இது சிலப்பதிகார மறுவாசிப்பு அல்ல: சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கண்ணகி-கோவலன் கதை உண்மையா, புனைவா என்பதும் அல்ல: அது தொன்மம் சார்ந்தது என்று எடுத்துக்கொண்டு கண்ணகி கோயிலின் இருப்பிடத்தை அல்லது கண்ணகி சென்றடைந்த இலக்கை ஆய்வுசெய்கிறது இந்நூல்.

கண்ணகியும் கோவலனும் சோழநாட்டுத் தலைநகர் பூம்புகார் என்னும் நகரில் செல்வச்செழிப்பு வாய்ந்த வணிககுடியில் பிறந்து இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தபோது, மாதவி என்ற ஆடல்மகளின் அழகில் மயங்கிய கோவலன் தன் சொத்துக்களையெல்லாம் அவளிடம் பறிகொடுத்தபிறகு, மனைவியுடன் இணைந்து புதுவாழ்வுதேடி மதுரை செல்கிறான். அங்கு கள்வன் எனக்குற்றஞ்சாட்டப்பட்டு கொலையுண்டு போகிறான் கோவலன். நீதிவழுவிய பாண்டிய அரசனையும் மதுரை நகரையும் அழித்துவிட்டுத் தெற்குமுகமாக 14 நாட்கள் நடந்து நெடுவேள் குன்றம் என்ற இடத்தையடைந்து வேங்கைமர நிழலில் கண்ணகி அமர்ந்திருந்தபோது புஷ்பவிமானத்தில் வானவரோடு சேர்ந்துவந்த கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு வானகம் செல்கிறான். ஒரு பத்தினிப்பெண் தனது எல்லைக்குட்பட்ட மலைப்ப்குதியில் இருந்து சொர்க்கலொகம் புகுந்தாள் எனக் கேள்விப்பட்டு சேரமன்ன்ன் அந்த இடத்தில் அவளுக்குக் கோயில் எழுப்பினான் என்பது சிலப்பதிகாரக்க்கதை.

இது உண்மைக்கதையா என்றால் இல்லை என்கிறார் பாவல்பாரதி. ஏற்கனவே மக்களின் கதையாடலில் புழங்கிவந்த தொன்மத்தின் செவ்வியல் வடிவம்தான் சிலப்பதிகாரம்.

அப்படியென்றால் தொன்மம் என்றால் எது? ஓர் இனம் தனது பழங்கால வரலாறுகளை அல்லது வாழ்வியல்தடங்களை ஏதோ ஒருவகையில் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அது கதையாக் கவிதையாக வடிவெடுத்து அடுத்த சந்ததிக்குச் சென்றடையும். நிகழ்ந்த வரலாறாகவோ புனைவுப்புலத்தில் அமைந்த நம்பிக்கையாகவோ இருக்ககூடும். “அது நம்பமுடியாததாகவும் கற்பனைக்கு எட்டாத நிகழ்வாகவும்கூட இருக்கும்” என்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி. . .

தெர்னமத்தைக் கற்பனைக்கதை என ஒதுக்கவிடவேண்டியதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். உதாரணத்துக்கு நக்கீரர் தொன்மத்தை எடுத்துக்கொள்ளலாம். கடவுளர்கள் எல்லாம் கைலாயத்தில் குவிந்துவிட்டதால் பூமி சமநிலை குலைந்து தென்பகுதி உயர்ந்துவிட்டது. இதைச்சீராக்கவேண்டுமானால் அகத்தியர்தான் பொருத்தம் என எண்ணிய கடவுள் தென்னாடு செல்லும்படி அவரைப்பணிக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட அகத்தியர் வரும்வழியில் துவாரகையில் இருந்து பதினெட்டு அரசர்களையும் பதினெட்டு வேளிர்குலத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு வந்தார். காடழித்து நாடாக்கி அவர்களைக் குடியமர்த்திவிட்டு அகத்தியர் பொதிகைமலை சென்று தவம் இயற்றினார்.

அகத்தியர் வேளிர்குலத் தலைவர்களைத் தென்னகத்துக்குக் கொண்டுவந்த இந்தக்கதை சிந்துவெளி சாகரீகம் சீர்குலைந்தபின் திராவிட மொழிபேசும் மக்கள் பெருமளவு தென்னகத்துக்குக் குடிபெயர்ந்ததன் தொன்மம் என்கிறார் ஐராவதம் மகாதேவன். ஆக, தொன்மம் என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதல்ல: வரலாற்றிலிருந்தும் மக்கள் வாழ்வின் தூண்டுதலால் ஏற்படும் அதீத கற்பனையில் இருந்தும் தோன்றுகிறது.

கண்ணகிவழிபாடு ஈழத்தில் நேரடியாகப்பதியம் கொண்டிருப்பதை ஆய்வாளர் சிலம்பு நா, செல்வராசு நிறுவுகிறார். “கண்ணகை” என்ற பெண்தெய்வ வழிபாடு இன்றும் அங்கு உயிர்ப்போடு இருக்கிறது. வழிபாட்டுமரபுகள், சடங்குகள், விளையாட்டுக்கள், பாடல்கள், காவியங்கள் என ஈழத்துக்கண்ணகி மரபு விரிவான களத்தைக் கொண்டுள்ளது. ஈழத்தமிழர் பகுதிகளில் இன்றைக்கும் கண்ணகையம்மன் கோயில்கள் இருக்கின்றன. வழிபாட்டுப்பாடல்கள், காவியங்கள் நாட்டுப்புறவடிவிலான இலக்கியங்கள் என்று பலவடிவங்களில் உயிர்ப்புடன் திகழ்வதை சிலம்பு நா. செல்வராசு சுட்டிக்காட்டுகிறார். 1 “கண்ணகையம்மன் குளுந்திப்பாடல்,” 2 “அங்காணமைக்கடவை கண்ணகையம்மன் காவியம்,” 3 “வற்றாப்பழை கண்ணகையம்மன் காவியம்” 4 பட்டிமேடு தாண்டவன்வெளி கண்ணகையம்மன் காவியம்” 5 தம்புலுவில் பட்டிநகர் கன்னன்குடா கண்ணகையம்மன் மழைக்காவியம்” ஆகியவை அவற்றுள் சில.

மட்டக்களப்புக் கண்ணகையம்மன் கோயில்களில் “கண்ணகி வழக்குரை” என்றொரு பாடல் பாடப்படுகிறது. அந்தப்பாடல்களை வி சி கந்தையா தொகுத்தளித்துள்ளார். “பூம்புகார் என்னும் பதியில் மாசாத்துவான், மாநாய்கன் என்ற இருவணிகர்கள் செல்வச்செழிப்போடு வாழ்ந்துவந்த காலத்தில் பாண்டிய அரசனுக்குக் காளி என்ற மகள் பிறக்கிறாள். அவளால் எதிர்காலத்தில் அரசனுக்குக் கேடுவரும் என்று கணிக்கப்பட்டதால் அக்குழந்தையை ஆற்றில் விட்டுவிட உத்தரவிடுகிறான் அரசன். அந்தக் குழந்தையைக் கண்டெடுத்த மாநாய்கன் தானே வளர்க்க ஆரம்பிக்கிறான். மாநாய்கன் பார்வைக்குறைபாடு உடையவன். அந்தக் குழந்தையைப் பார்த்ததும் அவன் கண்ணில் ஒளிபரவுகிறது. அதனால் அந்தக்குழந்தைக்குக் “கண்ணகி” எனப்பெயர் சூட்டுகிறான். ஏற்கனவே மாசாத்துவானுக்குக் ஒருபுதல்வன் இருக்கிறான். அவன்தான் கோவலன். அவனுக்கு வாழ்க்கைப்பட்டு, கண்ணகி என்ற அந்தக்காளி பாண்டியநாடு சென்று மன்னனைப் பழிதீர்க்கிறாள் என்கிறது அந்தக்கதை.

கண்ணகி முழுக் கதை Kannagi Full Story வரலாறு ...

மட்டக்களப்பு சிந்து காவியத்திலும் இதே கதை சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கண்ணகி கதை வேறுமாதிரியானது. புகழேந்திப்புலவர் எழுதிய “பெரியபொழுது கோவலன்கதை” கண்ணகியின் பெயர்க்காரணத்தை வேறுவிதமாய்ச்சொல்கிறது. மணியரசன் என்ற வணிகனின் இரண்டாந்தாரத்து மகன் எண்ணை வியாபாரம் செய்துவந்தான். அவனுக்குச் சரியாக வியாபாரம் நடக்கவில்லை. எனவே, மதுரையிலுள்ள பத்திரகாளியம்மன் கோயில்முன் வந்து தனக்கு நல்லவியாபாரம் நடந்தால் அந்தக்கோயிலுக்கு விளக்கேற்றி வைப்பதாகப் பிரார்த்தித்துச் செல்கிறான். அதேவேளையில்ல் பாண்டியமன்னன் தனக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் அந்தக் காளி மீது கோபம் கொண்டு கோயிலைச்சாத்திவிடுகிறான். அதோடு அங்கு யார் விளக்கேற்றினாலும் அவருக்குத் தண்டனை உண்டு என்று அறிவிக்கிறான். இதையறியாக வணிகன் வியாபாரம் சிறப்பாக நடக்க கோயிலில் விளக்கேற்றிவிட்டுச்செல்கிறான். அதையறிந்த மன்னன் வணிகனைச் சிரச்சேதம் செய்ய வணிகனின் தலை காளியின் மடியில் போய் விழுகிறது. “தாயே! உனக்கு விளக்கேற்றியதற்கு இதுதான் தண்டன்னா?” என அலறுகிறது தலை. கோபமுற்ற காளி மன்னனைப் பழிவாங்க நினைக்கிறாள்.

இதேகாலத்தில் பாண்டிய மன்னன் பிள்ளைவரம் வேண்டித் தவம் இருக்கிறான். சொக்கர் என்ற கடவுள் தன் சிமிழில் அடைத்துவைத்திருந்த காளியை அவனுக்கு மகளாகப்பிறக்கும்படி அருள் செய்கிறார். பாண்டியன் மனைவி பத்துமாதம் கழித்து ஒரு மகவை ஈன்றெடுக்கிறாள். காலில் சிலப்போடும் கழுத்தில் பூ மாலையோடும் கன்னத்தின் வழியாகப் பிறக்கிறது குழந்தை. கன்னத்தின் பிறந்ததால் அது கண்ணகி ஆயிற்று என்கின்றார் புகழேந்திப்புலவர். (இது பொருத்தமற்ற பெயர் என்பது நூலாசிரியரின் முடிவு.)

வைசிய புராணக்கதை எழுதிய சூடாமணிப்புலவரும் இதே கதையை வழிமொழிந்திருக்கிறார்.

கேரளத்தில் இதுபோன்ற கண்ணகி தொன்மக்கதைகள் வழக்கத்தில் உள்ளன என்றாலும் அங்கு காளி என்றும் பகவதியம்மை என்றும் கண்ணகி, அழைக்கப்படுகிறாள்.

ஆக கண்ணகி தொன்மம் என்பது தவறு செய்தவர்களை ஆங்காரத்தோடு பழிவாங்கும் தெய்வத்தின் குறியீடு. அது பிழை செய்து வாழும் மனிதப் பரப்பைத் திருத்தம் செய்கிறது. இந்த நூலின் நோக்கம் கண்ணகி தொன்மத்தைக் கண்டறிவதோடு நின்றுவிடவில்லை. கண்ணகி நடந்துசென்ற பாதை எது எனக்கண்டடைய முயல்கிறது. சிலப்பதிகாரம் என்ற செவ்வியல் இலக்கியம் மட்டுமே கண்ணகியின் வழித்தடத்தை ஓரளவு துல்லியமிட்டுக்காட்டுகிறது.

அந்தப்பாதையைப் பல பேரறிஞர்கள் ஆய்வுசெய்து சொல்லியிருக்கிறார்கள். தொமுசி ரகுநாதன், கே. முத்தையா, கோவிந்தராசனார், சிலம்பு நா. செல்வராசு ஆகியோர் முக்கியமானவர்கள்.

பாவெல் பாரதி

கண்ணகி வையைக்கரை வழியாகத்தான் நடந்து, நெடுவேள் குன்றம் சென்றடைந்தாள் என்கிறது சிலப்பதிகாரம். எந்தக்கரை வழியாய் என்று ஆய்வு செய்யத் தேவையில்லாமல் சிலப்பதிகார வரியே கோடிட்டுக்காட்டுகிறது. “தேன்மலர் நறும்பொழில் தென்கரை எய்தி” என்பது புறஞ்சேரி இறுத்தகாதையின் 180ஆவது வரியாகும். ஆகவே அவள் வைகைநதியின் தென்கரை வழியாகச் சென்று நெடுவேள்குன்றம் அடைகிறாள்.

அந்தப்பாதையில் எத்தனை நாள் நடந்தாள் என்பதற்கும் விடையிருக்கிறது. “எழுநாள் இரட்டி” என்கிறது சிலப்பதிகாரம். அதாவது பதிநான்குநாட்கள் எட்டெடுத்து நடந்து இலக்கை அடைகிறாள். அவள் சென்றடைந்த இடம் நெடுவேள்குன்றம். நெடுவேள்குன்றம் என்பது தேனி மாவட்டத்தின் தென்கோடி எல்லையில் மலையாளதேசத்தை ஒட்டி வண்ணாத்திப்பாரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மதுரையிலிருந்து 130 கிமீ தூரத்தில் இருக்கிறது. ஒருநாளைக்கு பத்துக்கிலோமீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் 14 நாட்களில் சென்றடைந்துவிடக்கூடிய தூரம் அது.

சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அரும்பத உரையாசிரியர் திருச்செங்கோடுதான் நெடுவேள்குன்றம் என்கிறார். ஆனால் அடியார்க்குநல்லார் அதை மறுக்கிறார். அத்திருச்செங்கோடு வஞ்சிநகர்க்கு வடதிசைக்கண்ணதாய் அறுபதின்காத ஆறுண்டு ஆகலானும் அரசனும் உரிமையும் மலை காண்டுவம் என்று வந்துகண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க என்கிறார். அதாவது வைகைக்குச் சம்பந்தமில்லாத ஓரிடம்! மதுரையிலிருந்து அறுபதுகாத தூரம் (அறுநூறுபது மைல்) இருப்பதாலும் பதினான்கு நாட்களில் நடந்து கடக்கமுடியாத தூரம் என்பதாலும் நெடுவேள்குன்றம் என்பது திருச்செங்கோடு அல்ல என நிறுவும் அடியார்க்குநல்லார், கொடுங்களூர்தான் நெடுவேள்குன்றம் என்று சொல்வதும் யதார்த்தமற்றதாய் இருக்கிறது. ஏனென்றால் கொடுங்களூர் அல்லது திருவஞ்சைக்களம் என்ற இந்த ஊர் கொச்சிக்கு வடக்கே 10 மைல் தொலைவில் கள்ளியம் பேரியாறு கடலில் கலக்கும் இடத்தில் இருக்கிறது. அந்த இடந்தான் நெடுவேள்குன்றம் என்றால் கண்ணகி நடந்துசென்றடைய மேலும் 15 நாட்கள் ஆகியிருக்கும். ஆகவே, அடியார்க்கு நல்லார் சொல்வதிலும் யதார்த்தமில்லை.

வரலாற்றறிஞர் மு. ராகவையங்கார் அயிரைமலைதான் நெடுவேள்குன்றம் என்கிறார்.

இவற்றையெல்லாம் மறுக்கும் தொமுசி ரகுநாதனும் கே முத்தையாவும் திருப்பரங்குன்றமே நெடுவேள்குன்றம் என்கின்றனர். திருப்பரங்குன்றம் என்பது மதுரையிலிருந்து ஒரே நாளில் நடந்து சென்று விடக் கூடிய தொலைவு. அதுவும் கூட சிலப்பதிகார வழிகாட்டு நெறிக்கு ஒத்துவரவில்லை.

பாவெல் பாரதி

வைகையின் தென்கரைவழியே 14 நாட்களில் சென்றடையக்கூடிய இடம் என்பது கூடலூருக்குத் தெற்கில் உள்ள வேங்கைக்கானல் என்ற மலைப்பகுதிதான். அங்கு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற பளியர் என்ற பழங்குடி மக்கள்தான் சேரமன்னனுக்குக் கண்ணகி சென்றடைந்த இடத்தைக்காண்பித்தனர். அவர்கள் இன்றைக்கும் அடர்த்தியாக வாழும் இடம் சுருளிமலையை ஒட்டிய வண்ணாத்திபாரை ஆகும். கண்ணகியைக் கணவனோடு விண்ணுக்கு அனுப்பிய பாரை “விண்ணேத்திபாரை.” அது வண்ணாத்திபாரை என மருவிவிட்டது. பளியர்களின் மிகமுக்கிய வழிபாடு கண்ணகிவழிபாடு. அது இன்றளவும் நிலை கொண்டிருக்கிறது. தமது குழந்தைகளுக்கு ‘கண்ணகி’ என்றும் ‘சிலம்பாயி’ என்றும் பெயரிடுகின்றனர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘மங்கலமடந்தைகோட்டம்’ பலசிதிலங்களோடு இன்றும் வழிபாட்டுத்தலமாக நிர்மாணம் கொண்டிருக்கிறது. சித்திராபௌர்ணமியன்று தமிழ்மக்களும் மலையாளதேசத்தவரும் அங்குவழிபாடு நடத்துகின்றனர். ‘மங்கலாதேவி கோட்டம்’ ‘கண்ணகிகோட்டம்’ என்றே இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது.

ஆகவே, சிலப்பதிகாரம் காட்டும் நெடுவேள்குன்றம் என்பது கோவிந்தராசனார் அடையாளம் காட்டும் தமிழக கேரள எல்லையில் கூடலூருக்குத் தெற்கே அமைந்த வண்ணாத்திப்பாரை வனப்பகுதியின் வேங்கைக் கானலே என்று முடிவுசெய்யமுடியும் என்கிறார் நூலாசிரியர் பாவெல் பாரதி.

தமிழ்த் தொன்மக்கூறுகளைக் கண்டறியும் ஆய்வுப்புலத்துக்கு ஓர் இளம் ஆய்வறிஞர் கிடைத்திருக்கிறார் என்று உறுதிபடக்கூறலாம். தொன்மங்களை ஆய்வுசெய்ய விரும்பும் இளம் அறிஞர்களுக்கு இந்நூல் வழிகாட்டிக்கையேடு என்றே சொல்லலாம்.

2 thoughts on “நூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..! – தேனிசீருடையான்.”
  1. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *