Music Life 86: Ragathil irangi aada vandhavale – SV Venugopalan இசை வாழ்க்கை 86: இராகத்தில் ஆட இறங்கி வந்தாளோ ! – எஸ் வி வேணுகோபாலன்




மிகச் சரியாக ஒரு மாதம் ஆகிறது. மும்பை புறப்படும் அன்று பகிர்ந்து கொண்டது முந்தைய கட்டுரை. சென்னை திரும்பியே 20 நாட்கள் ஓடிவிட்டன. இசை கேடாக என்ன நடந்துவிட்டது, இடையே ? இசைக்கும் ஒரு கேடில்லை, ரசனைக்கும் தடையில்லை. கட்டுரைகள் மெல்ல மெல்ல எழுதத் தொடங்குகிறேன், ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு. என்ன நடந்தது என்பதற்குச் செல்லுமுன், பாவேந்தரின் புரட்சிக் கவி காவியத்தில் மிகவும் பிடித்தமான வரிகள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவி என்று எனை அவளும் காதலித்தாள்!
அமுது என்று சொல்லும் இந்தத் தமிழ் என் ஆவி
அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ?
உமை ஒன்று வேண்டுகின்றேன். மாசில்லாத
உயர் தமிழை உயிர் என்று போற்றுமின்கள்!

என்ன ஓசை நயம்… என்னே உணர்ச்சி மயம்…

மும்பைக்கும் புரட்சிக் கவிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? வருகிறேன், கதைக்கு!

நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம், சிறப்பாகப் பங்கேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஊருக்குப் புறப்படும் முதல் நாள், மார்ச் 4 அன்று மாநகர் உலா சென்ற இடத்தில், நேரு அறிவியல் மையத்தில் ஓர் இசைப்பலகை மீது நடை பயின்று கொண்டிருக்க, அது என் கொண்டாட்டத்தில் விசைப் பலகையாகி, நான் சாய்மானம் அற்ற இடத்தில் சாய, கரணம் அடித்து வீழ, இடது கை எலும்பு முறிந்து போனது. அந்த இசைப்பலகை, ஹார்மோனியம் அல்லது பியானோ கீ போர்டு போல் வெள்ளை கறுப்புக் கட்டைகள் மாறி மாறி அமைக்கப்பட்டிருக்க ஒவ்வொன்றின் மீது நடக்கும் போதும் வெவ்வேறு இசை ஒலிக்கும் ஸ்வரங்கள் போல்! அதிலிருந்து தான் நிலை கவிழ்ந்து விழுந்தேன். அதற்காக, இசையால் தான் நான் எலும்பு முறித்துக் கொண்டேன் என்று யாரும் கனவில் கூட ஒரு சொல் சொல்லிவிட்டால் தாங்க மாட்டேன். என் தவறினால் தவறி விழுந்தேன், மாசில்லாத உயரிய இசையை உயிரென்றே போற்றுவோமாக!

மணமகனின் தந்தையை மார்ச் 2 அன்று பிற்பகல் சந்தித்த நிமிடமே நெருக்கமாகிப் போனோம், மும்பையில் வசித்து வரும் அவர், தமிழ்த் திரைப் பாடல்களில் ஏற்பட்ட பரவசத்தில் இங்கே வேலைக்கு வரவேண்டும் என்று அமிர்தாஞ்சன் நிறுவனத்திற்கு விண்ணப்பம் போட்டு இருந்தாராம் அந்நாட்களில்! ஏனோ ரசிக்க விடாமல் நிராகரித்து விட்டார்கள், மும்பையிலேயே வாழ நேர்ந்தது என்று சிரித்தார்…. இசை எங்கு போனாலும் விடுவதில்லை!

அந்தச் சிறிய விபத்து நடந்து முதலுதவிக்காக எங்கே செல்ல என்று வழி காட்டியதோடு, தான் அங்கு வந்து நின்று தக்க உதவிகள் உறுதி செய்தது யார் என்கிறீர்கள், சாட்சாத் யார் திருமணத்திற்குப் போயிருந்தோமோ அந்தத் திருமணச் செல்வி அம்ரிதா தான், அவர் டாக்டர் அம்ரிதா வும் கூட! எக்ஸ் ரே எடுத்து, எலும்பு முறிவு என்று கண்டுபிடித்து, இளம் மருத்துவர் அநிருத்தா கதம், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு போட்டுக் கொண்டிருக்கையில், நான் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டிருந்தேன். ‘ வலிக்கவில்லையா, எப்படி இயல்பாக இருக்கவும் இசைக்கவும் முடிகிறது?’ என்று வியப்போடு கேட்டார் அவர்.

அதே கேள்வியை மறுநாள் சென்னை வந்திறங்கி அடுத்த நாள் பிற்பகல் அறுவை சிகிச்சை மேசையில் படுத்திருந்த போது தியேட்டர் உதவியாளர்களும் கேட்டனர். வாணி ஜெயராமின் பொங்கும் கடலோசை இந்த நாட்களில் ஓயாமல் உள்ளத்திலும் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது! தையல் பிரிக்கப் போயிருந்த போதும் பொங்கும் கடலோசை, கொஞ்சும் தமிழோசை தான்….மூத்த உதவியாளர் ராமச்சந்திரன் ரசித்துக் கொண்டே தனது கடமையைச் செய்து முடித்தார்.

முன்னதாக, அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின் கைக்குப் பயிற்சி அளிக்க வரும் பிசியோதெரபிஸ்ட் செந்தில் அவர்களும்
கேட்டார், இசை ரசிகரா என்று! எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கும் ஒரு சமயம் பயிற்சி வழங்கப் போயிருந்தது குறிப்பிட்டார். வாணி ஜெயராம் பாடல் கேட்பீர்களா என்றேன் ஒரு நாள், அவர் கஜல் பாணி பாடல்களை எல்லாம் பின்னி எடுப்பார் என்றார் செந்தில், ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்….’என்று இசைத்தேன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று பட்டென்று பதில் சொன்னவாறு பயிற்சியை வழி நடக்கலானார்! அன்றாடம் பயிற்சி நேரத்தில் அந்த மிகச் சில நிமிடங்களில் ஏதேனும் ஒரு பாடல், யாரேனும் ஓர் இசையமைப்பாளர், ஒரு பாடலாசிரியர், பாடகர் பற்றிய பேச்சு இராது கடப்பதில்லை !

எஸ் பி பி பற்றிய பேச்சு எடுத்ததும், கண்களை இறுக மூடிக் கைகள் குவித்து வணங்கியவாறு அவரைச் சிறப்பித்துச் சொன்னார். பாலுவின் சிறப்பம்சங்கள் சில நான் சொல்லவும், “நந்தா நீ என் நிலா …பாடலை நான் ரொம்ப தாமதமாகத் தான் கேட்டேன், அதற்குப் பிறகு ஓராயிரம் முறை கேட்டுவிட்டேன்….என்ன குரல்…என்ன இசை அது!” என்றார். நான் லட்சம் தடவை என்று சொல்லவும் இன்னும் கிறுகிறுத்துப் போனார். தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இசை அய்யா அது என்றேன். “அவர் பெயராலேயே கேரளத்தில் ஒரு விருது பெற்றது என் பேறு, அது ஒரு பொக்கிஷம் எனக்கு!” என்று எஸ் பி பி குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை நுட்பமான சங்கதிகளும், அழகியலும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் ததும்பிப் பொங்கும் பாடல் அது என்று சொன்னேன்.

2012இல் வந்திருக்கிறது ஒரு கடிதம் எனக்கு, அதுவும் ஒரு மருத்துவரிடம் இருந்து! அவர் பல் மருத்துவர், திருச்சி சுப்பு (சுப்பிரமணியன் பொன்னையா) ! தட்சிணாமூர்த்தி அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, நந்தா நீ என் நிலா பாடல் வரிகள் எழுதி, பாடலைக் கேட்டு ரசிக்க யூ டியூப் இணைப்பும் சேர்த்து அவர் அனுப்பி இருந்த மின்னஞ்சல் அது! தூங்காமல் தூங்கி எனும் அரிய புத்தகம் வழங்கிய மருத்துவர் மாணிக்கவாசகம் சகோதரர் மகன் அவர்.

‘மேடையில் அண்ணன் கூட அதிகம் பாடியது மாதிரி தெரியவில்லை, மிக மிக நுண்ணிய பொடி சங்கதிகள் நிரம்பியது’ என்று அண்மையில் கூட பாடகி எஸ் பி ஷைலஜா குறிப்பிட்டிருக்கும் இந்தப் பாடல் வெறும் இசைப் பாடல் அல்ல. இசை வாழ்க்கை அது. முற்றிலும் வேறு ஓர் உலகில் வாழ்தல் அது!

பாலுவே திரும்ப அதே மாதிரி பாட முடிந்திருக்குமா தெரியாது என்று உருகிப் போய் எழுதுகிறார் இசை ஆர்வலர் இதழாளர் ப கோலப்பன். https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/82231-13.html

மிகவும் கஷ்டமான பாடல், அப்பேற்பட்ட இசை அமைப்பு, எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துப் பாடியது என்று எஸ் பி பி அவருக்கே உரிய வெளிப்படைத் தன்மையும் தன்னடக்கமும் ஒளிரப் பேசி இருக்கிறார்.

தந்திக் கருவிகள், தாளக் கருவிகள், குழலிசை எல்லாமாக ஆரவாரமற்ற அடர்ந்த ஒரு பெரு வனத்தில் நிலவு வெளிச்சக் குளியலில் நம்மைக் கொண்டு குடியமர்த்தித் தேனும் தினை மாவும் இன்ன பிறவும் சுவைத்துக் கிறங்க வைக்கும் பேரனுபவம் இந்தப் பாடல்.

இசையமைப்பாளரது கற்பனையில் இசையூற்று பெருகுகிறது. அவரது அனுபவத்தின் திரட்சியில் அது மேலும் ஆழமாகிக் கொண்டு போகிறது. பாடகரைக் கொண்டு அதிலிருந்து மொண்டெடுக்க வைக்கிறார் தேர்ச்சியான இசை அமைப்பாளர் ஒவ்வொருவரும். அந்தக் கற்பித்தலின் வீச்சும், பற்றிக் கொள்பவரின் இலாவகமும் ஒன்றையொன்று உரிய பதத்தில் தொட்டுக் கொள்ள வாய்த்துவிடும் போது பாடல் உன்னதமான தளத்தில் பதிவாகி விடுகிறது. நந்தா நீ என் நிலா அப்படியான அரிய தருணம் ஒரு பாடகருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்குமே ! பாடல் எழுதியவர் இரா பழனிச்சாமி என்ற பதிவிருக்கிறது. (கோலப்பன் அவர்கள் கட்டுரையில் பாண்டுரங்கன் என்ற குறிப்பிருக்கிறது). அற்புதமான இசைக்கவிதை அது.

அட்சர லட்சம் பொன் என்று அந்நாளைய கதைகளை முன்னோர் சொல்லிக் கேட்டிருப்போம். இந்தப் பாடலில் அப்படியாகக் கொடுத்துக் கொண்டே போக வேண்டிய இடங்கள் எத்தனை என்று கேட்டால் எண்ணில் அடங்காது…. ஆள் அரவமற்ற பெரு வனத்தில் சில்லென்று உரசிப் போகும் முதல் காற்று தான், பாலு எடுக்கும் பல்லவியின் முதல் வரி! அதில் நீ கிடையாது, நந்தா என் நிலா……அழகான ஹம்மிங் கரையும் காற்று அது! தாளக்கட்டோடு தொடங்கும் பல்லவியில் நீ சேர்ந்து விடுகிறது, அப்படி அழகாகச் சென்று தாளத்தில் அமர்கிறது, நந்தா நீ என்….நிலா….நிலா.. அட்சரங்கள் எத்தனையோ அத்தனை லட்சங்கள்! நாயகன் மடியில் காண்பது சுகமே….இப்போது வீசும் காற்று இன்னும் குளிர்ச்சியானது. ‘நாணம் ஏனோ வா’ என்பது மூன்று சொற்கள், பாலுவின் குரல் தூரிகை அதை வண்ணங்களில் குழைத்துத் தீட்டும் இசை சித்திரம் அபாரமானது. அந்த ‘வா’ என்ற இழைப்பு, ஆயிரம் அறைகள் கொண்டிருக்கும் காதல் நெருக்கத் தேன் கூட்டுக்குள் வரவேற்கும் சுகத்தை உணர்த்துகிறது. பல்லவி அங்கே முடிந்து விடுவதில்லை, அது தான் தட்சிணாமூர்த்தி அவர்களது மேதைமை.

விழி – மீனாடும் விழி மொழி – தேனாடும் மொழி – குழல் பூவாடும் குழல் – எழில் நீயாடும் எழில்…சுழல் மெத்தையில் ஏற்றிச் செல்கிறான் காதலன். லட்சங்கள் போதாது, அடுத்த வரிக்கு! மின்னி வரும் சிலையே, மோகனக் கலையே, வண்ண வண்ண ஒளியே வானவர் அமுதே….அந்த தபேலா வாசிக்கும் கைகளுக்கு முத்தங்கள் தான் போடவேண்டும்! மோகனக் கலையே என்ற பதங்களை எப்படி வார்க்கிறார் பாலு, வானவரில் அந்த வா…வாரே வா தான்! பிறகு, வேக சொற்கள், ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே ….ஆஹா….இது அந்தக் காட்டுச் சூழலுக்குள் வண்டுகளின் அபார ரீங்கார ஒய்யார நடை! அதோடு விடுவாரா தட்சிணாமூர்த்தி சாமி, கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா…என்ற ஒரு மின்னல் வெட்டு, மின்மினிப் பூச்சிகள் பளீர் என்று தூவிவிட்டுப் போகும் வெளிச்ச இழையாக! அட்சரமாவது லட்சமாவது, அதற்கு மேல் அல்லவா ஈடு செய்தாக வேண்டும்….

பல்லவியை மீண்டும் அணுகும்போது, அந்த நிலாவை காதோடு ரகசியமாக விளிக்கிறார் பாலு. நிலா…நிலா…என்பதில் எத்தனை காதல் ஈரப் பசை! நாணம் ஏனோ என்பதில், நாணத்தின் ஊடே உதிரும் சிரிப்பு மணிகளில் எத்தனை காதல் குறும்பு!

பாடலின் சுவாரசியம், சரணத்தை நோக்கிய ஓட்டத்தில் பல்லவியை பிரதிபலிக்கும் சுகத்தை இசைக் கருவிகள் மூலம் கொணர்ந்து விடுவது. ஆசை நெஞ்சில் தெய்வத்தை – ஆடி நிற்கும் தீபத்தை அப்படியே பேசுகின்ற வீணையை ஒலிக்க வைக்கிறார். புல்லாங்குழல் காதல் உருக்கத்தைக் கிறக்கமாக்குவதில் முனைந்திருக்கிறது.

சரணங்களை எல்லாம் எழுத இயலாது…..இந்தப் பாடல் கேட்பதற்காகவே, அதில் தோய்ந்து கிடப்பதற்காகவே, பேசிப் பேசிப் பிதற்றித் தன்னையே தொலைத்துத் தொலைத்துக் கண்டெடுப்பதற்காகவே உருவான ஒன்று அல்லவா! வேண்டுமானால் பாருங்களேன், ‘ஆயிரம் மின்னல் ஓருருவாகி…’ என்பதை இலக்கண சுத்தமாக எடுக்கும் பாலு, எத்தனை அருமையான சங்கதிகள் உதிர்க்கிறார், தொடர்கையில், ‘ஆயிழையாக வந்தவள் நீயே…’ என்பதில் எத்தனை இழைகள் அந்த ஆயிழையில் சேர்க்கிறார்! அதை இன்னுமே நகாசு வேலைகள் சேர்த்து மின்ன வைக்கப் புல்லாங்குழல் ஒலித்து இரண்டாம் முறை பாடுமாறு கேட்டுக் கொள்கிறது நம் அன்புப் பாடகரை ! ‘அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே….’ எனும் மூன்றாவது வரி, இன்னும் உயிர்ப்பான அனுபவமாக அமைகிறது, ‘அருந்ததி போலே பிறந்து வந்தாயே…’ என்ற முடிப்பு, காதலின் இதயத் துடிப்பு.

இரண்டாம் சரணம், சீதையையும் ஊர்வசியையும் வம்புக்கிழுக்கும் இலக்கியக் காதல். அந்த சங்கதிகள் ஒரு பக்கம் இருக்கட்டும், பாலுவின் சங்கதிகள் என்னமாக ரீங்கரிக்கும் இதிலும்! ‘ஆகமம் கண்ட சீதையும் இன்று….’ என்று மிதிலையில் மெதுவாக நடந்து பார்த்து, ‘ராகவன் நான் என்று’ என்ற மூன்று சொற்களில் என்னே மாய ஜாலம் காட்டுகிறார் பாலு! ,குழலின் தூண்டலில் இரண்டாம் முறை இசைக்கையில் சங்கதிகள் மேலும் கூடி இன்பத்தையும் கூட்டுகிறது. ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ என்ற வியப்பில் இருந்து, ‘மேகத்தில் ஆடும்….ஊர்வசி எந்தன்….போகத்தில் ஆட…இறங்கி வந்தாளோ’ என்ற மலைப்பில் நிறைவு பெறுகிறது. மேகத்தில் ஆடும் ஊர்வசியை அந்த உயரத்தில் நின்று பார்க்க வைக்கும் குரல் அது. தட்சிணாமூர்த்தி எனும் அற்புத இசை மேதையை, பாடலை வழங்கிய பாலு எனும் அன்புள்ளத்தை, இசைக் கலைஞர்களை என்ன பாராட்டினாலும் தகும்!

மும்பை நேரு அறிவியல் மையத்தில் தவறிக் கீழே விழுந்து இலேசாக மயக்கம் போல் உணர்வதாகச் சொன்ன மாத்திரத்தில் என் கன்னங்களில் இலேசாகத் தட்டித் தட்டி, தூங்கிடாதே…. தூங்கிடாதே… கண்ணைத் திறந்து பார்.. என்று எங்கள் மகன் துடித்த கணம் மறக்க முடியாதது. அடுத்த சில நிமிடங்களில் என்னை ஒருசேர எழுப்பி நானே நிற்க வைத்துக் கொண்டு இடது கையை வலது கரத்தால் தாங்கிப் பிடித்து, எனக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல வைத்தது, அவனது அச்சத்தை முதலில் போக்குவதற்காகவே நிகழ்ந்தது. அவனது இளவயது உறக்கப் பொழுதுகள் பாடல்களால், கதைகளால் செழித்திருந்தது. இந்தப் பாடலாலும் அவனைத் தாலாட்டியதுண்டு அந்நாட்களில்! அவன் பெயர் நந்தா!

அன்பு கூடி விசாரிக்கும் உறவுகளும் நட்பும் சுற்றி நிறைந்திருக்க, என்பு கூடிவிடும் விரைவில் என்றே இசைத்திருக்கிறேன் நானும்.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *