உலகத்தை உற்றுப் பார்க்க வைக்கும் ஒவ்வொரு செயல்களின் பின்னேயும் அதைச் செய்து முடிக்கும் ஒவ்வொருவரின் சாதனைகள் சிறப்பாகத் தெரியும். அத்தகு சாதனைகளுக்கு அடிப்படையாக அமைவது அவர்களின் மூளைக்குள் பதியும் கல்வியும் அதன் வழியான திறமையும் அதை முழுமையாக பயன்படுத்த அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் எனலாம். அந்த வகையில் பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் உலகத்தை, அதன் செயல்பாடுகளை முழுமையாகக் கற்றுணர்வதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக அமைவது கதைகள்.

தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் கதைகளோடு பிறந்து கதைகளோடு வாழ்ந்து கதைகளோடே பயணிக்கும் தருணங்கள் மிக அதிகம். அன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகள் ஒற்றுமையான விளையாட்டுகளிலும் பாட்டி தாத்தா கூறும் கதைகளிலும் தம்மை மறந்து உலகத்தை உணர ஆரம்பித்த காலங்கள் மிக அதிகம். ஆனால் இன்றைய விரைவான வளர்ச்சியின் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தை நோக்கியே பயணிக்கும் தருணங்களில் நின்று நிதானித்து கதைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள காலத்தை ஒதுக்குவதும் இல்லை; மனதைக் கதையின் பக்கம் திருப்புவதும் இல்லை.

சிறார் கதைகள் இன்று நிறைய எழுத்தாளர்களின் வழியே நூல்களாக பரிணமிக்க ஆரம்பித்திருப்பது மீண்டும் தாத்தா பாட்டியின் கதைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும் ஆனந்த தருணங்களை உருவாக்க ஆரம்பிக்கின்றன. அறிவியல் கதைகள் புனைக் கதைகள் வரலாற்றுக் கதைகள் வாழ்க்கை நிகழ்வின் அடிப்படையிலான கதைகள் என சிறார் கதைகளில் பலவகைமைகள் காணப்பட்டாலும் யதார்த்தக் கதைகளின் வழியே சிறார்கள் மனதிற்குள் நுழைவதும் அதில் அவர்களை முழுமையாக ஈடுபட வைப்பதும் மிக எளிது. அந்த கலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் நூலாசிரியர் பூங்கொடி பாலமுருகன்.

நூலில் 9 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக கருதப்படும் உணவு உடை இருப்பிடம் இவற்றைத் தாண்டி அவன் தனது வாழ்வை சிறப்பாகக் கட்டமைத்துக் கொள்ளத் தேவைப்படும் கல்வி பற்றிய கதைகள் நூலில் சிறப்புற எழுதப்பட்டுள்ளன. மூன்று கதைகள் இன்று சமூகத்தில் நிலவி வரும் மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அன்றைய காலகட்ட மனிதர்கள் இன்னும் தன் மனங்களுக்குள் சாதியின் அடிப்படையில் தீண்டாமையின் வழியே மனிதர்களை ஒதுக்கி வைத்து பேதம் பார்க்கும் நிலை இன்றைய வளரும் தலைமுறையினரிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இக்கதைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இதில் இடம்பெறும் ஒன்பது கதைகளும் “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்” என்ற அடிப்படையிலான நீதியைக் கூறி அவர்களுக்கு ஒரு முடிவினைத் தரும் வகையிலாக அமைவதில்லை. கதையின் வழியே நிகழ்வுகளை வாசிப்பவர்களுக்குக் கடத்தி அதன் மூலம் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளும்படியான அமைப்பில் கதைகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் கறாரான ஆசிரியரின் கண்டிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் நீதியை உணரத் தவறிய மாணாக்கர்கள் போல் அல்லாமல் அன்பான வழிகாட்டியின் பின்னே அனைத்தையும் அறிந்து கொள்ள நடை போடும் குழந்தைகளைப் போல கதைகள் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.

இன்றைய குழந்தைகளுக்கு எதைக் கற்றுத் தர வேண்டும்? எப்படி கற்றுத் தர வேண்டும்? என்பதையும் கடவுள் பற்றிய முழுமையான பொருளை அவர்களுக்கு உணர்த்தும் விதமான நூலின் தலைப்புக் கதை சிறப்பான அறிமுகமாக இடம்பெறுகிறது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையைச் சார்ந்தே வாழ முடிகிறது. இயற்கையே அவனுக்கான எல்லாமுமாக மாறி நிற்கிறது. இயற்கையை வணங்க ஆரம்பித்தாலே மனிதன் சமுதாயத்தை நல்வழிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

தொலைக்காட்சி பற்றிய தொலைக்காட்சி பேசுவது என்ற அழகான கற்பனையை வைத்து எழுதப்பட்டுள்ள கதையின் வழியே சிந்தனையை அடகு வைத்தும் எண்ணங்களை வளர்த்த முடியாமலும் முழு மனதையும் தொலைக்காட்சியின் பக்கம் கொடுத்துவிட்டு காட்சிகளின் வழியே கவனத்தைச் சிதறவிடும் இன்றைய காலகட்ட மனிதர்களை அருமையாக நல்வழிப்படுத்தும் மின்தடை கதை முடிவில் நகைச்சுவையுடன் சிரிக்க வைத்தாலும் அதன் வழியே நம்மை சிந்திக்கவும் கூட்டுகிறது.

மரங்களை வளர்ப்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் அன்றாடக் கடமையாக மாறவேண்டும். அப்போது இயற்கையின் செழுமை அதிகரித்து பூமியின் இயல்புநிலை சிறப்பாக மாறத் துவங்கும். மனிதர்களின் வேக வளர்ச்சிக்கு இடப்பற்றாக்குறை நேர்கையில் இயற்கையை அழிக்கும் எண்ணங்கள் உருவாகி விடுகின்றன. இத்தகு நிலைமையில் எதிர்வரும் தலைமுறை எப்படி இயற்கையை அறிந்து கொள்கிறார்கள் என்பதை கடைசி மரம் விழிப்படைய வைக்கிறது.

இன்னொரு வீடு கதையில் வரும் பள்ளியை நாம் நிஜத்தில் உருவாக்கினால் உலகம் எவ்வளவு அமைதியாக எந்த விதமான போட்டிகளும் பொறாமைகளுமற்ற சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு நல்லதொரு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டும் ஈடுபாடு கொண்டும் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொண்டு செயல்படும் ஆசிரியர்களின் வழியே உயர்வது பள்ளி மட்டுமல்ல அதில் பயிலும் மாணவர்களின் திறனும் என்பதை உணர்த்துகிறது. அதன் வழியே சமுதாயத்தின் உயர்வும் கைகூடுவதை அறிய முடியும். அப்படியானதொரு பள்ளி குழந்தைகளுக்கு இன்னொரு வீடாக அமைந்து ஆசிரியர்கள் இன்னொரு பெற்றோராக, வழிகாட்டியாக மாறி அவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வை வாசிக்கையில் விழிகளில் மட்டுமல்ல நெஞ்சிலும் ஆனந்த கண்ணீர் வரத் துவங்குகிறது.

உதவி செய்வதை ஒரு பழக்கமாக செய்வோம் அது வழக்கமாக மாறிவிடும் பிறகு நம் வாழ்க்கையாகவே மாறிவிடும் என்று அருமையானதொரு அறிவுரையும் கதை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

சிறுவர்களுக்குள் ஏற்படும் போட்டியும் பொறாமையும் சில சமயங்களில் வன்முறைக்கு வழி வகுத்து விடும் சூழலும் ஏற்படுகிறது. அத்தகு நிலையிலும் தனது நண்பனை விட்டுக் கொடுக்காத தோழனும் அவனுக்கு வீட்டிலும் வெளியிலும் எவ்விதமான இடையூறுகளும் ஏற்படக் கூடாது என்று வேண்டிக் கொள்ளும் தோழனின் மனதும் கபடிக் கபடி கதையின் வழியே நமக்கு நெருக்கமாகி விடுகிறது. திருவள்ளுவரின் திருக்குறளை அடிப்படையாக வைத்து இன்னா செய்தாரையும் ஒருத்தல் என்று மன்னித்தும் அது பற்றி எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ளாமலும் மறந்துவிடும் அருள் போன்ற சிறுவர்களின் மனது பெரியவர்களுக்கு வாய்த்தால் உலகத்தில் சண்டை இல்லை சச்சரவுகள் இல்லை எல்லைக் கோடுகள் இல்லை பிரிவினைகள் இல்லை பேதங்கள் இல்லை.

அறிவுரைகளையும் போதனைகளையும் நீதி நெறிகளையும் நேரடியாகத் திணித்து மாணவர்களின் மனதிற்குள் அச்சத்தை விதைக்காமல் யதார்த்த நிகழ்வுகளை எடுத்துக் கூறி உணர வைக்கும் அடிப்படையிலான கதைகள் நூலை அலங்கரிக்கின்றன. சிறார் கதை இலக்கியத்தில் இது போன்ற கதைகளை மேலும் மேலும் எழுதி இனிவரும் தலைமுறையினரிடம் அன்பும் கருணையும் அமைதியும் விதைக்கும் எண்ணங்களை வளர்க்கும் நூலாசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

 

நூலின் தகவள்கள் 

நூல் : இருவாச்சி சாமி

ஆசிரியர் : பூங்கொடி பாலமுருகன்

வெளியிடுபுக்ஸ் ஃபார் சில்ரன்

பக்கம்56

முதல் பதிப்பு டிசம்பர் 2023

விலை :  ரூ.50

தொடர்புக்கு 8778073949

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *