நூல்: கதை கேட்கும் சுவர்கள்…
ஆசிரியர்: உமா பிரேமன் | தமிழில் கே வி ஷைலஜா
வெளியீடு: வம்சி பதிப்பகம்
விலை: ₹380.00 INR*

தன்னுடைய சிறு வயதிலேயே பால்யத்தை இழந்து, வளரிளம் பருவத்தில் வாழ்வின் கசப்புகளை உள்வாங்கி, ஒரு தாயாக மாறிய பின் தன்னுடைய வாழ்க்கையின் புனிதத்தை இந்த மானுட சமுதாயத்திற்கு படைத்த திருச்சூரில் (கேரளா) சாந்தி மெடிக்கல் இன்பர்மேஷன் சென்டரைத் தொடங்கி நோயினால் புறந்தள்ளப்பட்டு கைவிடப்பட்டவர்களின் தாயாக விளங்கிக் கொண்டிருக்கின்ற உமாபிரேமன் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுதான் இந்த கதை கேட்கும் சுவர்கள் என்ற புத்தகம். இந்த புத்தகத்தை வெளியிட்டு பதிப்பக உலகில் தனக்கான மகுடத்தைச் சூட்டிக் கொள்கிறது வம்சி பதிப்பகம். மலையாளத்தில் எழுத்தாளர் ஷாபு கிளிதட்டில் அவர்கள் இந்த புத்தகத்தை எழுத, அதனை மிகச் சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தோழர் கே வி ஷைலஜா அவர்களுக்கு எனது நன்றி.

கோயம்புத்தூர் சிந்தாமணிப்புதூர் என்ற கிராமத்தில்தான் உமாவின் சிறுவயது வாழ்க்கை ஆரம்பமாகிறது. அப்பாவின் வழிகாட்டுதலோடும், அம்மாவின் அன்பை பெற ஆசப்பட்ட உமாவின் நம்பிக்கை ஒரு கட்டத்தில் அம்மா இன்னொருவரோடு ஓடிப்போனபோது அது நிலையற்றதாகிவிடுகிறது. தொடர்ச்சியாக ஒரு மில்லில் வேலை பார்த்துவரும் அப்பாவால் குழந்தைகளோடு இருந்து எல்லாவற்றையும் செய்து கொடுக்க முடியாத சூழல் உமாவின் அப்பாவால் ஏற்படுகிறது. அவ்வாறு இருந்தும் படிப்பினை பாதியில் கைவிட்டுப்போகாமலும் தம்பியை வளர்க்க வேண்டியகட்டாயமும் உமாவிற்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அப்பாவை மறுமணம் செய்து கொள்ள உமா கட்டாயப்படுத்த மகளுக்காக அந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். உமா தான் முதன் முதலில் பார்த்த சித்தியின் அன்பு பின்வரும் நாட்களில் தன்னுடைய வீடுகளில் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைய முடிகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில் தம்பியையும் தன்னையும் பக்கத்து கிராமத்திற்கு அழைத்துச் செல்லவரும் மனிதனுடைய மாமா மகன் ஹரியுடன் தன்னுடைய சித்திக்கு தவறான உறவு முறை ஏற்பட அந்த வாழ்க்கையும் ஏமாற்றம் தருகிறது.

வாழ்வின் துயரங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள சேவைசெய்யவேண்டும் என்ற எண்ணத்தில் கல்கத்தா சென்று #அன்னை_தெரசா அவர்களை சந்தித்து தனது வாழ்க்கையின் போராட்டங்களை எடுத்துச் சொல்கிறார். உமா சிறு வயதாக இருந்ததனால் அன்னை தெரசா அவர்கள் “உனக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு முதலில் சேவை செய்” என்று சொல்லி வழியனுப்புகிறார்.

பிறந்தநாள் | எழுத்தாளர் ஜெயமோகன்
கே. வி. ஷைலஜா

சட்டரீதியாக தன்னுடைய மகளை பெற்றுச் சென்ற உமாவின் அம்மா தனது கடன் சுமையை இறக்கி வைக்க உமாவை மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்க அங்கிருந்து பெரிய போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வருகிறார். மும்பையில் இருந்து திரும்பி வந்த மீண்டும் தன்னுடைய அம்மாவிற்கு நெருக்கமான பிரேமனின் (கேரளா) கட்டாயப்படுத்தப்பட்ட வாழ்க்கை சூழலில் சிக்கிக்கொள்கிறார்.

ஏற்கனவே பிரேமனுக்கு மூன்று மனைவிகள். பிரேமன்தான் தான் ஏற்கனவே விற்கப்பட்ட அந்த தொகையை செலுத்தி மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் என்பது பின்னொரு நாளில் பிரேமனே உமாவிடம் சொல்கிறார். பிரேமனின் மிக மோசமான குடிப்பழக்கத்தால் இறக்கக்கூடிய கட்டத்திற்கு வருகிறார். மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் பிரேமன் இறுதியில் நோய்க்கு தன்னுடைய உடலைப் பலி கொடுக்கிறார். பிரமனின் சொத்துக்கள் உமாவின் பேரில் எழுதி வைத்துவிட்டு இறந்தமையால் அந்த சொத்துக்களை மற்ற மனைவிமார்களுக்கும் உறவினருக்கும் பிரித்துக் கொடுத்து வாழ்வின் துயரப் பக்கங்களை அதன் மூலம் கழுவிடுகிறார் உமா.அதன்பின் தன்னுடைய மகன் சரத்சாகரை வைத்துக்கொண்டு பல இடங்களில் நோயுற்றவர்களுக்கு சிகிச்சை முறைகளை அறிந்தும், பல்வேறு மருத்துவரிடம் ஆலோசித்தும் திருச்சூரில் சாந்தி மெடிக்கல் இன்பர்மேஷன் சென்டரை அமைத்து வாழ்வில் கைவிடப்பட்ட மனிதர்களையும் நோயாளிகளையும் பிரியத்துடன் அழைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை முறையை அளித்து எண்ணற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறார் உமா பிரேமன் அவர்கள்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியோடு “இந்தியாவின் 100 தலைசிறந்த பெண்மணிகள் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் தானும் ஒருவராக விருந்தில் கலந்து கொண்டு சிறப்பு பெற்றவர் உமா பிரேமன்.

அவர் வாழ்வின் துயரங்களை, கொடூரங்களை,ரணங்களை ஆற்றும் மருந்து இல்லாத போது தன்னுடைய நம்பிக்கையை மட்டும் துணை கொண்டு அணையா விளக்காக திகழ்கிறார். தொடர்ச்சியாக இந்த புத்தகத்தை வாசிக்க வைக்கும் சிறப்பான எழுத்து நடையால் படித்து முடித்ததும் ஒரு பெரிய மௌனம் இறுதியில் தொற்றிக்கொள்கிறது. இவ்வளவு கொடுமைகளையும் சகித்துக்கொண்டு ஒரு பெண்ணால் இந்த வாழ்க்கையின் உச்சத்திற்கு வர முடியுமா என்று சொன்னால் நிச்சயமாக வரமுடியும் என்று சொல்ல முடிகிறது இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு. படியுங்கள் நண்பர்களே… வாழ்வின் துயரங்களை தன்னுடைய போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய இடத்திற்கு வந்து சேரலாம் அதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவலாம் என்று சொன்ன உமா பிரேமன் அவர்களின் எளிய மனிதர்களின் கலங்கரை விளக்காக திகழ்கிறார்.

– சீ.ப்பி. செல்வம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *