நூல் அறிமுகம்: *கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்* – பா. அசோக்குமார்நூல்: “கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்”
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
தொகுப்பு: கழனியூரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 80
விலை: ₹. 70.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ki-ra-thatha-sollum-kiramiya-kadhaikal-k-rajanarayanan/

“கதவு” கதை வாயிலாக என்னுள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வேரூன்றிய கி.ரா அவர்களின் மரணச் செய்தி அறிந்து துயருற்ற தருணத்தில் எடுத்து வாசிக்க துவங்கிய நூலே இது. அவரது படைப்பை வாசிப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலியாக கருதுகிறேன். இதுமட்டும் போதுமா??? நிச்சயமாக இல்லை தான்.
முன்னதாக “கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் மற்றும் பெண் எனும் பெருங்கதை ” முதலான நூல்கள் பல முறை வாசித்திருப்பினும் இந்நூல் இதுவரை வாசிக்காத ஒன்றே. எழுத்தாளர் கி.ரா அவர்களும் கழனியூரன் அவர்களும் இணைந்து நாட்டுப்புற கதைகளைத் தேடி தேடி சேகரித்து மண்ணின் வாசம் கமழ நூலாக படைத்துள்ளனர் என்பது எல்லோரும் அறிந்ததே…
ஓராயிரம் கதைகள் படிப்பறிவில்லாத எளியவர்களிடையே ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் வெறும் வாய்மொழி கதைகளாக வலம் வருகின்றன என்பதை உணர்ந்து அவற்றையெல்லாம் ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதே. அவ்வாறு தொகுத்த கதைகளிலிருந்து (BOOKS FOR CHILDREN) குழந்தைகளுக்கான நூல் தயாரிப்பிற்காக பாரதி புத்தகாலயத்தின் விருப்பத்தின் பொருட்டு பதிப்பிக்கப்பட்ட நூலே இது.
இந்நூலில் 21 கதைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் “கதை சொல்லல்” வடிவிலேயே அமைந்துள்ளன. சிறு குழந்தைகள் படிக்கும் வண்ணம் எளிய படங்களுடன் அமைத்துள்ள விதம் பாராட்டுத்தலுக்குரியது. கி.ரா அவர்கள் பேரக் குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கதை சொல்லி அழைத்துச் செல்கிறார்.
1995 -2000 ஆம் ஆண்டு வாக்கில் நான் படித்த பள்ளியில் நாளும் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்தில் எமது உடற்கல்வி ஆசிரியர் திரு.மலையாண்டி அவர்கள் இந்நூலிலுள்ள சில கதைகளைக் கூறியதாக ஞாபகம் பளிச்சிட ஒருவித இனம்புரியாத உணர்வு உண்டானதை அறிந்து வியந்தேன். கி.ரா அவர்களின் “நாட்டுப்புற கதைகள்” நூலைப் படித்து வந்து தான் கூறினாரா என்ற வியப்பிலே மிதக்கிறேன். “பேராசை பெருநஷ்டம்”, “வெள்ளை யானை” , “ராணி செய்த தந்திரம்” (அலாவுதீனும் அற்புத விளக்கும் -திரைப்படம்) ஆகியவையே அவர் கூறிய கதைகள் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு கதையின் இறுதியிலும் கூறப்படும் செய்திகளும் கருத்துக்களும் ரசிக்கத்தக்கவையாக அமைந்துள்ளன. “கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகல?” பாடலை நினைவூட்டதாக “ஒரு சித்தெறும்பின் மறைவு” கதை அமைந்திருந்தது. “குழிநரி” என்பது என்னவென்பது இதுவரை அறியாத ஒன்று. “ஊசியைத் தேடும் கோழி” கதை அதிஅற்புதமான காரணக் கதை. மனிதர்களின் கற்பனையூற்றை அளக்க இயலுமா???
அந்தக் கட்சிக்காகப் பாடுபட்டேன்… அவங்களால் வீழ்ந்தேன்!”- கலங்கும் கி. ராஜநாராயணன் – Thagadur.com
வெள்ளக் காக்கா -“போனா போனா போனா”, சொய் சொய் – “சொய், சொய்”, சித்தினி – “சித்தினி சித்தினி செத்தயா”, அஞ்சினான் அஞ்சாதான் -” கிணு கிணு” போன்ற சின்னஞ்சிறு வார்த்தைகளை (அடுக்குத் தொடர்) கதைகளினூடே அமைந்துள்ள விதம் சிறுவர்களை கவர்ந்திழுக்கக் கூடியதாகவே கருதுகிறேன். “எச்சில் மனிதன் ” மற்றும் “சொல்வன்மை” கதைகள் தெனாலிராமன் கதைகளை நினைவூட்டக்கூடியவை.
“எறும்புகள் பெற்ற வரம் ” கதை படிக்கும்போது வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவதற்கான கதை ஞாபகத்தில் வந்தது. “நிலவு குளிர்வதன் காரணம்” கதை மிக மிக நுட்பமான அணுகுமுறையின் வெளிப்பாடின்றி வேறில்லை. “முப்பத்தஞ்சி காலோட வந்தவன்” கதை புதிர் வகையில் அமைந்த ஒன்று. “அந்த நிலாவைத்தான்” கதை மட்டுமே சோகத்தில் முடிந்த ஒன்று.
இங்ஙனம் இந்நூலிலுள்ள 21 கதைகளும் நிச்சயமாக சிறுவர்களை கவரும் என்பது திண்ணம். சிறுவர்களுக்கான கதைகள் தானோ இவையென்று எளிதில் சுருக்கிவிட முடியாத கதைகளே இவை. நாமறியாத பல தகவல்களை சுவாரஸ்யமான முறையில் அமைந்துள்ள கதைகளே இவை.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை ஒழிந்து கதை சொல்லுதலும் மருகி வரும் இக்காலத்தில் இதுபோன்ற கதைகளை முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் படிக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். குழந்தைகளுக்கு என்ன கதை சொல்லலாம் என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு இந்நூல் நிச்சயம் ஒரு வரமே. பேச்சு வழக்கில் அமைந்துள்ள விதம் கூடுதல் சிறப்பே. வாசித்துக் காட்டினாலே கதை கூறுவது போலவே தோன்றும்.
காலங்காலமாக மக்களின் புழக்கத்தில் உள்ள சொலவடைகளுடன் கதைகளை கூறிய விதம் போற்றுதலுக்குரியது. இயற்கையை உற்றுநோக்கி அவர்களின் கற்பனாசக்தியுடன் இணைத்து தொன்றுதொட்டு கூறி வந்த கதைகளை எழுத்துவடிவில் அமைத்து இனிவரும் காலங்களில் வாழும் யாவரும் படித்து பயன்பெறும் வண்ணம் மெனக்கெட்டு உழைத்த கி.ரா அவர்களுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் தகுமோ…
அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி. கி.ரா. அவர்களின் நூல்களை வாசிப்போம். பயன்பெறுவோம்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.நன்றி.
பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.