Samakala natappugalil marxiam webseries 9 by N. Gunasekaran சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன?

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப் பற்றி குறிப்பிட்டார்.இந்த தோல்விக்கான காரணங்களையும் அவர் பேசியுள்ளார்.

அரசியல்,நீதித்துறை,காவல்துறை,பொது சேவைகள் என அனைத்து மட்டங்களிலும் பரவி இருக்கிற ஊழல், தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையின் இனப்பிரிவுகள், மதப் பிரிவுகள் சார்ந்த சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு பன்முக அரசினை உருவாக்க இலங்கை தவறிவிட்டது என்றார்.

இனம், மதம் இரண்டையும் அரசியலுக்கு பயன்படுத்தியது இலங்கையின் தோல்விக்கு காரணம் என்பதை சுட்டிக் காட்டி பேசினார்.
(தி இந்து, ஏப்ரல்-17,2023)

இலங்கையின் தோல்வி
இலங்கையின் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு.மதம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததும் இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணம்.

விடுதலைக்குப் பிறகு இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.இருந்தாலும் கூட, தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு சம உரிமைகள் அளிக்காமல் ஒரு ஒற்றை ஆட்சி முறையை இலங்கை பின்பற்றியது.எனினும், அமைதியை போதிக்கும் பௌத்த மதத்தின் பெயரால் இயங்கும் மதவெறி அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டி தாக்குதல் நடத்திய வரலாறு அனைவரும் அறிந்ததே.

நாட்டின் பெரும்பான்மை சிங்கள அமைப்புக்கள் இன ஒதுக்கல் கொள்கைகளைப் பின்பற்றி தமிழர்கள்மீது பெரும் வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தினர். இது இலங்கையின் பெரும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அகிம்சை வலியுறுத்தும் மதம் என்று கருதப்படுகிற புத்த மதத்தின் பெயரால் இனரீதியான பிளவையும் மோதல்களையும் அவர்கள் ஏற்படுத்தினர்.

இலங்கையின் முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உலக ஏகாதிபத்திய நாடுகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஆளும் வர்க்கங்களுக்கு இனரீதியான பிளவுகள் நன்கு பயன்பட்டு வந்துள்ளன.

இன, மத அடிப்படையிலான திரட்டல்கள், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக உருவாவதை தடுத்து வந்துள்ளன.

இந்த நிலைமைகள் குறித்து சரியான புரிதலைப் பெறுவதற்கு ஆசிய நாடுகள் பற்றிய காரல் மார்க்ஸ் எழுத்துக்கள் துணை புரிகின்றன.

மத பிற்போக்குத்தனங்கள் மற்றும் மத ரீதியான பிளவுகளை முறியடித்து சுரண்டப்படுகிற மக்கள் ஒன்று திரண்டு, சுரண்டலிலிருந்து விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க்ஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தியா பற்றிய அவரது எழுத்துக்களிலும் அதுதான் அடிநாதமாக வெளிப்படுகிறது.

ஆனால், இந்த திசை வழியில் பயணிக்காத நாடுகள் தோல்வி அடைந்த நாடுகளாகவே உள்ளன.குறிப்பாக, அரசியல் தளத்தில் மத,இன அடிப்படையில் திரட்டல் வேலைகள் தீவிரமாகிறது என்றால்,அந்த நாட்டின் மக்கள் அனைத்து வகைகளிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரலாற்று அனுபவம் இலங்கை உள்பட எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

ஆசியாவில் கூட எல்லா நாடுகளும் தோல்வி அடைந்த நாடுகள் அல்ல; மத,இன வேறுபாடுகளை அரசியலோடு கலக்காமல், வர்க்க ஒற்றுமையை வலுவாக அமைத்து, சோசலிப் பாதையில் பயணித்து வரும் சீனா,வியட்நாம் போன்ற நாடுகள் வெற்றி பெற்ற நாடுகளாகவே இன்றைக்கும் நடை போடுகின்றன.

இந்த வரலாற்று அனுபவத்தை இன்னும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள மக்களால் இயலவில்லை.இதனால் வர்க்க அடிப்படையில் மக்கள் திரண்டு விடாமல் தடுக்கும் தத்துவங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

“ஒருங்கிணைந்த மனிதத்துவம்”
தமிழக ஆளுநர் தீன் தயாள் உபாத்தியா பற்றிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான்,அவர் மார்க்சியத்தை அவதூறு செய்து, திரித்துப் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான ஜன சங்கத்தின் தலைவராக தீன் தயாள் உபாத்தியா சிறிது காலம் செயல்பட்டார்.

ஆளுநர் பேசுகிறபோது உபாத்தியாவின் போதனைகளைச் சொல்லி, இவையெல்லாம் மார்க்சியம் போன்ற மேற்கத்திய தத்துவங்களால் மறைக்கப்பட்டு விட்டன என்று ‘வேதனை’ தெரிவித்தார்.”ஒருங்கிணைந்த மனிதத்துவம்” என்கிற பெயரில் உபாத்தியா பல போதனைகளை செய்து வந்தார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்பதெல்லாம் ஒரே குடும்பம் என்று உபாத்தியா போதித்ததாக ஆளுநர் குறிப்பிடுகிறார்.

இது போன்ற கருத்துக்கள் ஏற்கெனவே இந்திய ஆன்மீக தத்துவங்களில் சொல்லப்படுகின்றன.’பிரம்மம் ஒன்றே’ என்பது போன்று ஆதிசங்கரர் உள்ளிட்டோர் போதித்து வந்துள்ளனர்.

எனவே, உபாத்தியாவின் கருத்துக்கள் புதிது அல்ல; ஆனால் இது சமயம் என்கிற அந்த தளத்தில் மட்டும் போதிக்கப்பட்டால் யாருக்கும் ஆட்சேபணை கிடையாது. ஆனால்,அரசியலுக்கு என்று வருகிற போது இந்த கருத்துக்கள், வர்க்க வேறுபாடுகளை மூடி மறைத்து, ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை நியாயப்படுத்துகிற தத்துவங்களாக மாறுகின்றன.

இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீன் தயாள் உபாத்தியாவின் சிந்தனை, அரசியலில் மதத்தை கலந்து, அரசியல் நோக்கங்களுக்காக மதப் பிளவுகளை தூண்டுகிற சிந்தனைதான். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மதத்தை பயன்படுத்துகிற வேலை. இதன் மூலம் மதத்தையும் இவர்கள்தான் இழிவுபடுத்துகின்றனர்.

இன்றைக்கு மோடி அரசு ஏராளமான மக்கள் நல திட்டங்களுக்கு அவரது பெயரை வைத்துள்ளனர். அவரது பெயரை மக்கள் மத்தியில் விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் செலவில் பல்வேறு வேலைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.பெரிய அளவில் அவரது பெயரை இவர்கள் முன்னிறுத்துகின்றனர்.

தமிழக ஆளுநர் போன்று பலர் உபாத்தியாவின் போதனைகளை பிரச்சாரம் செய்பவர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நோக்கம் மதரீதியில் மக்களை பிளவுபடுத்தி,சுயநல அரசியலுக்காக மக்களை திரட்டுவதுதான்.

இது இந்தியாவையும் படுதோல்வி அடைய வழி வகுக்கும்.இந்தப் பாதை இன்று இலங்கையில் நடப்பது போன்று, இந்தியாவையும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் படுகுழியில் தள்ளிவிடும் பாதை!

மார்க்ஸ் வழிகாட்டிய வர்க்க ஒற்றுமை தத்துவமே இந்தியாவுக்கு வழிகாட்டும் சிறந்த தத்துவம்.

இந்திய உழைக்கும் வர்க்கங்களுக்கு சுரண்டலற்ற வாழ்வை உறுதி செய்வது மார்க்சியப் பாதையே.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *