நூல் அறிமுகம்: மனம் உதிரும் காலம் (கவிதை நூல்) – விஜயராணி மீனாட்சி.

நூல் அறிமுகம்: மனம் உதிரும் காலம் (கவிதை நூல்) – விஜயராணி மீனாட்சி.



மனம் உதிரும் காலம் 

(கவிதை நூல்)

ஆசிரியர்: கல்பனா ரத்தன்

கல்பதரு பதிப்பகம்

விலை. ரூ.100/-

 

“மனம் உதிரும் காலம்”

பெண்ணுக்குள் என்ன இல்லை? எல்லாமே அவளுள் அடக்கம். அப்படித்தான் அத்தனை உணர்வுகளையும் அழகோவியமாய் சொற்சிற்பம் செதுக்கியிருக்கிறார் கலௌபனா ரத்தன்.  நாற்பதுகளில் இருப்போர்க்கு    (1980-களின்) பட்டுக்கோட்டை பிரபாகரைத் தெரியாமல் இருக்க முடியாது. அவரே அன்பாய் அழகாய் அணிந்துரை தந்திருக்கிறார். 

“பூனையை பூனையாய்

ரசிக்கும் உலகம்,

யானையை பொம்மையாய்

கையாள்வது வலிமிகு சாபம்” 

என்பதில் தொடங்கி,

நிறைவுக் கவிதை வரை எந்தக் கவிதையை குறிப்பிட்டுச் சொல்வது?  அத்தனையிலும்  உளவியலை ஊடுருவிச் செல்கிறார்.  

கண்ணம்மாக்கள் (அநேகமாக நாற்பதுகளில் இருப்பவர்கள்) பால்ய நினைவுகளை தங்கள் பருவ வயது மகள்களில் மீட்டெடுப்பதையும் அந்தக் காலம் போல வருமாவென இந்தக்கால ஆண்ட்ராய்டுகளில் தங்கள் தோழிகளிடம் அங்கலாய்ப்பதும் அப்பட்டமான உண்மை.  அதேநேரம் புயல் சாய்த்த பெருமரங்களாய்க் குப்புறக்கிடக்கும் கண்ணம்மாக்களின் பச்சையம்வீசும் பதின்மக்கனவுகளின் சிதைவு மென்சோகம் கடத்துகிறது. 

அயல்தேசக் கணவனுடனான காமமும் தாபமும் இறக்குமதி செய்யப்படும் அலைபேசித் தொடுதிரையாகட்டும் சமயத்தில் ஒற்றை “ம்” மிலேயே ஊடல் தணிக்கும் உரையாடலாகட்டும் அற்புதம். 

அன்பை எத்தனை பேர் எத்தனை விதமாகக் கூறினாலும் இன்னும் போதாமையில் தான் கிடக்கிறது. அந்த அன்பை இப்படிச் சொல்கிறார்.

“அன்பு கூட

சமயங்களில் 

அனாதையாய்

ஆளற்ற தீவில்

பொழியும்

ஆரவார மழையாய்!”

இப்படியும்

பிறகு

“அன்பெனப்படுவது

யாதெனில்

அன்பென்ற 

பிரக்ஞையற்று இருத்தல்”

என்றும் போகிறபோக்கில் கனம்பொருந்திய தத்துவமாய்த் தருகிறார்.



பெண்ணியம் பேசும் கவிதையில் கூட மென்மையைத்தான் கையாள்கிறார். 

“ஏதேனும் பேசச்சொல்கையில்

….என் ரசனைகளின் 

வேர்களை நசுக்கும்

உன் கால்களை

சற்று நகர்த்திவிட்டு” என்று.

மற்றொரு கவிதையில் ஒரு புன்னகைக்குக்கூடப் போராட வேண்டிய நிதர்சனத்தை உணர்த்துகிறார்.  பிறிதொன்றில் கதவை ஊடகமாக்கியிருப்பது அதிலும் மூதாதையர் தொடங்கி மகள் வரையிலான வாழ்வியல் வரையறையில் ஒருபோதும் அவர்கள் வசம் கதவின் சாவிகளில்லை எனும் கனம்செறிந்த கவிதை கி. ரா அவர்களின்  “கதவு” கதையைப்போல் கதவென்பது உணர்த்தும் படிமம் சாலப்பொருத்தம். 

 மழைக்கவிதைகளும் குழந்தைக் கவிதைகளும் அருமை. 



அத்தனை கவிதைகளுமே குறிப்பிடப்படவேண்டியவை தான் எதையும் விட்டுவிடமுடியாதபடி.

முத்தாய்ப்பாக இன்னுமொன்று சொல்லிவிடத்தோன்றுகிறது. 

“அடுத்தவரை புத்தனாக்க

முயற்சிக்கிறோம்

ஆயுதங்கள் கையிலேந்தி”

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *