Ettam Dhukkam Short Story by Ravikumar Synopsis 76 Written by Ramachandra Vaidyanath. ரவிக்குமாரின் எட்டாம் துக்கம் சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்




சமூகப் போராளியாக இருப்பது இவரது  படைப்புகளுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைகிறது.

எட்டாம் துக்கம்
ரவிக்குமார்

“வௌக்க நெறுத்திட்டுப் படுப்பா ஒண்ரை மெயிலும் வந்துட்டான்” சொல்லும்போதே அப்பாவின் குரல் திணறியது.  பனி மழைபோல பெய்து கொண்டிருந்தது.  இருமலும் இளைப்புமாக அவர் அல்லாடுவது தெரிந்தது.  எப்படித்தான் சொன்னாலும் வீட்டுக்கு உள்ளே வந்து படுக்கமாட்டார்.  குளிரோ மழையோ திண்ணைதான்.  

கொள்ளிடம் பாலத்தில் ரயிலொன்று கடக்கும் சப்தம் பறையடிப்பது போல கேட்டுக் கொண்டிருந்தது.  ஒரு மைல் நீளப் பாலம்.  மூன்று நான்கு நிமிடங்களாவது ஆகும் கடந்து போக.  எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கும்போது சப்தத்திலேயே தெரியும்.

படிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்த போதிலும்  மனசு ஒட்டவில்லை.  அப்பாவுக்கு வெளிச்சம் படாமலிருக்க வாசல் கதவை சாத்தினேன்.  நாதாங்கி போடாமல் விட்டதால் க்ய்ங்ங் என்று அழுது கொண்டு கதவு மீண்டும் திறந்து கொண்டது.  திரும்பவும் சாத்தி தலைக்கு வைத்திருந்த துணி மூட்டையை முட்டுக் கொடுத்தேன்.  மாசிலாமணி சொன்னதுதான் ஞாபகத்தில் சுழன்றது.  ராமேஸ்வரம் மெயில் பாலத்தைக் கடந்து ஸ்டேஷனைக் கடந்து போவது புரிந்தது.  விசில் சப்தம் வடக்கில் தொடங்கிக் தெற்கில் தேய்ந்தது.  

மாசிலாமணி என்னை விடப் பத்து வயதாவது சின்னவனாக இருப்பான்.  பாடுபட்டு இறுகித் திரண்ட உடம்பு.  சத்துணவுக்காகப் பள்ளிக்கூடம் போனதும்கூட நிலைக்கவில்லை.  நாலாவதோ என்னமோ படிப்பு.   எங்கள் ஊரில் எனக்கு அப்புறம் அவனாவது படிப்பான் என்று நினைத்தேன்.  கண்ணு பாத்தா கையி செய்யும்,  வீட்டு சுவரெல்லாம் ரஜினி கமல் படங்கள்.  அவனே வரைந்தவை.  ராத்திரியானால் புல்லாங்குழலில் பாட்டு ராஜபார்ட்டு தைக்கா பக்கிரி மாதிரி இருக்குயா கொரலு என்பார்கள்.

அம்மா சாகவில்லையென்றால், நான் ஊருக்கு வந்து இத்தனைநாள் தங்கியிருக்க மாட்டேன்.  நாலைந்து வருஷங்களாகிவிட்டது.  நல்லது கெட்டதுக்குக்கூட வருவது கிடையாது.  கடைசியாக வந்து புறப்பட்டபோது அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.  

“நான் செத்த சேதி கெடச்சாவது வருவியோ இல்ல, அன்னிக்கும் கூட்டம் பேசப் போய்டுறியோ, எச்சி கொள்ளின்னுதான் எனக்கு எழுதியிருக்கோ அந்தப் பாழாப் போன தெய்வம்.”

“சேதி கெடச்சுதுன்னா வந்து கொள்ளி வைக்கறேம்மா” என்றேன்  சிரித்துக் கொண்டு.  சொன்னதுபோல கொள்ளி போடத்தான் வருவதுபோல ஆனது.  அழக்கூட முடியாமல் பந்தலில் உட்கார்ந்திருந்தபோது ஒப்பாரிக் குரல்கள் என்னைப் பற்றிய வசவுகளாக நீண்டன.
தவமா தவம் கெடந்து
வரம் வாங்கிப் பெத்த  புள்ள
தண்ணி கொடுக்கலியே
தலைமாட்டில் நிக்கலையே

 இரண்டு மூன்று நாட்கள் கழித்து பால் தெளியெல்லாம் முடிந்த பிற்பாடுதான், சின்ன வயசுப் பையன்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.  அவர்களுக்கும் என்மேல் கோபம். கோயிலுக்கு வெண்கலமணி வாங்கித்தரவில்லை, கும்பாபிஷேகத்துக்குப் பத்திரிக்கையில் பேர் போட்டும் வரவில்லை.  “நாந்தான் சாமியில்லாத கட்சியாச்சே” என்றேன்.  “கோயம்புத்தூரிலும் நான் சும்மா இல்லை.  நம்ம சாதிக்காக பாடுபடுகிறேன்” என்றேன்.  “மாநாடு போடுவது, புத்தகம் போடுவது, போலீஸைக்கூட எதிர்த்துப் போராடுவது இதனாலதாம்பா ஊரு பக்கம் வரமுடியல.  சாதிபேரைச் சொல்லி வேலை வாங்கிட்டு இதுக்கு ஒண்ணும் செய்யாட்டின்னா தப்பு இல்லியா?”  என்றேன்.

“மத்த ஊர்ல செய்யிறது இருக்கட்டும், நம்ப ஊருக்கு எதனாச்சும் செய்யுங்கண்ணே” என்றார்கள்.  புதுசாக வந்திருக்கும் சப் கலெக்டரின் நடவடிக்கைகளை விவரித்தார்கள்.  அவரும் நம்பாளுதான் என்ன தெகிரியம், நாய்க்கரையே அரெஸ்ட்  பண்ணிப்புட்டாரு.  இப்போ எல்லா கச்சிகாரனுவளும் ஒண்ணா சேந்துகிட்டு அவரை மாத்தப் பாக்குறானுவ என்றார்கள்.

கதை கதையாகப் பேசப் பேச, அன்னியம் மாறி ஊர் பழையபடி பிணைந்து போயிற்று.  “என்ன பண்ணி என்னண்ணே புண்ணியம்.  அனுமந்தபுரம் தாண்டுனா அந்தாண்ட இப்பியும் வட்டா செட்லதான் டீ குடுக்குறானுவ” என்று கோபப்பட்டபோதுதான் ஒரு இயக்கமாக ஒன்றுபடும்படி அவர்களிடம் சொன்னேன்.  அம்பேத்கரைப் பற்றிய கதைகளையெல்லாம் கேட்ட பிற்பாடு பக்கத்து டவுனில் கட்டப்பட்டுவரும் பஸ் ஸ்டாண்டுக்கு அம்பேத்கர் பெயரை வைக்கச் சொல்லலாம் என்ற எனது யோசனையும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது.  அந்த பஸ் ஸ்டாண்டின் திறப்பு விழவாவுக்கு பத்தோ பதினைந்தோ நாட்கள்தான் இருந்தன.

இத்தனாம் தேதிக்குள்ளார பஸ் ஸ்டாண்டுக்கு அம்பேத்கார் பேர் வெச்சாகணும் இல்லாட்டி பஸ்ஸை மறிப்போம் என்றான் ஒருத்தன்.  வன்னியர் சங்கத்துல அப்படி மறியல் பண்ணுலன்னா இன்னிக்கு அவங்க காரியம் நடந்துருக்குமா?  என்று அதை ஆமோதித்தான் இன்னொருத்தன்.  சுத்துப்பட்டுல இருக்குற பதினாலு கெராமத்தையும் கூட்டி ஒடனடியா இந்த விஷயத்தை முடிவு செஞ்சிடனும் என்று தீர்மானித்தோம்.  கிராமங்களுக்குச் சென்று செய்தி சொல்லிவர ஆட்களையும் அனுப்பிவிட்டுத் திரும்பி வரும்போதுதான் மாசிலாமணி அந்த சம்பவத்தைச் சொன்னான்.

ஆறுமாசமிருக்குமாம்.  அறுப்பு அறுக்கும்போது “அழுத்திப் புடிச்சி அறுடான்”னு ராமசாமிப் பிள்ளை சொன்னப்போ எதுத்துப் பேசிட்டானாம்.  ரெண்டு நாள் கழித்து நடு ராத்திரி போலீஸ் வந்து மாசிலாமணி அவன் அண்ணன், தம்பி, அவன் அப்பா நாலுபேரையும் காரில் ஏத்திக்கிட்டுப் போச்சாம்.  ஸ்டேஷன்லே  போட்டு ரவுண்டு கட்டி அடிச்சப்பதான் தெரிஞ்சிருக்கு, களத்துல நெல்லு திருடு போயிடுச்சி இவனுங்க மேலதான் சந்தேகமாயிருக்குன்னு ராமசாமிப் பிள்ளை கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கிற விஷயம்.

“அடின்னா ஒங்கவூட்டு அடி, எங்கவூட்டு அடி இல்லேண்ண. போனதும் அண்ணா கவுத்த மடால்னு புடிச்சி அறுததானுவ பாரு உசிரே போயிடுச்சி.  எங்க நாலு பேரையும் துணியை எல்லாத்தையும் அவுத்தானுவ.  சொன்ன மானக் கேடுண்ணே.  அப்பா, வுட்ருங்க சாமின்னு கால்ல கால்ல வுழுறாரு.  எத்தி எத்திவுட்டு மிதிக்கறானுவ.  அடிச்சதோட இல்லண்ணே ஒருத்தனுத ஒருத்தன் ஊம்புங்கடான்னு சொல்லி சொல்லி அடிச்சானுவண்ணே”  சொல்லச் சொல்ல அவன் கண்களில் திகில்  அடர்ந்து வார்த்தை குழறியது.  “இப்பியும் ராத்திரியில காரு சத்தம் கேட்டா போதும் வேர்த்து விறுவிறுத்துப் போயிடுது” என்றான்.

நான் கேள்விப்பட்டிருந்த சினிமாக்களில் பார்த்திருந்த மிருகத்தனங்களெல்லாம் சாதாரணமாகிவிட்டன.  திடீரென்று யார் துணையுமின்றி அனாதையாகிவிட்டது போல உணர்ந்தேன்.  “இப்போ பஸ்ஸை மறிக்கனுக்கிறியே? போலீஸ்காரனுவ வந்த என்னான்ணே பண்றது” என்றான்.  “ஒத்துமையா இருந்து எதுத்து நின்னா, எவனும் ஒண்ணும் பண்ண முடியாது.  பயந்த ஓடுனாத்தான் ஒதைப்பானுங்க” என்றேன்.  நான் சொன்னது எனக்கே சிரிப்பாக இருந்தது.  மௌனமாக நின்றான் கொஞ்ச நேரம்.  அப்புறம் போய்விட்டான்.

“இன்னம் படுக்கலியாப்பா காலைல படிக்கப்புடாதா?” அப்பாவில் குரல் எங்கேயோ தொலைவில் கேட்பதுபோல் இருந்தது.  விளக்கை அணைத்தேன்.  விளக்கை சுற்றிப் பறந்து கொண்டிருந்த பூச்சிகளெல்லாம் மண்டைக்குள் புகுந்துவிட்டது போலவும், மண்டையோட்டில் மோதி மோதி மூளைக்குள் விழுந்து கடிப்பது போலவும் இருந்தது.  படுத்திருப்பது பிணமாகக் கிடப்பதுபோல கனத்தது.

கார் வரும் சப்தமா அது திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துகொண்டேன்.  இருளில் வியர்வை பெருக உட்கார்ந்து கொண்டேயிருந்தேன்.  பத்தாக நூறாக ஆயிரமாகக் கார்கள் ஊரைநோக்கி நாலா பக்கமிருந்தும் வந்து கொண்டிருந்தன.  என்ஜின் இரைச்சலா தென்னந்தோப்பு காற்றில்கூச்சலிடும் ஓசையா மயக்கமாயிருந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *