கோணங்கி த. மு. க. எ. ச. வின் கௌரவ தலைவராக இருக்கும் ச. தமிழ்செல்வனின் சகோதரர். இந்தப்புத்தகத்தை வாங்கியதை நண்பர்களிடம் குறிப்பிடும்போது, கோணங்கியின் எழுத்து நமக்கெல்லாம் புரியாதுங்க, அவர் என்ன சொல்ல வர்ரார்ன்னு ஒன்னும் புரியாதுங்க என்று எதிர்மறையான மதிப்பீடுகளை மனதில் வைத்துக்கொண்டுதான் புத்தகத்தை வாசிக்கத்துவங்கினேன். ஆரம்பத்தில் கஷ்டப்படுத்திய அவரின் எழுத்து வாசிக்க வாசிக்க என்னைப் பிரமிக்க வைத்துத்தான் உண்மை. இருந்தாலும் முழுவதுமாக என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்ற உண்மையை நேர்மையாக ஒத்துக்கொள்கிறேன். இதுவரைக்கும் நான் வாசித்த எழுத்துக்களில் மிகவும் வேறுபட்ட சுவையைத் தந்தது இவரின் எழுத்து. அரைகுறையாய் புரிந்ததே இவ்வளவு பரவசத்தைக் கொடுத்தது என்றால் அவரை முழுதும் உள்வாங்கினால், அந்த சந்தோசத்திற்கு அளவே இருக்காதென்றுதான் நினைக்கிறேன்.

மதினிமார்கள் கதை 
********
பல ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுப் போனவன் தன் ஊருக்குத் திரும்பும்போது அவனில் ஏற்படுகிறது நினைவலைகள்தான் கதை. செம்பகம் சிறு வயதிலேயே தாயை இழந்து கூலி வேலை செய்யும் தந்தையின் ஆதரவில் இருக்கிறான். தந்தை வேலைக்கு போனபின்னர் அந்த தெற்குத்தெருவில் உள்ள திருமணமாகாத பெண்களின் அன்பில் இவனது இளமைக்காலம் நகர்கிறது. ஆவுடைதங்க மதினி, சுப்பு மதினி, புஷ்பம் மதினி காளியம்மா மதினி, அமராவதி மதினி, குருவு மதினி, இப்படி நிறைய மதிங்களுடன் மாணிக்க மதினியும்.
இத்தனை பேரையும் பார்க்கப்போகும் போது பஸ்ஸிற்குள் சந்தோசம் துள்ளிக்குதித்தது.

மாணிக்க மதினிக்கு ஒரு குருக்கம்தான் நிலம், ஆனால் அந்த நிலத்தில அவ மனசு போலவே எல்லா வகை தானியத்திற்கும் இடம் வைத்திருந்தாள். காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.
தெற்குத்தெருவில் போய் பார்க்கும்போது ஒருவர்கூட இல்லை, தன் தந்தையின் உடல்நலத்துக்காக ஆசாரிபள்ளம் போகும்போது குருவு மதினி இவனையும் உடன் அழைத்துச் சென்று, திரும்பி வரும்போது இவனுக்கு புது சட்டை டவுசரும் சட்டையும் எடுத்து கொடுத்து அழைத்து வந்த அந்த குருவு மதினி வீட்டின் முன் போய் நின்றான், “இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டுவரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. தெருவே மாறிப்போய் குருணையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை, தெருவே காலியாகிவிட்டது. இவனைத்தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
எல்லாம் இழந்தவன்போல் ஆட்டுக்கல்லில், முகத்தில் வடிந்த அசடை துடைத்துக்கொண்டு அமர்ந்தான். சாதி வேறுபாடு இல்லாத, பார்க்காத எளிய கிராமம் அழிந்து புதிய தலைமுறை கிராமம் உண்டாகியுள்ளது. அப்படிப்பட்ட மதினிமார்கள் இல்லாத கிராமம் இவனுக்கு பிடிக்காமல் நகர பெருஞ்சுர்களுக்குள் மறைந்து போகும் அன்பிற்காக எங்கும் செம்பகம் நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறான்.

மின்னம்பலம்:நவீன நாடகம் : என் பெயர் ...
கோணங்கி

மாயாண்டிகொத்தனின் ரசமட்டம் என்ற கதை, ஊரில் வாஸ்து சாஸ்திரம் பார்த்து, நில அமைப்பைப் பார்த்து கட்டிடம் கட்டும் மாயாண்டி கொத்தன் நகரத்தில் உயர உயரமாக எழும்பிக்கொண்டிருக்கும் கட்டிட வேலைக்கு வருகிறான். இங்கு இருக்கும் என்ஜினீயர் வரையும் கோடுகளுக்கேற்ப கட்டிடம் கட்டவேண்டியுள்ளது. இங்கு இருக்கும் சமநிலையற்றத் தன்மையைச் சகிக்க முடியாமல் தவிக்கிறான்.
கருப்பு ரயில் என்ற கதையில் கரிசல் பகுதிகளுக்குத் தீப்பெட்டி தொழில் பரவாமல் இருக்கும்போது இருந்த கிராமத்தின் சந்தோசத்தை எழுதுகிறார். சின்னக்குழந்தைகளின் விருப்ப விளையாட்டான ரயில் விளையாட்டை விவரமாக எழுதுகிறார். அந்த ரயில் போகும் பாதைகளில் நிறைய ஸ்டேஷன்கள் வருகிறது, ttr, டிரைவர், டிக்கெட் கொடுப்பவர் போன்றோர் எல்லாம் வருகிறார்கள், ரயில் கம்மாய்க்கு சென்று எல்லோரும் குளித்து மகிழ்ந்ததையெல்லாம் எழுதிவிட்டு, அந்த கம்மாய்கள் நீரின்றி இருப்பதும், இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம் தீப்பெட்டி ஆபிஸ் வேலைக்கு போய் விளையாட்டு தனத்தை மறந்து தீப்பெட்டிகளில் போட்டு மூடிவைத்த பொன்வண்டுகளாகிப்போனார்கள் என்று வருத்தப்படுகிறார்.

இருட்டு என்ற கதையில் ஒரு குடும்பத்தின் ஏழ்மையின் கொடுமையைக் குறிப்பிடுகிறார். கரிசல் பகுதி மக்களின் நிலைமையை கண்முன் நிறுத்துகிறார். இந்தக்கதையில் கோணங்கியின் எழுத்தை அவ்வளவு ரசிக்கலாம். ஒரு விளக்கு சிமிலியைப் பற்றி இரண்டு பக்கத்திற்கு எழுதுகிறார், வாசிக்கச் சலிக்கவில்லை, “சின்ன பாப்பாவுக்கு வீட்டு விளக்கு மேல் ரொம்ப பிரியம். காற்று வருகிறது மாதிரி தெரிந்தால் சின்ன கைகளைக்கூட்டி அணையாமல் பார்த்துக்கொள்வாள், ஆனால் காற்றுக்கு ஏமாற்றத்தெரியாதா என்ன, தட்டிக்கதவைத்தாண்டி, தாழ்வாரத்தைத் தாண்டி, மேல சுவத்துல ஏறி குப் என்ற சத்தத்துடன் அனைத்துவிடுகிறது இந்த பொல்லாத்தக்காற்று ”
“அந்த விளக்கினால் சுவரில் ஏற்படுத்தப்பட்ட கரித்தடம் சதுக்கபூதம் மாதிரியிருக்கு ”
இறுதியில் தங்களின் வறுமையைப் போக்க சின்னப்பாப்பாவின் கொலுசை விற்று அந்தக் குடும்பம் ஊரை விட்டு வெளியேறுகிறது.

கானல் நதி என்ற கதையில் சென்னம்மா மாடுகளை மேய்ச்சலுக்கு நடத்திப்போகிறாள். அங்கே மாடுகள் மேய்ந்த இடங்களிலேயே மேய்ச்சல் இல்லாமல் கூட மேயவேண்டியுள்ளது. ஆங்காங்கே உணவுக்காக எலிகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர், சென்னம்மாவும் எறும்பு புற்றைத் தேடிக்கண்டுபிடித்து, அதை வெட்டி எறும்புகள் சேகரித்து வைத்திருந்த தானியங்களைச் சேகரித்து உணவுக்காகக் கடகத்தில் சேர்த்துவைத்துக்கொள்கிறாள். தாகத்துக்குக்கூட தண்ணியில்லாமல் இருக்கும் அந்தக்காட்டில் இவளின் வயதான மாடொன்று அமர்ந்து எழமுடியாமல் சிரமப்படுகிறது. இரவு இவளின் அய்யா தரகனை அழைத்து வந்து அந்த மாட்டை விற்கும்போது விசனப்படுகிறாள்.
“காடு விளையாமல் போனாலும் கானல் நீர் ஆறாக ஓடினாலும் சூரியனே தலையில் விழுந்து எரிந்தாலும் பசுஞ்சாணத்தால் வீடு மெழுகினால்தான் வீட்டில் வெக்கரிப்பு இராது ”
“கிணற்றில் நீர் சேந்தியவர்கள் மூச்சுக்கு மூச்சு கஷ்டத்தை உணர்ந்து கொண்டிருந்தார்கள், இதற்காக மூக்கு வலிக்கச் சினந்துகொள்ள முடியாது, கயிறு எட்டாமல் போனதை நினைத்து ஆத்திரப்பட முடியாது, ஒட்டு ஒட்டாய் முடிந்த பதினாலு கெஜ கயத்துக்கு மேலும் துண்டால் முடியவேண்டியிருந்தது ‘

மதினிமார்கள் கதை

தணல் என்ற கதை. நல்ல டெய்லராக இருந்த சந்தானம் உடல்நலமில்லாமல் வீட்டில் உட்கார்ந்துள்ளான், அவனின் மகள் காய்ச்சலால் இறந்துபோக, சந்தானம் மிகவும் அரண்டுபோகின்றான். தன்னிடமிருந்த தையல் மிஷினை தன் உதவியாளனான தானப்பனிடம் கொடுத்து எங்காவது போய் பிழைத்துக்கொள் என்கிறான். அவனுடைய மனைவி செல்லம்மா கைக்குழந்தையுடன் வீடு வீடாகச்சென்று குழந்தையின் பசியைத் தணிக்கக் கெஞ்சுகிறாள், ஒருவரும் உதவ முன் வரவில்லை, குழந்தையோ அழுகிறது, அந்தநேரம் பார்த்து சவுரி முடிக்காரன் வருகிறான், தன்னுடைய அழகான கூந்தலை அவனிடம் விற்பதற்குத் தயாராகிறாள். இந்தக்கதையில் கோணங்கியின் எழுத்து அற்புதமாக இருக்கும்.
“அந்தக் கடைசி நம்பிக்கையையும் படிக்கட்டில் போட்டு உடைத்துவிட்டாள், பெரிய வீட்டம்மாள் நிற்கவிடாமல் விரட்டுகிறாளே ”

கழுதை யாவாரிகள் என்ற கதையில் அய்யன் என்ற ஏகாலி, அவனது மனைவி சுந்தரி, அவர்களுடைய படித்த மகன் ராசப்பன். தன்னிடமிருந்த கழுதைகளை விற்கப்போகும் அய்யன் தரகர்களால் ஏமாற்றப்படுகிறான், அவன் மகன் ராசப்பன் படிப்பிற்காக அந்தக்கழுதைகளை விற்கிறான். ராசப்பன் வேலைக்குச்செல்கிறான், போஸ்ட் மேன் வேலை. ஒரு பெரிய பொதியைச் சுமந்த மாதிரி இவன் தினமும் தபால்களைச் சுமக்கிறான். இவர்களின் கழுதைகளைப் பார்க்க நேரிடுகிறது, அவைகள் இப்போது துணி மூட்டைக்குப் பதிலாக மணல் மூடைகளைச் சுமக்கிறது. இதில் நேரடியான கதையைச் சொல்லவரவில்லை கதாசிரியர். இயல்பு அழிந்து மாறிப்போகும்போது அவமானங்கள்தான் மிஞ்சும், அந்த அவமான சுமைகளைத் தாங்கிச் செல்வோர்களால் இந்த பாதைகள் நிரம்புகின்றன. அப்படி அடுத்தவரின் ஆணைகளுக்காக நடப்பவர்களுக்கு எப்போதும் சொந்தப்பாதைகளை தீர்மானிக்கமுடியாது.

கோணங்கியின் எழுத்து அற்புதமான எழுத்து, வாக்கியங்களின் பொருள் நம்மை ஒரு புதிய புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. நான் படித்தவரை இதுபோன்ற எழுத்துக்களை இதுவரை சந்தித்ததில்லை. என்னுடைய புரிதல் அளவுக்கேற்ப எழுதியுள்ளேன், திறமையானவர்கள் இன்னும் மேலேறி கோணங்கியின் அற்புத உலகத்தைக் காணமுடியும் என்று நம்புகிறேன்.

நூல் ==மதினிமார்கள் கதை

நூலாசிரியர் =கோணங்கி

பதிப்பு =பாரதி புத்தகாலயம்
விலை =ரூ =80/

அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *