Italian Telephone Stories (Ting Tong..Yutham) Webseries 5 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 5: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் டிங் டாங்….யுத்தம் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

டிங் டாங்…. யுத்தம்

நீங்கள் இரண்டு நாடுகள் போர் புரிவதை பார்த்திருக்கிறீர்களா. நாடுகள் என்றால் உண்மையில் நாடுகள் போர் புரியாது . மனிதர்கள் தான் போர் புரிவார்கள். மனிதர்கள் தான் இறந்தும் போவார்கள்.

அந்த நாடு, இந்த நாடு, இரண்டு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர். பயங்கர உக்கிரமாக நடந்தது. அந்த நாடு இந்த நாடு.

இரண்டு நாடுகளுமே பீரங்கிகளை பயன்படுத்தியது. பல ஆயிரம் பீரங்கிகள். ஒன்றின் மீது ஒன்று குண்டுமழை பொழிந்தது.. டுமீல்… டுமீல்…. 

மக்கள், ராணுவ வீரர்கள் , அதிகாரிகள் என்று இரண்டு பக்கமும் இறந்து கொண்டே இருந்தார்கள் டமார், டமார்..

பலபல வருடங்கள் யுத்தம் தொடர்ந்தது. எத்தனை வருடமோ கணக்கில்லை எத்தனைபேர் இருபக்கமும் இறந்தார்களோ சரியாக யாருக்குமே சொல்லத் தெரியவில்லை. 

இதுபோல் நாடுகளுக்கு நடுவே நடக்கும் சண்டைகள் நமது சண்டை மாதிரி கிடையாது. நாம் காலையில் ‘க்கா’ விடுவோம். மதியம் கூட தாண்டாது ‘பழம் விட்டு விடுவோம் அல்லவா. அது மாதிரி அல்ல.

அந்த நாடோ, இந்த நாடோ, யார் வீட்டிலோ யாரோ ஒருவர் யுத்தத்தில் சாகாத நாள் இல்லை. இருபது வருடம்…  ஏன் முப்பது வருடம் தாண்டியும் யுத்தம் தொடர்ந்தது உண்மையில் அந்த நாட்டுக்கம் இந்த நாட்டுக்கும் நடுவே யுத்தம் என்பது ஏன் தொடங்கியது என்பதே  இப்போது யாருக்கும்  நியாபகம் வரவில்லை.

ரொம்ப பெரியவர்கள் தொடங்கிய யுத்தம் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

பெரியவர்கள் கலந்துகொண்ட யுத்தம் அவர்களும் யாரும் பாக்கி இருக்கவில்லை.

ஓரளவு பெரியவர்கள் பிற்காலத்தில் இணைந்துகொண்ட யுத்தம் அவர்களில் ஓரிருவரே மிஞ்சி இருந்தனர்… அது மட்டுமல்ல…

அந்த நாடு இந்தநாடு இரண்டிலுமே இருந்த வெண்கலம் பித்தளை எல்லாம் பீரங்கிகள் துப்பாக்கி செய்து தீர்ந்து போனது.

அந்த நாடு இந்த நாடு  இரண்டிலுமே  தோண்டித்தோண்டி எடுத்த இரும்பும் குண்டுகள் செய்து செய்து முற்றிலும் தீர்ந்து போனது.

இப்போது வேறுயாரும் கிடைக்காததால் குழந்தைகளில் பெரியவர்கள் யுத்த முனைக்கு போக நேர்ந்தது.

ஓரளவு பெரியவர்களில் மிஞ்சி இருந்த ‘மெகா ஜெனரல் குண்டுமா மழை பீரங்கித் தலை இடிமுழக்கி’ என்பவன் ‘அந்த’ நாட்டின் படை தளபதியாக இருந்தான்.

அவனுக்கு  ஒரு யோசனை தோன்றியது. நாட்டில்  இரும்பு வெண்கலம் மிச்சமிருந்த இடங்கள் திடீரென்று அவனுக்கு நியாபகம் வந்தது.

கோவில் முதல் பள்ளிக்கூடம் வரை மாட்டப்பட்டிருந்த ஒலிக்கும் டிங்டாங்  மணி யாவற்றையும் கழட்டி பீரங்கி செய்ய உத்திரவிட்டான். நாடே பரபரத்தது.

மொத்தம் நாற்பத்தி ஒன்பதாயிரம் மணிகளை கழட்டி ஒரு பிரமாண்ட பீரங்கி செய்தார்கள் 1000 உலைகளில் காய்ச்சி பத்தாயிரம் பட்டறைகளில்  தயாரானது அந்த மிகப்பெரிய பீரங்கி.

அது வானத்தை நோக்கி மிகமிக பிரமாண்டமாக நின்றது. அதை அசைக்கவே முடியவில்லை. இத்தனை மகா மகா பீரங்கியை யாருமே பார்த்ததும் கிடையாது.

‘ஒரே குண்டு.. எதிரி நாடே அழிந்துவிடும்… நாம் ஜெயித்து விடலாம்’ மெகா ஜெனரல் குண்டு மழை பீரங்கித்தலை இடி முழக்கி கர்ச்சித்தான்.

ஆனால்  அந்த பீரங்கியை போர் முனைக்கு  எப்படி எடுத்துப்போவது? அதற்காக ஒரு படையே பொறுப்பு ஏற்றது. 

30000 பளுதூக்கும் இயந்திரங்கள் ஒரு லட்சம் திடகாத்திர பைல்வான்கள்  97 ரயில்களில் அதை தூக்க முடியாமல் தூக்க ஏற்றி யுத்தமுனைக்கு கொண்டுபோய் சேர்த்தார்கள்.

இப்படி நம் ‘அந்த’ நாட்டுப்படை அந்த பிரமாண்ட பீரங்கியில் குண்டுவீசத் தயார் ஆனது.

எதிரில் இருந்த ‘இந்த’ நாடடுப்படை சளைத்ததா என்ன?

‘இந்த‘ நாட்டுப்படை தளபதியின் பெயர் என்ன தெரியுமா.

மெகாமெகா ஜெனரல் துப்பாக்கியானாதிபதி எரிமலைத் தலை மின்னல் கலக்கி.

இதுதான்  அவன் பெயர். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…. ‘இந்த’ நாட்டில் கிடைத்த தொழிற்சாலை சங்கு சயரன் முதல் வண்டி வாகன ஹாரன் வரை  எதையும்விட்டு வைக்கவில்லை ஒரு காலத்தில் குழந்தைகளை குழந்தைகளாக நடத்தியபோது வீட்டில் வைத்திருந்த கிளுகிளுப்பை தகர ஊதல்….. என்று நாடெங்கும் துழாவி எடுத்து அதைவிட  உயரமான அதைவிட மிக மிகப் பெரிய பீரங்கியை செய்தார்கள் முப்பதாயிரம் உலைகளில் காய்ச்சி இருபதாயிரம் பட்டறைகளில் இட்டு அது தயாரானது.

‘ஹா… ஹா…. ஹா….’ மெகா மெகா ஜெனரல் துப்பாக்கியானாதிபதி எரிமலைத் தலை மின்னல் கலக்கி ஒய்யாரமாக சிரித்தான். 

‘ஒரே குண்டு …. எதிரி ஒருத்தரும் உயிரோடு மிஞ்சவே முடியாது’?

50000 பளுதூக்கும் இயந்திரங்கள் பலலட்சம் திடகாத்திர பைல்வான்கள் 107 ரயில்களில் ஏற்றிட அதே யுத்த முனைக்கு ‘இந்த’ நாடும் தன் மெகா மெகா பீரங்கிளை கொண்டுவந்து நிறுத்தியது.

வானமும் தெரியவில்லை சூரிய ஒளியும் வரவில்லை… தரையில் படவில்லை.இரண்டு பீரங்கிகளும் இரண்டு மலைபோல அங்கே நின்றன.

கடுமையான சூரிய வெப்பத்தில் – சுட்டெறிக்கும் கோடையில் அந்த பிரமாண்ட பீரங்கிகளின் நிழல் இருபக்கமும் இருந்த படைகளுக்கு வெப்பம் தணித்தது.

முதலில் ‘அந்த‘ நாட்டு தளபதி…. மெகா ஜெனரல் குண்டுமழை பீரங்கித்தலை இடி முழுக்கி தன் இடிக்குரலில் ஆணையிட்டான்.

‘குண்டு பாயட்டும்….  பயர்….?

பல நூறுபேர் சேர்ந்து ‘அந்த ’ நாட்டு மெகா பீரங்கியை இயக்கினார்கள்.

சற்று நேரத்திற்கு எதுவுமே நிகழவில்லை.

எதிரிப்படை  நடுங்கியது.

ஆனால் பூமியே அதிரும் படி ‘அந்த‘ நாட்டு மெகா சைஸ் பீரங்கி 

‘டிங்…. டிங்…. டிங்…. டிங்…. என்று பள்ளிக்கூடம் முடிவதற்கு மணி அடிக்குமே அப்படி.. பிரமாண்டமாக மணி ஒலித்து முழங்கியது.

‘இந்த’ நாட்டு தளபதி மெகா மெகா ஜெனரல் துப்பாக்கியானாதிபதி எரிமலைத் தலை மின்னல் கலக்கி 

பீரங்கி முன் நின்றான்.

‘குண்டுகள் எதிரியை துளைக்கட்டும்… பயர்….’ என்று அலறினான்.

சற்று நேரத்திற்கு எதுவுமே நிகழவில்லை. 

ஆனால் பூமியே அதிரும் படி ‘ இந்த’ நாட்டு மெகா பீரங்கி 

‘ப் பீ…. ப்பீ…. ப்பீயீ..யீ… ஈ…ஈ…. ? என்று காதுகள் துளைக்க ஊதித் தள்ளியது.

அடுத்தது ‘அந்த’ நாட்டு பீரங்கி இந்த முறை அது.

‘டாங்…. டாங்…. டாங்… டா ஆ ஆ ஆங்’ என்று அதிர்ந்தது.

உடனே ‘இந்த’ நாட்டு பீரங்கி 

‘பீங்… பாங்…  பீங். பாங் …பீபீபீங்.. பாபாபாங்’  என்று சயரன் ஒலித்தது.

இருபக்கத்து படை வீரர்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அவர்கள் பெரும்பாலோர் குழந்தைகள் அல்லவா. விரைவில் ‘ ஏ’ என்று கூச்சலிட்டப்படி ஒருவரை ஒருவர் அனைத்துக்கொண்டு ஆடிப்பாடத்தொடங்கினார்கள். ‘யுத்தம் முடிஞ்சிடிச்சு… கொண்டாடுங்கள் ’… யாரோ கத்தினார்கள்.

இரு தளபதிகளும் தப்பித்தால் போதும் என்று அவரவர் வாகனங்களில் ஏரி அவசரமாக அங்கிருந்து ஓடிப்போனார்கள் 

இப்படியாக யுத்தம் முடிந்துவிட்டது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *