புதுமைப்பித்தன் என்ற புனை பெயரிலும் கதைப் பொருள்களிலும் உள்ள கவர்ச்சி அவருடைய எழுத்து நடையிலும் உண்டு.  இதெற்கெல்லாம் மேலாக  அவருடைய எழுத்து மனிதனையும் அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த பரந்த நோக்கையும் முதிர்ந்த சிந்தனையையும் உள்ளடக்கியிருக்கிறது.

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்

புதுமைப்பித்தன்

மேலகரம் மே.சு.ராமசாமிப்பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.சு.ரா.கந்தசாமிப்பிள்ளையவர்கள் பிராட்வேயும் எஸ்பிளனேடும் கூடுகிற சந்தியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில் டிக்கட் வாங்காமல் திருவல்லிக்கேணி சென்றால்  வெற்றிலை பாக்குக்கும்  காப்பிக்கும் மிஞ்சுமா என்பதே அவர் யோசனை.

யாரோ திருவல்லிக்கேணிக்கு போவதற்கு வழி கேட்டார்கள்.  “டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், வழி கேட்டு நடந்தும் போகலாம், மதுரைக்கு வழி வாயிலே” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“நான் மதுரைக்குப் போகவில்லை,  திருவல்லிக்கேணிக்கு எப்படிப்போனால் சுருக்கு வழி?” என்றார் கடவுள்.  இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கந்தசாமிக்கு வயது நாற்பத்தைந்து.  நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர்போன்ற தேகக் கட்டு.  க்ஷவரம் செய்யாத முகவெட்டு.  காரிக்கம் ஷர்ட், வேஷ்டி, மேல் அங்க வஸ்திரம்.

“தாகமாயிருக்கு” என்றார் கடவுள். “ஜலம் கிடைக்காது” என்ற பிள்ளை காப்பி  ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

“சூடா ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி” என்றார். 

“தமிழை மறந்து விடாதே. இரண்டு கப் காப்பிகள்” என்றார் கடவுள் 

“அப்படியும் அல்ல, இரண்டு கப்கள் காப்பி” என்றார் பிள்ளை

அண்ணாந்து பார்த்த கடவுள் “நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது. வெளிச்சமும் நன்றாக வருகிறது” என்றார்.

“ஹோட்டல் கட்டுவதை கோவில் மாதிரி நினைத்தீர்களா?” என்று பிள்ளை சொன்னதும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.   அவருக்கு தெரியாத சுகாதாரம் பற்றியும் பிள்ளை விளக்கினார்.  கடவுள் காப்பியை பருகினார்.  சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.  

“காப்பியின் மணத்துக்கு காரணமாக சிக்கரிப் பவுடர் காப்பி மாதிரிதான் இருக்கும்.  ஆனால் காப்பி அல்ல.  தெய்வத்தின் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி” என்றார் பிள்ளை.

“தெய்வம்” என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

நூறு ரூபாய் கொடுத்து மூன்றணா போக பாக்கி வாங்கிக் கொண்ட கடவுள். அதில் தனியாக இருந்த பத்து ரூபாய் கள்ள நோட்டை எடுத்து சுக்கு நூறாக கிழித்தார்.

பிள்ளை சிக்கரிப் பவுடருக்கு உடன்பட்டா மாதிரிதான் இந்த கள்ள நோட்டுக்கு உடன்பட்டதாக சமாதானமும் சொன்னார்.

திருவல்லிக்கேணிக்கு இருவரும் கிளம்பினர்.  கடவுளுக்கு சிலாக்கியமான நர வாகனத்தில் இருவரும் ஏறிக் கொண்டனர்.   ரிக் ஷாவில் செல்கையில் தன்னைப் பற்றியும் தனது சித்த வைத்திய தீபிகை குறித்தும் அறிமுகப்படுத்திக் கொண்டு வியாபாரம் செய்வதில் மும்முரமானார்.  வியாதியும் அகன்று விடக்கூடாது, ஆசாமியும் தீர்ந்து விடக்கூடாது என்ற தனது வைத்தியத் தொழில் ரகசியத்தையும் கூறினார்.  

ஓடுகிற வண்டியில் கடவுளின் நாடியையும் விடவில்லை. திருவல்லிக்கேணியில் இவர் வீட்டிற்கே அதிதியாக வந்திருப்பதை  கந்தசாமிப்பிள்ளையிடம் கடவுள் தெரிவித்தார்.  வண்டி நின்றது.      ரிக் ஷாக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்ததும் “நல்லா இருக்கணும் சாமீ” என்று கடவுளை ஆசிர்வதித்தான்.  

வீட்டிற்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.  “பக்தா” என்றார். கிழவனார் நிற்கவில்லை.   புலித்தோலாடையும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார்.   “பக்தா” என்றார் மறுபடியும்.

பிள்ளைக்கு விஷயம் புரிந்து விட்டது.  “கடவுளே இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை வேண்டாம்.  இன்னொரு தெய்வம் வரும் தலையைக் கேட்கும். பூலோகத்தைப் பார்க்க வந்தீர். மனுஷனைப்போல  மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்,  ஒழுங்கா வாரும்” என்றார்.

வாசலருகில் வந்ததும் என்ன பெயரிட்டு அழைப்பது என்ற யோசனை.  பெயர் பழைய பரமசிவம் என்றும்  பெரியப்பா என்று அழைப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது!' - தீராக்காதலைச் சுமந்த புதுமைப்பித்தன்  | Story Of the Story tellers- Part-4 - Pudhumaipithan

“அப்பா” என்று குழந்தை பிள்ளையின் காலைக்கட்டிக் கொண்டது.  

“இதுதான் உம்முடைய குழந்தையோ?” கேட்டார் கடவுள்.  குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்று தயங்கினார்.  

“சும்மா சொல்லும் இப்போவெல்லாம் நான் சுத்த சைவன்” என்றார்.

“வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே!” என்று கைகளை நீட்டினார்.  ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது. 

“ஏன் தாத்தா களுத்திலே நெருப்பு கிருப்புப்பட்டு பொத்துச் போச்சா?” 

“பாப்பா அது நாகப் பளந்தாண்டியம்மா.  முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கிட்டேன்.  எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப்புடிச்சுப்புட்டாங்க, அதிலே இருந்து அங்கியே சிக்கிக்கிச்சு.”

குழந்தை வட்டாட கூப்பிட்டது.  தோற்றுப் போனார்.  “ஆட்டம் தெரியாம ஆட வரலாமா?” கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

“இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா. கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத்தான் கொடுத்திருக்கு” கந்தசாமிப் பிள்ளை மனைவிக்கு அறிமுகம் செய்தார்.

“தேசாந்திரியாக போயிட்டதாகச் சொல்லுவாகளே அந்த மாமாவா?  வாருங்க மாமா சேவிக்கிறேன்” குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்த நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.  கடவுள் ஆசிர்வதித்ததும் காந்திமதி அம்மையாருக்கு  நிறைவு ஏற்பட்டது.

வாசலில் இருக்கிற அரிசி மூட்டையை எடுக்க கடவுள் பிள்ளையுடன் சென்றார்.  

“அந்தச் செப்பிடு வித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே?” என்றார் பிள்ளை காதோடு காதாக.

“இனிமேல் இல்லை” என்றார் கடவுள்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி  பதினொன்று.  “தாத்தா நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்” என்று ஓடி வந்தது குழந்தை.  

“என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?” என்றார்.

“மனுஷான் கூடப்பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்,  தூங்க இஷ்டமில்லை யென்றால்  பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள்.  ராத்திரியில் அபவாதத்துக்கு இடமாகும் என்றார்” பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு போகர் நூலுக்கு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.  வாசலில் ரிக் ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை, கையில் மிட்டாய்ப் பொட்டலம்.

“தாத்தாவும் நானும் செத்த காலேஜ், உயிர் காலேஜெல்லாம் பார்த்தோம்”.  

“சிருஷ்டியை கேலிசெய்ய வேண்டும் என்ற நினைப்போ?” கடவுள் கடுகடுத்தார். 

பேச்சு வைத்திய சாஸ்திரம் பக்கம் திரும்பியது.  “போகரிலே கருடப் பச்சையென்று சொல்லியிருக்கிறதே அப்படியொரு மூலிகை உண்டா?”

“பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு. பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே? உம்மை உண்டாக்கினேன். கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயரிட்டார். அதற்கும் நான்தான் பழியா?” வாயை மடக்கினார் கடவுள்.

அன்றைய செலவுக் கணக்கை பிள்ளையிடம் சொன்னார்  பணம்  சம்பாதிக்க சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாம் என்றார் பிள்ளை.  அதில் துட்டு வருமா என்ற ஐயத்தை எழுப்பிய கடவுள் கூத்து ஆட நன்றாக வரும் என்றும் தேவியை வேண்டுமானால் தருவிப்பதாகவும் சொன்னார்.

புதுமைப்பித்தனும் நூல் அன்பளிப்புரைகளும் | புதுமைப்பித்தனும் நூல்  அன்பளிப்புரைகளும் - hindutamil.in

“வாருங்கள் போவோம்” என்று ஆணியில் கிடந்த அங்கவஸ்திரத்தை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார். 

கால்மணிப் போது கழித்து  கந்தசாமிப் பிள்ளை, கடவுள், தேவி மூவரும் திவான் பகதூர் பிருகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். “நான் இவருக்கு தங்க பஸ்பம் செய்து கொடுத்து  வருகிறேன்.  சொன்னால் கேட்பார்” என்றபடி பிள்ளை படிக்கட்டில் ஏறினார்.  தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.  

திவான் பகதூர் வந்தார். பிள்ளை அவருக்கு நாடி பார்த்தார்.   வந்த விஷயத்தைச் சொன்னார்.

“இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்.  உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும் என்றார்” பிள்ளை. 

திவான்  “உம் உம்” என்று தலையை அசைத்துக் கொண்டிருந்தார்.

“இவர் கூத்தனார். அம்மாளின் பெயர் பார்வதி.  இருவரும் தம்பதிகள்” என்றார் பிள்ளை. 

“கேள்விப்பட்டதேயில்லை” என்றார் திவான். “நாங்கள் ஆடாத இடம் இல்லை” என்றாள் தேவி.  “பெண் கறுப்பா இருக்காங்களே?” என்றார் வர்ணபேத திவான்.  “பெண் பார்க்க வந்தீரா?” கேட்டாள் தேவி. “மண்டலியில் கறுப்பை விரும்புவதில்லை” என்றார் திவான்.  “உம்ம மண்டலியுமாச்சு சுண்டெலியுமாச்சு” என்றாள் தேவி.

“ஒருமுறைதான் பாருங்களேன்!” என்று பிள்ளை வற்புறுத்தினார். நடு ஹாலுக்குச் சென்றனர்.

இசை எழுந்தது,  கடவுள் புலித்தோலுடடையும், திரிசூலமும், பாம்பும், கங்கையும், சடையும் பின்னிப் புரள கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.  மறுபடியும் இசை, உதட்டில் சிரிப்பு புரண்டோட காலைத் தூக்கினார்.

கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று பிள்ளை பதறினார்.  

“கலைன்னா என்னன்னு தெரியுமா?” திவான் மல்லுக்கு நின்றார்.  “புலித்தோல் பாம்பு மாதிரி ஆபரணம்தான் போட்டுக் கொள்ளணும். பார்வதி பரமேசுவரனே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. சிறுசுகள் நடமாடற இடம்,  பாம்புகளையெல்லாம் பத்திரமாக புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும்” என்றார் திவான் பகதூர்.

கால் மணி நேரம் கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீஸில் இரண்டு பேர் தேவியைத் தவிர உட்கார்ந்து கொண்டிருந்தனர்.  குழந்தை இன்னமும் பாயில் தூங்கிக் கொண்டிருந்தது.

“தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாதுபோல் இருக்கே?” என்றார் கடவுள்.

“தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கலாம்” என்றார் பிள்ளை.

சூள் கொட்டினார் கடவுள். “உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்.  உடன் இருந்து வாழ முடியாது” என்றார்.

மேஜையில் இருபத்தைந்து ரூபாய் நோட்டாக இருந்தது.  கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை ஜீவிய சந்தா வரவு இருபத்தைந்து என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

“தாத்தா ஊருக்குப் போயாச்சா அப்பா?” கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *