தொடர் 50: எக்ஸெல் சூப்பர் – வா.மு.கோமு | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்இவர் உலகமே பெண்கள்தாம். எத்தனை விதமானவர்கள்.  ஆயின் அனைவருமே வெவ்வேறு விதமான சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அடங்கிக் சென்று கொண்டிருக்கிறார்கள்.  கட்டுடைக்கத் தயாராக இல்லை – அவர்கள் மட்டுமல்ல. . . . 

எக்ஸெல் சூப்பர்

வா.மு.கோமு

தேவையில்லாமல் காசைக் கொண்டு போய் எக்ஸெல் சூப்பரில் கொட்டிவிட்டோமோ என்றுதான் மதிவாணனுக்குப் பட்டது.

“இன்னும் சைக்கிள்ளய எத்தனை நாளைக்கப்பா வந்துட்டே இருப்பே.  உம்பட சைக்கிளக் கொண்டு போய் இரும்புக் கடையிலே எடைக்கிப் போட்டுட்டு வண்டி வாங்கி ஓட்டுப் பா.  புதுச் சம்சாரத்த பொறவாண்டி உக்காத்தி வெச்சு  சினிமாவுக்கு கூட்டிட்டு போயிட்டு ஆசையா இருப்பியா?” மதிவாணனின் கம்பெனி முதலாளி எப்போதும் இப்படித்தான்.  அவரிடம் மூன்று வண்டிகள் இருக்கின்றன.  ஹோண்டா, சுஷூக்கி, கடைசியாக ஒரு எக்ஸெல் சூப்பர்.

“நீ குடுக்கறதக் குடு உங்கிட்ட நான் காசு கேட்டனா?” என்று சொல்லிவிட்டார்.  அப்பறம் தன்னுடன் கட்டிங் செக் ஷனில் இருக்கும் ராமசாமியிடம் விசயத்தைச் சொன்னதும் அவன் புது வண்டி இருவத்தி மூனு ரூபா வருது  ஒரு பதனஞ்ச பொறட்டி இப்ப அவர்கிட்ட குடுத்திடு என்றான்.

“புதுப் பொண்டாட்டி  மொத மொத வாயத் தொறந்து வண்டி வாகனம் இருந்தா நல்லா இருக்குமின்னு சொன்னதாலதான் ஒரே யோசனையாவே இருந்தேன்” சற்று இழுத்தாற்போல.

“உலகமகா கஞ்சனாச்சே நீயி, சரி வண்டி ஓட்டற கவலைய வுடு.  பக்கத்திலே ஜீவாபாய் பள்ளிக்கோடத்துல  பெரிய புட்பால் கிரௌண்டுலே சாயங்காலமாக கத்துக் குடுத்துடறேன். நீ கவலையை உடு “என்றான் ராமசாமி.

அவன் கேட்டபடியே  வாங்கி வந்த சிவாஸ் ஒரு கோட்டரை தண்ணீரோ சோடாவோ கலக்காமல் ஊற்றிக் கொண்ட ராமசாமி  வெறிச்சோடிய மைதானத்திற்கு வந்தான்.   மதிவாணன் ராமசாமி செய்தமாதிரியே கிக்கரை பர்பர்ரென மாத்தி மாத்தி உதைத்தான்.  வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போகவே “என்னப்பா, நீ ஒதைச்சா பூ மாதிரி கௌம்பிக்குது, ச்சை எதாச்சிம் மந்திரம் வச்சிருக்கியா?” என்றான்.

மதிவாணன் கையை எக்ஸலேட்டரை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறு செய்து அப்படியே விளையாட்டாய் ஒரு முறுக்கு முறுக்கவும்,  வண்டி முன்னால் சீறவும் “அட என்னப்பா, தண்ணி போட்டுட்டி லாவுடி உன்னோட, மெதுவா பழக்கிஉடு” என்றான்.  ராமசாமி  சொல்லச் சொல்ல திடீரென வளைத்ததும் வண்டி மதிவாணன் மீது படுத்தபடி முனகிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி உருண்டு எழுந்த ராமசாமி மணலை தட்டிவிட்டு விட்டு வண்டியைத் தூக்கி நிப்பாட்டினான்.  மதிவாணன் வலது கால் பெருவிரலில் ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

தான் சைக்கிளில் வந்துவிடுவதாகவும் வண்டியை எடுத்துக் கொண்டு முன்னால் தனது வீட்டிற்கு செல்லும்படியும் ராமசாமி மதிவாணனிடம் கூறினான்.

அன்றிரவு படுக்கையில் இருந்தபோதுதான் அவன் புது மனைவி மல்லிகா கேட்டாள் “ஏணுங் மாமா வண்டிய வாங்கிட்டு உங்க நண்பருகிட்ட குடுத்து உட்டீங்க. அவரு ரொம்ப  நல்லா பேசுறாரு” என்றபடி காயத்தைப் பற்றிக் கேட்டாள்.  ராமசாமி தனக்கு ஏராப்பிளேனே ஓட்டத் தெரியுமென்று சொன்னதாகவும், சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா ஈஸியா ஓட்டலாம்னு சொன்னதையும் அவள் தெரிவித்தாள்.

“சரி சரி பிளேனு ஓட்டுவன், கப்பலு ஓட்டுவன்னு உங்கிட்ட ஓட்டிட்டுப் போயிட்டான்”.

மல்லிகா திருப்பூருக்கும் கிழக்கே பத்து கிலோ மீட்டர் தூரமிருக்கும் கூலிபாளையத்துக்காரிதான்.  இவளது தகப்பனார் மூன்று  பெண்களையுமே கட்டிங் மாஸ்டர்களுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கிறார்.  இவளது அக்காகாரிகள் தம் கணவர்களுடன் வண்டியில் சர்சர்ரென வந்து இறங்குவது கண்டு ஆசையை வளர்த்துக் கொண்டவள்தான் தன் முதலிரவிலேய மதிவாணனிடம் வண்டி ஆசையை சொல்லிவிட்டாள்.  

தினமும் காலையில் முதல் வேலையாய் எழுந்ததும் மதிவாணன் படுக்கை காபி குடித்ததும் வண்டியை வாசலுக்குக் கொண்டு போய் நிறுத்தி பனியன் துண்டுகளால் சுத்தமாக துடைத்து முடிக்க அரை மணி நேரம் ஆகும்.  மீண்டும் வீட்டினுள் கொண்டு வந்து நிறுத்தி பெட்சீட் ஒன்றை போத்தி விடுவான்.   இது மல்லிகாவுக்கு துக்கத்திலும் துக்கமாக இருந்தது.  துடைப்பவன் அப்படியே ஒரு ரவுண்டு அடித்துவிட்டு கொண்டு நிப்பாட்டலாமே மதிவாணனிடம் கேட்பதற்கும் இவளுக்கு சிரமாக இருந்தது.

மல்லிகாவுக்கு எக்ஸெலில் கணவன் பின்புறமாக அமர்ந்து செல்வோம் என்ற ஆசை போய்விட்ட சமயம்தான், ராமசாமி ஒரு நாள் மதியம் வந்து சேர்ந்தான் தூபம் போட.  அன்றிலிருந்து ராமசாமியின் தலை அந்தப் பக்கமாக மதிவாணன் இல்லாத சமயங்களில் தென்படத் துவங்கியது.

வண்டியை துடைப்பதற்காக வெளியே உருட்டிக் கொண்டு வாசலில் நிறுத்தி மதிவாணன்  சக்கரங்கள் இரண்டிலும் சேறும் சகதியுமாக இருப்பதைக் கண்டான்.  “தேனம்மினி வண்டிய யாருக்காச்சும் ஓசி குடுக்கறியா? இப்ப வண்டிய சேறும் சகதியுமா கொண்டு வந்து நிப்பாட்டிட்டு போயிட்டானுக.  ஒன்னுந்தெரியாத புள்ளப்பூச்சியா இருக்கியே?  நான் கேட்டுகிட்டே இருக்கேன் ஒரு பதிலுஞ்சொல்லாம இருந்தா எப்படி” என்றான்.வண்டியை யாருக்கும் ஓசி கொடுக்கவில்லையென்றும், கூலிபாளையம் வரைக்கும் போய் தன் தகப்பனைப் பார்த்து விட்டு வந்ததாகவும் அவள் சொன்னாள்.   “வண்டி ஓட்டத் தெரியும்னு எங்கிட்ட சொல்லவே இல்லியே?” என்றான்.  “நீங்க  கேக்கவே இல்லியே?” என்றாள்.   “அப்பச் சரிவா,  நான் வண்டிய வெளியே நிப்பாட்டுறேன் நீ எனக்கு ஓட்டிக்காமி.”

மல்லிகா வீட்டிலிருந்து வெளி வந்து கதவை சாத்திவிட்டு வண்டிக்கு அருகில் வந்ததும் ஸ்டாண்டை தள்ளி விட்டு விட்டு சீட்டில் அமர்ந்து வாசலிலேயே வண்டியில் வட்டமடித்தாள்.  “பின்னாடி உக்காந்துக்கறேன் அம்மணி, ரெண்டாவது கேட் வரைக்கும் போயிட்டு வந்துடலாமா?” இரு பக்கமும் கால்போட்டு அவள் இடுப்பப் பிடித்துக் கொண்டான்.  “கையை எடுங்க மாமா கூசுது,  பின்னாடி கம்பியப் பிடிச்சிங்கங்க “.

பக்கத்து வீட்டு ஜன்னலில் இருந்த முகத்தை நோக்கி மல்லிகா குரல் கொடுத்தாள்.  “பார்வதியக்கா கதவெ சும்மா சாத்தியிருக்கேன்.  ஒரு நிமிசத்தில வந்துடறோம்.”  சாலைக்கு வந்ததும் வேகமெடுத்தாள்.  மதிவாணனுக்கு பயமாக இருந்தது.  “அம்மிணி நாய்க்கீயி குறுக்க வந்துடப் போவுது, மெதுவாப் போ” என்றான்.

“மெதுவாத்தானுங்க மாமா போறேன்.  கைய எடுத்து என்னோட இடுப்பவே புடிச்சுக்கங்க.  அங்க பார்வதியக்கா பார்த்துட்டே இருந்ததாலே அப்படிச் சொன்னேன்” என்றாள்.

வீடு வண்டி வந்ததும் முதல் வேளையாக “இன்னிக்கு கம்பெனிக்கு லீவு” என்றான். “ஏன் லீவ்?” என்றாள் மல்லிகா.  “ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறோம்.  அதுவும் அவினாசிக்கு தூரமாக வண்டியில போயிட்டு வர்றோம்” என குஜாலகச் சொன்னவனுக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.  சந்தோசமாகவே “சரிங்க” என்றாள்.

திட்டமிட்டபடியே செய்தார்கள்.  அன்று மாலை வரை மதிவாணன் பயங்கர சந்தோசத்தில் மிதந்தான்.  பக்கத்து வீட்டு பார்வதியக்கா அந்த விசயத்தை இவனைக் கூப்பிட்டு சொல்லும்வரை.

 இவன் அப்புராணியா போசியத் தூக்கிட்டு போனப்பறம் யாரோ சாமின்னு ஒரு பையன் இங்கே வந்து போயிண்டு இருப்பதாகவும், அவன்தான்  இவன் பொண்டாட்டிக்கு வண்டிய ஓட்டி பழக்கி உட்டுட்டு இருந்ததாகவும் சொன்னாள்.  அதுவும் இல்லாம போனவாரம் யுனிவர்சல் தியேட்டருக்கு போயிருந்தபோது இவிங்க ரெண்டு பேரும் வந்திருந்ததாகவும்  இவன் பொண்டாட்டி காங்காதது மாதிரி நடந்துக்கிட்டதையும் சொன்னாள்,

இந்த மாதத்தில் இடையிடையே மதியமாக இன்னொரு கம்பெனியில் அதிக அவசர வேலை இருக்குது என ராமசாமி கம்பி நீட்டியதன் காரணம் தெரிந்தது.  

தேவையில்லாமல் காசை யெக்ஸெல் சூப்பரில் கொட்டி விட்டதை உணர்ந்தான் மதிவாணன்.

மல்லிகா படியில் அமர்ந்து அரிசியில் கல்லைப் பிரித்துக் கொண்டிருந்தாள்.  வாசலில் நின்றிருந்த வண்டியை நோக்கிச் சென்றவன் வலது காலில் எட்டி உதைத்தான்.  அந்தப்புறமாக விழுந்ததும் கண்ணாடி நொறுங்கிய சத்தம் கேட்டு நிமிர்ந்த மல்லிகா அதை “ஏனுங்மாமா ஒதைச்சீங்க?” என்றாள்.

“உம்பட வேலையைப் பாருடி, வண்டியாமா மசுராமா. . “  என்றான் சப்தமாக.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.