இங்கிலாந்து  தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து எங்கெல்ஸ் விரிவாக ஆய்வு செய்திருந்தார். அங்குத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடிசைப் பகுதியில் அவ்வப்போது நோய்த் தொற்று பரவி வந்தது. அங்கிருந்த முதலாளிகள் தொற்று நோய்களின் தோற்றுவாய்களை அடைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய சில முன்முயற்சிகளை மேற்கொண்டனர் என்று “குடியிருப்புப் பிரச்சனைகள்” என்கிற‌ அவரது  புத்தகத்தில் தனது கள ஆய்வில் கிடைத்த தகவலை எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலோடு முடித் திருந்தால் அவர் எங்கெல்ஸ் அல்லவே..!

அவர் மேலும் எழுதுகிறார்…

தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்த இந்நோய்த் தொற்றுக்கள் “நகரத்தில் முதலாளிகள் வசிக்கின்ற அதிகக் காற்றோட்டமான, ஆரோக்கியமான பகுதிகளுக்கும் பரவுகின்றன. கொள்ளை நோய்கள்  உற்பத்தி ஆவதை முதலாளி வர்க்கம் ஆபத்தில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதன் விளைவுகள் அவர்களுக்கு ஆபத்தேற்படுத்துகிறது.”  நோய் தங்களுக்கு வந்து விடக்கூடாது என்று முதலாளிகள் அஞ்சினர். அங்கேயே நோயைத் தடுக்கவும், தங்களை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் சுயநல எண்ணத்தோடும்தான் சில தற்காப்பு ஏற்பாடுகளைத் தொழிலாளர்கள் குடியிருப்பில் முதலாளிகள் செய்தனர் என்பதுதான் உண்மை. ஆனால் தொழிலாளர்களோ அவர்களின் நலனுக்காகவே அவை செய்யப்பட்டதாக நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.

எது காரணம்..யார் காரணம்..?

சரி, தொழிலாளர்களுக்கு இப்படியான நோய்கள் வர யார் காரணம்..?

  1. குடிசையும் சிறு கூரையுமாகக்காற்றோட்டம் இல்லாத வீட்டில் தொழிலாளர்கள் வசிப்பது.
  2. நெருக்கமாகஉள்ள வீட்டமைப்பை கொண்ட சுகாதாரமற்ற குடிசை பகுதியில் வசிப்பது.
  3. இயற்கை உபாதைகளைக்கழிக்கச் சுகாதாரமான ஏற்பாடின்மை.
  4. சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை (குளிக்க, துவைக்க.. சுத்தம் செய்ய) போதுமான சுத்தமான தண்ணீர் இல்லாதது.
  5. ஊட்டச்சத்தான உணவு இல்லை
  6. வேலை சூழல் மற்றும் வேலை நேரத்தால் ஏற்படும் உடல் கோளாறுகள்.

இப்படியான காரணங்களே தொழிலாளர்களுக்கு நோய்கள் வரக் காரணமாக இருந்துள்ளது. இவர்கள் இப்படியான நிலையில் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட குறைந்த கூலியே ஆகும்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி லாபம் பார்த்த முதலாளி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரியப் பங்கை கொடுத்திருந்தால் அவர்கள் நல்ல குடியிருப்பில் வாழ்ந்திருப்பார்கள். நல்ல குடிநீரும், சுகாதாரமான வாழ்வும், சத்தான உணவும் கிடைத்திருக்கும். அப்படி நடந்திருந்தால் தொழிலாளர்களுக்கு இப்படியான நோய்களே வந்திருக்காது என்று முதலாளித்துவத்தின் நயவஞ்சக செயலை மிகத் தெளிவாகவே எங்கெல்ஸ் அந்நூலில் பேசியிருப்பார்.

State records 4,150 fresh cases; 2,186 patients discharged - The Hindu

இந்தியாவும் கொரோனாவும்

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையே பொதுவாக எளிதில் நோய்கள் தாக்கும் என்பதே அறிவியல். இயல்பாகவே குறைந்த கூலியைப் பெறும் தொழிலாளியும் அவர்கள் தம் குடும்பமுமே போதுமான உணவில்லாமல் ரத்த சோகையோடு நோய் எதிர்ப்புச் சக்தியின்றி கொரோனா போன்ற தொற்றுக்கு ஆளாகின்றனர்.

முதலாளிகளின் தொழிற்சாலைகளில் வேலை செய்ய உழைக்கும் மக்கள் நகரங்களில் குவிக்கப்பட்டனர். போதுமான ஊதியம் கொடுக்கப்படாததால் நெருங்கிய வீடு அமைப்பைக் கொண்ட இடங்களில், குடிசை பகுதிகளில் உழைக்கும் மக்களே  கூட்டமாக வசிக்கின்றனர். சுகாதாரமற்ற வாழ் நிலையில் தவிக்கின்றனர். எங்கெல்ஸ் இங்கிலாந்து தொழிலாளர்கள் நிலையை விவரித்தது போல் முதலாளித்துவத்தின் சுரண்டலே இங்கும் தொழிலாளர்களை இவ்வாறு மோசமான சுற்றுப்புற நிலையில் குடியிருக்க வைத்துள்ளது.

தற்போது நாம் எதிர்கொள்ளும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. நோய் தோற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குறுகிய காற்றோட்டம் இல்லாத, நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களே.  குறிப்பாகக் குடிசை பகுதிகளிலும் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தான் நோய்த் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது.

குடிசை பகுதிகளில் நூறு சதுர அடி கூட இல்லாத வீட்டில் சராசரியாக  நான்குபேர் வசிக்கின்றனர். இங்கு எப்படி அரசு சொல்லும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியும்? பலாயிரம்பேர் குடியிருக்கும் இப்பகுதிகளில் இருக்கும் பத்துப்பதினைந்து கழிப்பறைகளைக் கொண்டு எப்படி தொற்றை பரவாமல் தடுக்கமுடியும்? கையை சேப்பு போட்டு பலமுறை கழுவுங்கள் என்கிறது அரசு விளம்பரம். கழிப்பறையில் “கழுவவே’ தண்ணீர் இல்லாதபோது இதற்கு அரசு என்ன வழி சொல்லும்? வீட்டிலேயே இருங்கள் என்றனர், வீடே வாசலில்தான் உள்ளது?

ஊரடங்கு ஏழை, உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வேலையையும் வருமானத்தையும் பறித்து விட்டது. உணவே உத்தரவாதம் இல்லாதபோது நோயை எதிர்கொள்ள ஊட்டச்சத்தான உணவுக்கு எங்கே செல்வது..?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தச் சரியான மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதே இப்போதைய பிரதான மருத்துவமாகவுள்ளது. ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலே பாதி நோய்கள் நம்மை அண்டாது. போதுமான கூலி வழங்கப்படாமையும், கடுமையான உழைப்புச் சுரண்டலுமே தொழிலாளர்களை ஆரோக்கியமற்ற நிலையில் வைத்துள்ளது. நோய்களால் ஏழை மக்களே வதைபடுகின்றனர் என்றால் அதற்கு காரணம் முதலாளித்துவத்தின் கொள்ளை லாபமும், அதீத சுயநலமும்தான் என்பதை எங்கெல்ஸ் எடுத்துக் காட்டியுள்ளார்.

தனித்திருத்தலும் ஒன்றிணைதலும்

Tamil Nadu Extends Lockdown Till July 31, Complete Shutdown to ...

கர்நாடகாவிலிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பெரும் கட்டிட நிறுவனங்களின் முதலாளிகள் முதல்வரை சந்தித்துப் பேசினர். புலம்பெயர் தொழிலாளர்கள் சென்றுவிட்டால் கட்டுமான நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்காமல் நாங்கள் அவதிப் படுவோம் என்று முறையிட்டனர். உடனே அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களைக் கர்நாடகா அரசு ரத்து செய்தது.

கேரள அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விருந்தாளி தொழிலாளர்கள் என்று அழைக்கிறது. அவர்களுக்கான உணவு, இருப்பிடம் என எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது. சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் ஊர் செல்ல ஏற்பாடு செய்து, உணவு, மருந்து உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பி வைக்கிறது. இதுதான் மக்களை முதன்மையாகக் கொண்டு இயங்கும் கம்யூனிஸ்ட் அரசிற்கும் மற்ற முதலாளித்துவ அரசுகளுக்குமான வித்தியாசம்.

அண்மையில் மத்திய அரசு 50 பெருமுதலாளிகளுக்கு 68 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்தது. மேலும், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளப் பெரு நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளையும் கொடுக்க தயாராகி வருகிறது. ஆனால், பெருமுதலாளியான நாராயண மூர்த்தியோ இக்கால இழப்பை ஈடுகட்டத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும் என்கிறார். அதற்கேற்ப வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த அரசு முனைகிறது.

கொரோனா  என்பது ஒரு கிருமி. அதை எப்போதும் போல் நவீன அறிவியல் வளர்ச்சி எதிர்கொள்ளும். ஆனால்  முதலாளித்துவம் எனும் தொற்றே உண்மையில் பெரும் பகுதி உழைக்கும் மக்களைத் தினம் தினம் வதைத்துக் கொள்கிறது. கொரோனாவை தனித்திருந்தும் ஊட்டச்சத்தான உணவை உட்கொண்டும் சுத்தத்தை பராமரித்தும் எதிர்கொள்ளச் சொல்கிறது அரசு. ஆனால் தனித்திருப்பதற்கோ, உணவுக்கோ, சுகாதாரமான வாழ்விற்கோ வழியில்லாமல் செய்யும் இந்த முதலாளித்துவ தொற்றை  உழைக்கும் மக்கள் ஒன்றிணைத்தே எதிர்த்து வீழ்த்தவேண்டியுள்ளது.

One thought on “கொள்ளை நோயும், முதலாளித்துவ தொற்றும் – ச.லெனின்”
  1. காலச்சூழ்நிலைக்கேற்றார் போல் உள்ளது. சிறப்பான கட்டுறை..

    முதலாளித்துவம் இக்கொரோனா காலத்திலும் லாப நோக்கம் ஒன்றை முன்னிறுத்தியே தனது செயல்களில் ஈடுபடுகின்றது.

    தனியார் மருத்துவமனைகள் மூலம் கொள்ளை லாபம்,

    நூறாண்டு காலமாக தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற பல தொழிலாளர் நலச்சட்டங்களையும், உரிமைகளையும் தொழிலாளர் விரோத ஆட்சியாளர்கள் மூலம் பறித்து 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றுகிறது.

    கொரோனா காலத்தை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயம், வேலையிழப்பு, சம்பள இழப்பு, நிரந்தரமற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாராம் உள்ளிட்ட அனைத்தும் கேள்வி குறி! இப்படி தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றது. அனைத்து விதமான உரிமைகளையும் பறிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *