நூல் அறிமுகம்: Robert Harris தந்தை நாடு ( Fatherland நாவல்) – ச.சுப்பாராவ்

சரித்திரக் கதை வகைமையில் மாற்றுச் சரித்திரக் கதை (Alternate History) என்றொரு வகைமை ஆங்கில நாவல் உலகில் இருக்கிறது. ஒரு சரித்திர நிகழ்வை ஆவண ஆதாரங்களோடு கதையாகச் சொல்லி வந்து, அதன் முடிவை மாற்றி, இப்படி நடந்திருந்தால்? என்ற வகையில் கதையை, அதன் மூலம் சரித்திரத்தைத் திசை திருப்பி கற்பனையில் சஞ்சரித்து ஒரு புதிய படைப்பை உருவாக்குவது இந்த வகைமை ஆகும். அந்த வகைமையில் மிக முக்கியமான ஒன்று Robert Harris எழுதிய Fatherland  என்ற நாவல்.

இரண்டாம் உலகப் போரின் முடிவு நமக்குத் தெரியும். ஹிட்லர் தோற்பதற்குப் பதிலாக ஜெயித்திருந்தால்? அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? ஹிட்லரின் குடையின் கீழ் இருக்கும் ஐரோப்பா கண்டம் முழுவதும் எப்படி இருக்கும்? ஜெர்மனியக் கலாச்சாரம், அந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற பிரமாதமான கற்பனை. ஜெயித்த ஹிட்லர் யூதர்களைத் தான் கொன்றொழித்தற்கான அனைத்து ஆவணங்களையும், சாட்சியங்களையும் அழிக்கிறார். ஆஸ்விட்ச் போன்ற வதை முகாம்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுகின்றன.  யூதர்களை ஐரோப்பாவில் பல இடங்களில் குடியேற்றியது போல் ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனினும், போர் முடியும் தருவாயில் ஹிட்லர் தோற்று விட்டால், தாங்கள் இனப் படுகொலைக் குற்றத்திற்கு ஆளாகி விடுவோமே என்ற அச்சத்தில் 14 உயர் அதிகாரிகள் யூதப் படுகொலை குறித்த அத்தனை ஆவணங்களையும் சேகரித்து வைக்கிறார்கள். ஹிட்லர் வாய்வழி உத்தரவு தந்துவிட்டு, எழுத்துப் பூர்வ உத்தரவு தர மறுத்த அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். உலகப் போர் முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் ஹிட்லரின் ஜெர்மனி பல ஒப்பந்தங்கள் போடும் ஒரு சுமுகமான நிலை வருகிறது. அந்த நேரத்தில் இந்த அதிகாரிகள், தாம் அமெரிக்காவில் குடியேற்றம் பெற இந்த ஆவணங்களைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக ஹிட்லரின் கெஸ்டபோ படையால் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைப் புலனாய்வு செய்யும் சாதாரண அதிகாரி ஒருவர் இந்த ஆவணங்களைப் பற்றி அறிந்து அவற்றைத் தேடி எடுக்கிறார். இப்போது, அரசு அவரை வேட்டையாடுகிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.

நாவலின் போக்கில் ஒரு பாசிச ஆட்சி எப்படி இருக்கும் என்பதை மிக அழகாக மிக இயல்பாக எழுதிச் செல்கிறார் ராபர்ட் ஹாரிஸ். ஜெர்மன் பெண்ணுக்கு போலந்து தோட்டக்காரனுடன் கள்ளக்காதல் என்றால், அது இனத் தீட்டுச் சட்டம் 1935ன் படி (Race Defilement Act 1935) குற்றம். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவனுக்குப் பதவி இறக்கம். அவளுக்கு இரண்டாண்டு  வெறுங்காவல் தண்டனை. தோட்டக்காரனுக்கு மரணதண்டனை அல்லது 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை.

Robert Harris Writes Thrillers—Even When He Doesn’t | Kirkus Reviews

இலக்கியம் என்றால் ஜெர்மன் இலக்கியம் மட்டும்தான். வேறு மொழி பற்றி வாய் திறக்கக் கூடாது.

பள்ளிகளில் அமெரிக்க இலக்கியத்தின் சீரழிவு பற்றி கற்றுத் தரச் சிறப்பு ஆசிரியர்கள்.

பெர்லின் நகரத்தின் தோற்றமே மாறி விட்டது.  நாஜிப் படையின் வெற்றியைக் கொண்டாட பாரீஸின் ஆர்க் டி ட்ரயம்ஃப் பைப் போன்ற ஒரு பெரிய வெற்றிச் சின்னம் கட்டப்பட்டிருக்கிறது. அது பாரீஸின் ஆர்க் டி ட்ரயம்ஃப்பைப் போல நாற்பத்தொன்பது மடங்கு பெரியது. 1914 முதல் 1918 வரையிலும், பின் 1939 முதல் 1946 வரையிலும் தந்தை நாட்டைக் காக்க உயிர் நீத்த முப்பது லட்சம் ஜெர்மன் படைவீரர்களின் பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் எதிரே பாரீஸின் சாம்ப்ஸ் எலிசீஸ் போல ஆனால் அதைவிட இரண்டரைப் பங்கு நீளம் உள்ள சாலை. அதன் அகலம் நூற்றிஇருபத்திமூன்று மீட்டர்.

ஈஸ்டர், கிறிஸ்துமஸுக்கெல்லாம் பள்ளிக்கு விடுமுறை இல்லை. ஹிட்லரின் பிறந்தநாளையொட்டி ஒரு வாரம் லீவ். ஹிட்லரின் அரண்மனை ரோமின் புனித பீட்டர் தேவாலயத்தைப் போல பதினாறு மடங்கு பெரியது. உயரம் கால் கிலோமீட்டருக்கு மேல்.

ஊர் பெயர்கள் முழுவதும் மாற்றியாகிவிட்டது. கிரீமியாவிற்கு இப்போது கோடன்லாண்ட் என்று பெயர். செவஸ்தபோலை தியோடரோஷாவன் என்றுதான் சொல்ல வேண்டும்..

நம் ஊரில் ஆண்டி இண்டியன் என்பது  போல அங்கு நாஜி கட்சியில் அதிக ஈடுபாடு காட்டாதவர்களுக்கு asocial  என்று பெயர். கட்சியின் வெகுஜன அமைப்புகளில் ஈடுபாடு காட்வில்லையா? நீ nonjoiner. கட்சி அமைப்புகளுக்கு நிதி தர முகம் சுளித்தால், noncontributor.

ஊரில் நாய், ஆடு, மாடுகளுக்கு மட்டும் தான் சீருடை இல்லை.

அதிகாரப்பூர்வமான வரலாறுகள் எழுதி முடித்துவிட்டு, இப்போது அதிகாரப்பூர்வ வரலாறுகளின் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ரயில் நிலையங்களை கத்தீட்ரல் பாணியில் கட்டிவிடுகிறார்கள்.

பேருந்து, டிராம், ரயில் எங்குப் பார்த்தாலும், அரசாங்கத்திற்குத் தகவல்கள் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள். ”உங்கள் பக்கத்து சீட்காரன் டிக்கெட் எடுக்காவிட்டால், உடனே தகவல் தாருங்கள்.  பெண்ணுக்கு இடம் தர மறுப்பவன், ராணுவ வீரனுக்கு இடம் தர மறுப்பவனை உடனே கண்டக்டரிடம் காட்டிக் கொடுங்கள்,“ என்பது போன்ற அறிவிப்புகள்.

ஐரோப்பா முழுவதும் ரீஷ்மார்க் என்ற பொது நாணயம்.

ஹிட்லரின் பிறந்த நாளின் போது, எல்லோரும் அதை பெரிதாகக் கொண்டாட வேண்டும். சந்தோஷமாகக் கொண்டாடாதவர்களுக்குத் தண்டனை!

ஆனாலும் பெற்றோரை, அரசை எதிர்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். ரகசியமாக அமெரிக்க வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். தடைசெய்யப்பட்ட படைப்பாளிகளான குந்தர் கிராஜ், கிரஹாம் கிரீன், ஜார்ஜ் ஆர்வல். ஜே.டி.சாலிங்கர் படைப்புகளை ரகசியமாக அச்சடித்து விற்கிறார்கள். ரகசியமாக வாங்கிப் படிக்கிறார்கள். காட்டிக் கொடுக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்படுகிறார்கள்.

கதையின் நாயகனின் புலனாய்வில் நாஜிக் கொடுமைகள் ஒவ்வொன்றாக விரிகின்றன. இன ஒழிப்பை எப்படித் திட்டமிட்டார்கள் என்பதற்கு ஒவ்வொன்றிற்கும் கூட்டம், அது பற்றிய விவாதக் குறிப்புகள், கோப்புகள், அறிக்கைகள், விளக்கங்கள் என்று ஏராளமான ஆவணங்கள். அவை அழிக்கப்பட்டது பற்றியும் ஆவணங்கள்.

Glenn Russell's review of Fatherland

எல்லாவற்றையும் நாயகன் தன் காதலி மூலம் அமெரிக்காவிற்கு அனுப்புகிறான். அமெரிக்கப் பத்திரிகைகளின் வாயிலாக இந்த ஆவணங்களை வெளியிட்டு, அமெரிக்கா ஜெர்மனியுடனான தனது உறவைத் துண்டித்துக் கொண்டு, அதை எதிர்க்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறான் கடைசியில் தன் சொந்த மகனாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான்.

நாஜிகள், பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மிக விரிவாகப் பதிவு செய்துள்ள நாவல். இன்றைய சூழலில் நாம் படிக்க வேண்டிய நாவல்.

நாவலைப் படித்து முடித்துவிட்டு, நம் நாட்டில் இப்படியான ஒரு மாற்று வரலாற்று நாவல்கள் வந்தால் எப்படி இருக்கும் என்று வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தியா ஆங்கிலேயருக்குப் பதிலாகப் பிரெஞ்சுக்காரர்களிடம் அடிமைப்பட்டிருந்தால்? இந்தியா  பிரிவினை எதுவுமின்றி சுதந்திரம் பெற்றிருந்தால்? நெருக்கடி நிலைக்குப் பின் மீண்டும் இந்திராவே ஆட்சிக்கு வந்திருந்தால்? எத்தனை எத்தனையோ இருந்தால்கள்…..

வரலாறும் முடிவற்றது. படைப்பாளியின் கற்பனையும் முடிவற்றது. என்றேனும் ஒருநாள் தமிழிலும் இந்த மாற்று வரலாற்றுப் படைப்புகள் வரக்கூடும். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.