ஒரு மொழியிலுள்ள கவிதைகளை மற்றொரு மொழியில் மொழி பெயர்ப்பது கடினம், முடியவே முடியாது என்றெல்லாம் ஓர் உண்மை போலச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அன்றுதொட்டு இன்றுவரை ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகளை ஆர்வத்தோடு தேடிப் பிடித்துப்படிக்கிற வாசகர் கூட்டமும் குறையாமல் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.. இதற்கு என்ன காரணம்? தம் மொழிக் கவிதைகளில் காணக் கிடைக்காத ஏதோ ஒன்று எப்படியோ மொழிபெயர்க்கப்படும் பிற மொழிக்கவிதைகளில் காணக் கிடைக்கிறது என்றுதானே பொருள். இப்படித்தான் இந்தக் கொரிய மொழிக் கவிதை மொழிபெயர்ப்பிலும் நமக்குப் பரிச்சயம் இல்லாத முதற்பொருளான நிலமும் பொழுதும் கூடவே கருப்பொருட்களும் அவற்றை எழுத்தில் பொருத்தும் விதமும் பளிச்செனப் புத்தம் புதிதாய்த்தோற்றம் காட்டுவதால் கவிதை தரும் அழகியல் சுவை எளிதாகக் கிடைக்க வழி ஏற்படுகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. எப்பொழுதுமே எழுத்துக்கு அழகியல் நுண்ணுணர்வு வந்து அமைவது இத்தகைய பரிச்சயம் இல்லாத பின்புலங்களால்தான் .இவை மொழிபெயர்ப்புக் கவிதைகளில் கூடுதலாகக் கிடைக்கின்றன.

நினைவென்பது
வெற்று இருக்கையொன்றில் அமர்தல்
மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் அமர்தல்.

நாமும்தான் மலர்களை மாய்ந்து மாய்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இப்படியான ஒரு புதுமையான அனுபவத்தை மொழிபெயர்ப்புகள்தானே கொண்டுவருகின்றன.

மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில்

நெல் வயலின் மீது
விழும் மலை நிழலில்
அசையாமல் நிற்கிறது
முதிய அன்றில்

முதிய அன்றிலின் உடலைத்
தயக்கத்துடன் கடந்துபோகிறது
ஓர் ஆழ்ந்த யோசனை.

இப்படி எழுதும்போதுதான் கவிதை நம்மைப் பேய் மாதிரி பிடித்தாட்டுகிறது.

கடிகாரத்தையும் இரயிலையும்
கண்டு அஞ்சினேன்…
அப்போது நான் இளையவள்
சுவர்களுக்கிடையில்
பிரேதம் இருக்குமோ
என்று கூடக் கலங்கினேன்
இது ஒரு பொதுக் கற்பனை
அப்போது…

சில நேரங்களில்
எனக்கொரு குழந்தை வேண்டும்
என நினைப்பேன்
பயங்கரமான எண்ணம்தான்…

கைவிடப்பட்ட இரயில்பாதையைப்
பின்தொடர்ந்த படி நடக்கிறான்
அதிர்ஷ்டமில்லாத ஒரு மனிதன்.

எனக்கு இந்தப் படிமத்தைப் படித்தவுடன் இந்தக்கோவிட் – 19 – காலத்தில் நமது அரசுகளால் கைவிடப் பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரயில்பாதையில் அடிபட்டுச் செத்த காட்சிகள் நினைவுக்கு வந்தன. வேறொரு காலத்தில், வேறொரு சூழலில் எழுதிய கவிதை நிகழ்காலத்தை நினைவுக்குள் கொண்டுவரும் போது அந்தக் கவிதை நிலைபேறு அடைகிறது. அந்த வேறொரு சூழல் என்ன என்பதை அறிய மொழிபெயர்ப்பாளர் இரவிக்குமார் எழுதியுள்ள”கொரிய மலர்களின் நறுமணமும் ரத்தத்தின் சுவடுகளும்” என்ற முன்னுரை பெரிதும் பயன்படும். இந்தக் கவிதைகளை வாசிக்கப் புகும் வாசகர்கள் முதலில் இரவிக்குமாரின் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டும். கொரியா ,சப்பான் ஆட்சியின் கீழ் பட்ட கொடூரங்களின் வரலாற்றையும் போராட்டங்களையும் தியாகங்களையும் கூடவே கொரிய மொழி இலக்கிய வரலாற்றையும் தமிழில் கொரியா இலக்கியத்தை இதற்கு முன்பு அறிமுகப்படுத்தியவர்கள் வரலாற்றையும் மிகத் தெளிவாக அந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. கல்பனாவின் “வியக்க வைத்த கொரியக் கவிதைகள்” என்ற கட்டுரை கொரிய மொழித் தொலைக்காட்சித் தொடரின் அற்புத எடுத்துரைப்பு, எவ்வாறு கொரியக் கவிதைகளைத் தேட விரட்டியது.

மீனின் பாடல்

தேடியவற்றை மொழிபெயர்க்க வைத்தது என்பனவற்றை நயம்படச் சொல்லுகிறது. கல்பனா தொகுத்த கவிதைகளை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு தனித்தனியாக மொழி பெயர்த்துள்ளார்கள். பிறகு இருவரும் அமர்ந்து மொழிபெயர்த்தவற்றைச்சரி பார்த்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள். இரண்டாண்டுக்கு மேல் உழைத்துப் பெரிதும் கவனத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள். இருவருமே கவிஞர்கள், பேராசிரியர்கள் என்பதால் இந்தக் கடும் முயற்சி சாத்தியமாகி இருக்கிறது. இந்த அனுபவம் காரணமாக ரவி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். கவிதை மொழிபெயர்ப்பை இருவர் சேர்ந்து செய்தால் தான் சிறப்பு என்கிறார். தமிழ்மொழிபெயர்ப்புச்சூழலில் எண்ணிப்பார்க்க வேண்டிய யோசனை. மற்றொரு கருத்தையும் முன்மொழிகிறார். “ஒரே பாடுபொருளை, பழக்கப்பட்ட வடிவங்களை எழுதி எழுதி நம் கவிஞர்கள் செக்கு மாடுகள் போல் ஆகி விட்டனர். தமிழ்மொழிக்கும் புதுஇரத்தம் பாய்ச்ச மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் மேலும் மேலும் பெருகவேண்டும்.”-என்கிறார். உண்மைதானே.

ஆங்கிலம் வழியாகத்தான் இந்த மொழிபெயர்ப்பு நடந்துள்ளது. இருவருக்குமே மூல மொழிப் பரிச்சயம் இல்லை. இந்நிலையில் ஓரிடத்தில் இரவி இப்படி எழுதுகிறார்::”ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் கூடக் கைப்பற்ற முடியாத சில த்வனிகளை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம் என்பதாகவே கருதுகிறேன்”. இந்தக் கூற்றுக்குச் சார்பாகத் தமிழ், கொரிய மொழிக் கவிஞர்களின் உணர்வுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் கருதுகிறார்.. இத்தகைய கூற்றுக்களைக் கொரிய மொழி பரிச்சயம் இல்லாமல் முன்வைப்பது மிகைதான்.

மற்றொரு முக்கியமான செய்தி. ஏறத்தாழ 32 கவிஞர்களின் 68 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளனர். கவிஞர்களைப் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. பாராட்டவேண்டும். அதே நேரத்தில் கவிஞர்களின் பெயரைத் தமிழில் தராமல் ஆங்கில மொழி எழுத்திலேயே தந்துள்ளனர். அது ஏனென்றும் விளக்கம் இல்லை. கொரிய மொழி உச்சரிப்பைக் கொடுக்க இயலாதபோது, ஆங்கில எழுத்தின் வழியிலான உச்சரிப்பையாவது கொடுப்பதுதான் கவிதை வாசகரிடையே பரவி நிலைபெற வாய்ப்பாக அமையும். மேலும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெறும் நூல் குறித்த விவரமும் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

புத்தக வெளியீடு #3

இரவியும் கல்பனாவும் சென்னை, கிறித்துவக் கல்லூரியால் வார்த்தெடுக்கப்’ பட்டவர்கள். மேலும் பேரா. பாரதிபுத்திரன் முன்னின்று நடத்திய “வனம்” என்கிற கவிதை வாசிப்பு அமைப்பில் இருந்து வளர்ந்தவர்கள். எனவே கவிதை மேல் மோகம் கொண்டவர்கள். நல்ல கவிதைகளைச் சொல்லிச்சொல்லி எச்சில் ஊற ஊறச் சுவைத்துவிழுங்குகிறவர்கள். சமூகப் பார்வையும்கூட வே கொண்டவர்கள் என்பதால் தொகுப்பு முழுவதும் நெஞ்சை அள்ளும் நல்ல கவிதைகளால் நிரம்பிக்கிடக்கிறது. அவர்கள் பணி தொடர வேண்டும்.

நூல் விவரம்:

பா.இரவிக்குமார் – ப.கல்பனா-(மொ.பு) மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில், -கொரியக் கவிதைகள், (2019) பரிசல் வெளியீடு, சென்னை-5. பக்.136.
விலை. ரூ.150.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *