படைப்பாளிகளைப் பற்றியும், அவர்களது ஆக்கங்களைப் பற்றியும் எழுதுவது மற்றொரு படைப்பாளிக்கு என்றுமே உவப்பானது. அத்தாகம் தீராத தன்மையுடையது. பெருங்கவி பாரதி தொடங்கி இன்றைய எழுத்தாளர்கள் உள்ளிட்ட எண்ணற்றோர் தாங்கள் சார்ந்த படைப்புத் தளத்தின் எழுத்தாளர்கள், அவர்களது புகழ்பெற்ற எழுத்துக்கள் குறித்து தங்கள் பார்வையினை பதிவாக்கிட விழைகின்றனர். பல எழுத்தாளர்கள் இத்தகைய தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்கவியலாத, ஆகச்சிறந்த ஆளுமைகள் குறித்து தங்களது நூல்களை உருவாக்கியுள்ள நிலையில் சுப்பாராவ் மற்றுமொரு நூலை உருவாகியுள்ளார். இவ்வாறு எழுதும்போது முன்பே பதிவு செய்யப்பட்ட தரவுகள், நிகழ்வுகள், கதைகள் ஆகியவற்றினை கவனமாகத் தவிர்த்து நமது படைப்பினை எழுதவேண்டும். இதனை கருத்தில் கொண்டு மிக்க சிறப்புடன் அவர் எழுதியுள்ளார்.
பாரதியை தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளின் முன்னோடி என்ற அடைமொழியுடன் இந்தப் புத்தகம் துவங்குகிறது. வ,ரா. பாரதியினைச் சந்தித்து உரையாடும் தருணத்தில் பாரதியின் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது. இன்னும் எத்தனை காலம் தமிழனும் தமிழனும் சந்தித்து உரையாடும் போது ஆங்கிலத்திலேயே பேசுவது, என்பதுதான் அது.

பாரதியின் ஆதங்கம் இன்றுவரை நிலைத்திருப்பதும், தொடர்வதும் துவர்ப்பான அவலம் மிக்க உண்மை. தமிழ் இலக்கியதளத்தில் அதிகம் அறியப்படாத, பேசப்படாத பலருள் விந்தனும் அடங்குவார். கோடாரியிடம் நான்தானே உனக்குப் பிடி தந்தேன். என்னையே வெட்டுவதேன்? என்ற கேள்விக்கு மனிதன் கை பட்டுவிட்டதே என பதிலளித்ததாம் கோடாரி. எத்துணை ஆழமான பொருள் கொண்ட படைப்பு. இதுதான் கதையே. குறுங்கதை. இது போன்ற கதைகளை மகத்தான உருது ஆளுமையும், படைப்பாளியுமான சாதத் ஹசன் மண்ட்டோவிற்கு அடுத்ததாக விந்தன் படைத்துள்ளார். சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக வாழ்வினைத் தொடங்கிய அவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுமளவிற்கு உயர்ந்தார். விளிம்பு நிலை மக்களுடன்தான் இருப்பேன் என்று தன்னிருப்பினை வெளிப்படையாகக் கூறி வாழ்ந்தவர். ராஜாஜியின் பஜ கோவிந்தம் கட்டுரைக்கு மாற்றாக பசி கோவிந்தம் என்றும், வாரியார் விருந்து மாற்றாக பெரியார் மருந்து என்ற தலைப்புகளில் எழுதியதும் அவரது மனப்போக்கிற்கு சான்றாகிறது. பன்முகம் கொண்ட படைப்பாளியான விந்தனை இதுகாறும் யாரும் சிறப்பு செய்து அறிமுகப்படுத்தியதில்லை. அத்தகைய பெருமைக்குரியவராகிறார் சுப்பாராவ்.

பா.செயப்பிரகாசத்தின் கதையான கோவில் மாடு பெண்களின் பொறுப்புணர்வினை உணர்த்தி அவர்களுக்கு உயர்வான இடத்தினை அளிக்கிறது. மேலும், திடீர் சாமியார்களின் பின்புலத்தினை வெளிச்சமிடுகிறது. அதே நேரம் இத்தகைய போலிகளை துதிபாடும் சமூகத்தின் மனப்போக்கினை, பிற்போக்குத்தனத்தினை, சிந்தனையின்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ஊருக்கு மகானாயிருப்பினும் அவர் மனைவியான பெத்தக்காவின் பார்வையில் அவர் ஒரு துப்பு கெட்ட மனுசனாகவே தோன்றுவது மிகப் பொருத்தமானது. ஒரு ஆணாக தனது பொறுப்புகளை செய்யத் தவறிய கணவனை, அவன் புகழ் பெற்றவனாகவும், பொருள் படைத்தவனாகவும் இருந்த போதிலும் அவள் வீட்டை விட்டு வெளியே போகச் செல்வது வாசகனும், சமூகமும் எதிர்பார்த்திராத முடிவு, இக்கதையின் தலைப்பே பொறுப்பற்றுத் திரியும் வர்க்கத்தினருக்கு பொருத்தமுள்ள குறியீடாகிறது.

ச.தமிழ்ச்செல்வனின் வார்த்தை கதையும் ஓர் எளிய தகப்பனின் மனப் பொருமலையும், அவனது மகனின் விழைவையும் இயல்பாக விரித்துச் சொல்கிறது. இங்கு அந்த தாயின் மனப்போக்கினையும் உற்று நோக்கவேண்டும். அவன் பள்ளியில் சுற்றுலா செல்வதற்காக பணம் வாங்க அழுதுகொண்டு தாயிடம் வருகிறான். அவளோ வயலில் இறங்கி களை பிடுங்கத் தொடங்குகிறாள். சிறுவன் அழுதுகொண்டே இருந்தாலும் தன் வாழ்வாதாரமான வேலை அவளுக்கு முக்கியமானது. சிறுவனுக்கு சுற்றுலா முக்கியம். தகப்பனுக்கு கடனாகப் பணம் கிடைக்காத சூழலில் மகனுக்கு பதில் கூற ஒரு காரணத்தினைக் கண்டடைவது முக்கியம். இவ்வாறு இக்கதையும் எளிய மனிதர்களின் வாழ்வினை சிறப்பாக பதிவு செய்கிறது.
சூடாமணி அவர்களைக் குறித்த பகுதி வாசகனை நெகிழச் செய்வது. சிறந்த படைப்பாளியாக மட்டுமன்றி தேர்ந்த ஓவியக் கலைஞராகவும் அவர் விளங்கியதை சுப்பாராவ் பதிவாக்குகிறார். பல கோடி ரூபாய் பெறுமதி கொண்ட அவரது சொத்துகளை பல கல்வி அமைப்புகளுக்கும், வி.எச்.எஸ் மருத்துவமனைக்கும் நன்கொடை அளித்தது மேன்மையான செயலாகிறது.

வாசகன் அறிந்திராத தகவலாகிறது. அவரது ஒரு சிறுகதையில் கதாநாயகன், நான் ஒரு சமர்த்தனான வியாபாரி, பெரும் செல்வத்தைக் கொடுத்து ஏழைகளின் புண்ணியத்தை வாங்கியிருக்கிறேன் என்பதாகக் கூறுவான். அவ்வாக்கியம் அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருப்பதைக் காணலாம். அவரது ஓவியங்கள் ஆர்க்கியாலஜிக்கல் வேல்யூ உடையவை என்னும் செய்தியும், ஆர்ட் கேலரியைச் சேர்ந்த ஆர்வலர்கள் அவற்றினைப் பாதுகாக்க முடிவெடுத்ததும் இப்புத்தகத்தின் வாயிலாக அறிய முடிகிறது. ராஜம் கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய பகுதி வாசகனுக்கு வியப்பூட்டும். எதை எழுத நினைத்தாரோ அதற்காக அங்கேயே தங்கி அந்த மக்களோடு பழகி கள ஆய்வு செய்து தனது படைப்புகளை உருவாக்கியவர். பெண்ணியப் போராளியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். அவரது ஒவ்வொரு நாவல்களின் பின்புலத்தினையும் சுப்பாராவ் தந்துள்ளார். படகர் பழங்குடி இன மக்களின் வாழ்வு முறையினைக் கூறும் படைப்பாக குறிஞ்சித்தேன், சம்பல் கொள்ளைக்காரனான டாகுமாஞ்சியை சந்தித்து உரையாடி உருவான முள்ளும் மலரும், உப்பள மக்களிடம் கலந்து பழகி எழுதப்பெற்ற கரிப்பு மணிகள், கூட்டுக்குஞ்சுகளுக்காக தீப்பெட்டி தொழிலகத்தில் பணிபுரியும் பெண்கள், குழந்தைகள் என பழகி தரவுகளைச் சேகரித்து எழுதி முடித்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆக்கத்திற்கும் உள்ள பின்னணி பற்றி சுப்பாராவ் சிறப்பாகக் கூறியுள்ளார். ராஜம் கிருஷ்ணனிடம் நேர்முகம் கண்டு வலைப்பதிவிட்ட இரா.முருகனின் பேட்டியினை வாசிக்கும் நேரம் மனிதவாழ்வு கணப்பொழுதில் மாறிவிடும் அபத்தம் விளங்குகிறது.

கருக்கு என்ற பாமாவின் படைப்பில், பறையன் வடை மட்டும் வாங்கிட்டு வரலாம், ஆனா தொடக்கூடாதா என கேட்கும் சிறுமியின் கேள்விக்கு இன்றுவரை யாரிடமும் பதிலில்லை. ஆயினும் இதற்கு பதிலளிக்கும் கடமை எல்லோருக்கும் உள்ளது என சாடும் பாமாவின் தலித்திய சிறுகதையினையும் சுப்பாராவ் இப்புத்தகத்தில் சேர்த்துள்ளார். அச்சிறுமிக்கு தீண்டாமை என்னும் சொல்லும், அதன் பொருளினையயும் உணர்ந்து கொள்ளும் தருணத்தினை ஆழமாக விவரிக்கிறார் பாமா என்று சுப்பாராவ் எழுதுகிறார்.அம்பையின் எழுத்து வன்மைக்கு சான்றாக லக்ஷ்மிக்கும் ஒரு ஆதிசேஷன் என்னும் குட்டிக்கதையில், இப்படி இவன் காலடியிலேயே உட்கார்ந்திருப்பதில் என்ன சுகம், அக்கடா எனப் படுக்க எனக்கு ஒரு பாம்புப் படுக்கையாவது உண்டா? எனக் கேட்கும் லக்ஷ்மி, தெய்வமே ஆனாலும் பெண்தான் என்ற கருத்தினை மட்டுமன்றி சமூகத்தில் பெண்களுக்கான இருப்பினைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

ரா.சு.கிருஷ்ணசுவாமி என்னும் இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணன் பற்றிய பகுதியும் குறிப்பிடத்தக்கது. அரசுப் பணியிலிருந்த அவரை எழுத்தார்வம் நடைப்பயணமாக திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு கொணர்ந்தது. பல புனைப்பெயர்களில் எழுதிக் குவித்த அவரை, தன் அனுபவங்களை மாத்திரம் அவர் எழுதினால் போதும். தமிழ் இலக்கியத்தின் சரித்திரத்தை தமிழ் வாசகன் புரிந்து கொள்வான் என்று மனம் திறந்து பாராட்டியவர் மற்றுமொரு ஆளுமையான ஜெயகாந்தன். தொ.மு.சி.ரகுநாதனின் நாவலான பசியும் பஞ்சும் பற்றிய செய்திகள் வியப்பினை அளிப்பவை. முதல் சோஷலிச யதார்த்த படைப்பு என்னும் சிறப்பினை அது பெறுகிறது. இடதுசாரி சிந்தனையாளரான அவர் நெசவாளிகளின் துயரமான வாழ்வினைச் சித்தரித்து இதனை எழுதினார். செக் மொழி தமிழறிஞரான கமில் சுவலபில் என்பவர் அதனை தனது தாய்மொழியில் மொழியாக்கம் செய்தார்.. தமிழ் இலக்கியத்தில் பசியும் பஞ்சும் வேற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் புதினமாகிறது. 50000 பிரதிகள் அது விற்பனையானது. அது போல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட மார்க்சீய கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட தொ.மு.சி.யின் இளங்கோவடிகள் யார்? என்ற சிலப்பதிகாரம் குறித்த அவரது ஆகச்சிறந்த படைப்பு தமிழில் கவனம் பெறாமலே மறைந்து போனது. .இது நமது இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என பதிவாக்குகிறார் சுப்பாராவ்.

நிறைவாக, தனது நூல்களை தலைச்சுமையாக கல்லூரிகள், பள்ளிகளில் சுமந்து திரிந்து, விற்க முயன்றவர் சி.சு,செல்லப்பா. எழுத்துப் போராளி என்ற அடைமொழியினை அவருக்கு சுப்பாராவ் அளிக்கிறார். நல்ல புத்தகங்கள் இளைய தலைமுறையினரைச் சென்றடைய வேண்டும் என்பதன்றி வேறு நோக்கம் இதற்கில்லை. 75 85 வயதுகளில் அவர் 800, 1000 பக்கங்கள் என எழுதிக் குவித்ததை நினைத்தால் இன்று பிரமிப்பே மிஞ்சுகிறது என்கிறார் சுப்பாராவ். ஆயினும் தமிழுலகு அவரை எப்போதும் போல் மறந்து புறந்தள்ளிவிட்டது. சுப்பாராவ் தனது முன்னுரையில், மேற்கத்திய நாடுகளில் யங் அடல்ட் (Young adult) என்றொரு தனியான வகைமை உள்ளது. இந்த முறையில் வளரும் இளந்தலைமுறையினருக்கு மிகக் கவனத்துடன் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகளையும் அறிமுகப்படுத்தப்படுதல் நடைமுறையாக உள்ளது. ஆசிரியர்களும், நூலகர்களும் இப்பணியினை ஈடுபாட்டுடன் மேற்கொள்கின்றனர்.. எடுத்துக்காட்டாக, ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் why என்பதற்கு wherefore என எழுதுவார். இத்தகைய கடினத் தன்மையினால் இன்றைய தலைமுறை மாணவர்கள் இதனை ஆர்வமுடன் வாசிக்காது கடந்து போய்விடுவார்கள். இப்பணியே மேற்கூறியவர்களால் மீள் உருவாக்கம் (எளிமைப்படுத்துதல் எனவும் கொள்ளலாம்) செய்யப்படுகிறது.

பல செவ்விலக்கியங்கள் இவ்வாறு மீளுருவாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.நமது நாட்டிலும் இத்தகையதொரு முறை விரைவில் உண்டாகும் என்ற நம்பிக்கையுடன் தனது முன்னரையினை முடிக்கிறார் சுப்பாராவ். அதுவன்றி, மாணவர்களுக்காக தற்கால வெகுசன படைப்பாளிகள், அவர்களது எழுத்துகளையும் அறிமுகம் செய்திட Critical companian என்ற சிறு குறிப்பேடுகள் வெளியிடுகின்றனர். யாரைப் பற்றி இக்குறிப்பேடுகள் வெளியிடுவதென பள்ளி, கல்லூரி நூலகர்கள் கூடி முடிவெடுக்கின்றனர். இப்பணியினை இங்கு சாகித்ய அகாதெமி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை என செய்து வருகிறது. நாற்பத்தி ஒன்பது படைப்பாளிகளையும், அவர்களது ஆகச்சிறந்த கதைகளையும் ச.சுப்பாராவ் இந்நுலில் பதிவு செய்துள்ளார். இயல்பில், இத்தகைய கட்டுரைகள் நீண்டதொரு எழுத்தாய் அமையும் சாத்தியங்கள் கொண்டவை. எவ்வாறெனில் படைப்பாளி குறித்துக் கூறுவதுடன் அவர்களது சிறந்த கதைகளையோ, நாவலையோ விவரித்து அது எவ்வகையில் சிறப்புப் பெற்றது, அதன் தனித்தன்மை என்ன? அதன் நிறுவுபொருள் யாது? என இத்தகைய கட்டுரைகள் விரிவுடையும் தன்மை கொண்டவை. ஆயினும் நூலாசிரியர் இவற்றினை பொதுவாக இரு பக்கங்களுக்கு மிகாது, மிகச் சிறப்பாய் தான் கூற விழையும் கருத்துடன் ஒரு படைப்பாளி குறித்தும், அவரது சிறந்த கதை வரிகளுடன் பக்கத்தினை நிறைவு செய்வது குறிப்பிடத்தக்கதாகிறது. இந்நூலின் செறிவார்ந்த பொருண்மை வாசகனை உறுதியாக கவரும்.

கி.ரா, கந்தர்வன், பிரபஞ்சன், மு.சுயம்புலிங்கம், ச.கந்தசாமி, திலீப்குமார், மேலாண்மை பொன்னுசாமி இன்னும் பல படைப்பாளிகள் என இந்நூல் அனைவரையும் அணைத்துச் செல்கிறது, சொல்கிறது. அனைத்து படைப்பாளிகள் குறித்தும் கட்டுரையில் குறிப்பிடலாம். ஆயினும், பல காரணங்களால் அது இயலாததாகிறது. சிறியதே அழகு என்னும் கூற்றிற்கேற்ப, சிறியதே ஆனாலும் செறிவுற விளங்கும் வகையில் இதனை உருவாக்கி அளித்துள்ள நூலாசிரியர் சுப்பாராவ் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *