கந்தர்வன் இப்போது நம்மிடையே இல்லை. அவருடனான இவ்வுரையாடலுக்கும் இவ்வுரையாடல் அச்சேறுவதற்கும் இடைப்பட்ட ஏப்ரல் 22இல் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

இராமநாதபுரத்து மனிதரான இவர், அரசு அலுவலர் பணியைச் சென்னையில் தொடங்கினார். தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதால் ஓசூர், சேலம், பரமக்குடி என பணி மாற்றத்தினால் பல்வேறு ஊர்களுக்கு அலைக்கலைக்கப்பட்டு, இறுதி காலத்தில் தென்சென்னையில் எங்களோடு இருந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயல்பாடுகளில் நீண்ட அக்கறை செலுத்தினார். உடல்நிலை சரியில்லாத சூழலிலும் இடையறாது வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் நண்பர்களோடு உரையாடிக் கொண்டுமிருந்தார். இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு தனது கருத்தை முன்வைப்பதில் அவருக்கு அலாதி ஆர்வம்.

அவரது நட்பு வட்டம் எல்லையற்றிருந்தது. அவர் எல்லாரிடமும் பிரியத்துடன் பழகுவது போலவே, அவர் மீதும் எல்லாருக்கும் பிரியம். இளைஞர்களை உற்சாகப்படுத்துவதை அவர் ஒரு பணி யாகவே கொண்டிருந்தார்.

கந்தர்வனின் உடல்நிலையை அவரது நிழல்போல பின் தொடர்ந்து நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்துக் கொண்டிருந்தவர் அவரது துணைவியார். வீடாக இருந்தாலும், இலக்கிய மேடையாக இருந்தாலும் கந்தர்வன் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறபோதெல்லாம் “பேசுனது போதும். நிறுத்திக்கிங்க’’ என சைகை யினால் அன்போடு கடிந்து கொள்வார். கந்தர்வனும் சிரித்துக்கொண்டே “உத்தரவு வந்தாச்சு, நிறுத்திக்கிறேன்’’ என்பார். அவரது பழகுதலில் உயிர்ப்பும் ஈர்ப்பும் எப்போதும் இருக்கும்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் அவரது இல்லத்தில் நிகழ்த்தப்பட்ட உரையாடல் இது. மிகுந்த ஈடுபாட்டோடு கதை சொல்வது மாதிரி, தன் வாழ்வனுபவங்களை ரசித்து ரசித்து நுணுக்கி நுணுக்கிச் சொல்லிக்கொண்டு போனார். அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு உரையாடலை நாம் நிதானமாக நிகழ்த்திக்கொண்டு போனாலும், அவருக்கென்ன எப்போதும் போல சிரிப்பும் கும்மாளமும்தான். அவ்வப்போது உற்சாக மிகுதியால் அதிர்ந்து சிரித்து, துணைவியாரிடமிருந்து ‘உத்தரவு’களை வாங்கிக்கொண்டே மெல்ல மெல்ல இந்த உரையாடலை நகர்த்திய அனுபவம் மிக இனிமையானது.

59ஆவது வயதில் நம்மைவிட்டு பிரிந்த கந்தர்வனின் இறுதி உரையாடலை அவரின் இனிய நினைவுகளோடு வழங்குகிறோம்.

உங்களுக்குள் இலக்கிய ஆளுமை திரண்டுவர நீங்கள் பிறந்த ஊரும் குடும்பச் சூழலும் எந்த வகையில் காரணங் களாக அமைந்தன?
‘தண்ணியில்லாக் காட்டுக்கு’ என்று அரசாங்க அதிகாரிகளால் வக்கணை காட்டப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தில், சாதிக் கலவரம் மிகுந்த முதுகுளத்தூர் தாலுகாவில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன்.

என் பதினோராவது வயதில் எங்களூருக்கு பஸ் வந்தது. பதினைந்தாம் வயதில் கரென்ட் வந்தது. கருவேலும் வேம்பும் பூவரசும் ஓரிரு ஆல அரச மரங்களும்தான் ஊரில். பல தலைமுறைகள் வாழை மரம் பார்த்ததில்லை எங்கள் சனங்கள். இப்போது பார்க்கும் எல்லாமே அந்தச் சிறுவயதில் எனக்கு மலைப்பான அதிசயங்கள். ஊரில் கஞ்சி கிடைக்கிறதோ இல்லையோ ஒருவருக்கொருவர் கதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பேசுவதே கவிதையாய் இருக்கும். “பாக்கு கடிக்கிற நேரத்திலே பட்டுப் போவப் பார்த்தானே’’ என்கிற மாதிரி.

பாட்டிகள், திண்ணையில் உட்கார்ந்து “அந்தக் காலத்திலே…’’ என்று ஆரம்பித்து, ஒரு நாளைக்கு பத்துக் கதைகளையாவது சொல்வார்கள். ஒரு வருசம் விளைந்துவிட்டால் கோடை பூராவும் திண்ணையும் கதைகளும்தான் வீட்டுக்கு வீடு. இது, நான் வளர்ந்த ஒரு பக்கச் சூழல்.

இன்னொரு பக்கத்தில் என் அப்பா அந்தக் கிராமத்தில் ஜில்லா முழுவதும் அறிந்த காங்கிரஸ்காரர். பெரிய தமிழ் வித்தகர். தமிழும் அரசியலும் பர்மாவில் கற்று வந்தவர். ஆளுமை மிக்க மனிதர். இவ்விதமாகத்தான் எனக்கு மொழிப்பற்றும், இலக்கியப் பற்றும் கலந்து வந்திருக்கிறது.

கவிதை, சிறுகதை என இரண்டு தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் முதலில் எழுதியது கவிதையா? சிறுகதையா?
கவிதைதான். பதிமூன்று வயதிருக்கும்போது எங்கள் வீட்டுக்கு மலேசியாவிலிருந்து ஒரு பொங்கல் வாழ்த்தோ, தீபாவளி வாழ்த்தோ ரோஜாப்பூ படம் போட்டு கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் வந்தது. அச்சில் அதுவரை அப்படியொரு அதிசயத்தைப் பார்த்ததில்லை நான். இரண்டு நாள் கிறுக்குப் பிடித்து அலைந்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் உட்கார்ந்து என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிய பிறகுதான் மனம் ஒரு நிதானத்துக்கு வந்தது. அதுதான் நான் எழுதிய முதல் கவிதை.

அந்தக் கவிதை என்ன ஆயிற்று?

எங்காவது போயிருக்கும்!

நீங்க, சிறுவயதிலேயே, கவிதை எழுதியதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் கவிஞராக எப்போது பரவலாக அறியப்பட்டீர்கள்?

நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மரபுக் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். நிறைய வெண்பா எழுதுவேன். விடுதியில் ஈற்றடி சொல்லி, வெண்பா கேட்பார்கள். கணக்குப் பழகுவதற்காக வைத்திருக்கும் சிலேட்டில் வெண்பா எழுதி காண்பித்து அழிப்பேன். அப்படி கவிதை எனக்கு கைவந்திருந்தது.

S. S. Chellappa Books | சி. சு. செல்லப்பா ...

பின்னர், சி.சு.செல்லப்பாவை சந்தித்தபோது, அவர் கொடுத்த ‘எழுத்து’ பத்திரிகை, ந.பிச்சமூர்த்தி கவிதைகள் ஆகியவற்றை படித்தபோது நான் அதுவரை எழுதிவந்த கவிதைகள் மீது வெறுப்பும் அசூயையும் ஏற்பட்டன. விளைவு, பழைய மாதிரியான கவிதைகளை எழுதவும் மனமில்லை; புதிய வடிவ கவிதைகளும் எனக்குப் பிடிபடவில்லை.

முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள் ...
நான் பரமக்குடியில் பணியில் இருந்தபோது முற்போக்கு எழுத்தாளர் சங்க கவியரங்கத்துக்கு கவிஞர் தணிகைச்செல்வன் அழைக்கப்பட்டிருந்தார். கவியரங்கத்துக்கு ஒரு நாள் முன்பு, அவர் “என்னால் வர இயலாது’’ என்று தந்தி கொடுத்துவிட்டார். தோழர்கள் என்ன செய்வதென்று புரியாமல் என்னையே அவருக்குப் பதிலாய் தலைமை தாங்கி கவிதை வாசிக்கச் சொல்லிக் கேட்டார்கள்.

அப்போது தணிகைச்செல்வன் மேடையில் கம்பீரமாய் முழங்கி, மக்களைக் கவரும் ஓர் ஆற்றல்மிக்க கவிஞராக வலம் வந்துகொண்டிருந்தார். அவரது இடத்தை என்னால் நிறைவு செய்ய முடியுமா என்று எனக்குத் தயக்கம். என் தயக்கத்தைச் சொல்லி மறுத்தேன். ஆனால், ஸ்தாபனத்தினால் நான் கட்டாயப் படுத்தப்பட்டேன்.அந்த ஒரு நாளில் தணிகைச்செல்வனை மனதில் வைத்துக் கொண்டு, கவியரங்கத்துக்கான அலங்காரங்களோடு விவசாயிகளின் வாழ்வை முன்வைத்து ஒரு கவிதை எழுதி வாசித்தேன்.

நன்மாறன் அந்தக் கூட்டத்தற்கு பேச வந்திருந்தார். எனக்குப் பாராட்டுகள் பெரிய அளவில் இருந்தன. அப்படியே தொடர்ந்து கவிதைகளை – எளிய மொழியில் மக்களைக் கவரும்விதமான நடையில் எழுதத் தொடங்கினேன். அவ்விதமாகவே இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

உங்களின் பிரபலமான கவிதை வரிகளுள் ஒன்று, ‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை; ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை’’ என்பது. பொதுவாக, உங்கள் கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் சார்ந்த பதிவுகள் ஏராளமாக இருக்கின்றன. இப்படியான கவிதைகளை எழுதத் தூண்டிய சூழல் எது?

29 வயதிலேயே மதிப்புமிக்க அரசாங்க ஆபீசர் ஆகிவிட்டேன். தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தேன். வீட்டுக்கு வந்தால் கடிதங்கள் பார்ப்பது, வருகிற தோழர்களோடு பேசுவது…

சிந்தனாவாதியாகவும் தலைவராகவும் என்னை என் மனைவியிடம் காட்டிக்கொள்ள நான் சிரமப்படவே இல்லை. அது இயல்பாகவே வந்திருந்தது. இந்த நிலையில், தொழிற்சங்கப் போராட் டத்தில் கலந்துகொண்டு நான் சிறை சென்று வந்தேன். இதன்பின் 19 மாதங்கள் சஸ்பென்சனில் வீட்டில் இருக்க நேர்ந்தது. அப்போதுதான் என் மனைவியின் அன்றாட வேலைகளையும் அவலங்களையும் உற்றுப் பார்க்க முடிந்தது. ஒரு நாள் பொறுக்க முடியாமல் என் துணி, அவள் துணி, குழந்தைகள் துணி எல்லாவற்றையும் அள்ளி கிணற்றில் போட்டு துவைக்க ஆரம்பித்தேன். இதுதான் நான் பெண்களை உற்றுப் பார்த்து உணர ஆரம்பித்த விதம், நிகழ்வுகள். இடதுசாரி இயக்கத்தில் ‘தியாகம் செய்’ என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் பெரிய தியாகங்கள் எல்லாம் செய்து கொண்டிருப்பதாய் மனதில் கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன். அவையெல்லாம் என் மனைவியின் வேலைகளையும், துயரங்களையும் பார்த்து, ‘புஸ்’ என்று ஆகிப்போனது. அவளே பெரிய தியாகியாக எனக்குத் தெரிந்தாள். என் சஸ்பென்சனின் விளைவு என்னைவிட அவளையே அதிகம் தாக்குவதாக அறிந்தேன்.

அந்தச் சமயம் விருதுநகரில் ‘ஜனநாயக மாதர் சங்க’ மாநில மாநாடு நடைபெற்றது. அதற்காக ஒரு வாரம் முன்பே ஒரு நீண்ட கவிதையை எழுதினேன். அதன் ஒவ்வொரு வரியையும் நான் மேடையில் வாசிக்க வாசிக்க உழைக்கும் பெண்கள் “ஓ”வென்று கை தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். அந்தக் கவிதையில் உள்ளதுதான் நீங்கள் குறிப்பிட்ட “நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’’ போன்ற வரிகள். இதன்பின் இயல்பாகவே நான் பெண்கள் குறித்து கூடுதல் அக்கறையோடும் கவலையோடும் பொறுப்போடும் எழுதி வருகிறேன்.

என் கவிதைகளுள் ‘கயிறு’ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஞானபீடமும் அதனை மொழிபெயர்த்திருக்கிறது.

 உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவை, கவியரங்கங்களில் வாசிக்கப்பட்டவையாக இருப்பதாலோ என்னவோ அவற்றில் பிரச்சாரத்தன்மை கூடுதலாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் கருத்து என்ன?

நான் கவிதைகளால் பிரச்சாரம்தான் செய்கிறேன். சிஐடியு மாநாடு நடக்கிறதென்றால், “தோழா வா’’ என்றொரு கவிதை எழுதுவேன். கட்சி மாநாடு என்றால் அதற்கொரு கவிதை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்றே ஒரு கவிதை எழுதினேன்.

‘கலை இரவு’ என்றால், மக்களிடம் பொதுவுடைமை சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்து கவிதை எழுதுவேன். என் கவிதைகள் மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ நான் கவலைப்படுவதில்லை. எளிய மொழியில், மக்களுக்குக் கருத்துகளை எடுத்துச் செல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்.

நவீன இலக்கியத்தின் மீது உங்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத் தியவர்கள் யார்?

நியாமான விமர்சனங்களும் ...

அரசாங்க உத்தியோகம் முதலில் சென்னையில் இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு ஓசூருக்கு மாற்றலானேன். ஓசூரில் என் பக்கத்து அறை நண்பராக இருந்தவர் சேலம் தமிழ்நாடன். இருவருக்குமே அப்போது குறைந்த வயது. அவர்தான் என் இலக்கியத் தாகத்தை அறிந்து நவீன இலக்கியங்களை அறிமுகப் படுத்தினார். பிறகு அவரும் நானும் குறுகிய காலத்திலேயே சேலத்துக்கு மாற்றப்பட்டோம். சேலம் கோலாகலமாக இருந்தது. நான், சேலம் தமிழ்நாடன், ‘ஃ’ பரந்தாமன், மகரிஷி இவர் களெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு மூன்று இடங்களில் மாறி மாறி உட்கார்ந்து நிறைய பேசுவோம்.

அப்போது சேலத்துக்கு சி.சு.செல்லப்பா வந்திருந்தார். நாங்கள் அவரைப் பார்க்கப் போனோம். பழைமை படிந்த ஒரு லாட்ஜ் அது. நாங்கள் போனதும் செல்லப்பா ஹாலுக்கு வந்தார். வட்ட மாக எங்களை உட்காரச் சொல்லி, தான் நடுவில் உட்கார்ந்தார். எல்லாம் எனக்குப் புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்த விசயங்கள். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளை, ‘எழுத்து’ பத்திரி கையை அப்போதுதான் எங்களுக்குக் கொடுத்தார். நான் எழுத்து வாசகனானேன்.

பிறகு, எனக்கு சென்னைக்கு மாற்றம் கிடைத்தது. சென் னையில் வெகுசீக்கிரம் சித்திரபாரதி நடத்திக் கொண்டிருந்த ‘வாசகர் பேரவை’யும், அதைத் தொடர்ந்து ‘கண்ணதாசன்’ பத்திரிகையும் அறிமுகமாயின. வாசகர் பேரவைச் செயலாளரான சித்திரபாரதி வகை வகையான இலக்கியங்களை ருசிக்கக் கற்றுக் கொடுத்தார். வாசகர் பேரவைக் கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்த ‘கண்ணதாசன்’ இதழின் துணையாசிரியர்களான இராம.கண்ணப் பனும் கார்க்கியும் எனக்கு நெருக்கமானார்கள். அதன்பின் ‘கண்ண தாசன்’ அலுவலகமே நான் வாழும் இடமாக மாறிப்போனது. கார்க்கி அப்போது என் மனதில் பெரும் புரட்சிக்காரனாகத் தோன்றினான். அவன் என்னை மேலும் படிக்க வைத்தான்; எழுத வைத்தான்.

லா.ச.ராமாமிருதம்

இந்த வாசகர் பேரவையில் ஒருமுறை லா.ச.ராவுடன் உரையாடல் நடந்தது. நாங்கள் 10 பேர் உட்கார்ந்து மாறி மாறி கேள்விகள் கேட்டதற்கும், எதிர் எதிராக வாதம் பண்ணியதற்கும் சிரித்தபடியே அவர் பதில் சொன்னார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பு என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. ஒரு வாரமாய் மனதில் அலையடித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் வராத ஓர் இரவில், ஒரு வாரம் முன் நடந்த அந்த நிகழ்ச்சியை பெயர்களோடும் கேள்விகளோடும் லா.ச.ராவின் பதில்களோடும் அப்படியே எழுதினேன். ‘லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரை யாடல்’ என்று தலைப்பு வைத்தேன். காலையில் ‘கண்ணதாசன்’ அலுவலகத்தில் அதைக் கொடுத்தேன். கண்ணப்பனும் கார்க்கியும் படித்துவிட்டு ஆச்சர்யமானார்கள். அது அப்படியே வெளிவந்தது. அது என் இயற்பெயரிலேயே எழுதியது. க.நாகலிங்கம் என்றிருக்கும். அந்த உரையாடலில் லா.ச.ரா. உதிர்த்ததுதான் “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்’’ என்று. அந்த வாக்கியம் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. அதை நான்தான் வெளிஉலகுக்குக் கொண்டு வந்தேன்.

அடுத்து, சென்னையில் ‘தமிழ் எழுத்தாளர் சங்கம்’ அந்தச் சமயத்தில் ஒரு மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி வந்தார். அறிஞர் அண்ணாவுக்கும் வி.வி.கிரிக்கும் கேட யங்கள் கொடுத்தார்கள். தமிழ்வாணன் தலைமையில் பட்டி மன்றம். எம்.ஜி.ஆர் காட்டிய ‘அடிமைப் பெண்’ சினிமா – என்று தூள் பறந்தது. அந்த இளம் வயதிற்குள் நான் படித்து சிலாகித்த எழுத்துகள் பற்றி அந்த மாநாட்டில் எந்தப் பேச்சும் இல்லை. நான் மதித்த எழுத்தாளர்கள் யாரும் அந்த மாநாட்டுக்கு அழைக் கப்படவுமில்லை. இது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. மூன்று நாள் மாநாட்டை குறிப்புகள் எடுத்து பதினைந்து பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ‘வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ என்று கண்ணதாசனில் வெளிவந்தது. கடுமையான விமர்சனக் கட்டுரை அது. கடைசிப் பத்தியில் சொல்லியிருந்தேன்: “ஒன்று, முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாம் அந்தச் சங்கத்துக்குப் போய் அதை ஒழுங்குபடுத்த வேண்டும். அது முடியவில்லையென்றால், அந்தச் சங்கத்தில் உள்ளவர்களெல்லாம் வெளியில் வந்து வேறொரு சங்கத்தைத் தொடங்க வேண்டும்’’ என்று. இதன்பின் ஒரு மாதத்தில் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ புதிதாக சென்னையில் உருவாகியது. தமிழ் இலக்கிய வரலாற்றில், ‘மக்கள் எழுத்தாளர் சங்க’த்தின் உதயமும் வளர்ச்சியும், பிறகு அது ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தோடு இணைந்ததும் ஒரு முக்கியமான அத்தியாயம்.

பாலியல் வன்கொடுமைகளும் சமூக ...

‘மக்கள் எழுத்தாளர் சங்க’த்தில் நான் நிறைய செயலாற்றினேன். அதனுடைய தொடக்கத்திலும் வளர்ச்சியிலும் எனக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ச.செந்தில்நாதன் இதன் அச்சாணியாக இருந்தார். தி.க.சி. எங்களை வழிநடத்துபவராகத் திகழ்ந்தார். டி.செல்வராஜ் பின்புலமாக இருந்து ஆலோசனை சொல்வார்.

இந்த இரண்டு கட்டுரைகளும்தான் முதலில் அச்சேறிய என் எழுத்துகள். ஒரு விமர்சகனாகத்தான் நான் தமிழுலகிற்கு அறிமுக மாகி இருக்கிறேன்.

கந்தர்வன் என்ற புனைபெயரை எப்போது வைத்துக் கொண்டீர்கள்?

‘தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு’ விமர்சனக் கட்டுரையை நான் ‘கண்ணதாசன்’ இதழுக்குக் கொடுத்தேன் அல்லவா, அப்போது இராம.கண்ணப்பன், “நீங்கள் அரசு அதிகாரியாக இருக்கிறீர்கள். வி.வி.கிரி, அண்ணா போன்றவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியை விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அதனால், நீங்கள் புனைபெயர் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னார். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தோம். அப்போது நான், திருலோக சீதாராமின் ‘கந்தர்வ கானம்’ எனும் நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்த ‘கந்தர்வன்’ என்ற பெயரைப் போடும்படி கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அந்தப் பெயரி லேயே எழுதினேன். ‘கந்தர்வன்’ என்ற பெயரிலே எழுதுவது நா.பார்த்தசாரதிதான் என்று அவரிடம் பலர் விசாரித்ததாக என்னிடம் அவரே கூறினார். திருலோக சீதாராமிடமிருந்து பச்சை மையில் எழுதப்பட்ட ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதை ரொம்ப நாள் பாதுகாத்து வைத்திருந்தேன்.

இலக்கிய விமர்சகராக இருந்த நீங்கள், சிறுகதை எழுத்தாளராக எப்படி மாறினீர்கள்?

Thi. Ka. Sivasankaran - Wikipedia

அதற்குக் காரணம் தி.க.சி.தான். ‘மக்கள் எழுத்தாளர் சங்க’க் கூட்டம் ஒவ்வொரு மாதமும் பாவாணர் நூலகத்தில் நடக்கும். கூட்டத்திற்கு முன்வரிசையில் நா.பா., ஞானக்கூத்தன், சா.கந்த சாமி, ஜெயகாந்தன் ஆகியோர் தவறாது பார்வையாளர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு கூட்டம் முடிந்தது பாவாணர் நூலகத்திலிருந்து தி.நகர் பனகல் பூங்கா வரை நாங்கள் நடந்து போய் அங்கு ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம். அதில் அடுத்த கூட்டத்திற்கான ‘அஜெண்டா’ தயாராகும். அப்படியான ஒரு கூட்டத்தில் தி.க.சி, “கந்தர்வன், அடுத்த கூட்டத்தில் நீர் ஒரு கதை படிக்கிறீர்’’ என்று கூறிவிட்டார்.

இதுவரை விமர்சனங்களும் சட்டாம்பிள்ளைத்தனமும் பண்ணிக்கொண்டிருந்த எனக்கு இது ஒரு சோதனையாக இருந்தது. ஒரு வாரம் வரை சிறுகதைக்கான ஒரு கருவும் முழுமையாகத் தோன்றவில்லை. எல்லாம் அரைகுறையாக, தெளிவில்லாமல் வந்து போயின. அவற்றை கதையாக்கும் கலை பிடிபடவில்லை.

இந்நிலையில், ஒரு நாள் நான் சாலையோரம் நடந்து வருகையில், ஒரு மரண ஊர் வலம் பார்த்தேன். அவர்கள் மிகவும் எளியவர்கள். பிணம் ஏற்றிய பாடையின் முன்கம்பில் ஒரு கோழிக்குஞ்சு தொங்கவிடப் பட்டு ஆடிக்கொண்டே போனது. பிணம், கோழிக்குஞ்சு இரண்டும் எனக்கு முரண்பாடாகக் தெரிந்தன. வீட்டுக்கு வந்து, இது ஏன் என்று என் அம்மாவைக் கேட்டேன். அவர், “சனிப்பிணம் தனிப் போகாது என்பதால் ஒரு கோழிக்குஞ்சையும் பிடித்துக் கட்டி விட்டிருப்பார்கள்’’ என்றார். எனக்குக் கதைக்கரு கிடைத்துவிட்டது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு சொல்கூட வரவில்லை பேனாவிலிருந்து. மூன்று நாள் முயற்சிக்குப் பிறகும் ஒரு பத்திகூட எழுதி முடிக்கவில்லை. பிறகுதான் எனக்குத் தெரிந்தது, சென்னையில் நான் பார்த்த இந்தக் காட்சியை, சென்னை சேரியில் நடந்த நிகழ்ச்சியாக எழுத முயற்சித்திருக்கிறேன். சென்னை மொழியும் வாழ்க்கைமுறையும் எனக்கு அந்நியமானவை என்று அறிந்தேன்.

அடுத்த வினாடியே இந்தக் கருவை அப்படியே என் கிராமத்துக்குக் கொண்டுபோய் அடைகாத்தேன். மறு வாரத்தில் கதையை எழுத முடிந்தது. ஆனாலும், கூட்டத்துக்குப் புறப்படும் நிமிடம் வரை எழுத வேண்டியிருந்தது. அந்தக் கதையை ‘மக்கள் எழுத்தாளர் சங்க’ கூட்டத்தில் பெரும் எழுத்தாளர்கள் கூடிய சபையில் படித்தேன். வாசித்து முடித்ததும் பலமான கைதட்டலில் அங்கீகரிப்பு கிடைத்தது. வாசித்துவிட்டு கையில் கதையோடு நான் உட்காருவதற்கு வருகையில் கூட்டத்திலிருந்து ஒரு கை நீண்டு அந்தக் கதையைப் பறித்துக் கொண்டது. அந்தக் கைக்காரர் தி.க.சி! தாமரையில் அந்தக் கதை வெளிவந்தது. ‘சனிப்பிணம்’ என்கிற அந்தக் கதைதான் நான் எழுதி வெளிவந்த முதல்கதை. 1970ல் வெளிவந்தது.

பிறகு, பத்து ஆண்டுகள் தொழிற்சங்கம், சிறைவாசம், சஸ்பென்சன் என்று காலம் ஓடியது. பத்தாண்டுகள் கதை எதுவும் எழுதவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு சஸ்பென்சனில் இருந்தபோது ‘மைதானத்து மரங்கள்’ என்று ஒரு கதை எழுதினேன்.

ஜெயந்தன் சிறுகதை விருது | ஜெயந்தன் ...

ஜெயந்தன் அந்தக் கதையை ‘இலக்கியச் சிந்தனை’யில் அந்த மாத சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார். அந்தக் கதை பல தொகுப்பு களில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக +2 தமிழ் துணைப்பாடத்தில் அந்தக் கதை இருந்து வருகிறது. அதன் பின்னர் நிறைய எழுத ஆரம்பித்தேன்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து ‘பொய்விதிகள்’ என்றொரு கதையை எழுதியிருந்தீர்கள். இதே பிரச்னையை மையமாகக் கொண்டு ‘நல்லாதான் இருக்கிறேன்’ என்றொரு பிரபலமான கவிதையையும் எழுதியிருக்கிறீர்கள். இவை உங்கள் வாழ்க்கை அனுபவப் பதிவுகளா…?

கந்தர்வன் கதைகள் | Buy Tamil & English Books Online ...

எனது பதினோரு வயதிலிருந்து பதிமூன்று வயது வரை என்னைக் கொண்டு போய், தொழில் கற்றுக்கொள்வதற்காக ஒரு மளிகைக் கடையில் விட்டார்கள். சித்தப்பா மகனும் அங்கு இருந்தான். நான் அங்கு பட்ட அவதிகளையும், அங்கிருந்து தப்பித்ததையும்தான் ‘பொய் விதிகள்’ கதையாக எழுதியிருக்கிறேன். அது என் சொந்த அனுபவம்தான்.

அதேபோல, ஓட்டலில் எச்சில் துடைக்கிற பையனாக பணி செய்த ஒரு பையனைப் பற்றியதுதான் ‘நல்லாதான் இருக்கிறேன்’ கவிதை.
(சிறிய யோசனைக்குப் பிறகு) நான் கடையில் வேலை செய்த காலத்தில், படிக்கவேண்டும் என்கிற ஆவலில், என் கடை முதலாளி கண்டபடி அடிப்பதாகவும், கெட்ட வார்த்தையில் திட்டுவதாகவும் கற்பனையாக, பொய்யாக வாரம் ஒரு கடிதம் அப்பாவுக்கு எழுதினேன். அதனால் என்னை வீட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண் டார் அப்பா. அந்தக் கடிதங்களில் இருந்த கற்பனையும், கதை ஜோடிப்பும் பின்னர் கதை எழுத எனக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.

அப்பாவைப் பற்றி நிறைய கதைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை உங்கள் அப்பாவைப் பற்றிய நிஜ பாதிப்புகளா…?

அப்பா! எல்லாரையும் போல அவர்தான் என்றைக்கும் எனக்கு ஹீரோ. அவரைப் போல நான் இன்னும் ஆகவில்லை என்றே நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஒரு கதை ‘தராசு’, பத்து வருசங் களுக்கு முன் தினமணிக் கதிரில் வெளிவந்தது.
அவர் சைவர். எல்லாத்திலும் அவர் தராசுதான். எப்பவும் கதர் சட்டைதான். காந்தி போல உப்பு இல்லாத சைவ சாப்பாடு. நாங்களும் அப்படித்தான் சாப்பிடவேண்டும். ‘கொல்லாமை’ பற்றி உள்ளூர் வாத்தியாருக்கு இவர் பாடம் எடுப்பார். அப்படிப் பட்டவர் தன் மனைவியை மட்டும் அசைவமாக இருக்க அனு மதித்தார். தன் பெண்டாட்டிக்காக மீனைப் பிடித்துக் கொன்றுப் போடுவார். அதுதான் ‘தராசு’ கதை. அவருடைய இன்னொரு செயலே ‘அப்பாவும் மகனும்’ கதை. ‘தீராநதி’யில் வெளிவந்தது.

‘துண்டு’, ‘சாசனம்’ போன்ற சில கதைகளில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறீர்களே…?

என் தாத்தா காலத்தில் எங்கள் வீட்டு வாசலில் தலித் மக்களுக்கு நிகழ்ந்த அவமானங்களை நான் அறிவேன். அதற்கு, சிறுபிள்ளையாய் இருந்தபோது நானே சாட்சியாய் இருந்தேன். பின், பொதுவுடைமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டபோது அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களுக்கு எதிர்மறையான கருத்துகளை என் அனுபவங்களினூடே சிறுகதைகளாக எழுதினேன்.

உங்களின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘சீவன்’, அந்தக் கதையைக்கூட அறிவொளி இயக்கத்தில் சிறு நூலாக வெளியிட்டு பல்லாயிரம் பிரதிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். அந்தக் கதையை நாத்திகப் பிரச்சாரம் செய்வதுபோல எழுதியிருந்தீர்களே…?

Noolulagam » கந்தர்வன் » Page 1

எங்க ஊர் முனியசாமிக் கதை அது. இப்போதும் முனியசாமி கையில் அரிவாளோடு துடியான தெய்வமாக எங்க ஊர் மக்களுக்கும், பக்கத்து பல ஊர் மக்களுக்கும் காட்சியளித்தும், பூசை, பலி முதலியவற்றை பெற்றுக்கொண்டும் இருக்கிறார். என் கதையில் மட்டுமே அவர் உடைபட்டு தூள் தூளாகக் கிடந்தார். கர்ணப் பரம்பரைக் கதைகள் குறித்த ஒன்றை எடுத்துப் போட்டு உடைக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். எங்களூர் துடியான தெய்வத்தையே தூக்கிப் போட்டு உடைத்தேன்.

படைப்பாளிகளைக் கொண்டாடிய கவிஞர் ...

இந்தக் கதையை ‘அன்னம்விடு தூது’ இதழில் வெளியிடுவதற்காக கவிஞர் மீராவுக்கு அனுப்பினேன். அவர் படித்து முடித்ததும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘கந்தர்வன், பெரியார் இல்லை. இருந்திருந்தால் ரயில் ஏறி இந்தக் கதையை அவர் கையில் கொடுத்துவிட்டு வந்திருப்பேன்’ என்று.

உங்களின் ‘கொம்பன்’ கதை, கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. அந்தக் கதையைப் பற்றி…

எனது எட்டு ஒன்பது வயதில், நாலு ஐந்து மைல் நடக்க முடியாமல் நடந்துபோய் மந்தை மாடுகளைப் பார்த்திருக்கிறேன். அந்த பசுக்களில் யாரும் பால் கறக்க முடியாது. எந்த மாட்டையும் அதட்டி பத்திவிட முடியாது. கொம்புகள் அவற்றிற்கு கைகளும் ஆயுதங்களுமாக இருந்தன.

Jallikattu in Training To support students Road blockade ...

மந்தையில் மாடு குதிப்பதை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு வில் போல் வளைந்து குதிக்கும். அதுதான் துள்ளல். களியாட்டம் போடும். மேடு, பள்ளம் கண்ட இடமெல்லாம் குத்தும். அப்படிப்பட்ட மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, பிடிக்கப் பட்டு வீட்டு மாடுகளாக்கப்பட்டபோது அவற்றிற்கு நிகழ்ந்தவை அனைத்தும் வன்கொடுமைகளே. இது, துள்ளித் திரிந்த ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போய் காயடிக்கப்பட்டு உணர்வு மடிக்கப்படுவதை எனக்கு நினைவூட்டியது. எட்டு வயதில் பார்த்ததை ஐம்பது வயதில் என் அனுபவங்களோடு சேர்த்து எழுதினேன். கதை நன்றாய் அமைந்துவிட்டதாகப் பலரும் சொன்னார்கள். பல தொகுப்புகளிலும் சேர்த்திருக்கிறார்கள்.

உங்கள் ‘சாசனம்’ கதையை மகேந்திரன் திரைப்பட மாக் கினாரே…?

முக்கால்வாசி எடுத்து நிற்கிறது. என்ன காரணம் என்று தெரிய வில்லை.

 

ஜெயமோகன் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி இவர்களுக்குப் பின் தன் பார்வையில் கந்தர்வன்தான் சிறந்த முற்போக்குக் கதைகளை எழுதிக் கொண்டிருப்பதாக உங்களைச் சொல்கிறாரே…?

வாசிப்பு வழிகாட்டி| புனைகதை ...
ஜெயமோகன் மேலும் சொல்கிறார், “1990களிலும் 2000களிலும் வெகுஜனப் பத்திரிகைகளில் என் (கந்தர்வன்) கதைகள் சாதனைப் படைத்திருப்பதாகவும் சொல்கிறார். என்னோடு சேர்ந்து நிறைய எழுத்தாளர்கள் இவ்வித சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஜெயமோகன், “முற்போக்கு இலக்கியம் வலுவாக இல்லை’  என்று இன்னோரிடத்தில் குறிப்பிட்டிருப்பதை மறுக்கிறேன் நாங்கள் நிறைய பேர் முற்போக்கு இலக்கியச் சிறுதைகளை மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதியிருக்கிறோம் என்றுதான் நினைக்கிறேன்.

அரசு விருதுகள் பற்றி உங்கள் கருத்து?

விருதுகளை அடைய சிலர் திட்டமிட்டு அலைவதை பார்த் திருக்கிறேன். நவீன தமிழ் இலக்கிய உலகத்தில் இது ஓர் அருவருப்பான காட்சி. பாரதியும் புதுமைப்பித்தனும் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்ட சமூகம், யாருக்கு என்ன விருது கொடுத்தால் எனக்கு என்ன என்று அடிக்கடி தோன்றுகிறது.

புதிய புத்தகம் பேசுது
மே 2004
சந்திப்பு : சூரியசந்திரன்

One thought on “கவிதைகளால் பிரச்சாரம் செய்கிறேன் : கந்தர்வன்”
  1. கந்தர்வனோடு உட்கார்ந்து அரசியல் சமூகம் இலக்கியம் குடும்பம் அமைப்பு பற்றி எல்லாம் பேசியதும், தெளிவு பெற்றதும் நினைவுக்கு வருகிறது. கவிதை பற்றிய ஒரு உரையாடலின்போது, “எது புதுசோ அது கவிதை” என்று அவர் சொன்னது மறக்க முடியாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *