புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமத்தில் 1920இல் பிறந்தேன். அப்பா அடைக்கப்ப செட்டியார். பர்மாவில் லேவாதேவி (வட்டிக்கடை) நடத்திக் கொண்டிருந்தார். அம்மா அழகம்மை ஆச்சி. என் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள்; ஒரு தம்பி. நான்தான் மூத்தவன். ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளியில் முடித்து, பத்தாவது வயதில் பர்மாவுக்குப் போனேன். அங்கு எட்டாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு அப்பாவுக்கு உதவியாக கடையில் வேலை செய்தேன். அந்தச் சமயத்தில்தான் ஜப்பானியப் போர் ஆரம்பித்தது.

1940இல் குண்டு போடப்பட்டபோது ரங்கூனில்தான் இருந்தேன். அப்போது எனக்கு இருபது வயது. பதினெட்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. குடும்பம் அரிமளத்தில் இருந்தது. ஜப்பானியப் போரினால் பர்மாவில் வாழ்ந்த தமிழர்களெல்லாம் புறப்பட்டு சென்னைக்கு வந்தோம். சென்னையிலும் போர்பீதி இருந்ததால் வெறிச்சோடி இருந்தது. அதனால் இங்கிருந்து சொந்த ஊரான அரிமளம் போய்ச் சேர்ந்தேன். அங்கே சவுத் இந்தியன் கார்ப்பரேஷனிலும், பிறகு ‘ஜின்னிங் ஃபாக்டரி’யிலும் வேலை செய்தேன். அதன்பிறகு, அப்போது திருச்சியில் இயங்கிக் கொண்டிருந்த ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கிருந்து 1946இல் சென்னைக்கு வந்து ‘முல்லை’ முத்தையாவுடன் பதிப்புப் பணியில் ஈடுபட்டேன்.

முல்லை முத்தையா - தமிழ் ...
முல்லை முத்தையாவும் நானும் பர்மாவில் நண்பர்கள். பர்மாவிலிருந்து திரும்பியபின் இதே கட்டடத்தில் (சென்னை, பாரிமுனை ‘பாரி நிலையம்’ கட்டடம்) பக்கத்து அறையில் ‘முல்லை பதிப்பக’த்தை முத்தையா ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். ‘கமலா பிரசுரம்’ என்கிற பெயரில் காங்கிரஸ் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டுமிருந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, ‘முல்லைப் பதிப்பகம்’ வெளியிடும் நூல்களை விற்பனை செய்து தரும் உரிமையை எனக்கு வழங்கினார். அதற்காக நான் ‘பாரி நிலைய’த்தைத் தொடங்கினேன். ‘முல்லையோடு தொடர்புடையவர் ‘பாரி’ என்பதால் அப்பெயரை வைத்தேன். 1950ல் ‘பாரி நிலையம்’ மூலமாக புத்தகங்களை வெளி யிட்டேன். பிற பதிப்பக நூல்களை விற்பனை செய்து தரும் பணியும் இன்றுவரை நடந்து வருகிறது.

பர்மாவில் இருந்த காலத்தில், அங்கிருந்த கண.முத்தையா, கண.ராமநாதன் போன்றவர்களின் தொடர்பு உங்களுக்கு இருந்ததா?

கண. முத்தையா 10 | கண. முத்தையா 10 - hindutamil.in

கண.முத்தையா, சாமிநாத சர்மா, ஏ.கே.செட்டியார் போன்றவர்களின் தொடர்பு இருந்தது. கண.முத்தையா, நான் படித்த ‘கம்பை தனவைசியர் கல்விக் கழக’த்தில் எனக்கு மேற்பார்வையாளராக இருந்தார். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் அதிக நெருக்கமில்லை. பர்மாவில் இருக்கும்போது நிறைய படிப் பேன். சுத்தானந்த பாரதியின் எழுத்துகள் மீது ரொம்ப ஈர்ப்பு. அந்த ஈர்ப்பினால்தான் புத்தகத் தொழிலுக்கே வந்தேன்.

பர்மாவிலிருந்து சென்னைக்கு வந்தபின் பதிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் முல்லை முத்தையா, நான், கண.முத்தையா, வானதி திருநாவுக்கரசு போன்றோர். கண.முத்தையா ‘தமிழ்ப் புத்தகாலயம்’ நடத்திக் கொண்டிருந்தார். நான் ‘பாரி நிலையம்’ நடத்திக் கொண்டிருந்தேன். இருவரும் இணைந்து ‘பாரி புத்தகப் பண்ணை’ என்கிற ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம்.

தமிழ்ப் புத்தகம்: பெண்ணிய நோக்கில் ...

 

அதில் அகிலன், ராஜம் கிருஷ்ணன், சில இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை அவர் வெளியிடுவார்; நான் விற்றுக் கொடுப்பேன்.

காந்தி, தாகூர், சுபாஷ் சந்தர போஸ் போன்றவர்களை யெல்லாம் நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்…

Tathya - Gandhiji On Odisha Tour

ஒரு முறை பர்மாவுக்குப் போகும் வழியில் என் நண்பன் காந்தி அண்ணாமலையுடன் வர்தா, சேவா கிராமத்திற்குச் சென்று அங்கு காந்தியைப் பார்த்தோம். அவரை வணங்கி, ஆட்டோகிராப் கேட்டோம். அவர் அப்போது ‘அரிஜன்’ நிதி திரட்டிக் கொண் டிருந்தார். அதற்காக ஒரு கையெழுத்துக்கு ஐந்து ரூபாய் கேட்டார். எங்களால் பத்து ரூபாய் கொடுக்க முடியவில்லை. இரண்டு பேருக்கும் சேர்த்து ஐந்து ரூபாய் கொடுத்தோம். ‘நீரில் எழுத்தாகும் யாக்கை – மோ.க.காந்தி’ என்று தமிழிலேயே கையெழுத்தும் இட்டுக் கொடுத்தார். எங்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் பலருக்கு இப்படித்தான் தமிழில் எழுதி கையெழுத்திட்டுத் தந்தார்.

Rabindranath Tagore | Rabindranath tagore, Portrait, Colorized photos

சாந்திநிகேதனுக்குச் சென்று தாகூரைப் பார்த்து வணங்கி ஆசி பெற்றோம்.

அங்கிருந்து கல்கத்தா போய் நேதாஜியைப் பார்த்தோம். மாடியிலிருந்து படியில் இறங்கிக் கொண்டிருந்தார்.

Thinakaran Vaaramanjari: - நேதாஜp சுபாஷ் ...

அப்போது அவரிடம் ‘ஆட்டோகிராப்’ கேட்டோம். கையெழுத்திட்டு கொடுத்ததுடன் முதுகில் தட்டியும் கொடுத்தார். இவை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.

பாரதிதாசனுடன் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு, அவர் கவிதைகளை நீங்கள் வெளியிட்ட அனுபவங்கள் பற்றி…

Biography of Bharathidasan- Tamil Poet-"Puratchi Kavignar"

நூர்முகமது, பாரதிதாசனின் நெருங்கிய நண்பர். அவர்தான் என்னையும் முல்லை முத்தையாவையும் பாரதிதாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பாரதிதாசன் சாந்தோமில் ‘இன்ப இரவு’ நாடகப் பணியில் ஈடுபட் டிருந்தார். அவரிடம் “இவர்கள் நல்ல நூல் வெளியிட்டாளர்கள். உங்கள் நூல்களைக் கொடுங்கள். சிறப்பாக வெளியிடுவார்கள்’’ என்று அவரிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது பாரதி தாசனிடம் ‘அழகின் சிரிப்பு’ கையெழுத்துப் பிரதியாக இருந்தது. அதை எங்களிடம் கொடுத்து, அதற்காக ஐநூறு ரூபாய் கேட்டார். அப்போது பாரதிதாசனின் மகள் சரஸ்வதிக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. திருமண ஏற்பாடுகளை கானாடு காத்தான் வை.சு.சண்முகம் செட்டியார்தான் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்தான் பாரதியாருக்கும் நிறைய உதவிகளைச் செய்தவர். அவரிடம் அந்தத் தொகையைக் கொடுக்கச் சொன்னார். அப்படித்தான் பாரதிதாசனின் அறிமுகமும் ‘அழகின் சிரிப்பு’ம் கிடைத்தது.

அதன் பிறகு, பாரதிதாசனின் ஒன்பது நூல்களுக்கான உரிமையைப் பெற்று ‘முல்லை’ முத்தையா வெளியிட்டார். அதற்காக ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை. அந்தப் பணத்தில்தான் பாண்டிச்சேரியில் பாரதிதாசன் வீடு வாங்கியதாகத் தெரிகிறது.

அதன் பிறகு அவரது பல நூல்களை ‘பாரி நிலையம்’ மூல மாகவே வெளியிட்டேன். பாரதிதாசன் அடிக்கடி இங்கே வருவார். நா.முத்தையா, பொன்னடியான், ஈரோடு தமிழன்பன் இவர்களில் யாராவது ஒருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வருவார்.
பாரதிதாசனுக்கு ஞானபீட விருது கொடுப்பதாகக்கூட முடிவாகி இருந்தது. அதற்கான தேர்வுக் குழுவில் காரைக்குடி சா.கணேசன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், பெ.தூரன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் என்னிடம் பாரதிதாசனிடம் இந்தத் தகவலைச் சொல்லி அவருக்கு மறுப்பு ஏதும் இல்லையே என்று கேட்கச் சொன்னார்கள். பாரதிதாசன் இங்கே -பாரி நிலையத்துக்கு வந்திருந்தபோது அவரிடம் இந்தத் தகவலைச் சொன்னேன். அவர் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டு போனார்.

உடன் வந்திருந்த ஈரோடு தமிழன்பனிடம் “ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தால், நாமே அச்சகம் தொடங்கி தமிழ் நூல்களை குறைந்த விலைக்கு வெளியிடவேண்டும்’’ என்று சொன்னாராம். இதை தமிழன்பனே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். சில மாதங்களில் பாரதி தாசன் இறந்துவிட்டதால், ‘இறந்தவருக்கு பரிசு கொடுப்பதில்லை’ என்கிற ஞானபீடத்தின் முடிவின்படி அந்த ஆண்டுக்கான விருது கேரளத்துக் கவிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால், சாகித்ய அகாதமி விருது பாரதிதாசன் இறந்த பிறகுதான் வழங்கப்பட்டது. அவரது துணைவியார் பழனியம்மாள் பெற்றுக்கொண்டார். விருது பெற்ற பிசிராந்தையார் நூலை நான்தான் வெளியிட்டிருந்தேன். பாரதிதாசன் என்னிடம் நிறைய பிரியமாக இருந்தார். என்னைப் பற்றி ஒரு பாடலும் பாடி இருக்கிறார்.

அறிஞர் அண்ணாவின் கடிதங்களைத் தொகுத்து வெளி யிட்ட அனுபவம்…

Arignar-anna - DMK
அண்ணாவின் நூல்களில் சிலவற்றை திருச்சியிலிருந்த ‘திராவிடப்பண்ணை’ வெளியிட்டார்கள். வேறு சிலர் அண்ணா வின் அனுமதி இன்றி சில நூல்களை வெளியிட்டு வந்தார்கள்.  காஞ்சி, திராவிட நாடு ஆகிய இதழ்களில் ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் அண்ணா கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். அவற்றையெல்லாம் நான் சேகரித்து 21 தொகுதிகளாக வெளியிட் டேன். ‘இனி எனது நூல்களை பாரி நிலையம் வெளியிடும்’ என அண்ணா அறிக்கை வெளியிட்டார்.

அண்ணாவின் கடிதங்கள் முதல் தொகுதி வெளியீட்டு நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்தில் நடந்தது. சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். ஒரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இவ்வளவு மக்கள் திரண்டது அப்போது மட்டும்தான்.

ஆரம்பத்தில், மு.வ.வின் நூல்களை ம.சு.சம்பந்தம் ‘தமிழர் பதிப்பகம்’ மூலமாக வெளியிட்டார். அவரது சிறுவர் நூல்கள் சிலவற்றையும் வேறு சில நூல்களையும் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்டது. அதன் பின்னர் அவரே விரும்பி வெளியிட்டு விற்பனை உரிமையை எங்களுக்கு கொடுத்தார். இன்று வரை மு.வ. நூல்களின் விற்பனை உரிமை எங்களிடம் தான் இருக்கிறது. புத்தகமும் நன்றாக விற்றுக்கொண்டே இருக்கிறது.

இலக்கியம் - literature: தாய்மனம் – மு.வ.

 

‘பாரியினால் மு.வ. வளர்ந்தார். மு.வ.வினால் பாரி வளர்ந்தது’ என்று சொல்கிற அளவுக்கு எங்கள் வளர்ச்சி அமைந்தது-. இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒரு போட்டோகூட எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு முறை, மு.வ. இங்கே வந்திருந்தார். அறிஞர் அண்ணா வழக்கம் போல வாசலில் காரை நிறுத்திக்கொண்டு உதவியாளரிடம் புத்தகம் கேட்டு அனுப்பி இருந்தார். இங்கே புத்தகம் வாங்கிச் சென்ற உதவியாளர் மு.வ. பாரி நிலையத்துக்குள் இருக் கிறார் என்று சொல்லியிருக்கிறார். உடனே அண்ணா படியேறி மேலே வந்துவிட்டார். இந்த இடத்தில்தான் (இடத்தைச் சுட்டிக் காட்டி) இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். மு.வ.வின் மீது அண்ணாவுக்கும், அண்ணாவின் மீது மு.வ.வுக்கும் இருந்த மரியாதையை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மு.வ. அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் விலகியே இருந்தார்.

ராஜாஜியின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ நூலை நீங்கள்தான் வெளியிட்டீர்கள். அதற்கு சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது. இருந்தும், திராவிட இயக்கத் தலைவர்களின் நூல்களை வெளியிட்டீர்கள் என்பதற்காக அவர் வேறு ஒரு பதிப்பகத்துக்கு நூல்களை கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறதே…?

அரசியல்வாதி' ராஜாஜி தெரியும் ...

அவ்வாறு சிலர் அவரிடம் வலியுறுத்தியது உண்மை. ஆனாலும் அதையெல்லாம் மறுத்து, தொடர்ந்து என்னிடம்தான் நூல்களை கொடுத்து வந்தார்.

 அப்படியானால் ஏன் வேறு பதிப்பத்துக்கு மாறினார்?

மிகக் குறைந்த விலைக்கு புத்தகங்களை வெளியிடச் சொன் னார். என்னால் அப்படி முடியவில்லை…

திராவிட இயக்கங்களோடு உங்களது ஈடுபாடு எந்த அளவில் இருந்தது?

பதிவுகள் | பெரியார்புக்ஸ்.இன் ...

திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா விலகி, திராவிட முன் னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது, அதற்கு நிதியுதவி அளித்த முதல் பத்து பேரில் நானும் ஒருவன். ‘தி.மு.க. வரலாறு’ என்ற நூலினை நான்தான் வெளியிட்டிருக்கிறேன். திராவிட இயக்கத்தவர்களான நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், ராதா மணாளன், ஆசைத்தம்பி, தில்லை வில்லாளன் போன்றோரின் நூல்களையும் வெளியிட்டேன்.

கலைஞரின் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறேன். அவரது பல நூல்களுக்கு விற்பனை உரிமை பெற்றிருக்கிறேன். ஆனாலும் அரசியலில் எனக்கு தீவிர ஈடுபாடு இல்லை.

 எந்தெந்த எழுத்தாளர்களின் அனைத்து நூல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள்?

கி.ஆ.பெ.விசுவநாதம், தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோரின் நூல்களை முழுமையாக வெளியிட்டிருக்கிறேன். திரு.வி.க. தனது நூல்களுக்கான உரிமையை இரண்டு மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்திருந்தார். அந்த இருவரில் ஒருவரின் நூல்களை முழுமையாக நான் வெளியிடுகிறேன். அண்ணா, பாரதிதாசன், தெ.பொ.மீ., குன்றக்குடி அடிகளார், முடியரசன், விபுலானந்த அடிகள், தனி நாயக அடிகள், வ.உ.சி., சோமு, சோமலே, வையா புரிப் பிள்ளை, கா. அப்பாதுரையார், மு.கா.அருணாசலம், மயிலை சீனி. வேங்கடசாமி, அழ.வள்ளியப்பா ஆகியோரின் நூல்களையும் செ.கணேசலிங்கம், கைலாசபதி, மகாகவி போன்ற இலங்கை எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன்.

 கடந்த ஐம்பது ஆண்டு கால பதிப்புலக வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்?

இந்தத் தொழில் மூலம் பெரும் பொருளீட்ட முடியவில்லை. ஆனால், மதிப்புமிக்க தொழில் என்கிற வகையில் எனக்கு ரொம்ப திருப்தி. ‘ஒரு நூறு புலவர்க்கு வருவாய் செய்தோன்’ என்று வ.சுப. மாணிக்கம் என்னைப் பாராட்டி பாடல் எழுதினார் என்றால் சாதாரண விசயமல்ல. ஒழுக்கமாக வாழவும், நல்லவர்களோடு பழகவும், எளிமையாக இருக்கவும் புத்தகங்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தன. அப்படியான புத்தகங்களைத்தான் நானும் வெளியிட் டிருக்கிறேன். அந்த மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

புதிய புத்தகம் பேசுது
அக்டோடர் — நவம்பர் 2003

சந்திப்பு :சூரியசந்திரன்

 

One thought on “பாரியினால் மு.வ. வளர்ந்தார். மு.வ.வினால் பாரி வளர்ந்தது : ‘பாரி நிலையம்’ செல்லப்பன்”
  1. அருமை.. அருமை… இது போன்ற அரிய தகவல்கள் உள்ள பழைய நேர்காணல்களை தொடர்ந்து வெளியிடுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *