வள் மனம் வெதும்பிப் போயிருந்தாள். அவளது குமுறலென இந்த இரவைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை. அவள் வீட்டிற்குள் வந்ததும் ஓரமாய் படுத்திருந்த குழந்தைகள் இருவரும் ஓடிவந்து அவள் கால்களை அணைத்துக் கொண்டார்கள். அம்மாவை இன்னும் காணோமே என்று பதைபதைத்தும் பயந்தும் போயிருந்த அந்த அணைப்பில் அவர்களுக்குள் இருந்த பயத்தை அவள் உணர்ந்தாள். தன் முகத்தை கவலையோடும் பசியோடும் பார்த்த குழந்தைகளின் கண்கள் அவளையும் அறியச் செய்யாமல் கண்ணீரை உதிர்த்தது. ஒரு பொட்டுக் கண்ணீர் சிந்துவதைக் கூட விரும்பாத அவளுக்கு குழந்தைகளின் அந்த அணைப்பும் அந்தப் பார்வையும் அவளுக்குள் உடைப்பை ஏற்படுத்திவிட்டன.

அவள் தன் கணவனை இழந்த பொழுது கூட கண்ணீரை உதிர்க்கவில்லை. அந்த படுபாதகச் சாவில் ஊரே இவள் அழாததை திட்ட., அவள் அந்தக் கண்ணீரைச் செரித்து வைரம் பாய்ந்தவளாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தாள். அப்பொழுதெல்லாம் உதிராத கண்ணீர் இப்பொழுது உதிர்ந்துவிட்டது. அப்படியே குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள். குழந்தைகள் அவள் மடியில் முகம் புதைத்துத் தேம்பலாயினர். தாரை தாரையாக வடிகிற கண்ணீர்  குழந்தைகளின் உச்சியை நனைக்க அவளுக்குள் இருந்த கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு உள்ளுக்குள் இருந்த ஆத்திரத்தை கண்களில் சிந்தினாள்.

அந்த கண்ணீரின் வெப்பத்தை வெளியில் விழுகிற மழையும் அந்தக் குளிர்காற்றும் உறவாடி சாந்தப்படுத்தின. மூக்கை உறிஞ்சிக்கொண்டு சேலைத் தலைப்பால் துடைத்தவள் குழந்தைகளை விலக்கிவிட்டு வீட்டுக்குள் அடிக்கிற மழையின் இரச்சலில் சணல் சாக்கைத் தூக்கிப் போட்டாள். கதவைச் சாத்த அவளுக்கு விருப்பமில்லை. இன்று அவளுக்கு நேர்ந்த கதிக்கு அந்த மழைச்சாரலும் காற்றும் அவள் கணவன் அவளோடு உறவாடுவதாய் உணர்ந்தாள். அவனின் கதகதப்பின் வாசம் அவளுக்குள் மேலெழுந்தது.

நின்ற கண்ணீர் மீண்டும் துளிர்க்க அவள் துடைக்க மணமில்லாதவளாய் துளிகளை இமைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டாள். திரள்கிற துளிகள் அவளது பாவைகளை மறைத்து காட்சிகளை மங்கலாக்கின. அதற்கு பழகிக்கொண்ட அவள்., அடுக்குப் பானையிலிருந்த மாவை இரு கைப்பிடி அள்ளினாள். அதைச் சின்ன வட்டகைக் கிண்ணத்தில் போட்டவள் அப்படியே அதில் கூரையில் வழிகிற மழைத் தண்ணீரை கொஞ்சம் பிடித்துவந்து  உப்புச் சாடியிலிருக்கிற கொஞ்ச உப்பில் ஒரு விரல்பிடி சேர்த்து கொஞ்சம் வெள்ளத்தூளும் சேர்த்து பிசைய ஆரம்பித்தாள். இமைக்குள் நிறுத்தியிருந்த துளிகளும் விழ சேர்த்துப் பிசைந்தாள். குழந்தைகள் இருவரும் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். சிறு சிறு கவளங்களாகப் பிடித்து ஆளுக்கு இரண்டைக் கொடுத்தாள். குழந்தைகள் ஆவலாய்த் தின்றனர்.

“யெம்மா யேம்மா இவ்வளவு நேரம் எங்க போயிருந்த.. ய்யேன் அழுற. மாதிரி இருக்க.” நான்கு வயதுச் சின்னவன் முத்து மழலை மாறாத குரலில் கேட்டான். அந்தக் குரலின் அப்பாவித்தனம் அவளின் தொண்டையை அடைத்தது.

“பேசாமச் சாப்பிடு.. காலையில சொல்றேன்..” அவன் வாயில் ஒட்டியிருந்த மாவைத் துடைத்து விட்டபடி சொன்னாள்.

“இப்பவே சொல்லும்மா., எங்களுக்கு பயமாருக்கு.,” என்றாள் ஆறு வயதுப் பெரியவள் நந்தினி.

“அப்படில்லாம் பேசக்கூடாது., பொம்பளப்புள்ள நீ தைரியமா இருக்கணும்., நீயே இப்படிப் பயந்தா., தம்பியும் பயப்படுவான்ல., ரெண்டு பேரும் சாப்ட்டுத் தூங்குங்க., அம்மா என்னெயேதுன்னு காலையில சொல்லுறேன்.” என்றவள். இருவரும் தூங்க பாயை விரித்துவிட்டாள். சிந்திய கண்ணீர்த் துளிகள் போக திரளத் தயாராகும் துளிகளைக் கட்டுப்படுத்தியவளாய்..

“தின்னாச்சுன்னா கையக் கழுவிட்டு வாங்க.,” என்றாள். குழந்தைகள் இருவரும் கைகழுவிட்டு வந்தார்கள்.

“கதவச் சாத்திரவாம்மா..”

“வேணாம் இருக்கட்டும்., நீ வந்து படு..” என்றவள் பாயின் மீது பழைய துணிகளாள் திணிக்கப்பட்ட தலையணைகளைத் தூக்கிப் போட்டாள். நந்தினியும் முத்துவும் படுத்துக் கொள்ள இவளும் பாயின் ஓரத்தில் அமர்ந்து வாசலைப் பார்க்கத் தொடங்கினாள். முத்து அவள் மடி மீது வந்து படுத்துக் கொண்டான். படுத்துக் கொண்டவனைப் பார்த்தவள் தனது கைகயால் அவனது முதுகை அணைத்துக் கொண்டாள். நந்தினியும் கொஞ்சம் நகர்ந்து வந்து அவளின் தொடையில் தன் முகத்தை இறுக்கிக் கொண்டாள். தனது ஒரு கையால் இருவரின் முதுகிலும் மாறி மாறித் தட்டிக் கொண்டே மீண்டும் வாசலையே வெறிக்கலானாள்.

மழையின் தூறல் தூர்ந்து போய் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் ஒளிர்கிற விளக்கொளியின் வெளிச்சம் இவள் அருகாமைக்குத் துணையாய் ஆடி ஆடி சுடர் விட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள் இருவரும் அயர்ந்திருந்தார்கள். ஆனால் இவள் கண்ணீருக்கான அந்த அலறல் அவள் இதயத்திற்குள் அறைந்து கொண்டேயிருந்தது. சுவற்றில் ஆணியடித்து அதில் தொங்கிக்கொண்டிருந்த படத்தில் அவள் கணவன் பூபதி சிரித்துக் கொண்டிருந்தான். படத்தின் மேல் எப்போவோ வைக்கப்பட்ட பூ காய்ந்து., கோர்த்த நூலில் தொங்கிக் கொண்டிருந்தது. அகன்ற நெற்றியும் முன்னால் சுருண்டு அழகு காட்டும் முடியும்., மூக்குத்திகள் ஏங்கும் மூக்கும் துடிக்கும் உதடுகளும் கனன்ற நெஞ்சமும் வைராக்கியமும் கொண்ட இந்த அவளுக்கு மல்லிகா என்று பெயர்.

ந்த மண்டபமும் அதன் முற்றமும் கலவரமாக இருந்தது. ஆளும்கட்சி கறை வேட்டிகளுடன் வார்டு செயலாளர் கவுன்சிலரிலிருந்து மாவட்டச் செயலாளருக்காகவும் அந்தத் தொகுதி அமைச்சருக்காகவும் அனைவரும் காத்திருந்தனர். மழைக்காலம் என்பதால் மத்தியான வெயிலுக்குப் பதில் இவர்கள் பேசிப் பேசி மண்டையைப் பொழந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கூடியிருந்த அந்த மண்டபத்தின் வெளியில் இரண்டு பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. அமைச்சர் வருவதற்கு அதுதான் தாமதம். அவசர அவசரமாக கார்ப்ரேசன்காரர்கள் அவர்கள் பங்கிற்கு மரத்தினைப் பொழந்து கொண்டிருந்தார்கள்.

“யென்னப்பா அந்தக் கலெக்ட்டருக்கு என்னா திமிரு., நம்ம ஒரு பயல மதிக்க மாட்டோம்ட்டானப்பா..”

“ இருக்கு இல்லன்னு பண்ணிவிட்டுரணும்ண்ணே., பெறகு நாமெல்லாம் கட்சியில் நாக்கு வழிக்கிறதுக்கா இருக்கோம்.”

“க்ஹேம்., சும்மா ஒன்னும் நாம இந்த இடத்துக்கு வந்துட்டம்மா., என்னா., எம்புட்டுப் போராட்டம், எம்புட்டுச் செலவு., காசு குடுக்குறது மட்டுமில்லாம கையக்கால வேற புடிக்கணும் ஓட்டுக்கு., யெல்லாம் எதுக்கு., நாலு காசு பாக்கத்தான., அதுல இந்தக் கலக்ட்டரு மண்ணள்ளிப் போட்டுவிட்டானப்பா.”

“ யென்னாதேன் பதவி பவுசுன்னு இருந்தாலும் நம்மள ஒரு பய மதிக்கமாட்டாய்ங்கே., ஏதோ இந்த மாதிரி நாலு போஸ்டிங்குக்காக நம்ம மேல கொஞ்சம் பயமும் மரியாதையும் இருந்துச்சு., அதுக்கும் ஒல வச்சுட்டானப்பா., அந்தக் கலக்ட்டரு கண்……..ரோலி மவென்.”

” நம்ம ஊருக்கு மட்டுந்தானப்பா இந்தமாதிரியான ஆளாப் போடுறாய்ங்கே., ஒரே மண்டையடியா இருக்கு.”

“யேய்.. யேய்., பேச்ச நிப்பாடுங்கப்பா., ஆளாளுக்கு கசமுசன்னுட்டு., நடந்தது நடந்து போச்சு., நாம யாருங்கிறத காட்டாம விட்டுருவோம்மா என்னா., பொறுமையா இருங்கப்பா அமைச்சரும் மாவட்டமும் இப்ப வந்திருவாக.”

“ ஆமா., நல்ல அமைச்சரு நல்ல மாவட்டம்ய்யா., ரெக்குல கோட்டவிட்டாய்ங்கே., இதுல பகுமானம் வேற.,”

“யேப்பா யேய் கொஞ்சம் அமைதியா இரப்பா., எங்களுகெல்லாம் அது தெரியாமையா இருக்கு., இன்னக்கி நெலம அப்படி., வர்றவம் போறவனெல்லாம் ஆட்டுறாய்ங்க., யென்ன செய்ய., நெலம எதாயிருந்தாலும் பணிஞ்சு போயிதானப்பா சாதிச்சுக்கிறனும்., நிமுந்தம்னாக்க பாதிப்பு நமக்குத்தேன்.” 

”அதுல்லண்ணே முன்னாடில்லாம் போஸ்டிங்குக்கு நம்ம நம்பி காச முன்னாடியே கொடுத்துருவாய்ங்கே., ஆனா நெலம இன்னக்கி அப்படியில்லையில்ல., அவங்கையில  அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்  வந்தாத்தேன் நம்ம கையில காசு., அது மட்டுமில்லண்ணே ஒனக்குத் தெரியாததா., எம்புட்டுப் பேரக் கெஞ்சவிட்டு., அலையவிட்டு., ஓட்டுக்கணக்குப் பாத்து சாதிக்கணக்குப் பாத்து லிஸ்ட நாம ரெடி பண்ணிக் கொடுத்தோம்., ஒத்த ராத்திரியில சோலிய முடிச்சு விட்டாண்ணே அந்தக் கலக்ட்டரு.,”

“நாம் இன்னாதேன் லிஸ்ட் கொடுத்தாலும்., போஸ்டிங் போடுற அதிகாரம் கடைசியில கலக்ட்டருக்குத் தானப்பா.”

“பெறகு எதுக்குண்ணே அமைச்சரு எம்எல்ஏ எல்லாம்., துப்புறத தொடச்சுப் போட்டுட்டுப் போகவா..”

காரசாரமான இவர்களது பேச்சு அமைச்சரின் வருகையால் அமைதியானது. அமைச்சர் வழக்கமான சிரிப்போடு கும்பிட்டுக் கொண்டே மண்டபத்தில் அமைந்திருக்கும் மேடையின் மேல் போடப்பட்ட நாற்காலியில் போயமர்ந்தார்.

“இதுக்கொன்னும் கொறச்சல்ல..” கூடியிருந்தவர்களில் சிலர் முனகினர்.

முற்றத்திலும் மண்டபத்திற்குள்ளும் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த எல்லோரும் மண்டபத்தில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தனர். அந்த நேரத்தில் ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளரும்  எம்எல்ஏவும் மண்டபத்திற்குள் வந்தனர். அமைச்சரும் இவர்களும் மாறி மாறி வணக்கம் வைத்துக் கொள்ள., க்கேம் என்ற முனகல்களும் செருமல்களும் கூட்டத்தில் கேட்டது. இதையெல்லாம் கண்டும் காணாத அவர்களிருவரும் அமைச்சர் பக்கத்தில் மேடையில் அமர்ந்தனர். இருவரும் காதோடு காதாகக் கிசுகிசுத்தனர்.

கீழிருந்தவர்களில் ஒருவர் பக்கத்திலிருப்பவரிடம்..

“யேண்ணே அப்படி யென்னத்தத்தேன் காதுக்குள்ள பேசுவாகளாம்..”

“யெப்பா பழைய கட்சிக்காரவக வீட்டுல பழைய போட்டாவெல்லாம் பாத்திருக்கியா., அதுல அண்ணா பெரியாரு., அண்ணா எம்ஜியாரு, காந்தி நேரு, காமராஜரு பெரியாரு., பெரியாரு கலைஞரு இப்படி தலைவருக மேடையில இருக்கும்போது மக்ககூட்டம் ஹேஹேன்னு இருக்கும்., அந்த எரச்சல்ல அவக பேசுறது தெளிவாக் கேக்கட்டும்ண்ணு காதுக்கிட்ட போயிப் பேசுவாக., அந்த போட்டோவே பாக்க அவ்வளவு அழகா இருக்கும்., யிவெய்ங்களுக்கும் அந்த நெனப்புதேன்.”

“அவகெ பேசுனது சரிண்ணே., இவக அப்படி என்னத்தத்தேன் பேசுறாக இம்புட்டு நேரமா.”

“அதவிடப்பா., ஈஜிபுத்து வெங்காயத்தையும், டாடியையும் விட்டா வேறென்ன தெரியும் இவய்ங்களுக்கு.. நம்ம வந்த சோலியப் பாப்பமப்பா..”

இவர்கள் இப்படி பேசுகையில் மண்டபத்திலும் சிறு சலசலப்பு இருந்தது. மாவட்டச் செயலாளர் தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.

“யென்னப்பா எல்லாம் வந்தாச்சா., அமைச்சரும் எம்எல்ஏ வந்திருக்காக., நடந்த விசயம் எங்களுக்குந் தெரியும்., ஒங்களுக்குந் தெரியும்., அது சம்பந்தமா நாங்களும் ஒரு முடிவு எடுத்திருக்கோம்., நீங்க என்ன சொல்லணும்மோ சொல்லுங்க., ஆளாளுக்குப் பேசாம ஒவ்வொருத்தரா பேசுங்க., ஒருத்தரு சொன்னதையே திரும்ப சொல்லாதீங்க..” என முடிப்பதற்குள்.,

“ஒங்க முடிவு என்னன்னு மொதச் சொல்லுங்கண்ணே., பெறகு நாங்க பேசுறோம்ண்ணே.” என்ற கூட்டத்திலிருந்த குரலுக்கு ஆதரவாக மற்றொரு குரல் தவ்வியது..

“ஆமாண்ணே., சும்மா இல்ல சொளையா ரெண்டாயிரம் போஸ்டிங்கு., சத்துணவு அமைப்பாளரு சமையலுக்கு உதவிக்குன்னு., ரெண்டுல இருந்து அஞ்சு லட்சம் வரைய இன்னக்கி மார்கெட்டு இருக்கு,, மத்த மாவட்டத்துக்காரய்ங்கெல்லாம் காச அள்ளிட்டாய்ங்கே., நமக்கு பட்ட நாமந்தேன்., கோட்ட விட்ட நீங்களே மொதல்ல ஒங்க முடிவச் சொல்லுங்க..” கூட்டத்திற்குள் சலசலப்பு அதிகமானது.

“யேய் இருங்கப்பா.. இருங்கப்பா., மேடையில ஒக்காந்திருக்குற தலைவர்களுக்கு மரியாத இல்லாம., இப்படி ஆளாளுக்கு கத்திட்டிருந்தா எப்படி முடிவெடுக்கிறது.” மாவட்டச் செயலாளர் சத்தம் போட அமைச்சர் எழுந்தார்.

“இங்க பாருங்கப்பா., நடந்தது என்னன்னு எல்லாருக்குந் தெரியும் நாங்க கோட்டவிட்டது உம்மதேன்., நட்டநடு ராத்திரியில அந்தக் கலக்ட்டரும் கலக்ட்டரு ஆளுகளும் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் கொடுத்தப்ப அந்தந்த ஏரியாவுல குடியிருக்கிற நீங்க என்ன பண்ணீங்க., இப்ப விசயம் அதில்ல., வர வேண்டிய பணமும் போச்சு நம்ம கவுரவுமும் போச்சு., எதிர்க்கட்சிக்காரன் முன்னாடி தலய சிலுத்துக்கிட்டு நடக்க முடியுமா., அத மீக்கணும்ன்னா என்ன செய்யலாம் அதுக்குத்தேன் கூட்டமே.” சத்தமாய் பேசிய அமைச்சரின் பேச்சில் கூட்டம் அமைதியானது. தொண்டைக்கு கொஞ்சம் தண்ணீரை நனைத்துக் கொண்டு அமைச்சர் தொடர்ந்தார்.  

“ இங்க பாருங்கப்பா., மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சின்னு ரெண்டாயிரம் போஸ்டிங்கு., இந்த போஸ்டிங்க நெரப்புறதுக்கு கலக்டருக்குக் கீழ மாவட்ட அமைச்சர் மாவட்டச் செயலாளர்  எம்.பி எம்எல்ஏ நகர ஒன்றிய வார்டு செயலாளருக பெறகு கவுன்சிலருகன்னு., சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பதவிகளுக்கு அந்தந்தப் பகுதிகள்லேர்ந்து நாம ஒரு பட்டியல் ரெடி பண்ணிக் கொடுப்போம். பல தடவ நாம கொடுத்த லிஸ்ட்ல உள்ள ஆளுகளுக்குத்தேன் போஸ்டிங்கும் ஆகும். இது வந்து ஒரு அட்ஜஸ்மெண்ட் அடிப்படையில வழக்கமா நடக்குறது.  ஆனா என்னதேன் நாம் லிஸ்டக் கொடுத்தாலும் கடைசியா அப்பாயின்மெண்ட் அத்தாரிட்டி கலக்ட்டருதேன். அந்தாளு வேலைய அந்தாளு செஞ்சுட்டாப்ள., இனி நாம என்ன செய்யப்போறம்ன்றது தான் இங்க கேள்வியே..” என்ற அமைச்சர் மீண்டும் தன்ணியைக் குடித்தார். கூட்டத்திலிருந்த வார்டு கவுன்சிலர் அண்ணாமலை கோபமாய் எழுந்தார்.

“ அந்தக் கலக்ட்டர தூக்கியடிக்கணும்ண்ணே.. க்காளி..”

“அதெல்லாம் செஞ்சாச்சுய்யா.. இன்னக்கி நைட்டு அந்தாளு வெயிட்டிங் லிஸ்ட்ல போயிருவான்., இப்ப நாம் பேச வேண்டியது ஊருக்குள்ள இருக்கிற நம்ம பலத்தையும் அதிகாரத்தையும் நிரூபிக்கணும். போஸ்டிங்க கலக்ட்டர் பிக்ஸ் பண்ணின ஆளுகளுக்கே போட்டாலும் காச நாம வாங்காம விடக்கூடாது. அதுக்கென்ன பண்ணணும்., அதுக்குத்தேன் இந்தக் கூட்டம்., மொதல்ல ஊரு நெலவரம் என்னன்னு நமக்குத் தெரியணும்.., அமைதியா ஒவ்வொருத்தரா பேசுங்க.” முடித்துவிட்டு இருக்கையில அமர்ந்தார் அமைச்சர்.

“அண்ணே நீங்க சொல்றதெல்லாஞ் சரி.. பிரச்சன என்னான்னா.. அந்தந்தப் பகுதியில நாம கொடுத்த லிஸ்டுல உள்ள ஆளுகளுக்கே போஸ்டிங் போட்டிருந்தா பிரச்சன இல்ல., காசப் பாத்திரலாம்., இப்ப என்னனாக்க நாம் கொடுத்த லிஸ்ட்ல கொஞ்சப் பேருக்கும்., மீதிய அவெஞ் சவுரியத்துக்கும் போட்டிருக்காய்ன்., இப்ப நம்ம லிஸ்ட் ஆளுககிட்டேயும் காசப் பாக்க முடியாது., நிமிந்துக்கிட்டாய்ங்கே..” என்ற கரைவேட்டி ஒருத்தர் பேசி எச்சில் முழுங்கி திரும்பத் தொடங்குவதற்குள்.. இன்னொரு கரைவேட்டிக்காரர் ஆரம்பித்தார்.

“ ஆமாண்ணே.. அந்தக் கலக்ட்டரு நைட்ல அப்பாயின்மெண்ட் லெட்டர் குடுக்குறது தெரிஞ்சு விசாரிக்குறதுக்குள்ள நம்ம லிஸ்ட்ல இருந்த ஆளுகளும் நட்டநடு ராத்திரியில எங்களுக்கே போனடிச்சு எங்களுக்கு போஸ்டிங்க வந்திருச்சுன்னு சொல்லிட்டாய்ங்கே.. நாங்க என்ன நெனச்சோம்ன்னா., யாருக்கும் அசையாத அந்தாள நீங்க மூனு பேருஞ் சரிக்கட்டி நைட்டோட நைட்டா போஸ்டிங்க போட வெச்சுட்டீகன்னு பெருமையா நெனச்சு என்னென்னவோ கனவக் கண்டுட்டோம்., கடைசியில் பாத்தா ஒங்களுக்குஞ் சேத்து ஒட்டு மொத்தமா அடிச்சுவிட்டான் ஆப்ப அந்தாளு ஹ்ஹேம்..” என்ற செருமலில் மாவட்டச் செயலாளர் கடுப்பானார். தோள் துண்டை உதறி..

“ஏய்.. ஒக்காருய்யா மொதல்ல., எதப் பேச வந்தா எதப் பேசிக்கிட்டிருக்க., அதேம் நம்ம எல்லாப்பய மூஞ்சிலேயும் கரி அப்பிக்கெடக்கே.. கடுப்பக் கெளப்பாதீங்கிய்யா..” என கத்தினார்.

“உள்ளதச் சொன்னா ஏங் கோவம் பொத்துக்கிட்டு வருது..” என்ற யாரோ வார்த்தைக்கு மாவட்டச் செயலாளர் கடுப்பாகி டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து.. க்காளி என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க ஆளாளுக்கு என கூட்டத்திற்குள் எறிய.. மண்டபம் கலவரமானது. மாவட்டச் செயலாளரின் எதிர் கோஷ்டி இதுதான் சமயமென நாற்கலிகளைத் தூக்கிவீச மேலும் ரணகளப்பட்டது. அமைச்சரும் எம்.எல்.ஏ வும் மைக்கில் கத்தி கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அமைதியான கூட்டத்தில் அமைச்சர் பேச ஆரம்பித்தார்.

“ இங்க பாருங்கப்பா., மொதல்ல முழுசா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிரணும்., அசிங்கந்தேன்., பட்டாச்சுதேன்., தொடச்சாப் போயிருமா., ஆளாளுக்குக் கத்தினாதேன் போயிருமா., இங்க முடிவெடுக்கத்தேன் வந்திருக்கோம்., எடுக்குற முடிவுல அடுத்து எந்தப் பய வந்தாலும் நம்மள மீறி எதையுஞ் செய்யக் கூடாது.. என்னா புரியுதா., இப்ப எம்.எல்.ஏ பேசுவாரு.,சத்தமில்லாம கவனமா கேளுங்க., எதிர் கோஷ்டிக்கும் சேத்துதேஞ் சொல்லுறேன்., நம்ம பல்லக்குத்தி நாமளே மோந்து பாக்குற விசயமில்ல இது., இன்னக்கி விட்டுட்டோம்ன்னா., பெறகு புடிக்கிறது செரமம்., யென்னா..க்ஹ்ம்.” எனத் தொண்டையைச் செருமி நெற்றியில் இறங்கிய வியர்வையைத் துடைத்தவாறு அமர்ந்தார். 

மனசுக்குள் கடுப்பையும்., இயலாமையையும் தேக்கி வைத்துக் கொண்டு பேசத் தொடங்கிய எம்.எல்.ஏ வின் குரல் சன்னமாய் ஒலிக்கத் தொடங்கியது., கூட்டம் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டது.

“பொதுவா இந்தச் சத்துணவு போஸ்டிங்கெல்லாம்., பணியிலிருந்து இறந்தவர்கள் வாரிசுக்கு, விதவைகளுக்கு, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு, எஸ்.சி, எஸ்,டி, எம்.பி.சி, பி.சி ன்னு இந்த வரிசையிலதேம் போட முடியும்., அதுவுமில்லாம மூனு கிலோமீட்டர் வட்டத்துகுள்ள தேன் அவக இருக்கணும். அதோட சாதிப்பாகுபாடு இருக்கக் கூடாதுன்னு., தாழ்த்தப்பட்டவக அதிகமா இருக்குற இடத்துல மத்தவகளையும்., மத்தவக அதிகமா இருக்குற இடத்துல தாழத்தப்பட்டவகளையும் போடணும்., நாம என்ன பண்ணுவம்ன்னா இந்த மொறப்படியே பட்டியல எடுத்து அதப் போட வப்போம். நல்ல அதிகாரியோ இல்ல நமக்குச் சப்போர்ட் பண்றவனோ போஸ்டிங்கப் போட்டு விட்டுருவாய்ங்கே., நாமளும் காசப் பாத்திருவோம். இப்படி நடந்ததால நல்ல அதிகாரின்னா முழுப்பங்கும் நமக்கு., கீழ இருக்குற ஒட்ட சொட்டைகளுக்கு ஒன்னு ரெண்ட தெளிச்சு விட்டுருவோம். நமக்குச் சப்போர்ட் பண்ற அதிகாரின்னா அவனுக்குங் கொஞ்சம் பங்கு போகும்., அந்தத் தண்ணிப் பாட்ல எடுப்பா..” என நாக்கை நனைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

“ இதுல்லாம., போஸ்டிங்கான பிறகு எஸ்சி எஸ்டி எம்பிசி பிசி எல்லாம் லோக்கல் அட்ஜஸ்மெண்ட்ல அவக அவக ஏரியாவுலேயே போட்டு விட்டுருவோம்., இன்ஸ்பெக்சன் அது இதுன்னு ஆளு வந்த அன்னக்கி மட்டும் மாத்திவிட்டுருவோம்., இதுலயும் நமக்கு வர வருமானம் கைச்செலவ அடிச்சுட்டுப் போய்க்கிட்டு இருந்துச்சு. இதுக்காகவே பல சாதியில இருந்து நாம இங்க ஒன்னா இருந்தாலும்., அவகளுக்குள்ள இருக்குற சாதிப்பாசத்த நமக்குச் சாதகமா வச்சிருந்தோம்.,”

“கண்டது கடிதப் பேசிக்கிட்டு மேட்டருக்கு வாண்ணே..” என்ற முறுக்கிய மீசை கொண்ட முகத்தை முறைத்துவிட்டுத் தொடர்ந்தார் எம்.எல்.ஏ..

“ நாம என்ன பண்ணோம்., வழக்கம் போல இப்ப நாஞ்சொன்ன மாதிரி ஒரு லிஸ்டக் கொடுத்தோம். கலக்ட்டரு எம்ப்ளாயிமெண்ட் லிஸ்ட் ஒன்ன எடுத்து அதுப்படி போஸ்டிங்கப் போட்டு விட்டுட்டாப்ள. அதுல ஒன்னு ரெண்டு பேரு நாம குடுத்த லிஸ்ட்ல உள்ள ஆளுகளும் வந்துட்டாக. இது நடந்த கத. இப்ப நமக்கு என்ன வேலன்னா., போஸ்டிங் வாங்குன எல்லார்ட்டேயும் பணத்த வாங்குறோம். பணத்த வாங்குறதுக்கு சில வேலைகள நாம செய்யணும். ஏன்னா கலக்ட்டரு நேரடியா போட்ட போஸ்டிங்குக்கு ஏங்காசுகொடுக்கணும்ன்னு நம்மபயளுக மொறப்பாய்ங்கே., இல்லாத சட்ட மயிரெல்லாம் பேசுவாய்ங்கே., ஆனா அதுக்குமாறா அவெம் நம்மகிட்ட வந்தாத்தேன் வேல தப்பிக்குங்குற பயம் அவய்ங்களுக்கு வரணும்.” செருமிக் கொண்டவர் மீண்டும் பாட்டில் தண்ணியைக் குடித்தார்.

”எண்ணே இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க.. “ கூட்டத்திலிருந்து எகிறிய குரலுக்கு.,

“கேப்பு கெடைக்குற எடத்துல எல்லாம் பேசிற வேண்டியதுதானா., அமதியா இருங்கப்பா.” என்ற மாவட்டச் செயலாளரின் அமட்டலுக்குப் பிறகு பேச்சைத் தொடர்ந்தார் எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ ஒரு வழியாய் தான் பேச வந்ததை பேசி முடித்துவிட்டு அமர்ந்தார். 

“என்னங்கப்பா தலைமை கூடி முடிவுவெடுத்திருக்கு எல்லாருக்குஞ் சம்மதம் தான., எந்தெந்த ஏரியாக்குள்ள என்ன மாதிரி திட்டம்ன்றத ஒங்க பொறுப்பாளருக ஒங்களுக்குச் சொல்லுவாக., கேட்டுக்கங்க. செய்யுற வேலய நாம ஒத்துமையாச் செய்யணுமப்பா., இல்லைண்டாக்க சந்தி சிரிச்சுரும். அவகவக சாதில உங்களுக்குத் தோதான ஆளுகள வச்சு காரியத்த முடிங்க., ஆமா காசும் கௌரவமும் திரும்ப வந்து சேரணும். நம்ம சாட இல்லாம ஒரு பய எதையும் அனுவவிக்கக் கூடாது.” என்ற மாவட்டச் செயலாளரின் அறிவிப்புக்குப் பிறகு கூட்டம் கலைந்தது. 

ந்தக் கூட்டம் கலைந்த இந்த மாலைப் பொழுதும் மேகங்கள் இருட்டுக் கட்டிக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்தன.மண்டபத்திலிருந்து தனது கட்சிக் கொடிகட்டிய பார்ப்பதற்கே பயம் தரக்கூடிய 

வகையில் சோடிக்கை செய்யப்பட்ட ஜீப்பில் விலக்குப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டுக்கிளிசுகுமாரன் கிளம்பினான். தனது சிறுவயதிலேயே தனக்குத் தெரிந்த செல்வாக்குகளைப் பயன்படுத்தியும் கட்சிப் பெருசுகளுக்கு தேவையானதை வலிய செய்து கொடுத்தும் இந்தப் பதவிக்கு வந்தவன். நகரத்தினைவிட்டு அந்த ஜீப் விலக்குப்பட்டி பிரிவில் திரும்பியது.

விலக்குப்பட்டிக்கும் அதன் பக்கத்து ஊரான பலசாதிப்பல்லூருக்கும் வயல்வழியாக குறுக்கே நடந்தால் அரைமைல் தூரம் தான். வண்டிப்பாதையில் சுற்றிக்கொண்டு போனால் மூன்று மைல்கள் போகவேண்டும். பலசாதிக்காரர்கள் நிறைந்து வாழ்கிற பலசாதிப்பல்லூரிலிருந்து தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படக்கூடியவர்கள் அதிகம் வசிக்கிறார்கள் விலக்குப்பட்டியில்.

கணவனை இழந்த மல்லிகாவிற்கு கலக்ட்டரின் தயவில் விதவை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினை சேர்ந்தவள் என்ற முன்னுரிமையில் சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைத்திருந்தது. நாளை அவள் வேலையில் சேர வேண்டும். அவளுக்கு அவளது கணவன் பூபதியின் ஊரான பலசாதிப்பல்லூரில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். அவள் வேலை செய்யப்போகிற சத்துணவுக் கூடத்தையும் அப்படியே தனது மாமனார் மாமியாரையும் பார்த்துவிட்டு தான் பிறந்த ஊரான விலக்குப்பட்டிக்கு வயல்பாதையில் வந்து வண்டிப்பாதையில் திரும்பிக் கொண்டிருந்தாள்.

”என்ன மல்லிகா ஓட்டமும் நடையுமா இருக்க.. பாக்கவே அம்சமா இருக்கு.. ஆமா அங்க இங்கன்னு ஆளப் புடிச்சு எங்களயும் மீறி வேல வாங்கிட்ட போல., யாருக்கு ஒத்துப் போன கலக்டருப் பயலுக்கா.. இல்ல தாசில்தார் பயலுக்கா.. அதுக்கு உள்ளூர்க்காரன் என்னய அனுசரிச்சுப் போயிருக்கலாம்ல.. ஒம் புருசனும் உசிரோட இருந்திருப்பான்” வெட்டுக்கிளிசுகுமாரன் தனது ஜீப்பினை மெதுவாக ஓட்டியபடி அவளைச் சீண்டினான். அவள் அமைதியாக நடந்தாள். இடிச் சத்தம் கனமாய் கேட்டது. கருத்த மேகங்களைக் கிழித்துக் கொண்டு மின்னல்கள் ஆங்காங்கே மறைந்தன. வெட்டுக்கிளிசுகுமாரனின் வார்த்தைகள் இடியைவிடவும் கனமாக மல்லிகாவைத் தாக்கியது. மின்னல்கள் மேகங்களக் கிழித்ததுபோல இவனைக் கிழித்துவிட வேண்டுமெனத் துடித்தாள். 

இந்தத்துடிப்பு அவளுக்குள் பலநாளாக கங்காய் கனன்று கொண்டிருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பலசாதிப்பல்லூர் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டு மல்லிகாவின் கணவன் பூபதி ஊராட்சிமன்றத் தலைவருக்கு பலபேர் கேட்டுக் கொண்டதன் பேரில் போட்டியிட்டான். விலக்குப்பட்டியில் போட்டியிட்ட வெட்டுக்கிளிசுகுமாரனுக்கும் பூபதியைத் தூண்டிவிட்டதில் பெரும்பங்குண்டு. அவனது தோட்டத்தில் தான் பூபதி  பண்ணை வேலை செய்து கொண்டிருந்தான். இரண்டு ஊராட்சியையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்பது வெட்டுக்கிளிசுகுமாரனின் எண்ணமாய் இருந்தது. 

நம்பி தேர்தலைச் சந்தித்த பூபதி வெற்றியும் பெற்றான். ஆனால் ஊராட்சித் தலைவரான பூபதியின் அலுவலகம் வெட்டுக்கிளிசுகுமாரனின் பண்ணையாகவே இருந்தது. இருந்தாலும் பகைத்துக் கொள்ளவும் பதவி துறக்கவும் முடியாத பூபதி பண்ணை வேலையையும் தலைவர் பொறுப்பையும் சரிவரச் செய்யவிரும்பினான். பூபதிக்குக் கிடைத்த தலைவர் பதவிக்கும் சாதிய ஆதிக்கத்திற்கும் இடையில் எரிச்சல் கொண்டிருண்டிருந்த  வெட்டுக்கிளியானுக்கோ அவனை வேண்டுமென்றே சீண்டுவதில் படுபயங்கர இன்பம். ஒருமுறை மல்லிகா பூபதியைத் தேடி பண்ணைக்கு வந்திருந்தாள்.

”என்னா பூவதி ஒம்பொண்டாட்டிய கொஞ்சம் உள்ள வந்துட்டுப் போகச் சொல்றது., ச்சும்மா அஞ்சு நிம்ச வேலதேன். அதேம் இப்ப நீ தலைவராயிட்ட., நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தானப்பா., என்ன நாஞ்சொல்றது..”  என்ற வெட்டுக்கிளியான் சடுதியில் மல்லிகாவின் இடுப்பில் கைவைத்து இழுத்தணைத்தான். விசும்பிய மல்லிகா..

”வெருவாக்கெட்ட பயலே ஒன்னுக்குள்ள ஒன்னுன்னா ஒம்பொண்டாட்டிய எம்புருசனுக்கு அனுப்புடா., பெறகு ஒங்கூட நாம்படுக்குறேன்.” என்றாள் சேலையத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு. பூபதி அவளைக் கன்னத்தில் அறைந்து இழுத்துக் கொண்டு கிளம்பினான். 

ஆத்திரம் தாளாது பரபரத்து மல்லிகாவை தலைமுடியைப் பிடித்திழுத்த வெட்டுக்கிளியானின் கைகளைத் தட்டிவிட்டு அவனது மார்பினைப் பிடித்துத் தள்ளிய பூபதி அமைதியாக மல்லிகாவோடு அந்த இடத்தைவிட்டு வெளியேறினான். வெளியேறியவன் இரண்டொருநாள் கழித்து அலங்கோலமாய் ஊர் எல்லையில் வெட்டுப்பட்டுச் செத்துக் கிடந்தான்.   

மல்லிகாவை இடைமறித்து ஜீப்பை நிறுத்தி இறங்கினான் வெட்டுக்கிளியான். அவளது கண்களில் மனதின் கோபம் கொப்பளித்தது.

” இப்பவொன்னும் கெட்டுப் போய்டல., ரெண்டு பிள்ளைகள வச்சிருக்க., பாத்துக்க., அன்னைக்கே ஒத்துப் போயிருந்தைன்னா ஒம்புருசன் இன்னக்கி இருந்திருப்பாய்ன்., மழயும் இருட்டிக்கிட்டு வருது., வா அப்படியே ஜீப்புக்குள்ளேயே ஒதுங்குவோம்.” என அதிகாரச் சிரிப்பொன்றை மென்மையாய் உதிர்த்தான்.

கடுங்கோபத்தின் கனலைத் தாங்கிக்கொண்டு அவனை ஒதுங்கிச் செல்ல முயன்றாள் மல்லிகா. தடுத்து நிறுத்திய வெட்டுக்கிளியான்..

”இங்கவாரு.. ஒனக்கு கெடச்சிருக்குற வேல தப்பனும்ன்னா அனுசரிச்சுப் போ., ஒவ்வோரு போஸ்டிங்குக்கும் காச வாங்காம எங்க கட்ட்சிக்காரெய்ங்கே விடமாட்டாய்ங்க., நாளைக்கு நீ போய் சத்துணவ ஆக்கிப் போட்டாலும் மேல்சாதிப் பிள்ளைகள சாப்பிட விடாம அந்தப் பிள்ளைகளோட பெத்தவகளே போரட்டம் நடத்தப் போறாய்ங்கெ., பெறகு ஒம்பொழப்புக்கு ஆப்புதேன். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு., இப்ப எனக்கு ஒத்துப் போனயினா நீயும் அங்கயே வேல பாக்கலாம் காசயும் நானே கொடுத்துடுறேன். பொழைக்கிற வழியப் பாரு., அப்பப்ப அஞ்சு நிமிசந்தேன்.. ம்.” என்றான் இவளால் என்ன செய்யமுடியும் என்கிற அவனுக்குப் பழகிப் போன இயல்பான நினைப்போடு.

சுற்றும் முற்றும் அலையாய் அலைந்த அவளின் பார்வையில் ஓரமாய்க் கிடந்தது தென்னைமரத்தின் புவ்வருவி. பூக்களைத் துளிர்த்து காயாக்கி காவுகொடுத்துவிட்டு யாரும் கேட்பாரற்று பற்ற வைத்தால் பற்றிவிடும் நிலையிலிருக்கும் அந்தக் காய்ந்த புவ்வருவி ஒட்டுமொத்த ஆவேசத்தின் பிடியாய் மல்லிகாவின் கைகளில் ஆயுதமானது. வெட்டுக்கிளியான் எகத்தாளமாய்..

” சொன்னா கேக்கமாட்ட., பல புலிகளப் பாத்தவெய்ங்க நாங்க., இந்தக் காய்ஞ்ச புவ்வுருவி என்னய என்ன செஞ்சிருப்போகுது., வாடி.” என அவளை நெருங்கினான். 

அவன் எட்டு வைப்பதற்கு முன் இவள் அவனை நோக்கி எட்டு வைத்தாள். புவ்வருவியை கையில் இறுக்கிக் கொண்டு அவனை அடித்து விளாசினாள். இடிக்கிற இடியோடும் அடிக்கிற காற்றோடும் இவனது அலறல் போட்டி போட்டது. அவன் அலற அலற அவளுக்குள்ளிருந்த கோபம் ஆனந்த நடனமாடியது. எத்தனை கோபமோ அவளது வம்சாவளியே அவளுக்குள் இறங்கியது போலிருந்தது அவளுக்கு. ஆயிரமாயிரம் பேராய் தன்னை நினைத்துக் கொண்டு கண்ணீரும் சிரிப்புமாய் அடிப்பதை வேகப்படுத்தினாள். அடிதாளாது ஓடினான். புவ்வருவியின் கிளையருகுகள் அவனது சட்டையை நார்நாராக் கிழித்து அவனது தோல்களை வரியன்களாக வார்த்துக் கொண்டிருந்தது. 

மல்லிகாவின் அடியை சமாளிக்க முடியாமல் கத்தினான். அவளை மிரட்டினான். கண்மண் தெரியாமல்    ஓடினான். பாதையோரத்தில் சாய்ந்திருந்த வேலிக்கல்லில் நெட்டுக்கு நெட்டாய் மோதி விழுந்தான். அவனது நடு நெற்றி பிளந்துகொண்டு ரத்தம் வழிந்தது. வழிந்த ரத்தம் கண்டு அப்படியே நின்றாள் மல்லிகா. வெட்டுக்கிளியானின் உடம்பு சிலிர்த்து மூச்சு அடங்கியது. வானத்தைப் பொத்துக் கொண்டு விழ ஆரம்பித்த மழை மல்லிகாவை நிலைபெறச் செய்ய., எதுவும் நடக்காதது போல் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வேகம் கொண்ட மழையில் வெட்டுக்கிளியானின் ரத்தம் மண்ணில் கலக்க பெருகிய வெள்ளம் தோட்ட வடிகால் ஓடையை நோக்கி வெட்டுக்கிளியானின் உடலை இழுத்துக் கொண்டு பாய்ந்தது. தடயங்களற்று வெட்டுக்கிளியானை உருட்டிச் சென்றது வெள்ளம். மல்லிகா தனது வீட்டை நெருங்கி நடந்து கொண்டிருந்தாள். 

இப்படித்தான் இந்தக்கதையை முடிக்க நினைத்தேன். ஆனால் அப்பப்ப அஞ்சு நிமிசந்தேன் என்ற வெட்டுக்கிளையானை அலட்சியப் பார்வை பார்த்திவிட்டு சமப்படுத்தி போடப்படிருந்த தார்ச்சாலையில் ஏற்பட்ட குண்டு குழிகளுக்குள் அவனைக் கடந்து நடக்க ஆரம்பித்தாள் மல்லிகா.

 

முற்றும்.  

அய்.தமிழ்மணி,

46கே5, புதிய நகராட்சி அலுவலகத் தெரு, கம்பம் – 625 516

தேனி மாவட்டம். 9025555041, 7373073573, [email protected]

5 thoughts on “சிறுகதை: புறத்தகம் – அய்.தமிழ்மணி”
  1. அட்டகாசமான வட்டாரவழக்கில் , காலங்காலமாக நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் கதை…அழகான மழையில் ஒரு மென் சோகத்தோடு ஆரம்பித்த கதை மழை, ஒரு உக்கிர தாண்டவமாடி ஓய்ந்திருக்கிறது. மழையில் சாட்சியங்கள் கரைவது நிம்மதி…அருமையான கதை..எழுத்தாளருக்கு வாழ்த்துகள்..

  2. அருமையான கதை.
    இன்றைய அரசியலையும் அதனால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் கோபத்தையும் பதிவு செய்யும் சமகாலத்தின் பிரதிபலிப்பு.

  3. ஆதரவற்ற மகளிருக்கு அரசு வழங்கும் வேலைக்கும் கமிஷன் வாங்கும் ஆளும் கட்சி அராஜாகத்தைப் பற்றிய அழுத்தமான கதை.

    பிணவறையில் தொடங்கி சுடுகாடு வரை நீளும் ஆளும் கட்சியின் அராஜகப்போக்கு ஆதரவற்றவர்களை மட்டும் விட்டுவிடுமா. அப்போதைக்கு அப்போது என்ன கிடைக்கும் என்று மட்டுமே யோசிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாடு இது.

    தனக்கு பிறகு தன் குடும்பத்துக்கு கிடைக்கும் இது போன்ற உரிமைகளைப் பெற தன் குடும்பமும் இப்படிப்பட்ட அராஜகத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று யாரும் நினைப்பதில்லை.

    இது நடக்காத துறைகளே இல்லை எனும் அளவுக்கு பற்றிப் படர்ந்து காட்சி தருகிறது.

    மல்லிகா போல எல்லோரும் மாறுவதைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறதோ?

    அந்த அளவுக்கு ஆகும் முன் திருந்தும் வாய்ப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை.

    என்றாலும் காலம் ஒரு நாள் அனைத்துக்கும் பதில் தரும்.

  4. வெட்டுக்கிளி என்றாலே பிரச்சனை தான் போல
    இரண்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்வு அனாதை ஆகிவிடக்கூடாது என்பதில் உயிருள்ள மல்லிகாவும் உயிரற்ற வேலிகல்லும் மழை ஓடையும் நினைத்து இருக்கிறது வெட்டுக்கிளியானை அடையாளமின்றி தூக்கிச் செல்ல அய் .தமிழ்மணி ஒரு கதை இயற்றும் பொழுது உண்மைக்கு பக்கத்தில் ஆணிவேர் பார்த்து விரல் நுனிக்கு கொண்டு வருபவர் கதாப்பாத்திரங்கள் எதார்த்தத்தின் உச்சம் கதை சமூக அவலத்தின் மிச்சம் *வாழ்த்துக்கள் *

  5. மல்லிகாவின் வாழ்வும் அரசியல்வாதியின் சாவும் கதையின் முடிவாக உள்ளது.
    மக்களுக்கு இது முடிவாகாது. பல அரசியல்வாதிகள் இந்த முடிவை பெறுபவர்களே! வாழ்த்துக்கள்! சிறுகதை சிறந்தகதையாக பிறந்திருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *