பத்தாம் வகுப்பு தேர்வானதும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகள் அடங்கிய ஃபஸ்ட் குரூப்பில்  சேர்ந்தேன். ஒரு மாதம் கடந்த நிலையில், கணிதம் கடினமான இருப்பதாக உணர்ந்தேன். குறைந்த பட்சம் பாஸாக வேண்டும் என்றாலும் டியூஷன் போக வேண்டும். அதற்கு மாதம் இருபது ரூபாய் பணம் வேண்டும். அவ்வளவு பணம் கொடுக்கும் வசதி அப்போது என் குடும்பத்திற்கு  இல்லை. அடுத்த நாள் தலைமை ஆசிரியரை சந்தித்து ஆர்ட்ஸ் குரூப்  வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அடுத்த சில நாட்களில் “ஏன்டா ஆர்ட்ஸ் குரூப் எடுத்தே.எந்த வேலையும் கிடைக்காது. அக்ரி குரூப் எடுத்து இருக்கலாமே. உடனடியாக வேலை”  என்று சிலர் திட்டினார்கள். மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்கு போனேன். ஏன்டா என்பது போல் ஏறெடுத்துப்  பார்த்தார். குரூப் மாத்த வேண்டும் சார்  என்றேன். எந்த குரூப்ல சேர்ந்தே? ஃபஸ்ட் குரூப்ங்க சார். இப்ப எதுல இருக்க? ஆர்ட்ஸ் குரூப்ங்க சார். என்ன குரூப்கு போகனும்? அக்ரி  குரூப்ங்க சார். நம்ம ஸ்கூல எத்தனை குரூப் இருக்கு? மூணு குரூப்ங்க சார் . மூணுக்கும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு பன்னிட்டியா? என்றார். “நீ படிக்கிற படிப்புக்கு இதே போதும்.  ஓடிப் போயிறு. எந்திரிச்சா.. பட்டையா அடிச்சு போடுவேன்”  என்றார். உண்மைதான்.  அவர் கையில் ஒரு மாணவன் சிக்கினால் குறைந்த பட்சம் ஐம்பது அடி அடிப்பார். முதலில் இரண்டு கன்னத்திலும் இரண்டு கைகளாலும் மாறி மாறி அரைவார். அடுத்து முடியை பிடித்து இழுத்து கக்கத்தில் தலையை அமுக்கிக் கொண்டு முதுகில் இரண்டு கைகளாலும் அரைவார். பின்னரும் கூட சில சமயங்களில் இடுப்பில் கிள்ளிப் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டே இருப்பார்.  அந்த பள்ளிக்குச் சென்ற முதல் நாளே “இந்த பள்ளியை  விட்டு போகும் வரை இவரிடம் அடி வாங்கி விடக் கூடாது” என்று வேண்டிக் கொண்டேன்.
     இன்றைக்கு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் காலகட்டத்திலும் கூட  ஏழை எளிய மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு குரூப் தேர்வு செய்வதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. பாடவாரியாக அவர்கள் ஆர்வத்தை  பொறுத்து இன்னும் வழிகாட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இந்த நாற்பது ஆண்டு காலத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற படிப்புகளை நோக்கிய பெரு வணிகம் முன்னுக்கு வந்துள்ளது. சுமார் பத்து லட்சம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தால் அதில்  சுமார் நான்காயிரம் மாணவர்கள்
 மட்டுமே மருத்துவம் ‌பயில ‌முடியும்‌. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் கொஞ்சம் பேர் படிக்கலாம். பொறியியல் படிப்புகள் சார்ந்து ஒரு விழுக்காடு மாணவர்கள் படிப்பதாக கொள்வோம். மீதமுள்ள பெரும்பகுதி மாணவர்கள்  கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். பின்னர் அவர்கள் போட்டித் தேர்கள் அல்லது சுய  வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் துறைக்கு தயாராக வேண்டும்.
       சுமார் 98 விழுக்காடு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வி படிக்க முடிவதில்லை. எனவே பிளஸ் டூ  வகுப்பு பாடத்திட்டம் என்பது இந்தப் பெரும் பகுதி மாணவர்கள் நன்மை சார்ந்து இருக்க வேண்டும். பதினொன்றாம்  வகுப்பில் மாணவர்கள் தேர்வு செய்யும் பாடங்கள் கல்லூரியில் பல பாடங்களை தேர்வு செய்ய வசதி செய்து கொடுப்பதாக இருக்க வேண்டும். மருத்துவம் படிக்க முனைந்த மாணவன் அது கிடைக்காவிட்டால் கணிதம் சார்ந்த பாடங்களுக்கு செல்வதாக இருக்க வேண்டும். அதேபோல் பொறியியல் படிக்கலாம் என்று முனைந்த மாணவர்கள் அது கிடைக்காத சமையத்தில்   உயிரியல் பாடம் சார்ந்த படிப்புகளுக்கு சேர  விரும்பினால் அதற்கு வழி வகை இருக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பில் கணிதம் என்று  முடிவு செய்து விட்டால் உயிரியல் பாடங்கள் பக்கம் ஒருவர் வரவே கூடாது. உயிரியல் என்று முடிவு செய்து விட்டால் கணிதம் பக்கம்   வரவே கூடாது. இது எப்படி இருக்கிறது?  இதனை  ஆபத்தானது என்று கூறுவதா? அபத்தம்  என்று கூறுவதா? அராஜகம் என்று அழைப்பதா?
மருத்துவ படிப்பை போலவே பொறியியல் ...
   மைக்ரோ பாலாஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி போன்ற நவீன பாடங்களை இளங்கலை பட்டப் படிப்பில் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடம் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். அப்படிப் படிக்க வேண்டும் என்பது கூட ஒரு மாணவனுக்கு  பத்தாம் வகுப்பில் தெரியாமல் இருக்கலாம்.   பத்தாம் வகுப்பில். உயிரியல் படிக்காமல்  விட்டுவிட்டு வந்தவர்கள் இப்படிப்பட்ட பாடங்களை உயர் கல்வியில் படிக்கவே முடியாது. கணிதத்தை  பத்தாம் வகுப்போடு கை கழுவிய மாணவர்கள் ‌பட்டவகுப்பிலோ வேறு பட்டய வகுப்பிலோ கணிதம் சார்ந்த கல்வியை நினைத்துக் கூட  பார்க்க முடியாது. .
     பிளஸ் டூ பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்?    பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரும் மாணவர்களுக்கு மேற்படிப்பில் பாடத் தேர்வுக்கு வாய்ப்புகள் நிறைய இருப்பது போல்   இருக்க வேண்டும். அப்படித்தான் அமைக்கப்பட்டு இருந்தது இத்தனை ஆண்டுகளாக.  ஆனால் திடீரென்று இந்த கல்வி ஆண்டின்  தொடக்கத்தில், இதில் பெரும் மாற்றத்தை செய்து உள்ளது தமிழ் நாடு அரசு.  கொரானாவில் முடங்கிப் போன,  மாணவர்கள் எங்கு இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று என்றே தெரியவில்லை.  ஆனால்  ஓர் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை சிதைத்து  நிபுணர்கள் குழு கூறியதாகக்  கூறிக் கொண்டு,.  தமிழ் நாடு   அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  அதில் தமிழ் ஆங்கிலம் தவிர இதுவரை படித்து வந்த   நான்கு பாடங்களை இப்போது படிக்க வேண்டியதில்லை. மூன்று பாடங்கள் படித்தால் போதும். இதுவரை 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும் என்கிறது பள்ளிக் கல்வித் துறை. ஏன் அப்படி என்று எழும் கேள்விக்கு,  மாணவர்களின் பாடச் சுமை மன அழுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த நடைமுறையை கொண்டு வருவதாக அரசு கூறுகிறது.
 பாடச் சுமை மன அழுத்தம் என்று கருதினால் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு  ஆகியவற்றில் சுமார் 1500 பக்கங்கள்  கொண்ட  பாடச் சுமை மிக்க புத்தகங்கள் எதற்காக?    உண்மையில் அரசுக்கு பாடச் சுமை குறித்த அக்கறை இருப்பின் முதலில் நீட் தேர்வைத் தானே இரத்து செய்ய போராடி  இருக்க வேண்டும்?  நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். மருத்துவம் தவிர மீதமுள்ள எல்லா பட்டப் படிப்புகளுக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் போதுமானது. ஆனால் மருத்துவம் படிக்க மட்டும் நீட் தேர்வுக்கு படிக்க வேண்டும்.  பிளஸ் டூ   மாணவர்கள்  மருத்துவம் பயில விரும்பினால் இரண்டு குதிரைகள் மீது லாவகமாக ஏறி பயணம் செய்து வெற்றி பெற வேண்டும். இது எவ்வளவு பெரிய மன அழுத்தம்? எவ்வளவு  மன அழுத்தம்? எத்தனை பேர் கனவு பொய்த்து போய் இருக்கிறது?  இதனை ஒட்டி எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டனர்? கொரானா பெரும் பரவல் நேரத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்று நின்றது அரசு. ஏன் அவர்கள் மன அழுத்தம் குறித்து கவலைப்பட வில்லை?
     உண்மையில் இது மாணவர்கள் மன அழுத்தம் தேர்வு சுமை சார்ந்த பிரச்சினை  அல்ல. மத்திய அரசு இன்னும் நடைமுறைப் படுத்தாத ஆனால் அரசு உத்தரவுகள் மூலம் பலவற்றை நடைமுறை படுத்திவிட்ட புதிய கல்விக் கொள்கை சார்ந்த பிரச்சினை.
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட சுமை ...
   கணிதமா அறிவியலா கலைப் பாடமா என்பதை எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு வரும் போதே தேர்வு செய்ய வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கை சார்ந்த பிரச்சினை இது. பதினோராம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் போதே எதிர் காலம் கணிதம் சார்ந்தா அறிவியல் சார்ந்தா கலை சார்ந்தா என்று நிர்பந்தம் செய்கிறது அரசு. அதற்கு மாநில அரசு துணை போகிறது என்றே இதனைக் குறிப்பிட வேண்டும்.
     இல்லை இல்லை அரசின் நோக்கத்தை கொச்சைப்படுத்த முயல் வேண்டாம் என்று அரசு கூறுமானால் ஏன் இதனைக் கொரானா பெரும் பரவல் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த கல்வியாண்டு முடிந்து மக்கள்  இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளலாமே!
கட்டுரையாளர்: மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *