நூல் : புதுமைப்பித்தன் கதைகள்
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹145/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இன்றைய காலத்தை நவீன யுகமென்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம். எண்பது ஆண்டுகளுக்கு முன்னே ஒரு தமிழ் எழுத்தாளன் உலகின் ஆகச்சிறந்த எவரும் முன்வைக்காத யோசிக்காத முற்போக்கான செய்திகளை சிறுகதை வாயிலாக நமக்கு தந்துவிட்டு போயிருக்கின்றார். இன்றைய எழுத்துலகம் கூட தயங்கி தயங்கி எழுதுகிற ஒழுக்கம், புனிதம், பண்பாடு, கலாச்சாரம் யாவற்றையும் தனது எழுதுகோலால் உடைத்தெரிந்துவிட்டு சாகாவரம் பெற்ற எழுத்தாளனாய் மிளிர்கிறார். ஒவ்வொரு வார்த்தையிலும் இவர் செய்யும் மாயாஜாலங்கள் எக்காலத்திலும் புதுமையான பேசுபொருளாய் மெருகேறிக் கிடக்கும்.

முதல் கதையான பொன்னகரமே நகர வாழ்க்கையின் நரக சித்திரத்தை வரைந்தளித்துவிடுகிறார்.
கற்பெனும் கற்பிதத்தை எளிய மக்கள் உடைத்தெரியும் லாவகத்தை பதிவாக்கி அதிர்ச்சிக்குள்ளாகும் சமூகத்தை சமநிலைக்கு உட்படுத்துகிறார். உடம்பின் மீதான மேற்கட்டுமானங்களை தகர்த்தெறிந்து இதில் ஒன்றுமேயில்லை என தயக்கச் சட்டைகளை உரித்து எறிகிறார். உடலரசியல் உடல்மொழி மீதான இன்றுவரைக்கும் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிகிறார். தொகுப்பில் 17 கதைகள் இருக்கின்றன 5 கதைகள் உடல் மேல் போர்த்தப்படும் பத்தாம் பசலித்தனங்களை துகிலுரித்து காட்டுகின்றன. அதற்காக ஆண்களையும் பெண்களையும் தறிகெட்டு ஒடச்சொல்லவில்லை. நீங்கள் புரிந்துகொள்வதில் சற்று பிசகினாலும் மாபெரும் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். அபாயங்களும் இருக்கின்றன. எல்லோருக்குமான மெல்லிய கோட்டை நீங்கள் எப்படி வரைந்து கொள்கிறீர்கள் என்பதில் இருக்கின்றது உங்கள் அறிவு நாணயம்.

தமிழ்கூறும் நல்லுலகில் சிறுகதையின் வரலாற்றை எவர் தொகுத்தாலும் முதலிடத்தில் இருத்தக்கூடிய செல்லம்மாள் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ரணத்தை ஏற்படுத்தக்கூடியது கசிந்தோடும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்ளாமல் எவராலும் வாசித்து வெளியேறிவிட முடியாது. தமிழ்த் திரையுலகம் செல்லம்மாக்களை காட்சிப்படுத்திடாதது ஆச்சர்யமானதொன்றுமில்லை.நாற்றமடிக்கும் மசாலா குப்பைகளிலிருந்து இவர்கள் முதலில் மீண்டெழ வேண்டும்.

சொ. விருத்தாச்சலம் எனும் இயற்பெயரை கொண்ட புதுமைப்பித்தனை தமிழ்க் கதையுலகு கொண்டாடுகிறதென்றால் அவரின் கதைக்கட்டுமானம் சொற்தேர்வு சிறிதுகூட பிசிறடிக்காத வார்த்தைகள் சின்ன சின்ன வரிகளில் கூட அரசியல் பகடி நைய்யாண்டி சமூக விமர்சனம் எனக் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. மகாமசானம் சிறுகதையில் நகரத்தின் அவஸ்தையை அவசரத்தை சொல்லி வருகையில் போகிறபோக்கில் அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவாசகமாய் செத்து கொண்டிருந்தான். என்ற வரிகளை வாசித்ததும் ஒருகணம் திக்கித்து மனம் நின்றுவிடுகிறது. 5 பக்கச் சிறுகதையில் நகரத்தின் நெருக்கடிகளை பேசுகிறார். செத்துப்போன பிச்சைக்காரனை அவனின் இறுதிக்காரியத்திற்கு பிச்சையெடுக்கும் இன்னொரு யாசகனை தகப்பனை குழந்தையை துயரவியல் காட்சியை என்ன நடந்தாலும் ஊர்ந்து செல்லும் சமூகத்தின் எருமைமாட்டுத்தனத்தை படம்பிடிக்கின்றார்.

இப்படி பேச விவாதிக்க வியக்க இத்தொகுப்பில் சிறந்த கதைகள் இருக்கின்றது சிறந்ததொரு சிறுகதையை எழுதவேண்டும் என தீர்மானித்துவிட்டால் உங்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை புதுமைப்பித்தனைச் சரணடைவதை தவிர செம்மொழி கிரீடத்தைச் சூட்டிக்கொண்டாலும் தமிழ்ச் சிறுகதையின் வயது இரண்டு நூற்றாண்டுகள்தான் அதன் துவக்க காலத்திலேயே அழுத்தமாக தனது தனித்துவமான முத்திரையை பதிவு செய்திருக்கும் புதுமைப்பித்தனின் கதைகள் காலத்தின் ரேகையில் என்றும் படிந்திருக்கும்.

பெரும்பாலான கதைகளில் மொழிக்கலப்படமும் பிராமண சமூகமொழியும் ஒரு எள்ளல் நடையுடன் பயன்படுத்தப்பட்டிருக்கும். புது வாசிப்பில் இடரலாக இருந்தாலும் தொடர் வாசிப்பில் அத்தடைகள் உங்களுக்கு இராது. ஒரு படைப்பாளரை அறிமுகப்படுத்துவதென்பது சோற்றுப் பதம்தான். புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பையும் வாசிக்கத் துவங்குவது முழுமையானதொரு வாசிப்பை நோக்கி முன் நகர்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இவ்வாசிப்பு இயக்கம் உங்களுக்கு அம்மாதிரியான வெளிச்சகீற்றுகளை ஏற்படுத்தி தருகின்றது. நமக்குள்ளிருக்கும் அறியாமை இருட்டுகள் அதன் வழியே வெளியேறட்டும். நம்முன்னே ஆயிர ஆயிரமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு மனித வாழ்வியலும் காலத்தின் பதிவாய் அதை எழுதிப்பார்க்கட்டும். சொல்லித் தீராத கதைகளும் எழுத்தில் வடிக்காத சொற்களும் நம் வசமே. வானளவு வாசிப்போம் ஒரு கையளவாவது எழுதிச் செல்வோம் நன்றி நண்பர்களே.

செ.தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *