பிச்சுமணியின் கவிதை
பகுத்தறிவுக் கிழவனே
வெண்தாடித் தலைவனே..
ஓய்வறியாமல்
ஓடி ஓடி மானத்தையும் அறிவையும்
விதைத்த கிழவா

யார் சொல்லினும்
மெய் சொல் காண் என்றார்
தமிழ்வள்ளுவர்

எதனையும் சந்தேகி என்றார்
பேராசான் மார்க்ஸ்

அறிவையும் மனத்தையும்
விதைத்துச் சென்ற நீயும்
அதையே சொன்னாய்..

மனிதன் மானம் கொள்ள
தமிழ் மண்ணில் வழித்தடம்
அமைத்தவன் நீ

நீ போட்ட வழித் தடத்தில்
நடை பயின்றது தமிழகம்
சிலர் வழி மாறியிருக்கலாம்
சிலர் விழி மூடி நடக்கலாம்
ஆனாலும் உன் வழித்தடம்
மாறாமல் இருக்கிறது

1900 வரை
ஆதிக்கத்துக்கு எதிராய்
சுயமரியாதைப் போர் புரிந்த
ஒட்டுமொத்தப் போராளிகளின்
அடையாளமாய் நீ நிற்கிறாய்..

உன் வழித்தடம்
மிக மிக நீண்டது..
அது பயணித்துக் கொண்டே இருக்கிறது

பிறப்பில் பேதம் பேசினால்
உன் கைத்தடியே முதலில்
வாள் வீசுகிறது

உரிமைகளை யார் தடுத்தாலும்
உன் குரலே முதலில் எதிர்த்து ஒலிக்கிறது

யோ.. கிழவா..
உன்னை மறுதலித்து விட்டு
இந்த மண்
சமூகநீதி பேச முடியாது
பெண்ணியம் பேச முடியாது
சுயமரியாதை பேச முடியாது
பகுத்தறிவு பேச முடியாது.

பகுத்தறிவுக் கிழவனே
கருப்புச் சட்டைத் தலைவனே.
கடைக்குட்டிப் பேரன்கள்
வாழ்த்துகள் செய்திகள்
குவிந்து கிடக்கின்றன
வா.. வந்து பார்..

– பிச்சுமணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.