வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் (O7.04-1770- 23-04-1850)
       THE SOLITARY REAPER
(தனிமையில் கதிர் அறுப்பவள்)
வேர்ட்ஸ் வொர்த் போல இயற்கையைப்பாடித்தீர்த்த கவிஞன் வேறொருவன் இல்லை ,இயற்கையைப்பற்றி கவிபுனைய நினைக்கும் அத்தனை கவிஞர்களுக்கும் இவர் தான் உந்து சக்தி.
இவரின் கவிதைகளைப்படிக்காமல் இயற்கை பற்றிய கவிதைகள் என்றும் முழுமையுறாது. வேர்ட்ஸ் வொர்த்தின் உலகப்புகழ் பெற்ற கவிதையான THE SOLITARY REAPER என்ற கவிதையை தற்போது மொழிபெயர்த்திருக்கிறேன். தங்களது கருத்துக்களை பதிவிடவும்.
கவிதைச்சூழல்
  அழகின் இளவரசியான மலைப்பிரதேசத்தில் கவிஞர் தனிமையில் நடந்து செல்லும் போது அங்கே ஓர் இசைப்பிரவாகம் காற்றோடு கலந்து அவர் காதுகளில் தேன் வார்க்கிறது. அந்தக்குயில் யார் என்று அறியும் ஆசையில் அவ்விடம் செல்கிறார். அங்கே வயலில் ஒர் இளம் பெண் கதிர் அறுத்துக்கொண்டும் அதை கட்டுக்களாக கட்டிக்கொண்டும் களைப்பு தீர தன் தாய் மொழியான ஸ்காட்டிஸ் மொழியில் பாடியபடியே  வேலைசெய்து செய்து  கொண்டிருக்கிறாள். கவிஞர் அவ்விடத்திலேயே சிலையாக நின்று விடுகிறார். காரணம் அப்பெண்ணின் மந்திரக்குரல். எத்தனை காலம் அவர் அப்படியே நின்றாரோ கால வெளியில் . ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகு தான் அந்தக்குரலை தான் இதயத்தில் எடுத்து வந்து விட்டது தெரிந்தது. பிறகு ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்குப் பிறகு
  இந்தக்கவிதை எழுதப்பட்டது-
THE SOLITARY REAPER
(தனிமையில் கதிர் அறுப்பவள்)
the solitary reaper by william wordsworth poem - Google Search | William  wordsworth poems, William wordsworth, Poems
அதோ அவளைப் பாருங்கள்
வயலில் தன்னந்தனியாக   !
கதிர் அறுத்து கட்டுக் கட்டியபடி
காற்று வெளிகளில்
பாடித்திளைக்கிறாள்
நீங்கள் நிற்கலாம்
அல்லது  மென்மையாய்
கடந்து போய்விடலாம்
அவளை
ஆனால் அவளிசையை  ?
இவள் குரலில்  பொங்கித் ததும்பும் இசைதான்
இந்தப் பள்ளத்தாக்கு முழுவதும்
பிரவாகமாக பீறிட்டு வழிகிறதே !
அரேபியப் பாலைவனத்தின் வெய்யிலில்
அயர்ச்சியுற்று பயணிக்கும் யாத்ரீகர்களுக்கு
பாலைவனச்சோலையோரம்  பாடும்
இனிய நைட்டிங்கேல் பறவையின் குரலும்
இவளது குரலுக்கு  என்றும் ஈடாகுமோ?
கடலின்  பேரமைதியை
தனது குழையும் குரலால்
இசைத்து  எழுப்பியபடி
வசந்தத்தை வரவேற்கும்
அந்த கருங் குயிலின் இன்னிசையும் தான்
இவளது குரலுக்கு ஈடாகுமோ?
எனில் உள்ளத்தை சிலிர்க்க வைக்கும்
இவளின் உன்மத்தக்குரலுக்கு
எதுதான் ஈடாகும்  சொல்லுங்கள் ?
அவள் என்ன தான் பாடுகிறாள் ?
பொருள் புரிந்தவர்கள் கூறுகிறீர்களா ?
இந்த மலைப் பிரதேசமெங்கும்
நுரைத்துப்பொங்கும்
இவளின் இசை வெள்ளத்தில்
மிதப்பது
கசப்பான கடந்த காலமா?
தொலைந்து போன
துயர் கொண்ட நாட்களா?
முடிந்தவிட்ட போர்க்களமா?
நிச்சயமற்ற நிகழ்காலமா ?
எதுவோ ?
அந்த மந்திரக் குரல் மீட்டுவது தான் என்ன ?
இயற்கையின் சோகத்தையா ?
வலி மிகுந்த. இழப்பையா ?
வலியையா ? வேதனையையா ?
இருந்ததையா  ?  இழந்ததையா ?
மீண்டும் தோன்றப்போகும்  துயரத்தையா ?
அவளிசையின் அடிநாதம் தான் என்ன ?
பொருள் புரிந்தவர்கள் கூறுகிறீர்களா ?
எல்லையின்மையில் முடிவற்று விரிந்து
போகும் இக்கன்னியின் இசைக்கு
பொருள்தான் தேவையா
 சொல்லுங்கள் ?
அவள் பாடியபடியே பன்னரிவாளால்
நான் சிலையாகிக்கொண்டிருக்கிறேன்
எத்தனை காலம் கடந்ததோ
நான் அசைவற்று  நின்று  ?
எவ்விதம் வீடு வந்து சேர்ந்தேனோ
மலைகளை  கடந்து ?
ஓ எத்தனையோ காலம் கடந்து விட்டது
இது நடந்து
ஆனாலும் ரீங்காரிக்கும் அவளிசை  மட்டும்
எந்நாளும் கடந்து விடாது என் இதயத்தை
மூலம்  வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்
மொழி பெயர்ப்பு   தங்கேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *