Pen andrum indrum webseries 14 by narmadha devi. அத்தியாயம் 14: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

‘நரகம்’ என்பது இது தானோ!
பிழைக்க வேறுவழியே இல்லை 

சுப்பம்மாள், காந்தளம்மாள், முத்தம்மாள், காளியம்மாள் எனும் அந்த நான்கு பெண் தொழிலாளர்கள் மதுரையின் மதுரா மில்லில் பணியாற்றினார்கள். அவர்களில் இருவர் கணவரை இழந்தவர்கள். ஒருவரின் கணவர் நீதிமன்றத்தில் பியூன் வேலை பார்த்தார். அவருக்கு சம்பளம் மாதம் 14 ரூபாய். இன்னொருவரின் கணவர் அதே மில்லில் கட்டடப் பிரிவில் வேலை பார்த்தார். நான்கு பேருக்குமே வாரத்துக்கு மூனேகால், மூன்றரை ரூபாய் கூலி.

1929 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள் பற்றிய ராயல் கமிஷன், மதுரையில் ஆய்வு நடத்தியபோது, இந்த நான்கு பெண் மில் தொழிலாளர்களும் சாட்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலம் அன்றைய மில் தொழிலாளர் வாழ்நிலையையும், பெண் தொழிலாளர்கள் அனுபவித்த வலியையும் நமக்கு உணர்த்துகிறது.

‘எனக்கு கூலி போதவில்லை’ என்றுதான் 28 வயது சுப்பம்மாள் பேசவே தொடங்கி இருக்கிறார். “நாங்கள் நான்கு பேருமே சிறு வயதில் இருந்து இங்குதான் இருக்கிறோம். நான் பலமுறை இங்கு வந்து வேலை கேட்டு, கடைசியாகத்தான் மேனேஜர் என்னை வேலைக்கு எடுத்துக்கொண்டார். எனக்கு வேலை தேவைப்பட்டது.

கடந்த 18 மாதம், 2 ஆண்டுகளாக உள்ளே குழந்தைகளை அழைத்து வரக்கூடாது எனச் சொல்லிவிட்டார்கள். தன்னுடைய குழந்தையைக் கவனிப்பதற்காக ஒரு பெண் இடையில் வெளியே செல்ல வேண்டும் என்றால், தலைமை எழுத்தர் ஒரு டிக்கெட் தருவார். காலை 9 மணிக்கு ஒரு முறையும், மதியம் 3 மணிக்கு ஒரு முறையும் நாங்கள் போகலாம். அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் எங்களுக்குத் தருவார்கள். குழந்தைக்கு பாலூட்டிவிட்டு அந்த நேரத்திற்குள் வந்துவிடுவோம். நாங்கள் வந்தவுடன் இங்குள்ள ஆள், ‘என்ன இவ்வளவு நேரமா இதற்கு?’ என்பார். நாங்கள் எல்லாருமே சாலையில் மரத்தடியில்தான் குழந்தைகளைப் போய் கவனித்து வருவோம். அந்த நேரத்தில் வீட்டில் இருந்து குழந்தைகளை யாராவது இந்த இடத்திற்கு அழைத்து வருவார்கள்.

சாப்பாட்டு நேரத்திற்கு வீட்டுக்குச் சென்று அவசர அவசரமாக விழுங்கிவிட்டு வருவோம். வீடு தூரமாக இருப்பவர்கள் சோறு எடுத்து வருவார்கள். ஆயிரம் பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள் சாப்பாடு எடுத்து வருகிறார்கள். சாப்பிடுவதற்கான கூடம்கூட இங்கு கிடையாது. எங்காவது ஒதுங்கி அவசர அவசரமாக சாப்பிட்டு வர வேண்டும். கண்ட இடத்தில் சாப்பிடக்கூடாது என்று ஐரோப்பிய மேனேஜர் திட்டுவார் என்பதற்காக எங்களை காவலாளிகள் விரட்டுவார்கள்.

பிரசவத்திற்கு சம்பளத்துடுடன் கூடிய விடுப்பு கிடையாது. ஆறாம் மாதமே வேலையைவிட்டு நின்றுவிட வேண்டும். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் மேஸ்திரி உடனே வேலையை விட்டு நிறுத்திவிடுவார். அப்போது, வாழ்வதற்கு ஏதாவது சொத்தை விற்க வேண்டி வரும். இல்லையென்றால் பாத்திரங்களை அடகு வைக்க வேண்டி வரும். குழந்தை பிறந்து வேலைக்கு வந்தால், வேலை தராமல் இழுத்தடிப்பார்கள். வீட்டில் குழந்தையைப் பார்க்க ஆள் இல்லாதவர்கள், இரண்டு ரூபாய் கொடுத்து குழந்தையை பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்வார்கள்.

உருப்படி அடிப்படையில்தான் (Piece Rate) வேலை. நாங்கள் குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக வேலை பார்த்தால் வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.

விடுமுறை நாட்களுக்கு எங்களுக்கு கூலி கிடையாது. உடல்நலம் சரியில்லாமல் விடுப்பு எடுத்தாலும் கூலி கிடையாது. ஞாயிறு விடுமுறை தினத்திற்கு சம்பளம் கிடையாது. உடல்நலம் சரியில்லை என்று ஒரு நாள் வரவில்லை, அடுத்து இன்னொரு நாளும் வரவில்லை என்றால், மூன்றாவது நாள் வேலையே இருக்காது. உரிய நேரத்துக்கு பணிக்கு வரவில்லை என்றால் 1, 2 அணா தண்டம் கட்ட வேண்டும்.

எங்களுக்கு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இடம் வேண்டும். அதிக கூலி வேண்டும்.” – நான்கு பெண் தொழிலாளர்களின் இந்த அனுபவம், அந்தக் காலத்தின் சமூகப் பொருளாதார நிலைமையை நமக்குப் படம்பிடித்துக் காட்டும் வரலாறாக இருக்கிறது.

மில் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான் என்றாலும், வேலை பார்த்த பெண்களில், 1) தனித்து வாழும் பெண்கள், 2) கணவரோடு ஒரே மில்லில் பணியாற்றுபவர்கள், 3) கணவர் வேறொரு பணியில்- மனைவி மில் வேலையில் என்று தனியாட்களாகப் பணியாற்றும் பெண்கள் – அனைவரும் இருந்திருக்கிறார்கள் என்பதை உணரலாம். 

வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்கிற நிலையில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வேலைக்கு வந்திருக்கிறார்கள். ஆண்களைக் காட்டிலும் சொற்ப கூலியே இவர்களுக்கு கிடைத்தது. பேறுகால உதவி, குழந்தைகளைக் கவனிக்க வசதி என்று எதுவுமே இல்லாத நிலையிலும் அன்றைக்குப் பெண்கள் வேலைக்கு வந்தார்கள்.

கோவை ஸ்பின்னிங் & வீவிங் மில்லில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களும்கூட, ‘குழந்தைகள் இருக்கும் பெண் தொழிலாளர்கள் அவர்களை கவனிப்பதற்கு மில்லுக்கு வெளியே உள்ள புளியமரத்தடிக்குச் செல்வார்கள். கர்ப்பிணிப் பெண்களை ஏழு மாதத்தில் வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். (ரங்கம்மாள், லூத்மாரி எனும் பெண் தொழிலாளர்களின் சாட்சிகள்). மிகுந்த வலியை, வேதனையை அனுபவித்துதான் அன்றைக்கு சமூகத்திற்கான உற்பத்தியில் பாட்டாளி வர்க்கப் பெண்கள் ஈடுபட்டார்கள் என்பதை உணரலாம். 

பெண் தொழிலாளர்களின் மகப்பேறு நிலை
1919 ஆம் ஆண்டில் வாஷிங்டனில் நடைபெற்ற முதல் சர்வதேச தொழிலாளர் மாநாடு, பெண் தொழிலாளர்களின் பேறுகால பாதுகாப்பைப் பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தை இயற்றியது. அதன் பிறகே இந்தியாவில் இந்தப் பிரச்சனை குறித்த ஆர்வம் ஏற்பட்டது. ‘பிரசவத்திற்கு முன்பு ஆறு மாதம், பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதம், தாயையும், சேயையும் நல்ல ஆரோக்கியத்தோடு பராமரிக்கக்கூடிய உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்’ என்று இந்த மாநாடு வலியுறுத்தியது. என்றாலும், ‘இந்தியா உடனடியாக இந்தத் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, தனது சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும்’ என்று மட்டுமே அறிவுறுத்தியது. 

விளைவாக, இந்திய அரசு மாகாண அரசுகளிடம் பேறுகால பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றியும், அதற்கான ஆய்வுகளை நடத்துவது பற்றியும் கருத்து கேட்டது. மாகாண அரசுகள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 1921 ஆம் ஆண்டில் பேறுகாலத் திட்டம் குறித்த ஆய்வுக்கு ஒரு நிதி வரவே, வங்காளத்தில் டாக்டர் டேக்மர் கர்ஜல் (Dagmar Curjel), பம்பாயில் டாக்டர். பிளாரன்ஸ் பார்ன்ஸ் இருவரும், வங்கம், பம்பாய் மாகாணங்களில் பெண் தொழிலாளர்களின் மகப்பேறு நிலை குறித்த ஆய்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

டாக்டர் கர்ஜல், சணல் ஆலைகள், சுரங்கங்கள், தேயிலை தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் நிலை பற்றியும், அவர்களின் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு பிரச்சனைகள் குறித்தும் வழங்கிய அறிக்கை முக்கியமானது. நிலக்கரி சுரங்கங்களில் 200 மீட்டர் அளவிற்கு 30-40 கிலோ அளவிலான எடையைத் தூக்கிச் செல்லும் பணிகளை பெண் தொழிலாளர்கள் செய்கிறார்கள். குழந்தைகளைக் கவனிக்க இடம் இல்லாததால், தங்களுடைய ஆபத்தான பணியிடத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார் கர்ஜல். 

பெண் தொழிலாலர்களின் மகப்பேறு தொழிற்சாலை நிர்வாகத்தின் வரம்புக்குள் வராத விஷயம் என்றே நிர்வாகங்கள் கருதின. கர்ப்பமான பெண் தொழிலாளர் எப்போது வேண்டுமாலும் வேலையை விட்டுச் அனுப்பப்படுவார். மீண்டும் அவருக்கு வேலை கிடைக்குமா தெரியாது என்பதே நிலை. ஒரு பெண் தொழிலாளர் எப்போது பிரசவத்திற்கு சென்றார், பிறந்த குழந்தையின் நிலை என்ன, எவ்வளவு முறை அவருக்கு பிரசவம் நடந்தது என்ற விவரம் எதுவும் அன்றைக்கு தொழிற்சாலை நிர்வாகத்திடம் இல்லை என்கிறார்கள் மும்பை ஹாஃப்கின் மருத்துவமனையில் அன்றைக்குப் பணியாற்றிய டாக்டர்.  மார்கரட் பால்ஃபர் மற்றும் டாக்டர். சகுந்தலா தால்படே. இவர்கள் இருவரும் அன்றைக்கு பம்பாயில் பெண் தொழிலாளர்கள் பிரசவங்கள் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். ‘இந்தியாவில் பெண் மில் தொழிலாளர்களுடைய பேறுகால நிலை’ எனும் அவர்களின் ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அன்றைக்கு வெளிவந்தன. 

மும்பையின் மில் பகுதியில் 1923 ஆம் ஆண்டில் நெஸ் வாடியா, சி.என் வாடியா சகோதரர்கள் நடத்திவந்த மகப்பேறு மருத்துவமனையில், பெண் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் மனைவிகளுடைய பிரசவங்கள் நடந்தன. தொழிலாளர் குடியிருப்புகளில் நடந்த பிரசவங்களைக் காட்டிலும் இங்கு நடந்த பிரசவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. என்றாலும், இந்தப் பிரசவங்கள் குறித்த தரவுகளில் இருந்து, குறைப்பிரசவம், பிரசவத்தில் தாய், சேய் மரணம், பிறந்த குழந்தை மரணம் ஆகியவற்றின் விகிதங்களை டாக்டர் பால்ஃபரும், டாக்டர் சகுந்தலாவும் ஆராய்ந்தார்கள். இந்த விகிதங்கள் தொழிலாளர்களின் மனைவிகளுடைய பிரசவங்களைக் காட்டிலும், பெண் தொழிலாளர்களின் பிரசவங்களில் அதிகமாக இருந்ததை அவர்கள் கண்டறிந்தார்கள். 

பொதுவாகவே தொழிலாளர் வர்க்கத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகம். அந்த வகையில் தொழிலாளர்களின் மனைவிகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலவீனமாக இருந்தார்கள். போதிய வருமானம் இல்லாத சூழலில் பால், நெய், முட்டை எதுவும் தொழிலாளர் குடும்பங்களில் சேர்த்துக்கொள்ள முடியாது. மாமிச உணவு இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ‘தொழிலாளர் குடும்பங்களில் வைக்கப்படும் பருப்புக்குழம்பு சூப் மாதிரிதான் இருந்தது’ என்றார் டாக்டர் பால்ஃபர். இந்த நிலையில் பெண் தொழிலாளர்கள் நிலையோ படுமோசம். ஊட்டச்சத்தே இல்லாத உணவு, ஓய்வில்லா வேலை- இவற்றால் கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்கள் மிகப் பலவீனமாக இருந்தார்கள். இந்நிலை பெண் தொழிலாளர்களின் பிரசவ நலனில் எதிரொளித்தது. பொதுவாக வீட்டு வேலையில் உதவி கிடைத்த பெண் தொழிலாளர்களின் நிலை சற்று பரவாயில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது. 

நரக வாழ்க்கை
பம்பாயில் அன்றைக்குத் தொழிலாளர் குடியிருப்புகளில் 12க்கு 15 அடி ஒற்றை அறையில், அதிகபட்சம் 36 தொழிலாளர்கள் வரை வசித்து வந்தார்கள். இந்த அறையில் சமையல் புகை வெளியே போவதற்குக்கூட வழியில்லாமல் இருந்தது. பிரசவத்திற்கு காத்திருக்கும் பெண்களும் இங்கே வசிக்கிறார்கள் என்று டாக்டர் பார்ன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். எப்படியும் 6-10 பேர் இந்த மாதிரியான அறைகளில் வாழ்ந்தார்கள் என்கிறார் டாக்டர் பால்ஃபர். சென்னையில் 25,000 ஒற்றை அறைகளில் 1,50,000 தொழிலாளர்கள் வசித்தார்கள் என்றும், வீட்டுவசதி இல்லாமல் நடைபாதைகளில், குடோன்களில் தொழிலாளர்கள் வசித்தார்கள் என்றும் ராயல் கமிஷன் குறிப்பிட்டது.

இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்த பெண்களின் நிலை படுமோசம். ‘மில்களில் வேலைபார்த்த பெண் தொழிலாளர்கள், காலை 5, 5.30 மணிக்கு எழுந்து விறகடுப்பைப் பற்றவைத்து சமையல்செய்து வைத்துவிட்டு தொழிற்சாலைகளுக்கு வர வேண்டும். மதியம் இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட வரலாம். மீண்டும் இரவு வந்து அடுப்பு பற்றவைத்து சாப்பாடு செய்து, அனைவரையும் சாப்பிட வைத்து, அதன் பிறகு பாத்திரம் கழுவி, சுத்தம் செய்து… இரவு படுக்கச் செல்வதற்கு இந்தப் பெண் தொழிலாளர்களுக்கு 10.30 மணிக்கு மேல் ஆகிவிடும். மீண்டும் காலை ஐந்து மணிக்கு எழ வேண்டும். இதுதான் அவர்களின் வாழ்க்கைச் சுழற்சியாக இருந்தது’ என்கிறார் டாக்டர். பால்ஃபர்.  

தொழிற்சாலையில் இடுப்பொடிய வேலை பார்த்தாலும் கூலி மிகமிகக் குறைவு. குறைவான கூலி கொடுக்க முடியும் என்ற காரணத்தினால்தான் தொழிற்சாலைகளில் பெண்களை வேலைக்கு எடுத்தார்கள். முதலாளித்துவ முறையின் அடிப்படையான அணுகுமுறை இது. மகப்பேறு, குழந்தை பராமரிப்பு போன்ற விஷயங்களில் மனிதத்தன்மையே இல்லாமல் அரசாங்கமும், தொழிற்சாலை நிர்வாகங்களும் நடந்துகொண்டன. எந்தவித உதவித்தொகையும் இல்லாமல் கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்களை வேலையைவிட்டு அனுப்பி, அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பங்களின் மீதும் சுமைகளை ஏற்றின. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் வேலைக்கு வருவதற்கு பெண் தொழிலாளர்கள் பட்ட பாடு இருக்கிறதே! முதலாளித்துவ முறையின் குரூர சுரண்டலுக்கு என்றென்றும் சாட்சியாக அவை நிலைத்திருக்கும். 

“சிறிய குழந்தை ஒன்று இருந்து, அதை ஒப்படைத்துவிட்டுப் போவதற்கு ஒரு குட்டி அக்காவோ, பக்கத்து வீட்டுக்காரர்களோ இல்லை என்றால், இந்தப் பெண் தொழிலாளர்களின் பணிச்சுமையும், கவலையும், எவ்வளவு கூடும் என்பதை உணரலாம். ஆபத்தைக் குறித்த எந்த புரிதலும் இன்றி, குழந்தைகளுக்கு அபினியைக் கொடுத்து தூங்க வைக்கும் நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.” – டாக்டர்.  மார்கரட் பால்ஃபர் மற்றும் டாக்டர். சகுந்தலா தால்படே இருவரும், பம்பாய் பெண் தொழிலாளர்கள் குறித்து தங்களுடைய அறிக்கையில் பதிவுசெய்த தகவல் இது.

1930 நிலவரப்படி பம்பாயின் 83 மில்களில் மொத்தம் 13 மில்களின்தான் குழந்தைகள் பராமரிப்பகங்கள் இருந்தன. தமிழ்நாட்டின் மிகப்பெரும் மில்களான மதுரை மதுரா மில், கோவை ஸ்பின்னிங் & வீவிங் மில் நிலவரத்தை ஏற்கனவே பார்த்தோம். 

27 நவம்பர் 1929 அன்று, ராயல் கமிஷனிடம் டாக்டர் பால்ஃபரும், சகுந்தலாவும் வாக்குமூலம் அளித்தார்கள். பெண் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அபினி கொடுப்பதைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வி: “எல்லா மில்களுக்கும் குழந்தை பராமரிப்பகம் கொண்டுவரவில்லை என்றால், வேலைக்குப் போகும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு அபினி கொடுக்கப்படுமா?”

டாக்டர். பால்ஃபர்: ஆமாம் 

‘இங்கிலாந்தின் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை’ நூலில் ஏங்கல்ஸ் பெண் தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அபினி கலந்த காட்ஃபிரேஸ் கார்டியல் என்ற மருந்தைக் கொடுத்து தூங்க வைத்தார்கள் என்று குறிப்பிட்டிருப்பார். கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து இந்தியாவில் அதே நிலையைக் காண முடிகிறது. 

‘நரகம் என்பது இப்படித்தான் இருக்குமோ?’ – இப்படி நினைக்கும் அளவில்தான் தொழிலாளர்களின் வாழ்க்கை அன்றைக்கு இருந்தது. ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கத்தின் மீதும், அவர்களில் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மீதும், குழந்தைகள் மீதும் முதலாளித்துவ முறை சுமத்திய வன்முறை இருக்கிறதே! இந்த சுரண்டல்தான், இந்த வன்முறைதான் முதலாளித்துவ முறை ஈட்டிய உபரிக்கு அடிப்படை. ஸ்வீட் காமர்ஸ்! ஸ்வீட் கேப்பிடலிசம்! 

ஆதாரங்கள்

  1. The Maternity Conditions of Women Mill Workers in India, Margaret I. Balfour C.B.E., M.B., C.M. & Shakuntala K. Talpade M.B., B.S. (An enquiry carried out under Indian Research Fund Association, Simla, & Haffkine Institute Bombay), Indian Medical Gazette, May 1931.  
  2. Indian Medical Gazette, April 1924’s Description about the Article ‘Women’s Labour in Bengal Industries’ by Miss Dagmar Curjel M.D., D.P.H 
  3. Samita Sen, Gender and the Jute Industry, 1890-1990
  4. The Condition of the Working Class in England, F. Engels, First Published 1845 (available at marxists.org)
  5. Report of the Royal Commission on Labour in India (appointed in 1929), 1931, Vol 1 Bombay Presidency, including Sind)- Part 1 Written evidence & Part 2 Oral evidence; Vol VII (Madras presidency and Coorg)- Part 1 Written evidence & Part 2 Oral evidence. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *