சின்னான் என்றொரு விறகு வெட்டி
தினமும் போவான் காட்டிற்கு
ஆற்றின் கரையில் மரம் வெட்டி
விற்று வாழ்க்கை வாழ்ந்திருந்தான்
ஒரு நாள் மரம் வெட்டும் நேரத்தில்
பசியும் தூக்கமும் போட்டியிட
இரும்புக் கோடரி கை தவறி
விழுந்தது ஆற்றின் தண்ணீரில்
கோடரி இல்லையேல் விறகு இல்லை
உணவிற்கு வேறு வழி இல்லை
எப்படி வாழ்வது இனி என்று
துக்கித் தவித்தான் சின்னான்
கருணை கொண்ட வன தேவதை
தோன்றினாள் அவன் முன் கனிவோடு
சின்னான் நிலையைப் புரிந்து கொண்டு
குதித்தாள் ஆற்றில் பரிவோடு
வெள்ளி்க் கோடரி கொண்டு வந்தாள்
ஏற்றுக்கொள் இதை என்றாள்
இந்தக் கோடரி எனதல்ல என்று
ஏற்க மறுத்தான் சின்னான்
மீண்டும் ஆற்றில் மூழ்கிய தேவதை
வந்தாள் தங்கக் கோடரியுடன்
தேவை எனது இரும்புக்கோடரி என்று
வாங்க மறுத்தான் சின்னான்
சின்னான் நேர்மையில் மகிழ்ந்து அளித்தாள்
தங்கம் வெள்ளி இரும்புக் கோடரியை
வளமுடன் நலமும் பெற்று வாழ
வரமளித்து மறைந்தாள் தேவதை.
கே.என்.சுவாமிநாதன், சென்னை
10-06-2023