Premchand in Sirantha Sirukathaigal (Short Story) Thoguthi Book Review. Book Day Branch of Bharathi Puthakalayam.



“பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்”
தொகுப்பு : அம்ருத் ராய்
தமிழில் : என். ஸ்ரீதரன்
சாகித்ய அகாடமி
பக்கங்கள் : 136
₹. 50/-

மதுரையில் பழைய புத்தகக் கடையில் சமீபத்தில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. உருது மொழியில் எழுதி வந்த பிரேம்சந்த் அவர்கள் ஹிந்தியில் எழுதத் தொடங்கிய பின்னர் பெரிதும் புகழப்பட்ட எழுத்தாளராக மிளிர்ந்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம் மற்றும் ருஷ்ய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சிறந்த சிறுகதைகளில் 8 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

1. அண்ணாச்சி:

அண்ணன் – தம்பிக்கிடையே பள்ளி பருவத்தில் நிகழும் சம்பவங்களே கதைக்களம். நகைச்சுவையுடன் அமைந்த ஆழமான உணர்வின் வெளிப்பாடாக அமைந்துள்ள கதை. தேர்வு பயம், படிக்கும் திறன் முதலியவற்றை இலைமறைக் காயாக தெரிவித்து அண்ணன் தம்பி பாசப் போராட்டத்தை பதிவு செய்த விதம் அருமை. அண்ணனின் அதிகாரத் தோரணை மிக யதார்த்தமானது.

2. ஈத் பண்டிகை:

வறிய குடும்பத்தில் பிறந்த தாய் தந்தையரை இழந்த ஹாமித் என்ற சிறுவனின் ஈத் பண்டிகைக் கொண்டாட்டமே இச்சிறுகதை. சக நண்பர்களுடன் தொழுகைக்குச் சென்று ஏக்கப் பெருமூச்சுடன் வேடிக்கை பார்த்து தனக்கென எதுவும் வாங்காமல் தனது பாட்டிக்காக பொருள் வாங்கி வரும் கருணைமிக்க சிறுவனாக ஹாமித் மிளிர்கிறான். சக நண்பர்களிடையே நடைபெறும் விளையாட்டுப் பொருட்கள் குறித்த சம்பாஷாணைகள் நகைச்சுவை வடிவில் அமைந்து சிந்திக்க வைக்கக் கூடியனவே… இச்சிறுகதையின் எளிய வடிவம் தற்சமயம் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் உள்ளது என்பது பாராட்டத்தக்கது.

3. கிட்டிப்புள்:

சிறுவயதில் விளையாடிய விளையாட்டை வளர்ந்து பெரிய பதவியை அடைந்த பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பி நிலையில் ஆட முனையும் ஒருவனின் நிகழ்வே இச்சிறுகதை. சிறுவயதில் தன்னுடன் ஆடி தன்னைத் தோற்கடித்தவனையே தேடி அழைத்து மீண்டும் அவனுடன் விளையாடி மகிழும் தருணம் சுவாரஸ்யமான அனுபவமே. பதவியும் அதனால் உண்டாகும் மதிப்பும் மரியாதையும் விளையாட்டை சிதைக்கும் நிகழ்வு தத்ரூபமாக காட்சிபடுத்திய விதமே இச்சிறுகதையின் சிறப்பாக கருதுகிறேன்.

4. இரு எருதுகளின் கதை:

இரு எருதுகள் முதலாளியில் விற்கப்பட்ட பின்னர் அடையும் அவலங்களே இச்சிறுகதை. பேசும் எருதுகள் என்பது இக்கதையின் தனிச்சிறப்பு. ஒன்றுக்கொன்று நட்பு பாராட்டும் விதம் சிறுமியிடம் காட்டும் கருணையும் சக உயிரினங்களைக் காப்பாற்ற முனையும் துணிவும் கண்ணீரில் ஈரம் கசியச் செய்யக்கூடியவைகளே… இறுதியில் மீண்டும் பழைய முதலாளியிடமே அடைக்கலமாகும் தருணம் மட்டுமே சிறு நெருடல்.

5. சோதனை:

1739 ஆம் ஆண்டு தில்லி மீது படையெடுப்பு நடத்திய நாதிர்ஷாவின் கொள்ளையடித்தலே இச்சிறுகதையின் கதைக்களம். அரண்மனை ராணிகளிடம் அவன் நடந்து கொள்ளும் விதங்கள் ஒரு வித மன சஞ்சலத்தை உண்டாக்கும் வண்ணம் அமைந்து இறுதியில் அவையாவும் நாதிர்ஷாவின் சோதனைகள் என அறியும்போது ராணிகளைப் போலவே நாமும் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாதென்பதே உண்மை.



6. பெரிய இடத்துப் பெண்:

கூட்டுக் குடும்பமாக வாழும் அண்ணன் தம்பி உறவே கதைக்களமாக இருப்பினும் அண்ணியின் கதாபாத்திரமே முதன்மையானது. அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாடுகளால் குடும்பம் சிதைவடையிருந்த நிலையில் மீண்டும் கூட்டுக் குடும்பமாக வாழும் நிகழ்வு மிக நுட்பமாக சித்தரித்த விதம் கவனத்திற்குரியதே…

7. ராம்லீலா:

ராமாயணக் கூத்துக் கலையில் வேஷம் தரிக்கும் ராமர் கதாபாத்திரத்திற்கும் ஒரு சிறுவனுக்கிடையேயான பிரத்யோகமான அன்பின் வெளிப்பாடே இச்சிறுகதை. ஆனால், இச்சிறுகதை பேசும் சங்கதிகளோ பல. சிறுவனின் தந்தையான இன்ஸ்பெக்டரின் மிடுக்கும் நடனத்தாரகையிடம் அவர் காட்டும் பரிவும்(?) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன மனிதர்களின் குண இயல்புகளை. கூத்தின் வாத்தியார் படும் பொருளாதாரச் சிக்கல்களும் அதனால் அவர் கலைஞர்களிடம் காட்டும் பாரபட்சமும் தெள்ளத்தெளிவாகச் சுட்டப்பட்டுள்ளது. ஆபாதீஜான் என்ற நடன மங்கையின் சல்லாப நடனமும் அதற்கான காரணங்களும் அவள் அடையும் வெகுமானங்களும் சங்கடங்களும் சிந்திக்க வைப்பனவே.

8. கஜாகி :

ஒரு தபால் அலுவலர் குடும்பத்தில் வாழும் சிறுவனுக்கும் தபால்கார தினக்கூலியான கஜாகிக்கும் இடையேயான உறவின் ஆழமே இச்சிறுகதை. சிறுவனுக்காக மான்குட்டியைக் கொண்டு வருவதற்காக ஏற்பட்ட காலதாமதத்தால் வேலை பறி போவதும் அதனால் அவ்விருவரிடையே ஏற்படும் பாசப் போராட்டம் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தபால்காரரின் மிடுக்கும் இறுதியில் உண்டாகும் பரிவும் நுட்பமானதும் அவசியமானதே. தபால்காரரின் மனைவிக்கும் தபால் அலுவலரின் மனைவிக்குமான உறவு மிக இயல்பானதே. இறுதியில் மான்குட்டியின் மரணம் துர்பாக்கியமானதே.

இங்ஙனம் இத்தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகளும் மிக சிறப்பான அனுபவத்தைத் தருபவைகளே. “சோதனை, பெரிய இடத்துப் பெண்” ஆகிய இரு சிறுகதைகளைத் தவிர மற்ற யாவும் சிறுவர்கள் தொடர்புடைய கதைகள் என்பதே குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் சிறுவயதில் தான் அனுபவித்த மற்றும் தான் கண்டுணர்ந்த அனுபவங்களின் தொகுப்பாகவே இச்சிறுகதைகளை உணரலாம்.

“பெரிய இடத்துப் பெண்” சிறுகதையில் வரும் அண்ணி கதாபாத்திரம் எழுத்தாளரின் அன்னையின் குண இயல்புகளே என்பதையறிந்து வியப்பில் ஆழ்ந்தேன். ” கஜாகி” சிறுகதையில் வரும் தபால் அலுவலர் போலவே எழுத்தாளரின் அப்பாவும் தபால் அலுவலராக பணிபுரிந்துள்ளார் என்பதும் சுவாரஸ்யமான உண்மையே.

தமிழாக்கத்தில் சிற்சில நெருடல்கள் இருப்பினும் நல்லதோர் வாசிப்பனுபவம் கிட்டும் என்பதே உண்மை. சுதந்திரம் அடைவதற்கு முன்னால் வாழ்ந்து இறந்து போன ஒரு எழுத்தாளரின் அன்றைய நிகழ்கால படைப்புகள் இன்றும் அதே உணர்வுடன் படிக்கக்கூடிய வகையில் இன்றைய யதார்த்தத்துடன் ஒன்றிப்போவதில் வியப்பே மிஞ்சுகிறது. காலங்கடந்தும் நிற்கும் எழுத்துக்கள் என்பது இதுதானோ என்னவோ…

நல்லதோர் படைப்பு. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *