Ram periyasami's Poems ராம் பெரியசாமி கவிதைகள்



கவிதை – 1
கழைக் கூத்தாடி
——————————-
இரவு நதிமுழுவதும் விண்மீன்கள்
நீந்தியிருக்கும் நேரம்
வானம் ரத்தவாடையின்நிறத்தில் ஔிர்ந்திருக்கிறது
கடவுளின் சைகைக்காக பட்சிகள்
காத்திருப்பது ஒரு விழா

கலிலிவாசிகள் கைக்காடிகாரங்களை
முடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நேரங்களை மதிப்பவர்கள்

மதியவெயிலில் தூங்கிக்கொண்டவனின் கிழக்கு
ஆடைகள் களவாடப்பட்டிருக்கிறது
போர் மூள்வதற்கான ஆயத்தம்

அழகிய வெண்கல நீருற்றில்
நீர்ச்சக்கரங்களை சுழற்றியப் பெண்களுக்கு மேலாடையிருந்தது

நகரங்களை வெறுத்துப்போனவர்கள்
தேவாலயங்களை கற்களினால்
எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்
சிலுவைப்போர்களுக்காக உட்படுத்தப்பட்டவர்கள்

கோதுமை ஆலிவ் ரொட்டித்துண்டுகள் தீர்ந்துவிட்டன
அங்கியணிந்த துறவிகளின்
புனிதப்பயணத்தில் பசி தலைமை
தாங்க ஆரம்பித்தது

மடாதிபதிகளின் மடங்களில்
வசூல் வேட்டைகள் கொழுத்திருக்கின்றன

அரசனும் மனிதனைப்போலவே
குடித்து தின்று பாதியில் உறங்கிவிட்டான்

அவனுக்கு அணியப்பட்டப் பாத்திரத்தின்
அத்தனை ஒத்திகைகளோடும்
முடிவுப்பெற்றது நாடகம்

ஊர் ரெண்டு பட்டபிறகும்
நடுநிசியில் முன்னிரவு உணவிற்காக கையேந்திக்கொண்டிருக்கிறான்
கழைக் கூத்தாடியொருவன்

கவிதை – 2
ஒரு குற்றவாளியின் கடிதம்
————————————————–
என் பெயர் பிழை
நான் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
இரவுகளின் அணுக்களிலும் விழித்திருப்பவன்
நட்சத்திரங்களை பூமத்தியரேகையிலிருந்து பார்ப்பவன்
நான் மானவெட்கங்களை
எப்போது தொலைத்தேனென்பதை
இருளில் தேடியலைகிற
நிறமியில்லா தந்திரதஸ்யூ

அண்டத்தின் காக்கைகளாய்
உணவுப்பருக்கைகளைத் தேடியலைந்த வீதிகளில்
அதிகமாய் பிரேதங்கலைந்தும்
திரிந்துக்கொண்டிருப்பவை
அவர்கள் பிறந்தும் இறந்தும்
உடைந்தும் கொண்டிருப்பவர்கள்
சந்தர்பவாதங்களின் தூண்டில்களில்
தன்னுடல்களை கொக்கியிட்டு
மீன்களைத்தின்பதற்காக காத்திருப்பவர்கள்
கடவுளின் மந்திரக்கோலைக் களவாடிப் பொழுதுகளை செய்பவர்கள்

உடையாதப்பொருள்களாய்
திருடுபவன் நான்
ஆடைகளைத்திருடியதில்லை
அதுவொரு மனிதமலயீரம்
புத்தனைத்திருடி அவனுக்கு
துறவறமளித்தேன்
அவனெனக்கு ஞானமளித்தான்
நான் போதிமரத்தை பரிசளித்தேன்

நீங்கள் பூமியின் ஆழ்துளையில் தேனையெடுப்பதற்கு துளையிட்டதுப்போல
காற்றைத்திருகி நீள் உருளையில்
அடைத்ததுப்போல
மரங்களைத்திருகி ஆவணங்கள்
செய்ததுப்போலத்தான்
நான் ஆபரணங்களைத்திருடி
சிலைகளுக்கு அணிவித்தேன்

போன்சாய் மரங்களின் சட்டத்தில்
நிறைய ஓட்டைகள்
கருப்பங்கியணிந்த கோமான்கள்
விலைப்போகும் சிவப்புநிறப்பகுதி
பச்சை மற்றும் நீல விளக்குகள்
எரிவதில்லை
எல்லா நாட்டின் விதைகளையும்
பறித்துச்சென்றுவிட்டார்கள்
சமாதிப்பழங்களையே
உணவாக எனக்குத்தருகிறார்கள்

நான் மருந்துகளைத்தேடியே
பழக்கப்பட்ட உடலானவன்
முற்றிலும் தீநுண்மிகளின் வாசனைகளால் நிறைந்தவன்
ஓசோன் இதயங்களில்
சூழ்ந்த ஓட்டைகளின்
செம்மழைத்திரவங்களை
பருகி உயிர்த்திருப்பவன்

மனிதங்காடிகள் திறக்கப்பட்டது
மூளையின் எடையில் நீரேற்றி
கனமாக்கி விற்பனை நடைப்பெற
துவங்கியது
அயல்நாட்டின் ரசங்களில்
முருகன் ஜான் ஆக்கப்பட்ட இரவுக்கணினியில் அக்பருக்கு
வேலையில்லை
அணுகுண்டுகளைப்பற்ற வைப்பதற்கு முன்
வரலாற்று பக்கங்களை வெடிக்க வைப்பதற்கு நான் தயாராகயிருக்கிறேன்

எனக்கான தண்டனையை உங்களிடம் குறைப்பதற்காக
மனுக்கள் எழுதப்போவதில்லை
நிர்ணயிக்கப்பட்ட நியாயங்களை
விற்பதற்கு முன் யாரேனும்
திருத்தப்பட்டக் கடவுளை உயிர்த்தெழச்செய்யுங்கள்
இறுதியாக அவரை தூக்கிலிட்டு
புதியதாய் ஓர் பூமி செய்து
நான் பழகவேண்டும்

கவிதை – 3
பெயரிடப்படாதப் புத்தகம்
—————————————-
ஒரு மரத்தின் கிளை முழுக்க புத்தகங்களாய் பூத்திருக்கிறது
மௌனத்தின் சாம்பல்களிலிருந்து
அறியப்பட்ட ஆன்மாவொன்றின்
அகமிய ரகசியங்கள் யாவும்
புத்தகங்களுக்குள் சொற்களாய்
நிரம்பியிருந்தன ….
பறிக்கப்படாத
ஒரு புத்தகத்தின் நிழல்
கூம்புக்குடுவைக்குள் அடைக்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சியாய் முடங்கியிருக்கிறது ….
சபிக்கப்பட்டப் பாவங்களை கழுவுதற்கு முட்களையுடைத்து
மெய்யுணர்ப்பூக்களைப்
பறித்திருக்கவேண்டும்
இருளுக்கு முன்னும் பின்னும்
வெளிச்சமென்பதை
இருள் அறியும் …
பெருங்கடலுக்குள் அலைகளாய்
நிரவிக்கிடக்கிறப் பக்கங்களை
மழைத்துளிகள் எழுதித்தீர்க்கின்றன ….
பிரபஞ்சத்தின் ஆடையுரித்த
திறவுக்கோலினை கைப்பற்றுதலிருந்து
ஒரு புத்தகம் முழுதாய் திறக்கப்பட்டதாய் உணர்கிறேன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *