அணிலாடும் முன்றில்
நா. முத்துக் குமார்
விகடன் பிரசுரம் 144

“அணிலாடும் முன்றில்” புத்தகத்தின் பெயரை வாசிக்கும் போதே… ஒரு அழகியலின் வாசத்தை அள்ளியெடுத்து நுகரக் கொடுத்தாற்போலதொரு உணர்வு ஆட்கொள்கிறது நம்மை.

அம்மாவில் தொடங்கி மகனில் முடிவதாகத் தொடரும் அநேக அத்தியாயங்களிலும் கிடைக்கும் பல்வேறு கவிஞர்களின் மேற்கோள் வரிகள்… அந்தந்த தலைப்புக்கும் அத்தனை பாங்காய்.. முத்தாரமாய் மின்னுகின்றன.

தான் உதித்த தாயிலிருந்து…
தன்னால் உதித்த சேய் வரைக்குமான
இடைப்பட்ட காலகட்டத்தில் தான் வாழ்ந்து கடந்துவந்த, சுவாசமாய்க் களித்து வந்த குடும்ப உறவுகளையெல்லாம்
நேர்மறைத் தன்மையோடு அத்தனை அழகாய் சிலாகித்திருக்கிறார்.. முத்துக்குமார்.

அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப் பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என்று குடும்ப உறவுகள்.. இரத்த பந்தங்கள்
குறித்தான நினைவுத் தடங்களை
உரசிப் பார்க்கும் வரிகளில்… நம் மனங்களும் இதுபோலான நமது பக்கங்களையும் தடவிப் பார்த்தே மீளுகிறது.

அம்மா:

“அம்மா என்றால் அம்மா தான். உன் அம்மா என் அம்மா என்று தனித்தனி அம்மாவெல்லாம் கிடையாது. ஒரே அம்மா” எனும் லா.சா.ரா. வின் வரிகளை மேற்கோளிட்டு தொடங்கும் அம்மாவின் நினைவுகளில்… எல்லோரின் அம்மாவும் அவரவர் நினைவுகளில் நிறைந்து சிரிக்கிறார்.

தன் தாயின் இறப்பின் போது…
பக்கத்து வீட்டு மாமியின் ஆறுதலில் தின்னக் கிடைத்த கரும்பு… அந்த நிகழ்வுக்குப் பின் தனக்கு எப்போதுமே இனிக்கவேயில்லை அந்தக் கரும்பு என்ற வரிகளில் தாயின் இழப்பிலான தனது ஆறாத வலிகளைப் பகிரும் இவர்…

“உன்னுள் உருவாகி… உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான்… மண்ணுள் நான் வீழ்ந்து… மெல்ல உதிரும் வரை என்னுள் நீ வாழ்வாய்” என்று மொழிந்து முடிக்கையில்… தன்னாலே வழிந்து சுடுகிறது கண்ணீர்.



அப்பா:

” என் தகப்பன்
எனக்கு இதைத்தான்
சொல்லிக் கொடுத்தான்.
முதிர்ந்த மரத்தின் வேர்களைப் போல் மண்ணில் ஊன்றவும்… பெருத்த பறவையின்
சிறகுகள் போல்
விண்ணில் அலையவும்…” எனும் ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடலொன்றை மேற்கோளிட்டு… அன்புள்ள அப்பாவுக்கு என்று தொடங்குகிறார் அப்பாவுக்கான தனது கடிதத்தை.

” அழுது கொண்டிருக்கும்
அம்மாவின் முகம் போல…
அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக்
கிடைத்து விடுவதில்லை
அழுது கொண்டிருக்கும்
அப்பாவின் முகம்”

என்ற வரிகளில் சுடும் உண்மை… அறைகிறது நெஞ்சில்.

ஒரு வாசிப்பின் போது பிடித்த வரிகளுக்கு அடிக்கோடு இழுப்பதற்கான காரணத்தை…

“எங்கோ இருக்கும்
இதையெழிய எழுத்தாளனுக்கு…
நான் இங்கிருந்தே
கை குலுக்குகிறேன்” …. என்று தன் தந்தை சொல்லியதாகக் கூறும் வரிகளில்…
அந்த வரிகளுக்கு அடிக்கோடிட்டு அந்தத் தந்தையோடு கை குலுக்கத் தவறவில்லை நமது கைகள்.

இனி எப்போது அடிக்கோடு இழுத்தாலும்… நெஞ்சோரம் தவறாது வந்து மினுங்கிச் செல்லும் இந்த வரிகள்.

தமிழாசிரியராக சொற்ப சம்பளத்திலும் கூட..
வீடு நிறைய புத்தகம் சேகரிக்கும் தன் அப்பாவின் இயல்புகளை …

“என் அப்பா
ஒரு மூட்டை புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்றுவிடுவார்”… இப்படி கவியாக்குகிறார்.

கல்லூரி காலத்தில் வகுப்பைப் புறக்கணித்து விட்டு நண்பர்களோடு “அவளோட ராவுகள்” சென்று வந்ததைக் கவனித்தும் அது பற்றி எதுவுமே கேட்காமல்…
அடுத்த நாள்.. எப்போதும் கைச் செலவுக்குத் தரும் 5 ரூபாயை 10 ரூபாயாக்கி “சினிமா கினிமா பாக்கத் தேவைப்படும்” என்று திணித்ததைப் பகிரும் வரிகளில் அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான புரிதலின் ஆழம் தட்டுப்பட்டு நெகிழ்த்துகிறது.

” நீங்கள் பிடித்துக்
கொண்டிருப்பதாக நினைத்து
சைக்கிள் ஓட்டியது போலத்தான்
இப்போதும்…
நீங்கள் பிடித்துக் கொண்டிருப்பதாக
நினைத்தே ஓட்டிக்கொண்டிருக்கிறேன்”

விடாது பற்றிக் கொண்டிருக்கும் அப்பாவின் நினைவுத் துளிகளை
இப்படி முடித்து… அவரவரின் அப்பாவையும் நினைவில் நிறைத்து நெகிழ்வில் ஆழ்த்துகிறார் முத்துக்குமார்.

அக்கா:

“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தஙச்சி பாப்பாக்களைத்
தூக்க முடியாமல் தூக்கிவரும்
அக்கா குழந்தைகள்”…..

கலாப்ரியா வின் இந்த வரிகளை மேற்கோளிட்டு தொடங்கும் அக்காவைக் குறித்தான பதிவில்… அக்காவின் நிழலொத்த முகமெல்லாம் ஒரு கணம் நினைவில் ஒளிர்ந்தோடுவதை உணரமுடியும்.

” புதையல் அள்ள ஆளில்லாமல் தனிக்குழியுடன் காத்திருக்கும் பல்லாங்குழிக்கும்,
தனிமைக் காற்றிலாடும் தோட்டத்து ஊஞ்சல் பலகைக்கும்,
சன்னமான குரலில் “மாலைப்பொழுதின் மயக்கத்திலே”
என கூடவே முணுமுணுக்கும்
பழைய வானொலிப் பெட்டிக்கும், கிளிப்பச்சை தாவணி காயாத கொடிக் கயிறுக்கும் … அக்கா இல்லாத செய்தியை யார் போய் சொல்லப் போகிறார்கள்?!”…

நண்பனின் அக்கா தனக்கும் அக்கா தானேயென்று… அப்படியொரு அக்கா திருமணமாகிச் சென்ற நிகழ்வை இப்படியான வரிகளில் மொழியாக்குகையில்…
விழி நிறைகிறது நமக்கும்.

ஆயா:

ஐந்து மாமாக்களும் … மாமிகள்
அவர்களது பிள்ளைகளென
கூட்டுக்குடும்பமாக அறிமுகப்படுத்தும் ஆயா வீடும்,
அந்த வீட்டு இயல்புகளும்,
மாமாக்களின் குணாதிசயங்களும்,
நமக்கெல்லாம் நன்றாகவே பழக்கமான ஒன்றென உணரச் செய்யக்கூடிய வரிகள்.

அண்டா நிறைய அதிரசம் சுட்டு.. தீபாவளிச் சீறுக்கு ஒவ்வொரு அத்தை வீட்டுக்கும் சென்று திரும்புதலும், “இதெல்லாம்
திங்க இங்கே ஆளில்ல..” என்று நீட்டிமுழக்கியபடி “எங்கம்மா வீட்டுது”
என்ற பெருமிதம் பொங்க அண்டை அயலாருக்கு அவற்றைப் பங்கு வைக்கும் அத்தைகளும்
நம் கண்களிலும் எட்டிப் பார்க்கிறார்கள்.

“எங்கேனும் வெளியூறுக்கோ..வெளி நாடுக்கோ செல்லும்போது சாமி படத்தின் முன்பு நிற்கவைத்து விபூதி பூசி பத்து ரூபாய் தந்து தலையை வருடும் ஆயா… ” வரிகளில்

அம்மாவைப் போலவே… எல்லோருக்கும் ஆயாவும் ஒன்றுதான் என்பதே உண்மையாகிறது.



தாய் மாமன்:

“மாமாவுக்கு
அன்பைக் காட்ட தெரியும்
ஊருக்கு வந்தால்
பொட்டலங்கள் வரும்
ஊருக்குத் திரும்புகையில்
காலைக் கட்டிக் கொள்வோம்
ஏரிக்கரை வரை விட்டுப் பிடிப்பாள் அம்மா” …..
கவிஞர் த.பழமலய் வரிகளில் மேற்கோளிடும் தாய்மாமனுக்கான பதிவில்… நம் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான.. நமது உயிர்க்கூடுகளுக்குள்
பிரியங்களை நெய்தெடுத்த
அதே தாய்மாமனை.. அதே உயிர்ப்போடு நமது நெஞ்சாங்கூட்டுக்குள்ளும் கசிய விடுகிறார்.

மனைவி:

” உன்னைக் கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால்
சபையில்
புகழும் வளர்ந்ததடி” ….
கவியரசு கண்ணதாசனின் வரிகளைத் தொட்டு மலர்கிறது
மனைவிக்கான இவரின் கடிதம்.

பெண் பார்த்த நிகழ்வைக் குறுப்பிடுகையில்… அது பெண் பார்த்த நிகழ்வல்ல… கண் பார்த்த நிகழ்வு என்ற மொழிதலில்…
அழகியலின் உச்சம் தொடுகிறார்.

திருமணத்திற்கு முன்பு பேசிப்பேசி தீர்த்த கணங்களைச் சுமந்த அன்பின் தருணங்களை… அதன் பிறகான வாழ்வியல் ஓட்டங்களில் தொலைத்துவிட்டு மருகுமந்த வலியினைப் பேசும்
இல்லறத்தின் தீராப் பக்கங்களை
இப்படி வரியாக்குகிறார்…

” எனை ஆள வந்தவளே…
தினம் தினம் நமக்குள் நடக்கும்
சின்ன சின்ன சண்டைகளின்
ஊடல்களில் நீ வாடிவிடுகிறாய்.
ஊடல்களுக்குப் பிறகு நடக்கும்
பெரிய பெரிய சமாதானங்களில்
நீ மலர்ந்துவிடுகிறாய்.
இந்த உலகத்தில்
எல்லாப் பூக்களும்
மலர்ந்த பின் தான் வாடும்.
வாடிய பின் மலரும் ஒரே பூ
நீதானடி…
உன்னை மலரவைக்கவே
வாடவைக்கிறேன் என்பது
உனக்குத் தெரியாதா என்ன…?!”…

இந்த வரிகளில் தங்களை உணராத தம்பதியர் என்று எவரும் இருக்கமுடியாது.

திருமணப் பத்திரிகை க்காக.. தன் மனைவி குறித்து இவர் எழுதிய பாடலில்… தன் ஒட்டுமொத்த அன்பினையும் வாரித் திரட்டியெடுத்து… பிரியங்களின் பெரும் மழையாக இப்படிக் கொட்டித் தீர்த்திருக்கிறார்..

” எனக்காகப் பிறந்தவளைக்
கண்டுபிடித்தேன்-அவள்
கண்ணசைவில் ஒரு கோடி
கவிதை படித்தேன்!
என் பாதி எங்கே என்று
தேடியலைந்தேன்- அவளைப்
பார்த்தவுடன் அடடா நான்
முழுமையடைந்தேன்!
இரு இதயம் ஒன்றாய்…
இனி அவள்தான் என் தாய்!

வேப்பம்பூ உதிர்கின்ற என்வீட்டு முற்றம்-அவள்
போடும் கோலத்தால்
அழகாய் மாறும்!
விண்மீன்கள் வந்துபோகும்
மொட்டைமாடி- அவள்
கொலுசின் ஓசையினால்
மோட்சம் போகும்!

காற்று வந்து கதை பேசும்
கொடிக் கயிற்றில்- அவள்
புடவை அன்றாடம்
கூட்டம் போடும்!
காத்திருப்பாள் ஒருத்தி என்ற
நினைவு வந்து- கடிகார
முள் மீது ஆட்டம் போடும்!

பாதரசம் உதிர்கின்ற
கண்ணாடி மேல்- புதிதாகப்
பொட்டு வந்து ஒட்டிக் கொள்ளும்!
பழைய ரசம் அவள் கையால்
பரிமாறினால்-பழரசமாய்
இனிக்குதென்று பொய்கள் சொல்லும்!

பூக்கடைக்குப் போகாத கால்கள் ரெண்டும்- புதுப்
பழக்கம் பார் என்று திட்டிச் செல்லும்!
ஆண்களுக்கும் வெட்கம் வரும்
தருணம் உண்டு- என்பதை
ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்!”

அப்பப்பா…. எப்படியொரு காதல்.. எத்தனை முறை இந்தப் பாடலைப் படித்தேனென்று கணக்கில்லை என்னிடம்.
இதற்கு மேலும் ஒரு ஆடவனின் மனையாள் மீதான காதலைச் சொல்ல… எந்த மொழியிலும் தான் வார்த்தைகள் உண்டாயென்ன??!



மகன்:

” மகனே! ஓ மகனே!
என் வித்திட்ட விதையே!
செடியே! மரமே! காடே!
மறுபிறப்பே!
மரண செளகர்யமே! வாழ்!…
கமல்ஹாசனின் வரிகளை மேற்கோளிட்டு தன் மகனுக்கான கடிதத்தை… அன்புள்ள மகனுக்கு என்று தொடங்குகிறார்.

” என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சி கொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான். கற்றுப் பார்.. உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப் பார்.

கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச் செய். உறவுகளிடம் நெருங்கியும் விலகியும் இரு.
எங்கும் எதிலும் எப்போதும் அன்பாய் இரு. உன் பேரன்பினால் இப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டேயிரு.அன்பை விட உயர்ந்தது என்று இவ்வுலகத்தில்
வேறொன்றுமில்லை.

உன்னில் என் தகப்பனைக் கண்டேன் நான். நாளைக்கும் நாளை… உன் மகனில் நீ என்னைக் காணலாம்.அப்போது இந்தக் கடிதத்தை படித்துப் பார். நான் தெரியலாம் உனக்கு” என்றெல்லாம் விரியும் கடிதத்தில் கிடைக்கப் பெறும் வரிகளெல்லாம்… ஒரு தகப்பன் தன் மகனுக்குத் தந்து செல்லும் மிகப்பெரிய சொத்தாக… ஆகச்சிறந்த ஊன்றுகோலாக இதுவன்றி வேறொன்றுமில்லை
என்பதை… வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் மகனும் உணர்வார்கள்.

இன்னும் அண்ணன், தம்பி, தங்கையென்று நீளும் ஒவ்வொரு உறவையும்… நாம் வாழும் நாளை உயிர்ப்போடு கடத்தும் அதன் மாயங்களையும் அத்தனை அழகாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு உறவையும் இவர் எடுத்தாளும் விதத்தில்…
பால்யத்தின் பாதைகளில்… நாம் ஒவ்வொருவரும் கடந்ததும் இழந்ததுமென
தொலைந்துபோன அத்தனை அன்பின் முகவரிகளும் நம்
கண்முன்னே ஒரு கணம் நிழலாடிச் செல்வதை அனுபவித்து உணரலாம்.

வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்து அனுபவிக்க வேண்டிய… தவறவிடக் கூடாத அற்புதமானதொரு உறவுச்சித்திரம் இந்த அணிலாடும் முன்றில்.

வாசியுங்கள்.
அனுபவித்து உணருங்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *