Movie Review: Jivan Sandhya Marathi Movie Review By Era. Ramanan. திரை விமர்சனம் ஜீவன் சந்தியா இரா. இரமணன்




நவம்பர் 9ஆம் தேதி வெளிவந்துள்ள மராத்தி மொழிப் படம். தீபக் பிராபகர் மன்டாடே எழுதி இயக்கியுள்ள முதல் படம். அசோக் சராப்,கிஷோரி சஹானே, சமீர் தர்மதிகாரி, ருசிதா ஜாதவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தவர் ஜீவன் அபயங்கர். ஓய்வு பெற்ற நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். தன் மகன் அங்கூரை சிரமப்பட்டு வளர்த்து நல்ல பணியில் அமர உதவியிருக்கிறார். மருமகளிடம் மிகவும் அன்பாயிருப்பவர். அவர் சந்தியா ஜோஷி எனும் பெண்மணியை சந்திக்கிறார். அவர் இள வயதிலேயே கணவனை இழந்து ஒரே மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இப்பொழுது முதுமையின் தொடக்கத்தில் தனியே இருக்கிறார். அவரது மகள் அவரிடம் பெரிய ஒட்டுதல் எதுவும் இல்லாமல் வேறு நகரில் கணவனுடன் வசிக்கிறார். அப்யங்கார், சந்தியா இடையே அன்பு ,காதல்,பற்று என்று உறவு மலர்கிறது. கேள்வி கேட்கும் மகனிடம் தங்களுக்கிடையே இருப்பது பக்தி என்கிறார். இதை அவரின் மகனும் அவளது மகளும் ஏற்காமல் எதிர்க்கிறார்கள். அங்கூரின் மனைவி பிரதீபா, அப்யங்காரின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறாள். ஆனால் அங்கூர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தியாவுடன் வாழ்வதில் உறுதியாக இருக்கும் அப்யங்கார், குடும்பத்தை விட்டுப் பிரிந்து அவளை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். சந்தியாவின் குடியிருப்பு நண்பர்கள் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
Jivan Sandhya (2021) Review: A Bit Messyஐந்தாண்டுகள் ஓடுகிறது. திடீரென அவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. சிகிச்சைக்கு பணம் இல்லை. சந்தியாவின் நகைகள் அனைத்தையும் விற்றும் போதவில்லை. மகள் உதவி செய்ய மறுக்கிறாள். அப்யங்காரின் மகன் உதவி செய்கிறான் -சந்தியா அவரை விட்டுப் பிரிய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் சிகிச்சை முடிந்து மகன் வீட்டிலேயே தங்க வேண்டியதிருக்கிறது. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சந்தியா சொத்தில் பங்கு கேட்பாள் என்று கூறி அவளை விவாக ரத்து செய்ய வேண்டும் என்கிறான். அவனுடைய மகிழ்ச்சிக்காக அதையும் செய்கிறேன் என்கிறார். ஆனால் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. அவரைக் கவனித்துக்கொள்ள சந்தியாவே நர்சாக வருகிறாள். சந்தியாவை அங்கூர் சந்தித்ததே இல்லை என்பதால் பிரச்சினை எதுவும் இல்லை. (தமிழ்த் திரைப்படம் ‘பாலும் பழமும்’ காட்சிகள் நினைவுக்கு வரலாம்.) மகிழ்ச்சியாக வாழ்க்கை ஓடுகிறது. அவர் இறக்கும்போது அங்கூர் சந்தியாவை தாயாக ஏற்றுக்கொள்கிறான். ஆனால் சந்தியாவும் அவருடனே இறந்துவிடுகிறாள். இப்படி படம் முடிகிறது.

இந்தக் கதையை பார்க்கும்போது பழைய திரைப்படங்கள் போல தெரியும். அது உண்மைதான். அன்புக்குக் குறுக்கே நிற்கும் சமூக நியதிகளை தூக்கி எறியும் வலுவான கதை பிற்பாதியில் செயற்கையாக மாறிவிடுகிறது. குடும்பத்தையே விட்டுவிட்டு சந்தியாவின் அன்புக்காக செல்லும் அப்யங்கார் தன்னுடைய சிகிச்சைக்காக மகன் செலவு செய்தான் என்பதற்காக அவளைவிட்டுப் பிரிவானா? விவாகரத்து செய்யவும் ஒத்துக்கொள்வானா? விவாக ரத்து தங்களது அன்பைக் குறைக்காது எனபது அவரது வாதம். கதை எதார்த்தத்திற்கும் கற்பனாவாதத்திற்கும் இடையே மாறி மாறிப் போய் வருகிறது. தந்தை தன்னை வளர்த்து ஆளாக்கியதை பாசத்துடன் நினைக்கும் மகன் அவரது சிகிச்சைக்கு அப்படி ஒரு நிபந்தனை விதிப்பானா? ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்ட தந்தையிடம் விவாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்பானா? விமர்சகர்கள் சிலர் கூறுவது போல் கதைக்கு ஒரு வில்லன் தேவைப்படுகிறான். அதை மகன் பாத்திரத்தில் செய்துவிட்டார் கதாசிரியர். அவன் மன மாற்றத்தை ஒரு புரசசாகவாது காட்டியிருக்கலாம்.

ஆனால் வசனமும் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. தான் கணவனை இழந்தவள் என்பதால் பூ வைத்துக் கொள்வதில்லை என்கிறாள் சந்தியா. (கதாசிரியர் எந்தக் காலத்தில் இருக்கிறார்?)அது தனது உணர்வுகளை புண்படுத்தும் என்கிறாள். அதற்கு ‘மலர்கள் குழந்தையைப் போன்றவை. அது யாரையாவது புண்படுத்த முடியுமா?’ என்று அப்யங்கார் கூறும் இடம்;. ‘நான் மம்தா கரேலியாக இருந்தேன். பின் சந்தியா ஜோஷியானேன். அப்புறம் சந்தியா அப்யங்கார். இப்போது மீண்டும் மம்தா கரேலி. அந்த மம்தா வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினாள். இந்த மம்தா எல்லாவற்றையும் பார்த்து விட்டாள்.’ என்று கசப்பான விரக்தி கலந்த குரலில் கூறும் இடம் இந்தியப் பெண்களின் சோகத்தை ஒட்டு மொத்தமாக சொல்லிவிடுகிறது. அப்பொழுதுதான் அப்யங்கார் தான் அவளது பழைய வாழ்க்கையைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்கிறான்.

பொதுவாக பெண்ணுக்கு பெண்ணே எதிரி.மருமகளுக்கு மாமியார் அல்லது மாமியாருக்கு மருமகள் என்று சொல்வதுண்டு. இந்தக் கதையில் மாமனாரையும் மாமியாரையும் புரிந்துகொள்ளும் ஒரு அன்பான பெண்ணாக பிரதிபா என்கிற பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.

அப்யங்காராக நடித்திருக்கும் அசோக் சராப் சிறப்பாக நடித்திருக்கிறார். பக்கவாதம் வந்து பேச்சு குழறும் ஒரு மனிதனாக அற்புதமாக நடித்திருக்கிறார். இவர் பாடகர்,மேடை நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராம்.நம்பவே முடியவில்லை. அன்புக்கும் அதற்கு எதிரான சமூக நெருக்கடிக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதையே இதைப் போன்ற படங்கள் காட்டுகின்றன.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *