுத்து பாய்ந்தபோது வழியேதுமின்றி விளைச்சல் நிலத்திற்குள் புகுந்து தேங்கிய அவலத்தையும், இருக்கும் கொஞ்ச நஞ்ச விவாசாயிகளும் வெய்யில் காலமானாலும் மழைக் காலமானாலும் உயிர் வாழமுடியாத ஒரு செயற்கைச் சூழலை உருவாக்கியதெப்படி நவீனத்தின் பெயரால் என்பதை நாவலில் விவசாய மக்களின் உயிர் வலியோடு பதிந்திருப்பார் நாவலாசிரியர்..
இந்தியச் சமூகதின் பேரழிவும்.. அசிங்கமும் இந்தச் சாதிப் படிநிலை கட்டமைப்பு.. இந்தியன் இந்த உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் சாதிக் கொண்டை முளைத்து வெளியே கிளம்பும் அருவெறுப்பாக.. அப்படி ஒரு சேதிதான் கடந்த வாரத்தில் இந்தியாவில் படித்து அமெரிக்காவுக்குச்
சேவகம் செய்து தன் வயிற்றை வாசனைத் திரவியங்களில் கழுவிடச் சென்ற, டாலரில் சம்பாதிக்கும் கனவான்களில் ஒருவர் டுவிட்டரில் ஒரு சேதியை பகிர்ந்துருந்தார். தான் கீழ் சாதி என்பதால் தனக்கு மேலே இருக்கும் சாதியினர் ஒரே அலுவலகதில் வேலை பார்த்தாலும் தன்னை நுட்பமாக ஒதுக்கி, அவமானப்படுத்திடும் வேலையை திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்று. எத்தனையெத்தனை விஞ்ஞானம், தொழில் நுட்பம் வளர்ந்தாலும் இந்தியனுக்குள் சாதிக் கட்டுமானம் என்பது ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பிறப்பிலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது..
அதோடு புறவெளியில் பெட்ரோலும்.. கந்தகமும் ஒரு சேர பாய்ச்சி வளர்த்தெடுக்கப் படுகிறார்கள்.. சொந்த சாதிக்கு வெறித்தனமாக துரோகமிழைக்கிறோம் என்கிற உணர்வு மட்டம் வளரும் வரை, வளர்த்தெடுக்கப்படும் வரை இப்படிப்பட்ட நிகழ்வுகள் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும்.. வன்மம் நிறைந்த ஆதிக்க சாதி வெறியர்களின் திட்டமிட்ட கலவரங்களாக.. ஆணவப் படுகொலைகளாக.. துபாக்கிச் சூடுகளாக.. நின்றவாறு தூக்கில் தொங்கும் பிணங்களாக, வாயிலிம், மூக்கிலும், காதிலும் நஞ்சூட்டப்பட்டு செத்து விழும் உடம்புகளாக.. உடம்பில் காயமேதுமின்றி ரயிலில் மோதி செத்திருக்கும் இளவரசன்களாக.. ஆதிக்கச் சாதி வெறியர்களாள் சீரழிக்கப்பட்டு புதைக்கப் பட்ட புழு நெளியும் நந்தினிககளாக.. எரிந்து எலும்புக் கூடாக நிற்கும் எளிய மக்களின் குடிசை வீடுகளாக.. எரியும் உயிர் நாத்தமெடுக்கும் கருகிய கட்டைகளாக.. கல்விக் கூடங்கள் தொடங்கி இந்தியாவின் அடையாளமெங்கிலுல் சாதியைப் பார்க்கலாம்..
அப்படித்தான் இந்த நாவலிலும் படைக்கப் பட்டிருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களிம்
சாதி புடைத்திருக்கும்..  உடல் மொழி வெளிப்படுத்தும் அசைவுகள் வழியாக, பேசிடும் வார்த்தைகாள் வழியாக, உரையாடல்கள் வழியாக. சாதி இழிவை இப்படியாகப் படைத்திருப்ப்பார். விவசாயத்தில் ஆண்ட சாதியாகவும், அடிமை சாதியாகவும் இருந்த இரு வேறு சமூகம் தொழிற்சலைக்குள் தொழிலாளியாக ஒன்று பட்டு நின்றாலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும் போதும், பழகிடும் போதும் தொடர்ந்திடும் இடைவெளியை சரியாகவே பதிந்திருபார் நாவலாசிரியர்.
Senthilkumar Gunasekaran on Twitter: "ஜாதி,நிலம் ...
வேலை செய்யும் தொழிற்சாலைக்குள் சோமுவின் பேத்தி ரஞ்சிதாவும், கீழ் சாதியைச் சேர்ந்த சேகரும் ஒருவருக்கொருவர் மனதாரக் காதலிக்க, தான் சார்ந்த வன்னிய சாதி இதை ஏற்காது என அறிந்த ரஞ்சிதா, சேகரோடு  சேகரின் அத்தை வீட்டிற்கு கிளம்ப.. அதன் பிறகு நாவலுக்குள் நடப்பவை அனைத்தும் எனக்கு இளவரசன் திவ்யா காதல் சோகமும் வலியுமே வந்து நிற்கிறது. ஆதிக்கச் சாதி எத்தகைய குயுக்தியோடு நடந்தது என்பதை தமிழகமே அறியும். ரஞ்சிதா சேகர் குறித்து முழுவதையும் நான் இங்கு சொல்லப் போவதில்லை. சாதி வெறியேறிய கோபாலும், ரஞ்சிதாவின் சித்தப்பாவும் சேர்ந்து நடத்திய கொலைபாதகச் செயல்களை பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர். இங்கு சேகர் என்னவானான்.. வன்னிய சமூகத்தில் இருந்து கீழ் சாதிப் பெண் பொன்னம்மாவோடு பறையர் குடியிருப்பிலேயே குடும்பம் நடத்திய கலியமூர்த்தி என்னவானான்..
அன்றே கலிய மூர்த்தி பொன்னாம்மாவை திருமணம் செய்து  சொந்தத் தெருவில் கொண்டு வந்து வைத்துக் குடும்பம் நடத்தி இருந்தால் இன்று ரஞ்சிதாவும் சேகரும் எப்படி இருப்பார்கள் என்பதை சோமுவின் பேரன் மூர்த்தி வழியாக ஓங்கிக் குரலெடுத்து பேசி இருப்பார் நாவலாசிரியர் கார்ல்மார்க்ஸ்.
நாவலில் சந்திரா பாத்திரப் படைப்பும், திருடுவதையே வாழ்க்கையாக் கொண்ட வெள்ளச்சாமியின் பாத்திரப் படைப்பும்.. ஊர் திருவிழாவின் போது வெள்ளச்சாமி செத்துப் போனதும், சந்திரா தன் தாலியை கழற்றி வீசிட, அது வீதியில் உலாவந்து நின்ற அம்மன் கழுதில் விழுந்து கிடக்க..
அப்படியே தன் பிள்ளையோடு போய்க் கொண்டிருக்கும் காட்சி கண் முன்னே இன்னும் நின்று கிடக்கிறது.. இப்போதும் எனது  கண்கள் தேடிக் கொண்டே சந்திராவையும் அவள் கைப்பிடித்து அப்பா..அப்பாவென அழுது வரும் மகனையும். வெள்ளைச்சாமி திருடானாக இருந்தாலும் எல்லோர் மீதும் நேசம் கொண்டாடுபவன்.. எல்லாக் குழந்தைகள் மீதும் அன்பு பாராட்டச் சொல்லி தன் மகனைப் பழக்கப் படுத்துவான். ஊரே திருடன் என்று அவனை உறுதியாக நம்பினாலும் அவன் மீது பிரியம் கொண்டவர்களாகவே ஊராரைப் படைத்திருப்பார் நாவலில். அப்படிப் பட்ட மனிதர்களை இன்று காண்பதறிது.
“தீம்புனல்” முழுக்க உழைக்கும் மக்களின்.. எளிய விவசாயிகளின்.. நிலம் படைத்தவர்களின்.. நிலத்திற்கும் விவசாயிக்குமான உறவினை மிக அற்புதமாக அழகியலோடு கொடுத்திருப்பார்.. முதல் அத்தியாயத்தில் வரும் இந்திராணியின் கால்தடத்தின் மீதேறி நடப்பீர்களேயானால் கத்தரித்தோட்டத்தின் வாசம் மொத்தமும் உங்கள் நாசிக்குள் புந்த உணர்வுண்டாக்கிடும். சோமுவின் ஒற்றைச் சொல்லை தாங்க முடியாத சம்சாரியாக வசந்தா. அவளின் மரணம் சோமுவுக்கு மட்டுமல்ல  ஒரு வாழ்வு முறையின் இறுதியாகும் என்பதை நமக்கு உணர்த்தி இருப்பார் நாவலாசிரியர்.  தாம் சார்ந்த மண்ணின்.. மக்களின் வாழ்வியலோடு நாவலை நகர்த்தி இருப்பார்…அம்மக்களின் சொல்லாடல், வழக்கு மொழி என நம்மையும் அவர்களின் பண்பாட்டு வழக்க முறைக்குள் இணைத்திடச் செய்வார்.  நல்ல மொழிவளம் நாவலுக்குள். முதல் நாவல் என்று சொல்லமுடியாத அளவிற்கு மொழி நடையில் ஆளுமை செய்திருப்பார். ஆனாலும் கூட நாவலுக்குள் அவசியப்படாத உரையாடல்கள் வாசிப்பவரின் கவனத்தை திசைதிருப்பும் ஆபத்து இருப்பதாக உணர்ந்தேன்.. மூத்த மருமகள் ரமணியின் கதாப்பாத்திரம் பொறுப்பு மிக்க, நிதானமான, நேசம் மிக்கதாக வடிவமைத்திருக்கிறார். எதார்த்தம் அறிந்த நாவலென்றாலும் ஆதிக்க சாதிப் பெருமை தூக்கலாக தெரிகிறதோ என உணர்ந்தேன்.
நாவல்  சொந்த சாதிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்கிற ஒரு அழுத்தமான சேதி சொல்லிச் செல்கிறது வாசகனுக்கு. வாழ்த்துக்கள் கார்ல்மார்க்ஸ்.
எதிர் வெளியீட்டிற்கும் பேரன்பு.
அவசியம் நாவலை வாசித்திடுங்கள்.
கருப்பு அன்பரசன்
தீம்புனல்
ஜி கார்ல்மார்க்ஸ்
எதிர்வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *